பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?

புனைப்பெயரில் 

 

 

danielபரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழும் மக்களை இனம் புரியா நோய் தாக்கி அவர்கள் பிடுங்கிப் போட்ட செடி போல் செத்து விழுவார்கள்.

அது தொடர்ந்து , அங்கு வரும் ஒரு டாக்டர், அவர்களுக்கு இயேசப்பன் நாமம் சொல்லி வைத்தியம் பார்ப்பார்.

வைத்தியம் பார்ப்பது விட, அவர்களின் நாக்கிலும் நெற்றியிலும் அவரும் அவருடன் வரும் பெண்மணியும் இயேசு நாமத்தை குறியீடாக்குவார்கள்.

அப்புறம், இயேசுவின் நாமம் சொல்லி ஒரு குத்துப்பாட்டு ஆடி பன்களையும் ரொட்டிகளையும் அந்த கொத்தடிமைகள் நோக்கி வீசி எரிவார்கள்.

அந்தக் குத்துப்பாட்டு காட்சியில் தியேட்டர் அதிர அதிர சிரிப்பொலியுடன் ஒரே தியேட்டரின் அமர்க்களம் தான்.

பின், வெள்ளைக்காரன் குடித்தாடி மகிழும் இடம் சென்று, அவர் தம் காலடியில், மது பாட்டில்களை திறந்து டாக்டரும் அப்பெண்மணியும் குடிக்க ஆரம்பிப்பர்…

அப்போது ஒரு வெள்ளைக்காரன் சொல்வான், “மிக ஆபத்தானவன் இந்த ஆன்மீக கங்காணி “ என்று.

இப்படி மதமாற்றம் செய்யும் ஒரு மிசினரிகாரராய்   சித்திரிக்கப்பட்டு தியேட்டர் அதிரும் வண்ணம் மத மாற்ற நிகழ்வாய் கிண்டலிக்கப்பட்டும், ஆன்மீக கங்காணி என்றும் வார்த்தெடுக்கப்பட்ட அந்த டாக்டர் யார் தெரியுமா..?

தேயிலை தோட்ட அடிமைகளுக்கு வைத்தியம் பார்க்க வந்து, அவர்தம் இழி நிலை கண்டு, அவர்களுடனே வாழ்நாள் முழுதும் தங்கியவர்.

அவர்தான் இறைமிகு. டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல்

தேயிலைத் தோட்ட கொத்தடிமைகளுக்கு ஒரு சங்கம் அமைக்க காரணமாயிருந்தவர்.

அவர்களின் துயர் துடைக்க தன் வாழ்நாளைத் தந்தவர்.

ஆம், RED TEA என்ற புத்தகத்தை தந்து காலமெல்லாம் அத் தொழிலாளிகளின் வேதனை உலகறியச் செய்த மகான்.

இதோ அவரது உருவ புகைப்படம்:

 

 

படத்தில் இவர் உருவ ஒற்றுமையுடன், அதே மாதிரி கண்ணாடியுடன் மூன்றாந்தர கோமாளியாய சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் உண்மை பிம்பம் இவர்.

வரலாற்றில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வலியை பதிவு செய்தவர்.

அப்புத்தகம் ”எரியும் பனிக்காடு” என தமிழில் இரா.முருகவேல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளத்.

கண்டிப்பாக படியுங்கள்.

அப்போது தான், வலியின் உச்சம் புரியும்.

பரதேசி சினிமாவில், இயக்குனரின் தனிமனித திறமை அடையாளத்திற்காக பொது சமூக சோகம் சிதைக்கப்பட்டது புரியும்.

”எரியும் பனிக்காடு” என்ற ”ரெட் டீ” , சினிமாவிற்காக தனது ஜீவனை இழந்ததே உண்மை.

அதையும் விட மன வேதனை, டாக்டர் கதாபாத்திர வடிவமைப்பு.

மதமாற்றம் செய்தது பற்றி நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த வெள்ளையனும்,

இந்துக்கடவுளை கும்பிடும் காட்சியுடன் அறிமுகப்படுத்தப்படும் கங்காணியும்,

எதேச்சிகார மனநிலை கொண்ட வர்க்கம்.

நிலத்திற்காக, பணத்திற்காக அடுத்தவனின் அப்பாவித்தனத்தை, கையாலாகாத நிலையை அட்வாண்டெஜாக எடுத்து,

அனுதாப உதவும் எண்ணத்துடன் இருக்கும் மனநிலை கொண்டோரை அடையாளம் கண்டு,

சிக்கலான ஒப்பந்தம் மூலமும்,

நட்பாடி குடிகெடுக்கும் நம்பிக்கைத் துரோகத்துடனும்,

கேவலமான மனநிலையுடன்

அவர்தம் வாழ்வை சுரண்டி நாசம் செய்தவர்கள் அத்தகைய ஆட்கள்.

மத இன சாதி தாண்டிய ஒரு கும்பல் அது.

அப்படியிருக்கையில், தேயிலை மக்களின் வாழ்வு மேம்பட போராடிய ஒருவரை மத அடையாளத்துடன் படைத்து கிண்டல் செய்யலாமா..?

ஆனால், டாக்டராக தேயிலை தோட்டம் வந்த டாக்டர் டேனியல், அவர்களுக்கு தொண்டு செய்து, பின் வரலாற்றில் அவர்தம் வாழ்வை பதிவு செய்தவர்.

சொல்லப்போனால், இந்த படத்தை பாலா கரு சிதையாமல், ஜீவன் இழக்காமல் பதிவு செய்திருக்க வேண்டும்.

(ஷிண்ட்லர் லிஸ்ட் எடுக்கும் போது, சினிமாவிற்காக என நகைச்சுவை காட்சிகளா ஸ்பீல் பெர்க் வைத்தார்..?)

அது விடுத்து பாலா இந்த துன்பமான வரலாற்று பக்கங்களை பிலேவர் போல் கொண்டு, பாக்ஸ் ஆபிஸ் காமடி கலந்த வெகுஜன படம் போல் எடுத்திருப்பது தவிர்த்திருக்கலாம்.

பாலாவிடம் நாம் எதிர்பார்க்கவில்லை இதை.

அவர் , இதற்காக ஏதாவது பரிகாரம் செய்தல் வேண்டும்.

சாதாரண சினிமாக்காரர்கள் வேண்டுமானால், சினிமாப்படுத்துகிறேன் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம்,

ஆனால்

பாலா, அளப்பறிய சினிமா வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவர்,

நம்மைப் போன்ற முகங்களையும் நம் அப்பத்தா முகங்களையும் சினிமாவில் அதே எண்ணெய் பிசுக்குடன் பிரேமில் கொண்டு வருபவர்.

அதுவும் இந்த படத்தில் ஒட்டுப் பொறுக்கியின் ஆத்தா கேரக்டருக்கே அவருக்கு பாராட்டு விழா நடத்தலாம்.

பிசுக்கு தலைமுடிகளுக்கும் பாராட்டு நடத்தலாம்.

ஆனால், இது டீ தோட்ட வேரில்

உரமாய் உதிரம் கொட்டி

வாழ்விழந்த

அப்பாவி கொத்தடிமைகளின் வரலாறு,

அதை நிஜ வாழ்வில் வரலாறாய் வெளிக்கொண்டு வந்த,

அந்த டாக்டரின் கதாபாத்திர வடிவமைப்பை கோமாளித்தன குத்ட்துப்பாட்டு கேரக்கட்டராகாக ஆக்கியது எந்த வகையில் நியாயம்..?

அதில் பெரும்பான்மையானோர், சிவகங்கை பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்தப் படத்தின் கேமிரா மேனும் சிவகங்கைப் பக்கத்துக்காரர் தான். உலக சினிமா பற்றி விகடனின் தொடர் எழுதியவர் தான்.

இந்தக் கேலிக்கூத்து வடிவத்தை அவராவது தடுத்திருக்கலாமே..?

கலர் டோனில் மட்டுமில்லை உணர்வும், சினிமாவும்..

அதன் ஆன்மாவில் இருக்கிறது என்பது அவர் அறியாததல்ல…

மேலும், அந்த காலகட்டத்தில் நமது தமிழக பகுதி மலைகள் மட்டுமின்றி, இலங்கையிலும் இந்தியத் தமிழர்களின் கொடுமையான நிலை இது தான்.

அவர்தம் வாழ்வும் இலங்கையில் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியொரு நூற்றாண்டு சோகத்தை,

பாலா தனது அடையாளத்திற்கு பூசிக் கொள்ளும் அரிதாரமாக கையாள்வது எந்த வகையில் நியாயம்…?

எரியும் பனிக்காடு புத்தகம் கிடைக்குமிடம்:

விடியல் பதிப்பகம்

88 இந்திரா கார்டன் நாலாவது தெரு, உப்பிலிபாளையம் போஸ்ட் , கோயமுத்தூர் 641 015

Phone: 0422- 2576772  ; 94434 68758

Vidiyalpathippagam2010@gmail.com

 

பின் குறிப்பு:

சேவைக்காக தன் வாழ்வையே அர்பணித்த ஒரு ஃபாதிரியாரின் வரலாற்றுப் பதிவை வைத்தே , அவரை மிக மிக மூன்றாந்தர ரசனைக் கேடான முறையில் படத்தில் பதிவு செய்ததை கண்டிக்காத, கண்டனம் தெரிவிக்காத, இந்த சமூக கேட்டை என்னவென்று சொல்வது.

* சினிமாபடுத்தவே என்று வியாக்கானம் பண்ணும் கும்பல், LIFE OF PI பார்க்கனும். நம்ம பாண்டிச்சேரி தான் எப்படி உலக அளவு ஆஸ்காராய் ஒரு மஞ்சள் முகத்துக்காரரால் வடிவம் ஆன்மா சிதைக்கப்படாமல் ஆக்கப்பட்டிருக்கிறது என்றுணர வேண்டும்.

 

Series Navigationதமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…