நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.

நீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை.

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே.. என்று நதிக்கும் பெண்ணுக்கும் ஒப்புமைப்படுத்தி ஒரு படத்தில் அர்ஜுன் பாடுவார்.  நதிக்குப் பெண் பெயரிடுவதும் நதியை வணங்குவதும் நம் பண்பாடு. நதிக்கரையோரங்களிலேயே நாகரீகங்கள் தழைத்தன.

நீரின்றி அமையாது உலகு என பனிக்குடத்திலிருந்து நீர் உடைக்கும் குடம் வரை நம் வாழ்வு நீரோடு சம்பந்தப்பட்டது. மேகத்திலிருந்து மழையாய், அருவியாய், ஏரியாய், நதியாய், காட்டாறாய், கால்வாயாய், வாய்க்காலாய், குளமாய், குட்டையாய், கடலாய் என்று நீரின் ப்ரயாணம் மிக நீண்டது ஒரு பெண்ணின் வாழ்வைப் போல.

பாரதி பாஸ்கர் தன்னுடைய நூலில் ஒவ்வொரு அத்யாயத்திலும் நதியைப் பெண்ணோடு, பெண்ணின் புனிதத்தோடு, முட்டி மோதி ஓட வேண்டிய துயரத்தோடு, கொட்டப்படும் அழுக்குகள் சுமந்து செல்லவேண்டிய அவலத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

வேலைக்குச் செல்பவர் என்பதால்  இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்லும் மகளிர் என அனைத்துப் பரிமாணங்களிலும் ஒரு பெண் பெண்ணாகவும், மகளாகவும், மனைவியாகவும், தாயாகவும், தாதியாகவும் ஆற்றவேண்டிய கடமைகள், எடுத்துக் கொள்ளவேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் விரிவாகச் சொல்லி இருக்கிறார்.

படபடவென்று ஓடும் நதிபோல படிக்கப் படிக்கச் சலசலவென்ற சத்தத்தோடு ஓட ஆரம்பிக்கிறது நம் மனதிலும் ஒரு நதி. அதன் ஆழத்தை, நீர்க்குளுமையை, வரட்சியை, யௌவனம் முடிந்த பேரிளம்பெண்ணாய் வரண்ட காட்சியைப் பதிவு செய்கிறார்.

நதியை நாம் ஒரு பயணப்பாதையில் பலவிதமாகக் கடப்பதுபோலப் பெண்ணையும் கடக்கிறோம். பெண்ணாய் வாழ்வது என்பது நதியாய் இருப்பதைப் போலத்தான். ஒரு நதி தன் நிலை குறித்து ஏதும் சொல்லாமல் காட்சியாய் விவரிப்பது போலத்தான் பெண்களின் நிலையும். சட்சட்டென்று மாறும் மனநிலைகள் போல பல திருப்பங்களையும் கடந்து செல்வது நதி. கொட்டும் அருவியாய்த் தன் மன உணர்வுகளைக் கொட்டி அடங்குபவள் பெண்.

“ஒரே நதியில் இருமுறை குளிக்க இயலாது” என்ற ஜென் வாசகம் போல நம் வாழ்வில் கடந்து விட்ட தருணங்களையே எண்ணிக் கொண்டிராது இன்னும் ஆக்கப் பூர்வமாய் என்னென்ன செய்யலாம் என்ற தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள்.

பாரதியின் பேச்சைப் போலவே அருவியாய்க் கொட்டி, அலையாய் அடித்து, நதியாய் வருடி நம்மைச் சாந்தப்படுத்துகின்றன அவரது கட்டுரைகள். எல்லாப் பெண்களும் இதில் தங்களை உணரவும் உயர்த்திக் கொள்ளவும் முடியும். எண்ணங்களைச் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

அட.. உலகத்துல எல்லாருக்குமே இப்படித்தாம்பா.. நமக்கு மட்டுமல்ல. நம்மைப் போன்றே பேரன்பின், பாசத்தின், நதிகளான எல்லாப் பெண்களுக்குமே இப்படித்தான் என எண்ண வைப்பது இந்தக் கட்டுரைகளின் வலிமை.ஒரு முறை படித்துப் பாருங்கள். மறுமுறையும் படிக்கத்தூண்டும். உங்கள் வீட்டு நூலகத்தில் இருந்து உங்களைப் புதுப்பிக்கும் ஒரு சமய சஞ்சீவியாகவும் கூட.

நூல்:- நீ நதியைப் போல ஓடிக்கொண்டிரு.
வெளியீடு :- விகடன் பிரசுரம்.
ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்
விலை :- ரூ 65/-

Series Navigationமரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்தளபதி .. ! என் தளபதி ..!