பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்

Spread the love

அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன்.

ஒருநாள் விடியற்காலையில் நான் விழித்துக்கொண்டேன். பிராமணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டவாறு இருந்தேன். பிராமணன் சொன்னான்: ‘’அன்பே, நாளைக் காலையில் தட்சிணாயன சங்கராந்தி வருகிறது. மிகவும் லாபகரமானதாக இருக்கும். எனவே வேறொரு கிராமத்துக்குப் போய் நான் வீட்டுக்கு வீடு யாசிக்கிறேன். சூரியனைத் திருப்தி செய்ய வேண்டி நீ ஒரு பிராமணனுக்கு முடிந்தவரைக்கும் விருந்து வை.’’

அந்தச் சொற்களைக் கேட்டதும் அவன் மனைவி கோபமடைந்தாள். திட்ட ஆரம்பித்தாள். ‘’நீ ஒரு தரித்திரம் பிடித்த பிராமணன். உனக்கு யார் சோறு போடப்போகிறார்கள்? இப்படிப் பேசுகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா? மேலும்,

உன் கையைப் பிடித்தது முதல் நான் ஒரு சுகத்தையும் கண்டதில்லை. நல்ல விசேஷமான உணவையே சாப்பிட்டதில்லையே! பிறகு கைக்கும் காலுக்கும் கழுத்துக்கும் நகை போட்டுக்கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டாமே! என்றாள் அவள்

பிராமணன் அதைக் கேட்டுப் பயந்து நடுங்கிப்போனான். ஈன சுரத்தில் இருந்தவாறே, ‘’அன்பே, நீ அப்படிச் சொல்லக் கூடாது.

இருப்பது ஒரு கவளச் சோறுதான் என்றாலும் அதில் பாதியைப் பிச்சைக்காரனுக்கும் போடு! ஆசைகொள்ளும் அளவுக்கு யாருக்காவது எப்பொழுதாவது செல்வம் கிடைத்திருக்கிறதா? இல்லையே!

செல்வமிக்கவர்கள் அள்ளி வழங்குவதினால் என்ன பயனைப் பெறுகிறார்களோ அதே பயனைத் தன்னால் இயன்றதைக் கொடுக்கும் ஏழையும் அடைகிறான் என்று அறநூல் தெரிவிக்கின்றது.

நீரை மட்டும் தருகிறது மேகம். என்றாலும் அதை எல்லோரும் விரும்பி நேசிக்கிறார்கள். கைகளை நீட்டுவதுபோல சூரியன் ஒளிக்கிரணங்களை வீசுகிறது. என்றாலும் அதை அதன் நண்பன்கூட ஏறெடுத்துப் பார்க்க முடிவதில்லை.

இதை மனத்தில் கொண்டு ஏழையாயிருக்கிறவன்கூட தக்க சமயத்தில் தகுந்த மனிதர்களுக்குப் பிச்சையிட வேண்டும். அது அற்ப சொற்பமா யிருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால்,

உரிய காலம், கொடுக்கத்தக்கவன், சிறந்த சிரத்தை, சக்திக்கேற்ற கொடை – இவற்றை அறிந்து விவேகிகள் அளிக்கும் தானம் பன்மடங்காகப் பெருகுகிறது.

பேராசை கொள்ளவும் கூடாது; கொஞ்சம் ஆசை இருக்கவும் வேண்டும். பேராசை கொண்டதால் நரிக்கு உச்சிக் குடுமி உண்டாயிற்று’’

என்றும் சிலர் சொல்கிறார்கள்’’ என்றான் பிராம்மணன்.

‘’அது எப்படி?’’ என்று மனைவி கேட்டாள். பிராம்மணன் சொல்லத் தொடங்கினான்.

Series Navigationபாராட்ட வருகிறார்கள்நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு