நீங்காத நினைவுகள் – 8

தபால்-தந்தி இலாகா என்று வழங்கி வந்த இலாகாவைப் பிரித்துத் தபால் இலாகா, தொலைத் தொடர்பு இலாகா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு துறைகளாய்ப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தந்தித் துறை என்பதையே இந்தியாவில் ஒழித்துவிடப் போகிறார்களாம். இதற்கு வரவேற்பு, எதிர்ப்பு இரண்டுமே இருக்கின்றன. மின்னஞ்சல், தொலைக்குறுஞ்செய்திகள் என்று முன்னேறிய பிறகு தந்தியின் இன்றியமையாமை குறைந்து விட்டது உண்மைதான். இருப்பினும் அதை அடியோடு நீக்குவதைப் பலர் ஏற்கவில்லை. சில நாடுகள் தந்தியை ஒழித்துவிட்ட போதிலும், வேறு சில நாடுகள் – மேலை நாடுகள் உட்பட – தந்தியை இருத்திக்கொண்டிருக்கின்றன. என்னதான் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் என்று மாபெரும் முன்னேற்றம் விளைந்துவிட்டாலும், தபால்காரரிடமிருந்தும், தந்திச் சேவகரிடமிருந்தும் நமக்கு வரும் செய்திகளைப் பெறும் போது ஒரு பரபரப்பில் நாம் ஆழ்வது உண்மைதானே! இதில் ஒரு தனி “த்ரில்” இருக்கத்தானே செய்கிறது? உறையின் வாயைக் கிழித்து அதனுள் இருக்கும் தாளை வெளியே இழுத்துப் படித்து முடிக்கிற கணம் வரையில் அதைப் பெறுபவர் ஒரு திகிலையோ பரபரப்பையோ உணர்கிறார் என்பதை மறுக்க முடியுமா?
அந்தக் காலத்தில் தந்தி என்றாலே, அது ஏதோ கெட்ட செய்தியைத் தாங்கி வரும் ஒன்று என்பதாய் ஓர் அச்சம் மக்களிடையே இருந்து வந்தது. இன்று அப்படி இல்லை. “ஆன்னா தந்தி, ஊன்னா தந்தி” என்றாகிவிட்டது. இப்போது அவசிய, அவசரத் தகவல்களை அயல்நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன்கூடக் கண்மூடித் திறக்கும் நேரத்துள் பரிமாறிக்கொள்ள வகை வகையான செல்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், தந்தி யனுப்புவதன் இன்றியமையாமை நின்றே போய்விட்டது என்றே சொல்லிவிடலாம். இருப்பினும், வாழ்த்துத் தந்திகள், சாவுச் செய்திகள், ஒருவர் மிகவும் உடல்நலக்குறைவோடு சாகக் கிடப்பதைத் தெரிவிக்கும் தந்திகள், இரங்கல் செய்திகள் ஆகியவை இலட்சக் கணக்கில் அனுப்பப்பட்டு வருவதாய்த் தெரிகிறது. பட்டி, தொட்டிகளுக்கெல்லாம் இன்றளவும் தந்திச் சேவை தேவைப்படுவதாய்க் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால், ஆனந்த விகடனில் நான் படித்த சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வரிக்கு வரி கதையைச் சொல்லும் அளவுக்கு நினாவாற்றல் இல்லாவிடினும், அதன் சாரம் மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதைப்படித்திருந்திருக்கக் கூடிய எவருமே அதை மறந்திருக்க மாட்டார்கள். அதை எழுதியவர் யாரென்று நினைவில்லை. மிகச் சிறு வயதில் எழுத்தாளர்களின் பெயர்களைக் கவனித்து மனத்தில் இருத்திக்கொள்ளும் பழக்கமும் இல்லை. எனினும் “சசி” எனும் புனைபெயர் கொண்டவராக இருக்கலாமோ என்று இலேசாய் ஒரு ஞாபகம்.
கதை என்னவெனில், ஒரு ரெயில் பெட்டியில் நடுத்தர வயது மனிதர், அவருடைய அழகான இளவயது மகள், திருமணம் ஆகாத இரண்டு இளைஞர்கள் ஆகியோர் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்விரண்டு இளைஞர்களின் பார்வைகளும் திருட்டுத்தனாமாய் அந்தப் பெண்ணின் அழகைப் பருகிக்கொண்டிருக்கின்றன. இருவரும் தந்தியாளர் (telegraphists) களாய்ப் பணி புரிந்துகொண்டிருப்பவர்கள். அவர்களில் ஒருவன் ரெயில் பெட்டியில் மர இருக்கையில் “கட்டுக் கடகட்” என்று வழங்கப்படும் தந்தி மொழியில்,
தன் நண்பனோடு இவ்வாறு பேசுகிறான்: “டேய்! இந்தப் பெண் ரொம்ப அழகாக இருக்கிறாள். பெரியவரோடு பேச்சுக் கொடுத்துப் பார்ப்போம். நம் இருவரில் ஒருவர்க்கு அவளை மணக்கும் யோகம் அடிக்கிறதா என்று பார்ப்போம்!”
“ரொம்பவும் சரி. நீ சொல்லுகிறபடியே அந்தப் பெரியவரோடு பேச்சுக் கொடுப்போம். உனக்கே அந்த யோகம் அடித்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று பதில் தந்தியை மர இருக்கையில் தட்டுகிறான் நண்பன்.
அவர்கள் பெரியவருடன் பேச் முற்படும் முன், பெரியவரே தமது இருக்கையில் தந்திமொழியில் இவ்வாறு அவர்களுக்குப் பதில் சொல்லுகிறார்: “மிகவும் வருந்துகிறேன். என் மகள் உங்களில் யாருக்கும் கிடைக்க மாட்டாள். ஏனெனில் அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்குக் கல்யாணம் நடக்கப்போகிறது!”
அவரும் தந்தித் துறையில் டெலெக்ராஃப் மாஸ்டராக இருப்பதை யறியாத இளைஞர்களின் முகங்களில் எவ்வளவு அசடு வழிந்ததோ!
இக்கதை ஒரு புறமிருக்க, தந்திச் சேவையை நிறுத்தக் கூடாதென்று தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களில் பலரும் குரலெழுப்பி வருகிறார்கள். எனது மைய அரசுப் பணியும் சிக்கந்தராபாத் தந்தி அலுவலகத்தில்தான் ஃபோனோக்ராம் ஆப்பரேட்டர் பதவியுடன் தொடங்கியது. அந்த அலுவலகம் தொடர்பான சுவையான நிகழ்வுகள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.
ஒரு முறை ஒரு நேயர் ஒரு தந்தியைச் சென்னையில் இருந்த ஒருவரின் முகவரிக்கு வாய்மொழிந்தார்: “ஒயர் கணேசன்ஸ் பர்ட்டிக்யுலர்ஸ் – Wire Ganesan’s particulars” என்பதாய் அதைக் காதில் வாங்கிக்கொண்ட நான், அதை அதற்கான படிவத்தில் எழுதி முடித்த பின் தந்தியின் வாசகத்தை அவருக்கு எங்கள் விதிப்படி படித்துக் காட்டினேன். “ஓகே. சரியாய் இருக்கிறது” என்று அவர் கூறிய பின் வழக்கம் போல் அந்தப் படிவத்திலேயே அதற்கான இடத்தில் “படித்துக்காட்டி ஒப்புதல் பெறப்பட்டது – Repeated and confirmed” என்று எழுதினேன்.
இரண்டு நாள்களுக்குப் பின், அத் தந்தியை வாய்மொழிந்தவர் என்னோடு சற்றே மனத்தாங்கலுடன் தொலைபேசினார். “என்னம்மா இது? ஒயர் டொனேஷன்ஸ் பர்ட்டிக்யுலர்ஸ் என்பதை ஒயர் கணேசன்ஸ் பர்ட்டிக்யுலர்ஸ் என்று எழுதிவிட்டீர்களே! மெட்றாசிலிருந்து எனக்குப் பதில் தந்தி வந்திருக்கிறது – விச் கணேசன்ஸ் பர்ட்டிக்யுலர்ஸ் டூ யூ வான்ட்? யுவர் டெலெக்ரம் அன்அண்டர்ஸ்டாண்டபில் – எந்த காணேசனைப் பற்றி விவரங்கள் கேட்கிறீர்கள்? உங்கள் தந்தி புரியவில்லை – என்று. இந்தக் குளறுபடிக்கு நீங்க்ள்தான் பதில் சொல்ல வேண்டும். எங்களின் வீணாய்ப் போன தந்திச் செலவை நீங்கள்தான் ஏற்க வேண்டும்!’
