நான் கூச்சக்காரன்

Spread the love

 

 

பா. ராமானுஜம்

 

எனக்கு கூச்ச சுபாவம் என்கிறார்கள்.

அது என்னமோ உண்மைதான்.

 

முதன்முதலில் ஞாபகம் வருவது

தியாகுவின் திருமணம்தான்.

‘ரவிக்கு சங்கோஜம் அதிகம்,

சாப்பிடாமல் வந்துடுவான்,

நீ அழைச்சுண்டு போ,’

என்றாள் பூச்சம்மா பாட்டி.

‘வாடா, குழந்தை,’ என்றார் மாமா.

நான் போகவில்லை.

நான்தான் கூச்சப்பட்டுக்கொண்டு

முதல் பந்தியிலேயே

கூட்டத்தில் அடித்துப் பிடித்து

சாப்பிட்டுவிட்டேனே.

 

கன்னத்தைத் திருகி

தலையைச் சாய்த்து

கண்சிமிட்டிச் சிரித்தாள் மாமி.

‘ரொம்பப் பெரியவனாயிட்டயா,

கூச்சப்படாமல் அருவிக்கு வாடா.’

பங்கார வளைக்கரம் தோளைச்சுற்றி

அணைக்க அணைக்க 

பரந்த நடைபாதை

நாணத்தில்

நெளிந்து

குறுகியது.

ஆழங்குறை அருவியில்

குறுகி அமிழ்ந்து திரண்டு 

விரியும் பின்னழகைப்

பார்த்துப் பார்த்துப்

பெருகி வழிந்த கூச்சம் 

புதுப்புனலாய் ஓடியது.

 

கூச்சம்

கல்லூரிக்கும் சென்றது.

இருபாலர் கல்லூரி

கூச்சத்தை இரட்டித்தது.

‘என்ன பயம்?

விழுங்கியாவிடுவேன்?’

என்றாள் வாசனையுடன் ஷீலா.

உகந்த நாணக்கேடு

விளைவித்த கூச்சத்தில்

களிப்புடன் நெளிந்தேன்.

காலம் ஓடியது,

வாசனைகள் வேறுபட்டன.

படிப்பும் முடிந்தது,

கூச்சம் மட்டும்

தொடர்ந்தது.

 

‘அவனுக்கு சபைக்கூச்சம்,’

என்கிறார் மாமா

எழுத்தாளனாகவே வாழும் நான்

ஒவ்வொரு முறையும்

விருது பெறும்போது.

அவர் கூச்சம், வெட்கம்

இவற்றைக் கடந்தவர்;

அருவி மாமியின் கணவர்.

 

‘இன்றுமா!’

அலுத்துக்கொள்கிறாள்.

‘அது இருக்கட்டும்,

இது வெட்கம் அறியாது என்கிறார்களே,

உங்களுக்கு எப்படி இந்த வெட்கம்,

பொம்மனாட்டி மாதிரி?’

இந்த இரண்டாவதைத்தான்

நிதியும் கேட்கிறாள்,

சஃபியும் கேட்கிறாள் –-

ஆனால் அலுத்துக்கொள்ளாமல்,

அழைப்பு மொழியில்.

நான் என்ன செய்யட்டும்,

நான் சுத்திகரிக்கப்படாத கூச்சக்காரன்:

காலமோ அனுபவமோ

பண்படுத்தாத கூச்சம் அது.

 

Series Navigationஇலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’வர்ண மகள் – நபகேசரா