நிஜத்தைச் சொல்லிவிட்டு

Spread the love

நிஜத்தைச் சொல்லிவிட்டு
கனவு செத்துவிட்டது

கடவில் விழுந்த காசு
செலவு செய்ய முடியாது

கிளைகளை துணைகளை
அறுத்துவிட்டு கடலானது ஆறு

தோம்புக்காரர் முதுகில்
என் மஞ்சள் டீ சட்டை

வெள்ளிக்கிழமை தொழுகையில்
என் ஒரு வெள்ளிக்காசு
அந்த நோயாளிக்கு இழப்பு

நான் படித்த
என்னைப் படித்த புத்தகங்கள்
நூலகங்களுக்கு நன்கொடை

என் எழுத்துப்படிகள்
தோம்பில் தற்கொலை

மின்தூக்கிக் கடியில்
என் ரோஜாத் தொட்டி
உயிர்விடப் போகிறது

நான் கவிதை எழுதும் மூலையில்
உலர்கின்றன உள்ளாடைகள்

அடையாளம் இழந்தது
என் அடையாள அட்டை

மருத்துவமனை எனக்கினி
தேதி குறிக்காது

பிரிக்கப்படாமலேயே
என் கடிதங்கள்

நான் பிடுங்கப்பட்ட வேரா
முளைக்கும் விதையா
இனிமேல் தெரியலாம்

என் சுயசரிதை சுபம்
முற்றுப்புள்ளியாக
முகம் அறிந்தோர் கண்ணீர்

என் முகவரியின் முதல்வரியில்
இனி நான் இல்லை

இன்னுமா புரியவில்லை…..
நான் மரணித்துவிட்டேன்.

அமீதாம்மாள்

Series Navigationநூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்துபாலைவனங்களும் தேவை