தொடுவானம் 84. பூம்புகார்

Spread the love

டாக்டர் ஜி. ஜான்சன்

84. பூம்புகார்

drgjohnson தரங்கம்பாடி, நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி போன்ற பண்டைய துறைமுகப் பட்டினங்கள் பற்றி நம்முடைய சங்க இலக்கியங்களில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர் வரலாற்றில் பெருமை சேர்க்கும் அளவுக்கு ஒரு சிறப்பான துறைமுகம் பண்டைய காலங்களில் செயல் பட்டுள்ளது எனில் அது பூம்புகார் துறைமுகம்.
Poompuhar3 பூம்புகார் தமிழர் பெருமை கூறும் ஒரு கற்பனைக் கதை இல்லை. அதன் சிறப்பு அக்காலத்திலேயே பதியப்பெற்றுள்ளது. அது பற்றி இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் அழகுபட விவரித்துள்ளார். பட்டினப்பாலையில் கரிகால்சோழனின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பை விரிவாக வர்ணித்துள்ளார் உருதிரங்கண்ணனார்.அதுபோன்று மற்ற துறைமுகங்கள் சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்படவில்லை. அதனால் பூம்புகார் தமிழரின் வரலாற்றுடன் தொடர்புடையது. அது சங்க காலத் தமிழரின் பெருமை கூறும் துறைமுகப் பட்டினமாகும்.
சோழ மன்னர்களின் பெருமைக்குரிய பழம்பெரும் ஊர்களில் ஒன்றுதான் புகார் என்னும் பூம்புகார். இது காவிரிப் பூம்பட்டினம் என்றும் பெயர்பெற்றுள்ளது. சிலப்பதிகாரம் ” புகார்க் காண்டம் ” என்னும் பகுதியுடன்தான் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பூம்புகாரில் பட்டினப் பாக்கம், மருவூர்ப்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகள் பற்றிய வர்ணனைகள் உள்ளன.அவற்றில் பட்டினப்பாக்கம் பற்றிய வர்ணனை அழகானது. அது வருமாறு;
” கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி, உழவரொடு, விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கனிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணிவளை பொழுநர் அகன் பெரு வீத்தியும் ,
சூதர் மாகதர் வேதாளி கரோடு
நாழிகைக் கணக்கர் நலம் பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடற் கூத்தியர்

பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில் தொழில் குயிலுவர் பன் முறைக் கருவியர்
நாகை வேழம்பரோடு வகைதெரி இருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுக்கண் மறவர்.

இருந்து புறம் கற்றிய பெரும் பாய் இருக்கையும்
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும். ”
இந்த சங்கத் தமிழில் சில சொற்கள் புரிகின்றன.பல சொற்கள் புரியவில்லை.இதைப் புரிந்துகொள்ள தெளிவுரைகள் பல உள்ளன. அவற்றில் நான் இங்கே ஞா. மாணிக்கவாசகன் எழுதியுள்ள தெவுரையைத் தர விரும்புகிறேன். அது வருமாறு :
” அகன்ற அரச வீதியும், கொடிகள் பறக்கின்ற தேர் ஓடும் வீதியும், பொருள்கள் விற்கும் கடைத்தெருவும், பெருந்தன வணிகர் வாழும் மாடங்கள் உள்ள வீடுகள் நிறைந்த தெருவும், அந்தணர் வாழும் இடங்களும், எல்லாரும் விரும்பிப் போற்றுகின்ற உயர் குடியினரான; உழவர் பெருமக்கள் வாழ்கின்ற குடி இருப்பும்; உயிர் காக்கும் உயர்ந்த கொள்கை உடையவர்களான மருத்துவரும், காலம் கணித்து நிமித்திகம் கூறும் சோதிடரும், இன்னும் இது போலப் பலதொழில் புரிவோர் வாழுகின்ற பல்வேறான இடங்களும், முத்துக் கோப்பவரும், உயர்ந்த கொள்கையோடு அணியப்படும், சங்கு அறுத்து அழகிய வளையல்கள் செய்பவரும்; வாழ்கின்ற நீண்டு அகன்ற பெரிய வீதியும், அரசன் முன் நின்று பாடுவோர், இருந்து புகழுவோர், பாடிப் பாரிசில் பெரும் பாணர், இவர்களுடன், நன்மங்கலம் பாடுபவரும், கோலத்தாலும் கூத்தாலும் அழகுடன் தோன்றும், சாந்திக் கூத்தரும், விலைமாதரும், நடனமாதர்களும், பரிசம் ஏற்பவரும், ஏவல் பணி செய்பவரும், இசைக்கருவிகள் பல வாசிப்பவர்களும், படை முகத்தும் விழாக்காலத்தும் வாசிக்கப்பெறும் பலவகையான வாத்தியங்கள் இசைப்பவர்களும், சிரிப்பூட்டும் கூத்தர்களுடன் இன்னும் வெவ்வேறான தொழில் செய்வோர் வாழும் இடங்களும், தாவும் குதிரைப்படைவீரரும், யானைப் பாகர்களும் , பெருந்தேர் ஓட்டுபவர்களும், வேல்தாக்க வந்தாலும், விழித்திமைக்காத தறுகண் ஆண்மை உடைய படை வீரரும், இருந்து வாழும், அரண்மனைக் கோட்டையைச் சுற்றி அமைந்த பெரிய குடி இருப்புகளும்; பெரும்புகழும், மிகு சிறப்பும் பொருந்திய, சான்றோர்களாகிய பெரியோர்கள் நிறைந்து வாழும்; பெருமை மிக உடைய( து ) பட்டினப்பாக்க( மு )ம். ”
ஒரு நகரின் சிறப்பு பற்றி கூற இதைவிட வேறு என்ன வர்ணனைகள் வேண்டும்? எவ்வளவு அழகாக அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே பதிவு செய்துள்ளார் இளங்கோ அடிகள்! இதில் கற்பனையோ மிகுதலோ இருக்கும் வாய்ப்பில்லை. இதைப் படித்துணரும்போது எத்தனைச் சிறப்புடன் சங்க காலத் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
பூம்புகார் தரங்கம்பாடியின் அருகிலேயே இருந்ததால் அங்கு செல்ல முடிவு செய்தேன்.காலையிலேயே புறப்பட்டு மாயவரம் சென்றேன். அங்கிருந்து பூம்புகார் பேருந்தில் ஏறினேன்.அது பூம்புகார் ஊருக்குள் சென்று நின்றது.
அங்கிருந்து நடக்கும் தூரத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலயம் இருந்தது. அங்கு சென்று போதகரைப் பார்த்து என்னுடைய ஆவலைத் தெரிவித்தேன். அவர் என்னை பூம்புகார் கடற்கரைக்குக் கூட்டிச்சென்றார்.
poompuhar2 வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த கடற்கரையில் நின்றவாறு ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தேன். உயர எழும் அலைகள் அந்தப் பகுதி ஆழமானதுதான் என்பதைக் கூறியது. அந்த ஆழத்தின் அடியில் பூம்புகாரின் சிறப்புகள் புதைந்துள்ளன என்பது வருத்தத்தையே தந்தது. அன்று பூம்புகாரிலும் அதற்கு முன்னும் தோன்றிய தமிழரின் நாகரிகம் அழியாமல் தொடர்ந்திருந்தால் இன்று தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தேன். அப்போதே அங்கே யவனர்கள் என்னும் கிரேக்கர்களும் ரோமர்களும் அந்த கடற்கரையில் வணிகமும் சேவையும் செய்துள்ளனர் என்பது வியக்கத்தக்கது.
கடலில் மூழ்கியுள்ள பண்டைய தமிழகத் துறைமுகப் பட்டினத்தைப் பற்றி இந்திய அரசு அகழ்வாராய்ச்சிகள் நடத்தியுள்ளபோதும், அதை மேலும் தொடர்ந்து நிறைவான ஆவணங்கள் தந்தால் நல்லது. இதில் தமிழக அரசும் அதிகமாக ஆர்வம் காட்டுதல் வேண்டும். காரணம் நம்முடைய வரலாற்றின் ஒரு பகுதி கடலுக்குள் மறைந்துள்ளது.
திராவிடர்களின் நாகரிகம் மொஹென்ஜோடாரோவிலும், ஹாரப்பாவிலும் தோன்றியவை என்பதை அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் மேல்நாட்டவர் கூறினாலும் அதிலும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தமிழரின் நாகரிகத்தின் ஒரு பகுதி பூம்புகார் கடலுக்கடியில் உள்ளது என்பதை யாராலும் சந்தேகிக்க வாய்ப்பில்லை!
நம்முடைய நாகரிகத்தின் ஒரு பகுதியான சங்க காலத்தின் பெருமை கூறும் பூம்புகார் கடற்கரைக்கு வந்த மன திருப்தியுடன் தரங்கம்பாடி திரும்பினேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்