பாரதியாரைத் தனியே விடுங்கள் !

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்பவை. பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக் கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது. எஃது எப்படியிருந்தாலும் எல்லை மீறக்கூடாது. எல்லை மீறினால் தொல்லை.

பாரதியாரின் கதையே வேறு. அஃதென்ன ? இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார். குயிலும் அரசியல் கூவும். பாஞ்சாலியை வீதிவழியாக இழுத்துச்செல்லும் காட்சியிலும் சுதந்திரப்போராட்ட அரசியல் துள்ளிக் குதிக்கும்.

“நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழி நெடுக மொய்த்தவராய்,
”என்ன கொடுமையிது!’ என்று பார்த்திருந்தார்.
ஊரவர்தம் கீழ்மை உரைக்குன் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே
பெண்ணை யவள் அந்தப்புரத்தினில் சேர்க்காமல்.
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப்புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”

முதல் மூன்று வரிகளே சரி. அதன் பின்னர் தான்மை கலந்த உணர்ச்சிப்பிரவாகத்தில் வீசப்படும் சொற்கள் காவியமா? இல்லை ஓவியமா? இரண்டுமே இல்லை. தானிலிருந்து புறப்பட்டத் தார்மீகக் கோபம். ஓரளவுக்குச் சரி; ஒரேயடியாகப்போனால் என்னவாகும். இலக்கியம் சாகும். சுயபுராணம் அரங்கேறும்

கருத்து உயர்வே என்பதில் இரு கருத்துகளுக்குமிடமில்லை. அஃதல்ல நான் கதைப்பது.! தன்னை விலக்காமல் அவருக்கு வாழ்க்கையில்லை என்பதே. இப்படியாக அவர் பாக்களெல்லாம் தான்மை விரவியிருந்தபடியே அவரின் சிறப்பான கருத்துக்கள் தமிழ் உலகுக்குச் சொல்லப்பட்டன. இலக்கியத்தில் ஓரளவுக்குச் சரியானது, இயல்பு வாழ்க்கையில் முரணாகியது. அவரால் இயல்பாக வாழ முடியவில்லை. காண்பதெல்லாம் குறைவுகளில் தோயாமல் இல்லை என்பதே அவர் கட்சி. தன் சுற்றம், தன் இனம், தன் ஜாதியார், என்று ஒரு குற்றங்குறை பார்க்கும் பாவலர் ஆகி விட்டார். ‘பாரதியாரா எஸ்கேப்பாயிடுவோம் என பீதியடைய வேண்டியதாயிற்று.’ இப்படிப்பட்ட ஆளுமையிலே தன்னை உணர்ந்ததால், அவர் தன்னைப் பிறரிடமிருந்து மாறானவன் என்பதை உள்வாங்கி, தான் ஆயிரம்பேரில் ஒருவனாக காணாமல் போக மாட்டேன் எனவும் தன் சாதனைகள் எனக்கு எட்ட முடியும் எனவும் சொல்வதாக இப்பாடல் பாடுகிறார்.

தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

மற்றும் என்னை அருளுடன் படைத்து நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்றும் கேட்டுக் கொள்கிறார். இஃதெல்லாம் அவருக்குப் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்துமா ? இதே இக்கட்டுரையின் அடிநாதப்பொருள்.

எல்லாரும் தேடிச்சோறு நிதம் தின்றுதான் இருக்க முடியும். சின்னஞ்சிறு கதைகள் பேசாமல் தாம்பத்திய வாழ்க்கையோ குடும்ப வாழ்க்கையோ, நட்பு வட்டாரமோ இல்லை. வாடித் துன்பமடைகிறோம். கிழப்பருவமெய்தி போகிறோம். இவற்றில் என்ன குறை? குற்றம் ? எல்லாரையும் இறைவன் எதையாவது வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறானா? தோன்றின் புகழொடு தோன்றுக அல்லது தோன்றாமை நன்று என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் ? அல்லது வாழ்க்கை உண்மை? ஏன் ஒரு நல்ல கணவனாகவோ,மனைவியாகவோ, தகப்பனாகவோ, தாயாகவோ இருக்கக் கூடாது ? நான் ஏதோவொரு குக்கிராமத்தில் பிறக்கிறேன். வளர்கிறேன். ஆங்கு என வயலில் நித்தம் உழைக்கிறேன். பின்னர் மணம், மனைவி, மக்கள் என அங்கேயே வாழ்ந்து ஒரு மரணிக்கிறேன். என் மரணம் உலகெங்கும் பேசி வருந்தப்படவேண்டும் என நான் ஏன் நினைக்க வேண்டும்? என் வாழ்க்கையில் என்ன குற்றம் கண்டீர்கள்? புகழ், பெயர், என்பவையெல்லாம் யார் கட்டமைப்புக்கள் ? நீங்களாகவே வைத்துக்கொண்டு என்னிடம் ஏன் வருகிறீர்கள் ?

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பெண்ணிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க வேண்டியவர்கள் கேட்கும்போது, அவள் வீட்டுப்பெண் ஹவுஸ் வைஃப் எனபதை கொஞ்சம் லஜ்ஜையுடந்தான் சொல்கிறாள். இதுபோல பலரும். ஏன் எல்லாரும் சாதனை சாதனை என்று பொருந்தா முடியா இலட்சியங்களோடு அலைய வேண்டும்? ஏன் ஒரு பள்ளியாசிரியையாக இருப்பது லஜ்ஜையான விசயம் ? ஒரு அரசு அதிகாரியாக இருப்பது உயர்வான விசயம்?

இத்தகைய எண்ணங்கள் எனக்கு வருகின்றன பலர் மேலே சுட்டிக்காட்டிய பாரதியாரின் பாடலை தம் இலட்சியமாகப் போட்டுக் கொண்டு எழுதுவதைப் படிக்கும்போது. இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா? இல்லை அவர் போல கட்டாயம் ஆகத்தான் வேண்டுமா ? இல்லை அவருக்குச் சரி, நமக்கு சரியா என்பதெல்லாம் சிந்தித்தார்களா ?

இன்னொரு பதிவில் இலட்சியம் இதுவாம்:-

“வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை (அதாவது இருட்டை) ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக”

இதை எப்படி இவர் செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. செய்து விட்டால் அட்லீஸ்டு இவரை நாம் தமிழக முதல்வராக்கி தமிழ்நாட்டில் சாதி சாதிச்சண்டைகளை ஒழிக்கலாம்.

இஃது ஈயடிச்சான் காப்பி ! ஆட்டுமந்தைக் குணம்தான். அது சிந்திக்காது. யாரோவொருவர் ஒன்றைச்சொல்ல அவர் ஒரு பெரிய ஆசாமியென்றால், அவர் சொற்களை ஆயிரம்பேர் சொல்ல, ஆயிரத்தோராவது நபர் நாமும் அதைச்சொல்லாவிட்டால், ஆடையில்லா ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பதுபோல நம்மைச்சொல்லிவிடுவார்களோ எனப்பயந்தே இப்படி ஈயடிச்சான் காப்பியில் இறங்குகிறார்கள்.

பாரதியார் பாரதியாரே. அவர் அவராக இருக்கட்டும். அவருக்குச் அது சரி. பாரதியாரைத் தனியே விடுங்கள் ! நீங்கள் நீங்களாக இருங்கள். அஃதே உங்களுக்குச் சரி !

Series Navigationநியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்த்வனி