தொடுவானம் 96. தஞ்சைப் பெரிய கோயில்

 tanjore
       .

அத்தை மகள் என்மீது அளவற்ற பாசமழை பொழிந்தாள். அவளுடைய பிஞ்சு மனதில் அத்தகைய ஆசையை அத்தைதான் வளர்த்துவிட்டிருந்தார். அது தவறு என்று நான் கூறமாட்டேன். உறவு விட்டுப்போகக்கூடாது என்று தொன்றுதொட்டு நம் சமுதாயத்தில் நிலவிவரும் ஒருவித கோட்பாடு இது. அத்தைக்கு தன்னுடைய அண்ணன் மகன் மருமகனாகவேண்டும் என்ற ஆசை. அதுபோன்றுதான் அம்மாவுக்கும் தன்னுடைய அண்ணன் மகள் உமாராணி மருமகளாக வரவேண்டும் என்று ஆவல்! இடையில் அப்பாவின் மனதில் என்ன உள்ளது என்பது யாருக்கும் அப்போது தெரியாது. அவரோ சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு தனியாக தூரத்தில் சிங்கப்பூரில் உள்ளார். வயதுக்கு வந்த அத்தை மகளையும் மாமன் மகளையும் அவர் பார்த்ததில்லை.

என் நிலைமையோ வேறு. சிங்கப்பூரில் என்னுடைய பால்ய சிநேகிதியும் பருவக் காதலியுமான லதா நான் திரும்பி வருவேன் என்று காத்துள்ளாள். கல்லூரிக் காதலி வெரோனிக்காவோ நான் எப்போது படித்து முடிப்பேன் என்று மௌனம்  காத்து வருகிறாள். கிராமத்துப் பைங்கிளி கோகிலமோ நான் எப்போது ஊர் வருவேன் என்று வழிமேல் விழி வைத்துள்ளாள்.

பெண்களைப் பொருத்தவரை என் மனது எப்போதுமே இளகினதுதான்! அவர்களிடம் நான் கடுமையாக நடந்துகொள்ளமாட்டேன்.அதற்காக காணும் பெண்கள் மீதெல்லாம் ஆசை பிறந்துவிடுமா? வாழ்க்கையில் நாம் எத்தனையோ பெண்களைப் பார்த்து பழகவும் நேர்கிறது. ஆனால் எல்லாரிடமும் ஒரே மாதிரியான கவர்ச்சி அல்லது ஆசை உண்டாவதில்லை.எதோ ஒரு ஈர்ப்பு காரணமாக ஒரு சிலர் மீதுதான் தனிக் கவர்ச்சி உண்டாகிறது. அதுகூட அவர்களுடன் பழக நேர்ந்ததால்தான். அப்படியே பழக நேர்ந்தாலும்கூட ஒருவர் மீது ஏதும் இல்லாமல் போவதும் உண்டு. என்னுடைய வகுப்புப் பெண்கள் அதற்கு நல்ல உதாரணம்!

சிறு வயதிலிருந்து ஒன்றாகப் பழகி பின் இளம் வயதிலேயே காதலித்த லதாவை அப்பா வேண்டாம் என்று எதிர்த்து எங்களைப் பிரித்துவிட்டார். வெரோனிக்கா இடையில் ஒரு வருட பழக்கத்தில் வந்துள்ள கல்லூரிக் காதலிதான்  வெரோனிக்காவும் அத்தை மகளும் தாம்பரத்தில்தான் உள்ளனர். ஆனால் அத்தை மகள் மேல் இல்லாத ஈர்ப்பு வெரோனிக்கா மீது உண்டானது. அதற்குக் காரணம் அவள் கல்லூரி மாணவி என்பதாலும், அவளுடைய நிறமும் புற அழகும் எனலாம்.

அன்று இரவு அத்தை வீட்டு தோட்டத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு நித்திரைக்கு காத்திருந்தபோது இத்தகைய நினைவலைகளில் மூழ்கினேன்.

இன்னும் இரண்டொரு நாட்களில் தரங்கம்பாடி சென்றுவிட முடிவுசெய்திருந்தேன். போகும் வரை நேசமணியிடம் அன்பாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.யார் யார் மீதோ காதல் கொள்ளும் நான் சொந்த அத்தை மகளின் ஆசையை நிறைவேற்றாமல் போவது எப்படி என்று மனம் உறுத்தியது.

மறுநாள் அவளை படம் பார்க்க பல்லாவரம் அழைத்துச் சென்றேன். அவள் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அது  ” மேட்டினி ஷோ “. திரையரங்கில் விளக்குகள் அணைந்ததும் என் கையைப் பிடித்தவள்தான். படம் முடிந்துதான் விட்டாள்!

இரவு புகைவண்டி மூலம் மாயவரம் புறப்பட்டேன்.முதல் வகுப்பில் சொகுசாக தூங்கினேன். விடியலில் மாயவரத்திலிருந்து தரங்கம்பாடிக்கு இன்னொரு வண்டி ஏறினேன். கடல்காற்று ஜிலிஜிலுக்க அந்த குறுகிய பிரயாணம் சுகமாக இருந்தது.

இன்முகத்துடன் அண்ணி வரவேற்றார். அண்ணன் தோட்டக் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். என் பின்னாலேயே மீன் விற்கும் பெண் கூடை நிறைய மீன்கள், இறால், கணவாய்,  நண்டு கொண்டுவந்தாள்  வேண்டியமட்டும் அண்ணி வாங்கினார். அவள் வாடிக்கையாய் வருபவள்.

வழக்கமாக பேசும் பாணியில் அண்ணி மூலம் அண்ணனும் நானும் பேசிக்கொண்டோம். அவர்கள் இருவருக்கும் இன்னும் பள்ளி விடுமுறைக்கு நாட்கள் இருந்தன. காலையிலேயே சென்றுவிடுவார்கள். மதிய உணவின்போது வீடு திரும்புவார்கள். எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. வாங்கி வந்த நாவல்களில் சிலவற்றைப் படித்தேன். சில சிறுகதைகளும் எழுதினேன். மாலையில் கடற்கரையில் தனிமையில் கழித்துவிட்டு இருட்டியபிறகு திரும்புவேன்.

இரவுகளில் வேறு பொழுதுபோக்கு இல்லை. ஒரு திரைப்பட அரங்கு பொறையாரில் இருந்தது சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்துசெல்லவேண்டும். அண்ணன் பெரும்பாலும் வருவதில்லை. அண்ணியும் நானும் சென்று வருவோம். புதிதாக வரும் படங்களைப் பார்த்துவிடுவோம்.  அண்ணியின் துணை எனக்குப் பிடித்திருந்தது.தனியாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட எனக்கு இது போன்ற குடும்ப உறவு முறையும், பாசமும், அன்பும் புது அனுபமாக இருந்தது.

          ஒரு சனிக்கிழமை தஞ்சாவூர் சென்று வராலமா என்று அண்ணி கேட்டார். அப்போது அண்ணனும் வீட்டில்தான் இருந்தார். நான் பதில் சொல்லுமுன் அவர் முந்திக்கொண்டார்.
          ” தஞ்சாவூர் கோயில் சென்று பாருங்கள். அது உனக்கு பிடிக்கும் . ”  அண்ணன் சரி என்று சொல்லிவிட்டார்.
          நாங்கள் மாயவரம் சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் திருவள்ளுவர் துரித பேருந்து ஏறினோம். அது கும்பகோணம் வழியாக இரண்டு மணி நேரத்தில் தஞ்சாவூர் அடைந்தது. பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வழியாக தஞ்சைப் பெரிய கோயிலின் நுழைவாயிலை அடைந்தோம்.
          அங்கு நின்று வானளாவிய கோபுரக் கலசத்தை நோட்டமிட்டேன். பிரம்மாண்டமான கட்டிடக் கலையின் அழகைக் கண்டு பிரமித்துப்போனேன். உள்ளே நுழைந்ததும் கருங்கல்லில் பெரிய நந்தி படுத்திருந்தது. கோவிலின் சுவர்கள் பெரிய பெரிய கருங்கற்பாறைகளால் அடுக்கப்படிருந்த்தன. தஞ்சாவூர் அருகில் அதுபோன்ற கருங்கற்குன்றுகளோ மலைகளோ இல்லை. திருச்சியில்தான் அதுபோன்ற மலைகள் உள்ளன. அது அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவ்வளவு தொலைவிலிருந்து அவற்றை வெட்டி எப்படி இங்கு கொண்டுவந்திருப்பார்கள் என்பதை எண்ணி வியந்தேன். அவ்வளவு கனமான பாறைகளை  எப்படி தூக்கி நேர்த்தியாக  ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியிருப்பார்கள் என்பதை கற்பனைகூட செய்ய முடியவில்லை. அப்போது ‘ கிரேன்களோ ”  வேறு இயந்திரங்களோ கிடையாது. சுவர்களை தொட்டுத்தொட்டு இரசித்தேன். வெறும் மாட்டு வண்டிகளையும், மர ஏணிகளையும் வைத்துக்கொண்டு எவ்வாறு இந்த அதிசயத்தை சோழர்கள் செய்தார்கள் என்று திகைத்து நின்றேன்! ” கான்க்ரீட் ” அல்லது ” சிமெண்ட் ” இல்லாத காலத்தில் எப்படி இந்த கற்களை ஒட்டினார்கள் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் ஆண்டவருக்காகக் கட்டப்பட்ட இந்த  தஞ்சைப் பெரியகோயில் இன்றும் அப்படியே சோழர்களில் கட்டிட சிற்பத் திறமையை உலகறிய பறைசாற்றி நிற்பது தமிழ் மக்களுக்கு பெருமையே!
          அண்ணி முன்பே இக் கோயிலை பலமுறை பார்த்துள்ளார். அதனால் அவர் என்னைப்போல் வியந்துபோகவில்லை. நான் கோயிலை இரசிப்பதை அவர் கண்டு மகிழ்ந்தார்.
           தஞ்சைப்  பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படும் இந்த பெரிய கோயில் சோழ மன்னன் இராஜராஜ சோழனால் 1005 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்டது. இதை பெரிய கோயில், பிரகதீஸ்வரர் கோயி ல், ராஜராஜேஸ்வர கோயில், ராஜராஜேஸ்வரம் என்றும் பல சிறப்பு பெயர்களில் அழைப்பார்கள். இது சிவனுக்காக கட்டப்பட்டது. கருவறையில் 3.7 மீட்டர் உயரமான லிங்கம் உள்ளது. மேல் தளத்தின் சுவர்களில் 108 வகையான பரதநாட்டிய அபிநயங்கள ( கரணங்கள் ) சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
          இந்த மாபெரும் கோயில் 60,000 டண்கள் எடையுள்ள கற்பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. 66 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கோபுரக்கலசம் 20 டன்கள் எடையுள்ள ஒரே கருங்கல் பாறையாகும். அதை மேலே கொண்டுசெல்ல சார பள்ளம் என்ற ஊரிலிருந்து 11 கிலோமீட்டர் நீளமுள்ள       பாதை அமைத்து  யானைகளை பயன்படுத்தி உருட்டிச்சென்றுள்ளனர்! இது நம்முடைய அன்றைய கட்டிடக்கலையின் பெரும் வினோதமாகும்!
          இராஜராஜன் காலத்தில் இந்தக் கோயிலை நிர்வகிக்க 1000 ஊழியர்கள் இருந்துள்ளனர். 400 தேவரடியார்கள் நடனமாட இருந்துள்ளனர்!
          இத்தகைய உலகின் பிரசித்திப்பெற்றுள்ள தஞ்சைப் பெரிய கோயிலை திட்டமிட்டு கட்டி முடித்த சிற்பியின் பெயர் குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன் என்று சுவரில் செதுக்கப்பட்டுள்ளது.
          திராவிடர்களின் சிற்பக்கலையுடன் கட்டப்பட்டுள்ள இந்த பிரமிக்க வைக்கும்  கலைக்கோயில் தமிழரின் கலாசாரத்தையும், சோழமன்னர் இராஜராஜசோழனின் சிறப்பையும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் நினைவு படுத்தும் என்பது திண்ணம்.
           தமிழ் மக்கள் 1000 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பொற்காலத்தில் பெருமையுடன் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இயற்கையின் சீற்றங்களையெல்லாம் எதிர்கொண்டு உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் சாட்சி பகர்கின்றது!
          என்னைப்போல் வேகமாக அண்ணியால் நடக்க முடியவில்லை. கால் வலிக்கிறது என்று சொல்லி கருங்கல் தளத்தில் உட்கார்ந்துகொண்டார். நான் கோயிலின் எல்லா பகுதியையும் சுற்றிப் பர்த்துவிட்டுத் திரும்பினேன்.
          பசி நேரம். வேக வேகமாக உணவகம் தேடிச்சென்றோம். சுவையான கோழி பிரியாணி உண்டு மகிழ்ந்தோம்.
          வரலாற்று சிறப்புமிக்க தஞ்சைப் பெரிய கோயில் சென்று வந்த மன திருப்தியுடன் மாயவரம் பேருந்தில் ஏறினோம்.
         (  தொடுவானம் தொடரும்  )
Series Navigationஎழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா