பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை

தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல்.

ரோசி என்கிற மணமான பெண்ணைப் பற்றிய கதை. இனோஸ் அவளது கணவன். சுரேஷ் என்கிற மருத்துவன் அவனது பள்ளிக்கால  நண்பன். கதை இவர்கள் மூவரைப் பற்றியது. கதை செக்ஸ் சம்பந்தப்பட்டது என்றாலும், அதை ஒரு மணமான இளம் பெண்ணின் கோணத்தில் அலசியிருப்பதுதான் இந்தக் கதையின் புதுமை.

இனோஸ் சுரேஷை வற்புறுத்தி, தான் வசிக்கும் ஊரில், கிளினிக் திறக்கச் சொல்கிறான். இதில் இனோஸ் கொஞ்சம் வித்தியாசமானவன். தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாது, எப்போதும் இறுக்கத்துடன் அலைபவன். பள்ளி நாட்களில், வாத்தியார் திட்டினார் என்று மூன்று நாட்கள் காணாமல் போனவன். அதனால் நண்பன் சொல்லைத் தட்டாது, சுரேஷ் கிளினிக் ஆரம்பிக்கிறான். அதில் அவனுக்கு ஒன்றும்   நட்டமில்லை. பரவலாக  நல்ல கூட்டம் வருகிறது.

இனோஸ் வர்த்தகக் கப்பலில் பணி புரிபவன். ஒரு தடவை போனால், ஆறேழு மாதங்கள் ஆகும் சொந்த நிலம் திரும்ப. வரும்போதெல்லாம் சுரேஷைச் சந்திப்பான். நிறைய பேசுவான். “ லட்சங்கள்ல வருது சம்பளம்.. விட்டுற முடியுமா? “ என்பான். அந்த முறை அவன் பம்பாய் சென்ற போதுதான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

கிளினிக் மூடும் சமயத்தில் அவள் வருகிறாள். கடைசி நோயாளியை கவனித்துக் கொண்டிருக்கிறான் சுரேஷ். அவன் கவனம் சிதறுகிறது. அவள் வனப்பும் அலங்காரமும் அப்படி. மெல்ல வந்து, அவன் முன்னே அமருகிறாள். இப்போது கடைசி நோயாளியும் போயாயிற்று.

“ என்னாச்சு ? உடம்பு சரியில்லையா? யாருக்கு? “

“ எனக்குதான்.. நெஞ்சு வலிக்குது “

“ எங்கே? “

“ இங்கே “ வலது மார்பகத்தை அழுத்திக் காட்டுகிறாள். “ டெஸ்ட் பண்ணிப்பாருங்க “

சுரேஷின் மனதில் ஆசை பிரண்டு ஓடுகிறது. எழுந்திருக்கையில் அந்தப் பையன் ஓடி வருகிறான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். உடனே வரவேண்டுமாம். அவனை சபிக்கிறான் சுரேஷ். ஆனால் கடமை அவனை அழைக்கிறது. ஏதோ மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டு, அவளை அப்புறம் வரச்சொல்லிவிட்டு, விரைகிறான் பையனுடன்.

அடுத்தடுத்த நாட்களில் அவளது பிம்பம் அவன் மனதை அலைக்கழிக்கிறது. போகும் இடங்களிலெல்லாம், அவள் தென்படுவாளா என்று தேடுகிறான். கடைத்தெருவில் அவளைப் பார்க்கிறான். வலிய சென்று பேச, அவனது ஆண் கவுரவம் தடுக்கிறது. அடுத்த முறை ஒரு பேருந்தில். வேறு யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருக்கிறான். இவனை கடைக்கண்ணால் பார்க்கிறாள். இவன் மனம் பேதலிக்கிறது.

இனோஸ் வந்து விட்டான். நேரே இவன் கிளினிக்குத்தான் வந்தான். பழைய கதைகளைப் பேசுகிறான். “ என் மனைவியை நீ பார்த்ததில்லையே. நாளை அழைத்து வருகிறேன் “ என்று போகிறான்.

மறுநாள் சொன்னது போலவே இனோஸ் மனைவியுடன்.. மனைவி ? அவள்! சே நண்பன் மனைவிக்கா ஆசைப்பட்டேன் என்று வெட்கி தலை குனிகிறான் சுரேஷ். அவளோ, இவனைத் தெரிந்தது போலவே, காட்டிக் கொள்ளவில்லை.

0

இனோஸ் போயாகிவிட்டது. இந்த முறை பம்பாய் போகிறான். அதனால் இரண்டு மாதங்களில் வந்துவிடுவான். சொல்லி வைத்தாற்போல் அவள் வருகிறாள். எல்லோரும் போகும்வரை காத்திருக்கிறாள். உள்ளே வந்து “ மாத்திரை எந்தப் பயனும் இல்லை.. டெஸ்ட் பண்ணுங்க “ என்கிறாள். ஒரு மருத்துவக் கடமையாக அவளை உள்ளே படுக்க வைத்து உபகரணத்தால் பரிசோதிக்கிறான். “இன்னும் கீழே “ என்று ரவிக்கையின் மேலிரண்டு பித்தான்களை அவிழ்க்கிறாள்.

“ போதும்.. நீ என் நண்பனின் மனைவி.. நான் அந்த மாதிரி ஆளில்லை.. வெளியே போ “ என்று கடுமையாக கூறுகிறான் சுரேஷ்.

0

இதோ மீண்டும் நாளை வருகிறான் இனோஸ். அப்பாவி அவனுக்கு இப்படி ஒரு மனைவியா? குமுறுகிறான் சுரேஷ். மாலையில் அவள் மீண்டும் வருகிறாள். முகத்தில் பழைய புன்னகை இல்லை. வனப்பு இல்லை. சோர்ந்திருக்கிறாள். எல்லோரும் போகும் வரை காத்திருக்கிறாள்.

“என்ன? “ என்கிறான் சுரேஷ். “ நாளை அவர் வருகிறார். எப்படியும் உங்களிடம் என்னை அழைத்து வருவார்.  அப்போது நீங்கள் எனக்கு உதவ வேண்டும் “

எதற்காக என்பது போல் புருவங்களை உயர்த்துகிறான் சுரேஷ். அவள் பதில் அதிர்ச்சியைத் தருகிறது.

“ நான் இப்போ  நாலு மாசம்.. எப்படியும் செக்கப்பிற்கு உங்களிடம் வருவார். நீங்கள் ரெண்டு மாசம் என்று சொல்ல வேண்டும்.. “

“ பொய் சொல்லச் சொல்கிறாயா? என்னால் முடியாது. அப்புறம் ஐந்து மாதம் கழித்து பிள்ளை பிறந்தால் என்ன சொல்வாய் “

“ அப்போதும் நீங்கள் குறைப்பிரசவம் என்று சொல்லி  சமாளிக்க வேண்டும் “

“ முடியாது “

“ என்னை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனோஸ், பணம் மட்டுமே என்னை மகிழ்ச்சியாக வைக்கும் என்று எண்ணியிருக்கிறார். ஆனால் ஒரு இளம்பெண்ணுக்கு, வேறு தேவைகள் இருக்கின்றன. கல்யாணமான சில நாட்களில் அவர் போய் விட்டார். ஆறேழு மாதங்களுக்கு நான் தனியாக.. என்னால் எப்படி இருக்க முடியும்? அதனால் சில நண்பர்களைத் தேர்வு செய்து கொண்டேன். என் நிலைமையை யோசித்துப் பாருங்கள். “ அவள் குரலில் கெஞ்சல் இருந்தது.

“சார், அம்மா ·பீஸ் கொடுக்கச் சொன்னாங்க “ என்று அன்றைக்கு வந்த பையன் ஓடி வந்து பணத்தைக் கொடுக்கிறான். அவன் மட்டும் அன்று வரவில்லையென்றால்  என் நண்பன் மனைவியையே நான்.. என்று நினைக்கும்போதே சுரேஷின் உடல் நடுங்குகிறது.

“ ·பீஸ் வேணாம்னு நான் சொன்னேன்னு அம்மா கிட்ட சொல்லு “ என்று அவனைத் திருப்பி அனுப்புகிறான் சுரேஷ்.

“ இனோஸை நினைத்துப் பாருங்கள். இது தெரிந்தால் அவர் தற்கொலைக்குக் கூட தயங்கமாட்டார் “ அவள் பேச்சு அவனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஆம். இனோஸ் அப்படி செய்தாலும் செய்வான். தோல்வியைத் தாங்காதவன்.

0

ரோசியின் நடத்தை நியாயமாக இருப்பதாக, வாசகன் எண்ணும் அளவிற்கு கதை பின்னல் இருக்கிறது. அதேபோல் இனோஸ் விசயம் தெரிந்தால் நொறுங்கிப் போவான். தற்கொலைக்குக் கூட முயற்சிப்பான் என்று ஒரு வரி வருகிறது. சுரேஷ் நண்பனைக் காப்பாற்ற பொய்  சொல்வானா? ரோசியின் யோசனையை ஏற்பானா என்பதெல்லாம் வாசகனின் கற்பனைக்கு.

தோப்பில் முகம்மது மீரானின் மொழிபெயர்ப்பு என்று இல்லாவிட்டால் இது ஒரு அசல் தமிழ் கதை என்றே சொல்லிவிடலாம். எங்கும் மலையாள வாடை இல்லை என்பதே இதன் சிறப்பு. அந்த வகையில் இதை மொழி பெயர்த்த மீரானுக்கு தமிழ் வாசகன் கடமைப்பட்டிருக்கிறான். சமீப கால நல்ல கதைகளுள்  இதுவும் ஒன்று.

0

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -622 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )