நீங்காத நினைவுகள் – 5

Spread the love

 

    அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவர்.  ‘ யங் வுமன்’ஸ் ஹரிஜன் வெல்ஃபேர் அசோயேஷன்’ எனும் அமைப்பை மயிலாப்பூரில் அவர் நடத்தி வந்தார்.  பெயரில்தான் ‘ஹரிஜன்’ எனும் சொல் இடம் பெற்றிருந்ததே தவிர, அதில் பிற ஜாதியினரும் மதத்தினரும் கூட இடம் பெற்றிருந்தனர்.  அந்த அமைப்பின் தொடர்பாக அடிக்கடி அவர் புகழ் பெற்ற சமுதாய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் போன்றோரைச் சந்திக்கச் செல்லுவதுண்டு. அவ்வப்போது என்னையும் அவர் உடனழைத்துச் செல்லுவார்.

 

    அப்படி ஒரு முறை புரட்சிக் கவிஞர் அமரர் பாரதிதாசன் அவர்களைச் சந்திக்கச் சென்ற போது என்னையும் உடனழைத்துச் சென்றிருந்தார். அது 1960 களின் தொடக்கம். தமது ‘பாண்டியன் பரிசு’ எனும் கதையைத் திரைப்படமாய்த் தயாரிக்கும் உத்தேசத்தில் பாரதிதாசன் சென்னைக்கு வந்து சில நாள் தங்கியிருந்தார்.

 

(கவிஞர் பொன்னடியான் அவர்கள் அங்கு வந்து போவதுண்டு.)

 

    என் தோழி பாண்டிச் சேரியில் இருந்த போது ஏற்கெனவே பாரதிதாசனைச் சந்தித்திருந்தார். என் தோழி என்னைக் குழந்தை எழுத்தாளர் என்று அவருக்கு அறிமுகப் படுத்தி, என் பெயரையும் கூறினார். எங்களை வரவேற்று அமரச்சொன்ன பாரதிதாசன் பொதுவாய்ச் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின், ‘இந்தப் பாப்பா  அய்யர் வீட்டுப் பொண்ணுதானே?’ என்று கேட்டார். என் தோழி ஆமாம் என்றார்.

 

    அடுத்து, என்னை நோக்கியவாறு பாரதிதாசன் கேட்ட கேள்வியால் சற்று அதிர்ந்துதான் போனேன்:

 

     “அய்யரா. அய்யங்காரா?”

 

     “அய்யர்தான். அய்யங்கார்ல கிரிஜான்னு  பேரு வைக்க மாட்டாங்களே! கிரிஜான்றது பரமசிவன் மனைவி பார்வதியோட இன்னொரு பேராச்சே?” என்றேன்.

 

    வாய்க்குள் சிரித்துக்கொண்ட பாரதிதாசன், “என்ன கோத்திரம்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டதும், ‘என்ன இது? பாரதியாரின் வாரிசு என்று கருதப்படும் கவிஞர் இப்படி யெல்லாம் கேட்கிறாரே? நம்ப முடியவில்லையே!’ எனும் எண்ணங்கள் என்னுள் கிளர்ந்த. சிறிது சினமும் கூட வந்தது.

 

     “என்னது நீங்க? பாரதிதாசனா யிருந்துக்கிட்டு கோத்திரமெல்லாம் கேக்கறீங்க?” என்று நான் சிறிது வெடுக்கென்று என்னையும் மீறி எதிர்க்கேள்வி கேட்டுவிட்டேன். என்னருகில் உட்கார்ந்திருந்த தோழியின் முகம் வெளிறிவிட்ட்து. ஒன்றும் பேச முடியாமல், ‘இத்தோடு நிறுத்திக்கொள்’ என்பது போல் என் விலாவில் கிள்ளி எச்சரித்தார்.

 

    நான் பாரதிதாசன் அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முகத்தில் உடனடியான மாற்றம் எதுவும் தென்படவில்லை.  ஆனால் சில நொடிகள் கழித்து என்னைப் பார்த்து அன்பாகச் சிரித்தார். அதன் பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது. வந்த இடத்தில் மாபெரும் கவிஞரோடு இப்படி வாய்த்துடுக்காய்ப் பேசி விட்டோமே எனும் குற்ற உணர்ச்சி பெருமளவு குறைந்தது.

    “இப்படித்தான் இருக்கணும்!” என்றார்.  எனக்கு அப்பாடா என்று ஆனது.

 

    தமது பாண்டியன் பரிசு திரைப்படமாக வரப் போவது பற்றி, அதில் சிவாஜி கணேசன் நடிக்கப் போவது பற்றியெல்லாம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்.  அடிக்கடி ‘சோடா’ குடித்தவாறு இருந்தார்.

 

    மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.  அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த தாயாரம்மா என்பவரை அழைத்து, “இந்தப் பொண்ணுங்க ரெண்டும் இன்னைக்கு நம்ம வீட்டுல சாப்பிடும். (என்னைச் சுட்டிக்காட்டி) இந்தப் பாப்பா அய்யர் வீட்டுப் பொண்ணு. அதனால மரக்கறி    சமையல் பண்ணுறதுக்குன்னு தனியாப் பாத்திரங்க இருக்குதில்லே, அதுல இதுக்கு சமையல் பண்ணிப் போட்டுடுங்க….    என்ன பாப்பா, சரிதானா?” என்றார்.

 

         “எனக்கு ப்ரெட் போதுங்க. எனக்குன்னு தனியால்லாம் சிரமப்பட்டுச் சமைக்க வேண்டாம்” என்று நான் சொன்னதை அவர் ஏற்கவில்லை.

 

     “அதெல்லம் செரமம் ஒண்ணுமில்லே. எங்களோட உக்காந்து சாப்பிட முடியாட்டி, தனி ரூம்ல இலை போடச் சொல்றேன்.”

 

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. உங்களோடவே உக்காந்து சாப்பிடுவேன்.”

       சின்ன வெங்காயம் போட்ட காரக் குழம்பு, உருளைக்கிழங்குக் கறி, தக்காளி ரசம் ஆகியவற்றைத் தாயாரம்மா எனக்காக அற்புதமாய்த் தயாரித்திருந்தார்.

    சாப்பாடு முடிந்த பின் மேலும் சிறிது நேரம் இருந்த பிறகு கிளம்பினோம்.

 

     அவரது கொள்கைக்கு மாறாக, ‘என்ன கோத்திரம்?’ என்று பாரதிதாசனார்  வினவியது எந்த நோக்கத்தில் என்பது இன்று வரையில் புரியவில்லை!

 

                            jothigirija@live.com

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !