நெருப்புக் குளியல்

 

kumbakonam_fire_acciedent_gallery11

சி.இராமச்சந்திரன்

( கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெருப்புக் குளியல் என்ற தலைப்பில் சிறுகதை )

 

“அப்பா எழுந்திரிங்கப்பா….. அப்பா எழுந்திரிங்கப்பா… எனக்கு என்ன வாங்கி வந்திருக்கீங்க….. சொல்லுங்கப்பா..” என்று அரைத்தூக்கத்தில் இருந்த சங்கரின் மீசையைப் பிடித்து இழுத்தபடி எழுப்பினாள் கீதா. “இருடா செல்லம் இன்னும் பொழுதே விடியலயே அதுக்குள்ள என்னடா அவசரம்” என்று முனகிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டான் சங்கர்.

ஆம் அவசரம்தான் அவளுக்கு அதிகப்படியான அவசரந்தான். வழக்கமாக காலை ஆறுமணிக்குக் கண்விழிக்கும் கீதா இன்று நான்கு மணிக்கே விழித்துக்கொண்டாள் என்றாள்… அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவள் இன்று பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறாள். அதைக் கொண்டாட வேண்டாமா… அதற்காகத்தான் அதிகாலையிலேயே இன்று ஆர்ப்பாட்டம்.

தன் பிறந்தநாள் வருவதற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே… பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டுமென்று தன் தந்தையிடம் விண்ணப்பஞ் செய்திருந்தாள் கீதா. இப்போது புரிகிறதா அவள் அவசரத்திற்கான காரணம்.

“சீக்கிரமா எழுந்திரிங்கப்பா” என்றவாரே சங்கரின் முதுகில் அழுத்தமாகக் கிள்ளினாள் கீதா. “ஆ!” என்று எழுந்து அமர்ந்த சங்கர் ஒரு நிமிடம் பிரம்மித்துப் போனான்.

பளபளப்பான பட்டுப் பாவாடையும், சரிகை வைத்த மேல் சட்டையும் அணிந்திருந்த கீதா அந்த வானுலக தேவதைபோல் காட்சியளித்தாள். பச்சரிசி போன்ற பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு நிற்கும் கீதா சங்கரின் கண்களுக்கு ஒரு தேவதை போல் காட்சியளிக்கின்றாள்.

“என் செல்லமே இந்த ட்ரெஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்குடா…” என்றவாறு கீதாவைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தவன், “ஆமா இந்த ட்ரெஸ்ஸ நான் எடுக்கலையே” என்று மீண்டும் வாரி அணைத்து முத்தம் கொடுத்தான்.

“இன்னைக்கி என் பிறந்த நாள் இல்லையாப்பா” “ஆமா” என்று தன் மடியில் கிடத்திய சங்கர் அவளைக் கொஞ்சியபடியே இருக்க, மீண்டும் தொடர்ந்தாள் கீதா.

“இந்த ட்ரெஸ்ஸ பக்கத்து வீட்டு ஆண்டி என் பிறந்தநாள் பரிசா வாங்கிக் கொடுத்தாங்கப்பா….” என்று செல்லமாகக் கூறினாள்.

பக்கத்து வீட்டுப் பரிமளா ஆண்டி பதினைந்து ஆண்டுகள் கழித்தும் பிள்ளைப் பேறு இல்லாமல் குழந்தை பாசத்திற்காக ஏங்கித் தவிக்கும் கபடமற்ற நெஞ்சம். இவள் சோகத்தை ஆற்றுவிப்பவள் கீதா மட்டுந்தான்.

கீதாவின்மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவள் பரிமளா. கீதாவை ஒருநாள் பார்க்கவில்லையென்றாலும் அவள் நொடிந்து போய்விடுவாள்.

“என்ன அப்பாவும் மகளும் கொஞ்சி முடிச்சாச்சா…. இல்ல.. இன்னும் இருக்கா..?” என்றபடியே ஒரு கையில் பூஸ்டும், ஒரு கையில் காபியும் கொண்டு வந்து நீட்டினாள் கற்பகம்.

பூஸ்டை கையில் வாங்கி வைத்துக்கொண்ட கீதா “மம்மி இன்னக்கி காலைல என்ன ஸ்பெஷல்… லஞ்ச் என்ன?” என்று அடுக்கினாள்.

“உனக்கு பிடித்த நெய் தோசை செஞ்சி வச்சிருக்கேன்” என்றவாரே சமயலறைக்குள் நுழைந்தாள் கற்பகம்.

இன்று ஆடி வெள்ளி. அதுவும் முதல் வெள்ளி என்பதால், வீட்டை சுத்தம் செய்வதிலும், பாத்திரங்களைக் கழுவுவதிலும் கவனமாய் இருந்தாள் கற்பகம். தெய்வத்தின்மேல் அளவுகடந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டிருப்பவள் கற்பகம். அவள் வீட்டுப் பூஜையறையில் எப்போதும் மணக்கும் ஊது வர்த்தியும் சாம்பிரானியுமே அதற்கு சாட்சி.

ஆடி வெள்ளியின் வரவில் தன் ஒரே மகள் கீதாவின் பிறந்தநாளைக் கூட பொருட்படுத்தாத கற்பகம், வீட்டைத் தூய்மை செய்வதில் கவனம் செலுத்தினாள். கீதாவை அவள் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.

எப்படியோ காலை ஏழு மணிக்கெல்லாம் பிறந்தநாள் கேக் கீதாவின் அழகிய கரங்களால் வெட்டியாகிவிட்டது.

தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த பரிசுப்பொருளை கீதாவின் கரங்களில் சங்கர் கொடுக்க, “நன்றியப்பா” என்றவாறு பரிசுப்பெட்டியை ஆவலாகத் திறந்தாள். பார்த்த வேகத்தில் துள்ளிக் குதித்தாள் அவள்.

என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. புன்னகை முகத்தோடு “நன்றி அப்பா… ஐ..லவ்..யூ… அப்பா…” என்று தன் நன்றியையும் அன்பையும் பரிமாறிக்கொண்டாள் கீதா. சங்கரைக் கட்டிப்பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்த கீதா சற்று நேரம் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அவள் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த “லவ் பேர்ட்ஸ்” கிடைத்துவிட்டது. இந்த ஆனந்த ஆட்டத்திற்குக் காரணம் இதுதான்.

“லவ் பேர்ட்ஸ்” ஒன்றோடு ஒன்று கொஞ்சுவதைக் கண்டு மகிழ்ச்சியில் குதித்து ஆடினாள் கீதா. அதன் கீச் கீச் மொழியை உற்றுக் கேட்டு ஏதோ உணர்ந்து கொண்டவள் போல, தனக்கு வைத்திருந்த பிஸ்கட்டைப் பிட்டு கூண்டுக்குள் போட்டாள்.

“அப்பா.. லவ்.. பேர்ட்ஸ் காலைல என்ன சாப்பிடும், லஞ்ச், ஈவனிங் என்ன சாப்டும்” என்று சங்கரிடம் கேள்விகளை அடுக்கினாள்.

லவ் பேர்ட்ஸை தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏதோ புதிய உறவுக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டதாய் காட்டிக்கொண்டாள் கீதா. இந்த உலகமே அவள் கையில் வந்துவிட்டது போன்று பெருமிதப்பட்டுக்கொண்டாள்.

பள்ளி செல்லும் நேரம் நெருங்க… நெருங்க அவள் மனது படபடத்துக்கொண்டது. இன்று பள்ளிக்கு விடுமுறை விட்டிருக்கக் கூடாதோ என்று அவள் மனம் எண்ணியது.

“பேர்ட்ஸை கூடவே எடுத்திட்டுப் போலாமா?…. அய்யய்யோ டீச்சர் அடிப்பாங்களே..” என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்ட கீதா பள்ளிக்கு ஆயத்தமானாள்.

முதுகில் புத்தக மூட்டையும் கையில் சாப்பாட்டுக் கூடையுமாய் “லவ் பேர்ட்ஸ்” இருக்கும் கூண்டு அருகே சென்றாள் கீதா.

“டியர் ப்ரெண்ட்ஸ்.. நான் ஸ்கூலுக்குப் போறேன்.. ஈவினிங் வந்துடுவேன்… அப்ப நாம ஜாலியா விளையாடலாம்…. என்ன..? டா….டா… பாய் என்றவாரே தெருவாசலுக்கு வந்தாள் கீதா.

தன் வருகைக்காகக் காத்திருந்த சைக்கில் ரிக்‌ஷாவில் ஏறி அமர்ந்துகொண்டு, “அம்மா!.. லவ் பேர்ட்ஸ பாத்துக்கங்க” என்றவாறே தாய் தந்தையிடம் விடைபெற்றுச் சென்றாள் கீதா.

பள்ளியில் லவ் பேர்ட்ஸ் கதையைப் பரப்பி விட்டதால் கனிசமான கூட்டம் இவளை சுற்றிக்கொண்டது. அந்த பறவைகளைப் பற்றி நண்பர்களிடம் கதைகதையாய்க் கூறினாள் கீதா. இவ்வளவும் முதல் மணி முடிந்த இடைவேளையில் நடந்துகொண்டிருந்தது.

இரண்டாவது மணியடித்ததும் கீதா உட்பட அனைவரும் “கப்சிப்” என்று அவரவர் இறுக்கையில் அமர்ந்துகொண்டனர்.

விமலா டீச்சரின் பீரியட் என்றால் யாரும் பேசக்கூடாது. அப்படி மீறிப் பேசினால் அந்த பீரியட் முடியும்வரை இரண்டு கால்களையும் மடித்து முட்டிபோட வைப்பார்.

“கீ….கீதா அந்த லவ் பேர்ட்ஸ் எப்படி இருக்கும்” – கீதாவின் அருகில் இருந்த லதா சீண்டினாள். இதை கவனித்த டீச்சர் பேசாதே கவனி என்றபடி பாடம் நடத்த….

“ஆமாம் லவ் பேர்ட்ஸ இப்ப யார் பாத்துப்பா…? இடது பக்கம் இருந்த ஜமுனா கேட்க. “கவனித்த டீச்சர் “பேசாதே ஒழுங்கா கவனி…இல்லாட்டி வெளியே போய் முட்டி போடு” என்றவாறு மீண்டும் பாடம் நடத்தினார்.

பிள்ளை அனைவரும் பாடத்தில் கவனைத்தைத் திருப்பிக் கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தனர். விமலா பல பாவங்களைக் காட்டிப் பாடம் நடத்திக்கொண்டு விளக்குவதுடன் கரும் பலகையில் எழுதிக்காட்டிக்கொண்டும் இருந்தார்.

அந்த நேரத்தில் மாடியில் புகைவருவதுபோல் தெரிய பிள்ளைகள் டீச்சரைப் பார்த்து “டீச்சர் புகை வருது பாருங்க” – என்று கூற “அப்படியா… நீங்க இருங்க நான் போயி பாத்துட்டு வர்றேன்” – என்று கூறிவிட்டு வெளியில் வந்த டீச்சர், வகுப்பறைக் கதவைப் பூட்டிவிட்டு வெளியே போக, திடீரென்று அந்த அறைக்குள் தீ புகுந்துக் கொண்டது. பிள்ளைகள் சிக்கிக்கொண்டனர். கதவை முட்டி மோதி அடித்துப் பார்க்கின்றனர் திறக்கவில்லை.

அந்த அறை முழுவதும் ஒரே அவலக்குரல். அதில் கீதாவும் சிக்கிக் கொண்டாள். பத்து நிமிடத்தில் அந்தப் பிஞ்சுகளின் குரல்களும் மூச்சும் அடங்கிப்போனது. பெற்றவர்கள் கதறித் துடித்துக்கொண்டு நிற்கின்றனர். செய்வதறியாது தவித்து தத்தளிக்கின்றனர்.

கீதாவின் தாயும் தந்தையும் கதறி அழுகின்றனர். அவளைக் காணாமல் தரையில் புரண்டு புலம்புகின்றனர். தன் மகள் இப்படிப் போய்விடுவாள் என்று அவளும் அவனும் எண்ணிப்பார்க்கவில்லை. இரண்டு பறவைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்த ஒரு பறவை போய்விட்டதே என்று அந்த பெற்ற மனம் புலம்பியது. கண்ணீர் வடித்தது. அவளை தேடித்திர்ந்த கண்கள் காணாமல் தவித்தன. கீதாவின் முகத்தைக்கூட அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. போய்விட்டாள் பெற்றவர்களின் கண்களுக்கும் கனவுக்கும் எட்டாத தூரத்திற்குப் போய்விட்டாள் கீதா.

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.