நான் தான் பாலா ( திரை விமர்சனம்)

 

 

இயக்கம்: கண்ணன். ஓளிப்பதிவு : அழகிய மணவாளன். இசை: வெங்கட் கிருஷி. பாடல்கள்: அமரர் வாலி, நா.முத்துகுமார், இளையகம்பன். கலை: விஜயகுமார். நடிப்பு: விவேக், வெங்கட்ராஜ், தென்னவன், ஸ்வேதா, சுஜாதா, செல் முருகன், மயில்சாமி. நேரம்: 133 நிமிடங்கள்.

____________                           ____________________________

அழுத்தமான கதை ஒன்று, சரியான திரைக்கதை, பாத்திரப்படைப்புஇல்லாத கோளாறால், அந்தரத்தில் தொங்குகிறது. அதை இன்னமும் இறுக்கி, இறுதி ஊர்வலத்திற்கு அனுப்புகிறது, புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குனரின் ஆசுவாச முயற்சி.

விவேக்கின் கதை நாயகப் பிரவேசம், சரியான ஆய்வில்லாததால், அரை வேக்காடாக போனதற்கு, அவரைச் சொல்லிக் குற்றமில்லை. காமெடி பாத்திரங்கள் அருகிப் போன சூழலில், இதை ஒரு விஷப் பரிட்சையாக எடுத்துக் கொண்டு, இருந்த பெயரையும் காலி பண்ணிவிட்டார்.

பெருமாள் கோயில் குருக்கள், சட்டையுடன்தீர்த்தம் தருவதும், தீபாராதனை காட்டுவதும், அனைத்து ஆன்மீகவாதிகளின் மனங்களிலும், கொந்தளிப்பை ஏற்படுத்தும். திரைக்கதையில் இம்மாதிரி சுரங்க ஓட்டைகள் வராமல் இருக்க சினிமா “ஐயர்” களைக் கேட்டிருக்கலாம். கோட்டை விட்டதில், ஓட்டை பெரியதாகி, படத்தையே விழுங்கி விட்டது.

நடிப்பைப் பொறுத்தவரை, விவேக் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு பாத்திரம் பொருந்தவில்லை, சமஸ்க்ருதம் வாயில் நுழையவில்லை என்பதுதான் படத்தின் பெரிய மைனஸ். என்னதான் சீரியஸாக அவர் பார்த்தாலும், அது காமெடி லுக் ஆகிவிடுகிறது. பழக்க தோஷம்!

சின்னப் பெண்ணாக, பல படங்களில் வந்த ஸ்வேதா, இதில் கதை நாயகி. ரெடிமேட் பாவங்களில் அவர், ரசிகனை சோர்வடைய வைக்கிறார். பற்றாத குறைக்கு டூயட்டில் அவர் போடும் ஆட்டம், மொத்தமாக அவரைக் கவிழ்த்து விடுகிறது.

செல் முருகன், மயில்சாமி நகைச்சுவை வசனங்கள் எல்லாம், விவேக்கிற்காக எழுதப்பட்டவை. அவர் நாயகனாக ஆனதால், வேறு வழியில்லாமல், அவை செல்லின் வாயில் விழுந்து, செத்துப் போகின்றன. இனி எழுதுவதோடுநிறுத்திக் கொள்ளட்டும் செல்.. இல்லையென்றால் “செல்” என்று சொல்லி விடும் தமிழ் திரையுலகம்

உருப்படியான நடிப்பைத் தந்தவர்கள் புதுமுகம் வெங்கட்ராஜும், தென்னவனும். அசப்பில், மலையாள நடிகர் லாலைப் போலிருக்கும் தென்னவன், இனி பெயர் சொல்லும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும். வாழ்த்துக்கள். வெங்கட்ராஜ், தனி ஹீரோவாக வலம் வருவதற்கு உண்டான திறமையைப் பெற்றுள்ளார். பாராட்டுக்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் தென்னவனின் மனைவியாக வரும் சுஜாதா அசத்துகிறார்.

பாட்டிகள் பாடும் “ திருவாய்மொழி அழகா” நல்ல பாட்டு. பழைய மெட்டில் ஒலிக்கிறது “உயிரே உனக்காகப் பிறந்தேன்” அனைத்து விருந்து பதார்த்தங்களையும் உள்ளடக்கிய “ போஜனம் செய்ய வாருங்கள்” ஒரு வித்தியாசமான பாட்டு. இடையில் வரும் “ பாவைக்காய் பிரட்டல், கத்தரிக்காய் துவட்டல்” வரிகள், எச்சில் ஊற வைக்கின்றன. வெங்கட் கிருஷியிடம் திறமை இருக்கிறது. சேர்ந்த இடம் தான் சரியில்லை.

“ விஜய் இந்தக் கடையிலே நகை வாங்கச் சொல்றாரு. சூர்யா அந்தக் கடையிலே வாங்கச் சொல்றாரு. விக்ரம், மொத்தமா வாங்கின நகையை, அந்தக் கடையிலே, அடகு வைக்கச் சொல்றாரு.. ஒரே குழப்பமா இருக்கு “

“ மைக்கேல் ஜாக்சன் நல்லா டான்ஸ் ஆடுவாரு. ஆனா அவர் சாவுக்கு அவராலே ஆட முடியுமா?” நினைவில் நிற்கும் சில வசனங்கள். மற்றதெல்லாம் பழைய சோறு.

பாலா ( விவேக்) கும்பகோணத்தில், ஒரு பெருமாள் கோயில் அர்ச்சகர். ஒருநெருக்கடியில் அவருக்கு பண உதவி செய்யும் பூச்சி ( புதுமுகம் வெங்கட்ராஜ்) ஒரு கூலிக் கொலைகாரன். பெற்றோரை இழக்கும் பாலா, பூச்சியைத் தேடி காஞ்சிபுரம் வர, அவனோடு நட்பு உண்டாகிறது. கூடவே போளி விற்கும் விசாலியுடன் ( ஸ்வேதா ) காதல். பூச்சியின் உண்மை முகம் தெரிய வரும்போது, பாலாசந்திக்கும் இக்கட்டுதான் இடைவேளை. பாலா என்ன ஆனான்? பூச்சி திருந்தி, தன் முதலாளி காட்டூரானை ( தென்னவன் ) காட்டிக் கொடுத்தானா? என்று இழுத்து சொல்லியிருக்கிறார்கள். அலுப்பு நமக்கு.

மொத்தமாக ஒரு கோடியில் எடுத்து, ஒன்றரை கோடியில் ஜெயா தொலைக்காட்சிக்கு விற்ற பின், திரை அரங்குகளில் போட்டு, ரசிகர்களை வாட்ட வேண்டுமா கண்ணன்? தியேட்டர்களில் சானல் மாத்த முடியாதே!

0

Series Navigationவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1