‘ஓரு நிமிஷம்!’ என்று சொல்லிவிட்டு, பக்கத்து இருக்கையில் இருந்த எங்கள் மேலாளரிடம் நடந்ததைச் சொன்னேன். அவருக்குச் சிரிப்பு வந்த்து. ஒலிவாங்கியை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு அவரே அந்த நேயருடன் பேசினார்: “எங்கள் ஆப்பரேட்டர் தந்தியை உங்களுக்குப் படித்துக்காட்டினார்தானே? … என்னது! அதைப் படிக்கும் போது சரியாய்த்தான் படித்தாரா? இருக்கவே முடியாது. கணேசன் என்று தான் எழுதியதைத்தான் அவர் படித்துக்காட்டி யிருந்திருப்பார். அது உங்கள் காதில் டொனேஷன் என்று சரியாக விழுந்துள்ளது. இது ஒரு காமெடி அவ் எர்ரர்ஸ். அவ்வளவுதான். இதற்கு நாங்கள் நஷ்ட ஈடெல்லாம் கொடுக்க முடியாது…” என்று தீர்ப்பளித்தார்.
பின்னர் அவரும் ஒரு கதை சொன்னார். ஹிந்தியில் தந்தி யனுப்பும் வசதி வந்த பின் அது நடந்ததாம். ஒருவர் “பாபாகான் அஜ்மீர் கயா” – பாபாகான் அஜ்மீருக்குப் போயுள்ளார்” – எனும் தந்தியை அனுப்பினார். அது மறுமுனையில் “பாபாகான் ஆஜ் மர் கயா” – பாபாகான் இன்று காலமாகிவிட்டார் – என்று தந்தியாளரால் எழுதப்பெற்றதாம்! அது அனுப்பியவரின் தவறா, இன்றேல் வாங்கி எழுதியவரின் தவறா என்று தெரியவில்லை, என்றார்!
தந்தியின் ஒரு சொல்லுக்கு இவ்வளவு கட்டணம் என்று உள்ளதால், காசை மிச்சம் பிடிப்பதற்காகக் கூடியவரை அதைச் சுருக்கமாய் எழுதும் வழக்கம் இருந்து வருவது நமக்குத் தெரியும். “Do” எனும் ஒரே ஓர் ஆங்கிலச் சொல்லின் கட்டணத்தை மிச்சம் பிடிக்க ஒருவர் எண்ணியதாலும் முற்றுப்புள்ளி ஒன்றையும் அதே நோக்கத்தில் அவர் தவிர்த்தாலும், விளைவதற்கு இருந்த விபரீதம் பற்றியும் அவர் சொன்னார். “Do not hang him. Leave him” – அவரைத் தூக்கில் இடாதீர்கள். விட்டுவிடுங்கள் – எனும் பொருளில் தெளிவாக அனுப்பப்பட்டிருக்க வேண்டிய தந்தி – “Hang him not leave him” என்று ”நாட்” என்பதற்குப் பிறகு முற்றுப்புள்ளி இன்றி அனுப்பப்பட்டதால், அத்தந்தியை ஒருவர் “Hang him. Not (Do not) leave him” என்று அர்த்தப்படுத்திக்கொள்ளும் அபாயத் தெளிவின்மை இருந்தது. (முற்றுப்புள்ளி aaa என்று தந்திகளில் குறிப்பிடப்படும்.) எனினும் புத்திசாலியான தந்தியாளர் கேள்வி எழுப்பியதன் விளைவாக அந்த மனிதரின் உயிர் தப்பியதாம்.
கொஞ்ச நாள்களாய்த் தந்தி இலாகா ஒழுங்காய்ச் செயல்படுவதில்லை. எமது அனுபவமும் அதுவே. முன்பெல்லாம் தந்தியைக் கரித்தாள் வைத்து இரண்டு நகல்கள் எடுத்து ஒன்றைசத் தந்தியாளரிடம் கொடுத்துவிட்டு மற்றதைத் தந்தி கொடுத்தவருக்கு அஞ்சலில் அவரது தகவலுக்காக அனுப்பிவைப்பார்கள். இப்போதெல்லாம் ஃபோனோக்ராம் ஆப்பரேட்டர்கள் அவ்வாறு செய்வதே கிடையாது. Confirmatory copy வருவதே இல்லை. ஊழியர்கள் செய்யும் கழப்பாளித்தனமா அல்லது அந்த வழக்கமே இப்போது அமலில் இல்லையா என்பது தெரியவில்லை. நம் தந்தி சரியான வாசகத்துடன் போய்ச் சேர்ந்த்தா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தொலைபேசிக்கான பில்லில் மட்டும் தந்திக் கட்டணம் குறிப்பிடப்பட்டு விடுகிறது!
சில நாள் முன்னர் நான் அறிந்த பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவரின் தாயார் காலமானதற்கு நான் அனுப்பிய இரங்கல் தந்தி அவருக்குப் போய்ச் சேரவே இல்லை என்பது இரண்டு நாள்கள் கழித்து நான் அவருடன் தொலைபேசியபோது தெரிய வந்த்து. அதே போல் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அவர் கின்னஸ்ஸில் இடம் பெறப் போவது பற்றி நான் அனுப்பிய வாழ்த்துத் தந்தி அவருக்குப் போய்ச் சேர்ந்த்தாய்த் தெரியவிலை. நான் கேட்கவில்லைதான். எனினும் ஒரு சின்ன மடலுக்குக் கூட உடனே பேசவோ எழுதவோ செய்யும் பண்பாளர் அவர். இது போல் நான் அனுப்பின இன்னும் சில தந்திகளும் வரவில்லை என்று சிலர் சொன்னதுண்டு. என் தோழி ஒருவர் அனுப்பிய வாழ்த்துத் தந்தி ஒன்று அதன் இலக்கம், வாசகம் இரண்டையுமே அவர் சரியாக வாய்மொழிந்தும் தவறான இலக்கத்துடன் முகவரியாளருக்குப் போய்ச் சேர்ந்தது. அவர், “எனக்குக் குழந்தை ஏதும் சமீபத்தில் பிறக்கவில்லை. என் மகள்தான் பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். மேலும் என் வீட்டுக்காரர் காலமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதும் உனக்குத் தெரியும். எனவே, தந்தி அலுவலகத்தில் ஏதோ குளறுபடி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். அல்லது நீ செய்த குளறுபடியா?” என்று சிரித்துக்கொண்டே வினவினாராம். இது பரவாயில்லை. அதுவே இரங்கற் செய்தியாகப் போய்ச் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! எல்லாருமே அதை இலேசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்தானே!

எனவே, தந்தித் துறை கேள்வி கேட்பார் அற்ற ஒன்றாகவே இயங்கி வருவதாய்த் தோன்றுகிறது. எனினும் தந்திச் சேவையை ஒரேயடியாய் நிறுத்திவிடுவதைக் காட்டிலும், அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், அது ஒழுங்காய்ச் செயல்படும் வண்ணமும் என்னென்ன திருத்தங்களையும் மாற்ரங்களையும் செய்யலாம் என்று இத்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்துச் செயல்படுதல் நலம்.
கடைசியாக, இக்கட்டுரையை ஒரு சிரிப்பு நிகழ்ச்சியோடு முடிக்கலாமா?
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள், ஒருவர் தந்தித் துறை இயக்குநரைச் சந்தித்துக் கீழ்க் கண்டபடி புகார் செய்தார்: “பட்டாளத்தில் கர்னலாக இருக்கும் என் மகன் தான் விடுப்பில் கிளம்பி இன்ன தேதி வரவிருப்பது பற்றி ஒரு கடிதம் எழுதியதோடு தந்தியும் அனுப்பினான். கடிதம் அவன் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக வந்து விட்ட்து. ஆனால் தந்தியோ அவன் வந்த பிறகுதான் வந்தது. அவனே கையெழுத்துப் போட்டு அதை வாங்கினான். தந்தி தானே முதலில் வந்திருக்க வேண்டும்? தபாலுக்குப் பின்னால் வருகிறதே? இது முறையா?”

“மன்னித்துக்கொள்ளுங்கள், அய்யா! உங்கள் மனத்தாங்கல் புரிகிறது. ஆனால், நான் என்ன செய்ய? எங்கள் இலாகாவின் பெயரே ‘போஸ்ட் அண்ட் டெலெக்ராஃப்’ என்பதுதானே? போஸ்ட் எனும் சொல்தானே எங்கள் இலாகாவின் பெயரில் முதலில் வரும் சொல்? அதனால்தான் போஸ்ட் முதலில் வந்து விடுகிறது. டெலெக்ராம் அதற்குப் பின்னால் வருகிறது!” என்று தமது பதிலாய் ஒரு போடு போட்டாராம்.
இது எப்படி இருக்கு?

jothigirija@live.com

Series Navigationபால்ய கர்ப்பங்கள்வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும்