தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்

Spread the love

ரா.பிரேம்குமார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்தியமொழிகள் மற்றும்     ஒப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-10

நாம் வாழும் இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தம் தம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பிற உயிரினங்களைச் சார்ந்து தான் வாழுகின்றன. அதேபோல் எழுத்துகளும் பிற எழுத்துகளைச் சார்ந்து வருகின்றன அவ்வாறு சார்ந்து வரும் எழுத்துகளை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது. எழுத்துகளை முதல், சார்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
முதல்
பிற எழுத்துகள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பவை முதலெழுத்துகள் ஆகும். இம் முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்கிறோம்.
சார்பு
சார்பு என்பதற்கு அடைக்கலம், அணைவு, இடம், உதவி, கடவுள், கிட்டுகை, குணம், சேர்பு, தயவு, தன்மை, பற்று எனக் கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி சார்பு என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் தருகிறது. இங்கு அணைவு, சேர்பு, பற்று என்ற பொருண்மையில் ஆராயப்படுகிறது.
வாயுறுப்புகளான் தடையின்றி வரும் ஓசைகளை உயிரெழுத்தென்றும் தடையுற்று வரும் ஒலிகளை மெய்யெழுத்து என்றும் அவ்வுயிரையும் மெய்யையும் பற்றுக்கோடாகக் கொண்டு வரையறைக்கு உட்படும் சில சொற்களிடத்தே தோன்றி வரும் ஓசைகளைச் சார்பெழுத்தென்றும் குறியீடு செய்துள்ளனர் என வாழ்வியற் களஞ்சியம் பொருள் விளக்கம் தருகிறது.
தொல்காப்பியத்தில் சார்பெழுத்துகள்
சார்பெழுத்துகள் சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகக் கொண்டவை.
“சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே”
(தொல்.எழு.1)
மேலும் சார்பெழுத்தின் வகையைக் குறிப்பிடும் பொழுது
“அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”
(தொல்.எழு.2)
ஏன வகைப்படுத்துகின்றார்.
சார்பெழுத்தின் மாத்திரை
“மெய்யின் அளபே அரை என மொழிப
அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே”
(தொல்.எழு.11)
மெய்யெழுத்திற்கான ஒலி அளவு அரை மாத்திரை எனக் காப்பியர் வரையறை செய்துள்ளார.;
சார்பெழுத்தின் வகைகள்
காப்பியர் சார்பெழுத்தை மூன்று வகையாகக் கூறியுள்ளார்.
குற்றியலிகரம்
குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாக நிற்க வருமொழி முதலில் யகரம் வந்தால் அந்தக் குற்றியலுகரத்தின் உகரம் இகரமாக திரியும். அவ்வாறு திரிகின்ற இகரம் தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பதால் இதனைக் குற்றியலிகரம் என்கிறோம்.
“யகரம் வருவழி இகரம் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றும்”
(தொல்.எழு.410)
நாடு-யாது—நாடியாது
குற்றியலுகரம்
குற்றியலுகரம் நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி ஈற்றிலும் குற்றியலுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து வரும்.
“நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே”
(தொல்.எழு.36)
நெட்டெழுத்து—நாடு
தொடர்மொழி ஈறு—
வரகு
கச்சு
பாட்டு
வாத்து
காப்பு
காற்று
ஆய்தம்
ஆய்த எழுத்து ஒரு சொல்லில் இடம் பெறுகின்ற பொழுது தனக்கு முன் குற்றெழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்தையும் பெற்று நடுவில் வரும்.
“குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே”
(தொல்.எழு.38)
அஃது
கஃது
எஃது
சொற்கள் புணரும்பொழுதும் ஆய்த ஓசை வரும்
“ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்”
(தொல்.எழு.39)
அல்-திணை–அஃறிணை
பல்-துளி–பஃறுளி
கல்-தீது–கஃறீது
என வரும்.
நன்னூலில் சார்பெழுத்துகள்
நன்னூல் தொல்காப்பிய மரபைப் பின்பற்றி எழுந்தாலும் சார்பெழுத்தை வகைப்படுத்தும் பொழுது சற்று மாறுபட்டுக் காணப்படுகின்றது. மேற்கூறிய மூன்றும் நன்னூலில் அப்படியே இடம்பெற்றுள்ளதால்; அம்மூன்றைத் தவிர்த்து மற்றவை இங்கு விளக்கப்படுகின்றன.

“மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல் சார் பெனவிரு வகைத்தே”
(நன்.எழு.58)
மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து. இது முதல் சார்பு என இருவகைப்படும்.
“உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஒள மஃகான்
தனிநிலை பத்தும் சார்பு எழுத்தாகும்”
(நன்.எழு.60)

உயிர்மெய்
“உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு”
உயிர்மெய் 216 எழுத்துகளையும் சார்பெழுத்தில் அடக்குவார்.
உயிர் 12, மெய் 18 ஆகிய இரண்டும் திரிந்து 216 ஆக மாற்றம் பெறுகின்றன.
உயிரளபெடை
செய்யுளின் ஓசை குறையும் பொழுது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்து ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு 21 இடங்களில்; ஒலிக்கும்.
முதல்–ஓஓதல்
இடை—உப்போ ஓ உப்பு
கடை—முருகா அ
ஒற்றளபெடை
செய்யுளின் ஒசை குறையுமிடத்து ஙஞண நமன என்ற மெல்லினம் ஆறும் வ ய ல ள என்ற இடையினம் நான்கும் ஆய்த எழுத்து ஒன்றும் ஆக 11 மெய்யெழுத்துகளும் இரு குற்றெழுத்தின் பின்னும் ஒரு குற்றெழுத்தின் பின்னும் மொழி நடு, கடையிலும் அவ்வோசையை நிறைக்கத் தம் அரை மாத்திரையில் மிகுந்து ஒலிக்கும். அளபெடுத்தமை அறிதற்கு அடையாளமமாக அம்மெய்யெழுத்துகளின் பின் அம்மெய்யெழுத்தே மற்றொருமுறை குறியாய் வரும். இவ்வகையில் வரும் ஒற்றளபெடை 42 வகையாக வரும்.
இடை– இலங்ங்கு
எங்ங்கிறைவன்;    இலஃஃகு
கடை—அங்ங் கனிந்த
என வரும்

ஐகாரக்குறுக்கம்
ஐகாரம் தன்னைக் குறிக்கும் இடத்திலும் அளபெடுக்கும் இடத்திலும் தன்னுடைய நிலையிலிருந்து ஒரு மாத்திரையாய்க் குறுகி மொழி முதல், இடை, கடையிலும் ஒலிக்கும்.
“தற்சுட்டு அளபுஒழி ஐம்மூ வழியும்
நையும் ஒளவும் முதலற்று ஆகும்”
(நன்.எழு.95)
முதல்– ஐப்பசி
இடை–இடையன்
கடை—குவளை

ஒளகாரக்குறுக்கம்
ஒள என்னும் நெட்டெழுத்து மொழி முதலில் வரும் பொழுது தன்னுடைய மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
ஓளவை
வெளவால்
மகரக்குறுக்கம்
ளகர, லகரம் திரிந்த ணகர, னகர மெய்களில் ஒன்றன் முன்னும் வருமொழி முதலில் நின்ற  வகர உயிர் மெய்யின் பின்னும் வரும் மகரமெய் தன் அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையளவில் குறுகி; ஒலிக்கும். இது மூன்று நிலையில் வரும்.
“ணன முன்னும் வஃகான் மிசையு மக்குறுகும்”
(நன்.எழு.96)

போலும்–போல்ம்–போன்ம்
மருளும்–மருள்ம்–மருண்ம்
தரும் வளவன்

ஆய்தக்குறுக்கம்
தனிக்குறில் அடுத்த லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சியில் வருமொழி தகரம் வரும் பொழுது ஆய்தம் அரை மாத்திரையில் குறுகி ஒலிக்கும்.
“லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்”
(நன்.எழு.97)
கல்-தீது—கஃறீது
முள்-தீது—முஃடீது

தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறிய சார்பெழுத்துகளைத் தொகுக்கும் பொழுது வகைகளும் அவற்றின் நிலைகளும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. தொல்காப்பியர் கால வழக்கிற்கு ஏற்பச் சார்பெழுத்துகளை வகைப்படுத்தியுள்ளார் எனவும் நன்னூலார் தம் கால வழக்கிற்கேற்ப வகைப்படுத்தியுள்ளார் எனவும் கூறலாம்;.
மொழியின் வரலாறு பல்வேறு காலக்கட்டங்கள் கொண்டது. ஒரு காலத்தில் வழங்கிய சொற்களை அடுத்த காலக்கட்டத்தில் காண முடியாது. கால வளர்ச்சியில் எத்தனையோ புதுச்சொற்கள் உருவாவதும் பல சொற்கள் வழக்கு இழப்பதும் கால இயற்கையாகும். இத்தகைய நிலைகளைத் தொல்காப்பியத்திற்குப் பின் எழுந்த நன்னூலிலும் காணமுடிகிறது.
புதிய சிந்தனை ஓட்டத்தால் நுண்ணிய வேறுபாடுகளை விளக்கப் புதிய சொற்கள் தேவைப்படுவது காலத்தின் தேவையாகும். ஆகவே காலத்திற்கு ஏற்ப மொழிவளர்ச்சி நிலைகளையும் இலக்கண மாற்றங்களையும் மொழியியல் உணர்வுகளையும் உள்வாங்கித் தொல்காப்பியத்திற்குப் பின்வந்த நன்னூலும் இலக்கணத்தை அமைத்துள்ளதை உணர முடிகிறது.
துணைநின்றவை
தொல்காப்பியம், கழக வெளியீடு
நன்னூல், கழக வெளியீடு
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-7
கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி

Series Navigationஆனந்த பவன் நாடகம் காட்சி -19தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்