“நான் மரணிக்க விரும்பவில்லை”- ஹுயூகோ ஷாவேஸ் உச்சரித்த கடைசி வரி

ஹெச்.ஜி.ரசூல்
ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும்”. இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ்.நான் மரணிக்க விரும்பவில்லை” என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டில் புரட்சி என்கிற சொல்லை புதிய கோணத்தில் மறு அறிமுகம் செய்து வைத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். 1954ல் பிறந்து சாவேஸ் 1975ல் மிலிட்டரி அகாடெமியில் பட்டம் பெற்றார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிஸ அரசாங்கங்களில் முதலிடம் வெனிசூலாவுக்குதான் கொரில்லா தாக்குதல் இல்லை… ராணுவத்தை வைத்து கலகம் செய்யவில்லை… தேர்தலில் நின்று, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் சாவேஸ். மக்களின் மனம் கவர்ந்தவர் இந்த புரட்சி நாயகன். வெனிசூலாவில் சாவேஸ் நிகழ்த்திக் காட்டியஅமைதிப்புரட்சி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. எனவேதான் காஸ்ட்ரோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளராகவே கருதப்படுகிறார்.உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் முதன்மையானது வெனிசூலா. அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு நிலைகொள்ள முடியாமல் நவகாலனியத்திற்கு எதிர்சக்தியாக திகழ்ந்தார் சாவேஸ்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான வேர்ல்டு சோசலிஸ்ட் வெப்சைட்டில் தமிழாக்கத்தில் இடம்பெற்ற பில்வேன் அவ்கேன் எழுதிய ஹுயூகோ ஷாவேஸ் குறித்த கட்டுரை இங்கு மீள்பதிவாய் வெளியிடப்படுகிறது.
14 ஆண்டு காலமாக அதிகாரத்தில் வெனிசுவேலாவின் ஜனாதிபதியாகவும், முன்னாள் இராணுவ அதிகாரியாகவும், இடது தேசியவாதியுமாக இருந்த ஹ்யூகோ ஷாவேஸ் இரண்டு ஆண்டு காலமாக புற்றுநோயுடன் போராடிய பின் காரகஸ் இராணுவ மருத்துவமனையில் செவ்வாய் பிற்பகல் காலமானார்.
Accion Democratica என்னும் ஒரு சமூக ஜனநாயகவாத முதலாளித்துவக் கட்சியின் தலைவரான ஊழல் மிகுந்த வெனிசுவேலா ஜனாதிபதி கார்லோ ஆண்ட்ரே பெரஸ் ஆட்சிக்கு எதிராக நடத்திய தோல்வியுற்ற இராணுவ ஆட்சிக் கவுழ்ப்பின் தலைவர் என்ற முறையில் 58 வயதாகியிருந்த ஷாவேஸ் தேசிய முக்கியத்துவம் பெற்றார். கிட்டத்தட்ட 3,000 பேர் கொலை செய்யப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தால் வழிநடத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு வெகுஜன எழுச்சியான “காரகாசோ” என்னும் இரத்தம் தோய்ந்த அடக்குமுறைக்கு ஆண்ட்ரே பெரஸ்தான் பொறுப்பாவார்.
இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை அடைந்த ஷாவேஸ், அவருடைய “பொலிவேரியன்” இயக்கத்தை நிறுவி, 1998ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார். தான் “இடதையோ,வலதையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” எனவும், ஆனால் Accion Democratica மற்றும் Christian Democratic Copei கட்சி ஆகியவற்றிற்கிடையே முந்தைய தசாப்தங்களில் அதிகாரமானது மாறி மாறி வர்த்தகமாக்கப்பட்டிருந்த ஊழல் மிகுந்த இரு கட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சமூக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதாக கூறினார்.
அதிகாரத்திற்கு வந்தபின், அவர் ஓர் இடது ஜனரஞ்சக அரசியல் அரங்கிற்கான ஆதரவைத் தேடி, தன்னை தேசியவாதி மற்றும் ஒரு “சோசலிஸ்ட்” என அடையாளம் காட்டினார்.
வாஷிங்டனுடைய விட்டுக்கொடுப்பற்ற விரோதப் போக்கைத்தான் ஷாவேஸ் தன்னுடைய ஜனரஞ்சக, தேசியவாத அரசியல் மூலம் பெற்றுக்கொண்டார். இதில் அமெரிக்கவைத் தளமாகக் கொண்ட எரிசக்திப் பெரு நிறுவனங்களுடனான மோதல்கள் இருந்தன. அதற்குக் காரணம் அவர் நாட்டின் பெட்ரோலிய வளங்களைப் பயன்படுத்துவதன் மீது கூடுதலான தேசியக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுதான். அதைத்தவிர பகுதியான தேசியமயமாக்கல்கள், கியூபாவிற்கு அவர் கொடுத்த பொருளாதார ஆதரவு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டி நாடான சீனாவுடன் அவர் நெருக்கமான பொருளாதாரத் தொடர்புகள் கொண்டது ஆகியவையும் காரணமாக இருந்தன.
ஏப்ரல் 2002ல், CIA ஆல் ஆதரவளிக்கப்பட்ட ஆட்சிசதியினால் குறுகிய காலத்திற்கு ஷாவேஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விசுவாசமாக இராணுவப் பிரிவுகள் மற்றும் மக்களின் வறிய பிரிவுகள் நடத்திய ஒரு வெகுஜன கிளர்ச்சியின் விளைவால் மீண்டும் ஜனாதிபதி அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு அவர் பதவியிலிருத்தப்பட்டார்.
ஷாவேஸின் ஜனாதிபதிக் காலம் முழுவதும், ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy- USAID,) மற்றும் CIA போன்ற முகவர்களை வலதுசாரி அரசியல் எதிர்க் கட்சிக்கு நிதியளித்து ஆலோசனை கொடுக்க வாஷிங்டன் பயன்படுத்தியது. எதிர்க் கட்சியானது வெனிசுவேலாவின் சிறு தன்னல ஆட்சிக் குழுவின் பிரிவுகளிடையே ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்தன. அக்குழுப் பிரிவுகள் ஷாவேஸ் வறியவர்களுக்கு அழைப்புவிடுவதையும், அத்தோடு அவருடைய சொந்த கலப்பினம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் கீழ்மட்ட மரபுமூலத்தையும் கடுமையாக எதிர்த்தன. போட்டியிட்ட தேர்தல்களில் பலமுறை ஷாவேஸ் வெற்றி பெற்றபோதிலும், அதிகாரத்திலிருந்த அமெரிக்க நிர்வாகங்களும் அமெரிக்கச் செய்தி ஊடகமும் அவருடைய ஆட்சியை சட்டரீதியற்ற மற்றும் சர்வாதிகாரமானது என்றுதான் திரும்பத் திரும்ப சித்தரித்தன.
மறுபுறம், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலுள்ள போலி இடது பிரிவுகள் ஷாவேசை தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரத் தலைவர் எனக்காட்ட முற்பட்டு, அவருடைய “21ம் நூற்றாண்டு சோசலிசம்” என்கிற தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட கோட்பாட்டை, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கும் அப்பாலும் வெகுஜனங்களுக்கு ஒரு புதிய முன்னேற்றப்பாதை என்று முன்வைத்தன.
உண்மையில், ஷாவேசின் கொள்கைகளானது நாட்டின் வருமானத்தில் 90%க்கும் அதிகமாக உள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் வருமானங்களைப் பயன்படுத்துவதன் மீது அடித்தளமாக கொண்டவையாகும். மிகப் பெரிய சதவிகித ஏற்றுமதி அமெரிக்காவிற்கானதாகும். இந்த நிதியின் மூலம்தான் வறியவர்களுக்காக நடத்தப்படும் முக்கிய சமூக நலத் திட்டங்கள் நிதிஉதவி பெறுகின்றன.
இத்திட்டங்கள் கல்வியறிவு மட்டங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள் மற்றும் வெனிசுவேலாவின் வறிய மக்களின் பெரும்பான்மையானோரின் வருமான மட்டங்கள் ஆகியவற்றை ஐயத்திற்கு இடமின்றி உயர்த்தினாலும், பொருளாதாரத்தின் முழு உயர் அதிகாரங்களும் உறுதியாக நிதிய உயரடுக்கின் கரங்களில்தான் இருந்தன. 1998ல் ஷாவேஸ் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது இருந்த நிலையைவிட, இன்று தனியார்துறைதான் அதிகமான பங்கை நாட்டின் பொருளாதாரத்தில் கொண்டுள்ளது. இராணுவத்துடன் சேர்ந்து அவருடைய அரசாங்கத்தின் தூணாக நிதி மூலதனம் தான் இருந்தது.
வெனிசுவேலா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வெகுஜனங்களிற்கு ஷாவேஸ் வெளிப்படுத்தும் பரிவுணர்வைச் சந்தேகிக்கத் தேவையில்லை. ஆனால் தொழிலாளர வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதன் மூலமோ அல்லது அரச அதிகாரத்திற்காக அதனுடைய சொந்த அமைப்புக்களை உருவாக்காமலோ அவருடைய “பொலிவேரியன் புரட்சி” அரசியலானது உண்மையான சோசலிசத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
ஆர்ஜேன்டினாவில் பெரோன், சிலியில் அலெண்ட் முதல் பெரு மற்றும் பொலிவியாவில் இடது தேசியவாத இராணுவ ஆட்சிகள் வரை இலத்தீன் அமெரிக்காவின் வரலாறு இத்தகைய “இடது” முதலாளித்துவ ஆட்சிகளின் உதாரணங்களை நிறைவே கொண்டுள்ளது. இவைகள் பாசிச இராணுவ சர்வாதிகாரங்களுக்கு தயாரிப்புசெய்யும் முன் அறைகளாகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான தோல்விகளுக்குமே சேவை செய்தன.
ஷாவேஸ் இறப்பு அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரம் முன்புதான், தன்னுடைய அரசியல் வாரிசு என ஷாவேஸால் அறிவிக்கப்பட்ட வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ வெனிசுவேலாவின் இராணுவ அதிகாரிகளை “உறுதிகுலைக்கும் திட்டங்களுக்கு” அணிதிரட்ட முயற்சித்தார்கள் என்று வெனிஜூலாவில் இருந்து அமெரிக்க விமானப் படைப் பிரிவு அதிகாரி கேர்ணல் டேவிட் டெல்மோனாகோவையும் அவருடைய துணை அதிகாரியையும் நாடு கடத்த அறிவித்திருந்தார்.
ஷாவேஸின் மரணத்தைப் பயன்படுத்தும் வகையிலும், வாஷிங்டனுக்கு நம்பிக்கைகள் இருப்பதைக் குறிக்கும் வகையிலும், வெனிசுவேலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இன்னும் சாதகமான சூழலை நிறுவுவதற்கும் ஓர் அறிக்கையை ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார். “ஜனாதிபதி ஷாவேஸ் இறந்துவிட்ட இந்தச் சவால் நிறைந்த காலத்தில், அமெரிக்கா வெனிசுவேலிய மக்களுக்கு அதன் ஆதரவை மறு உத்தரவாதம் செய்கிறது. அதேபோல் வெனிசுவேலிய மக்களுடன் ஆக்கப்பூர்வ உறவுகளை வளர்க்கும் அக்கறையையும் கொண்டுள்ளது” என்பதாக அந்த அறிக்கை இருந்தது.
வெனிசுவேலாவின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி மரணித்து 30 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஷாவேவாத கொள்கைகளுடைய வேட்பாளராக துணை ஜனாதிபதி மடுரோ வெளிப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஷாவேஸ் தோற்கடித்திருந்த மிரண்டா மாநிலத்தின் ஆளுனரான ஹென்ரிக் காப்ரைல்ஸை எதிர்கொள்ளுவார்.
ஹ்யூகோ ஷாவேஸ் இல்லாத நிலையில் ஷாவிஸ்மோவின் வருங்காலம் உறுதியானது என்று கூறுவதற்கு இல்லை. முன்னாள் பாரட்ரூப் லெப்டினென்ட் கேணல் அரசாங்கத்தின் முக்கிய தூணான இராணுவத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கின்றார். முன்னாள் பஸ் சாரதிகள் சங்கத்தின் தலைவரும், ஷாவேஸ் 1992க்குப் பின் சிறையில் இருந்தபோது அவருடைய வக்கீலின் கணவருமான மடுரோவிற்கு இவை இல்லாதுள்ளது.
இந்த உறவுகளின் முக்கியத்துவம் மடுரோவினை அடுத்து வெனிசுவேலாவின் தேசியத் தொலைக்காட்சியில் நாட்டின் இராணுவத்தின் தலைவர் அட்மைரல் டீகோ மொல்ரோ உடனடியாக தோன்றியதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இவர் வெனிசுவேலிய மக்களுக்கு இடையே “ஐக்கியம், அமைதி, புரிதல்” ஆகியவற்றிற்கு அழைப்புவிட்டு, அரசியலமைப்பிற்கு ஆயுதப் படைகளின் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

Series Navigationலாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு(5) – செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்