புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்

 

கோ. மன்றவாணன்

 

சென்னைப் பல்கலைக் கழகம் இருபெரும் அகராதிகளை உருவாக்கயது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிவதற்கான இருமொழி அகராதி. அடுத்தது, தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொற்களுக்குப் பொருள்தரும் தமிழ் அகராதி. இதனைத் தமிழ் லெக்சிகன் என்று பரவலாகக் குறிப்பிடுவார்கள். இன்றுவரை இந்த இரு அகராதிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமான- ஆதாரப்பூர்வமான- மேம்பட்ட அகராதிகளாகக் கருதப்படுகின்றன.

நாளுக்கு நாள் ஆங்கிலத்தில் புதுச்சொற்கள் வந்தபடியே இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது ஆங்கில அகராதிகள் தம்முள் இணைத்துக்கொண்டு என்றும் புதுமிளிர்வுடன் உள்ளன. தமிழிலும் ஆயிரக்கணக்கான புதுச்சொற்கள் உருவாகித் தமிழை மெருகேற்றி வருகின்றன. புதுச்சொற்களின் சேர்க்கைதான் எந்த மொழியையும் காலத்துக்கேற்ப வளர்ச்சியடையச் செய்யும். மொழியை அடுத்த அடுத்த நூற்றாண்டுகளுக்கு அழைத்துச் செல்லும்.

1959ல் தொடங்கி 1965ல் நிறைவெய்திய ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம்தான் இன்றுவரை நம்பகமான, தலையாய அகராதியாக விளங்குகிறது. ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உண்டோ அத்தனை பொருள்களிலும் தமிழ்ச்சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். பிற அகராதிகளிலோ ஓரிரு பொருள்களுக்கு மட்டுமே தமிழ்ச்சொற்கள் வழங்கப்பட்டிருக்கும். முனைவர் ஆ. சிதம்பரநாதன் (செட்டியார்) அவர்கள் முதன்மை ஆசிரியராகவும், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை அவர்கள் உதவி ஆசிரியராகவும் இருந்த அகராதி உருவாக்கக்குழுவில் மேலும் சில அறிஞர்கள் இருந்தனர். இரா. பி. சேது(ப்பிள்ளை), மு. வரதராசனார்,             தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (பிள்ளை) போன்ற தமிழ்ப்பேரறிஞர்கள் பலரும் அறிவுரைக்குழுவில் இடம்பெற்று அகராதிக்கு வளம்சேர்த்துள்ளனர்.

ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கவும், புதுச்சொற்களை உருவாக்கவும் பலருக்கும் இந்த அகராதிதான் பெரிதும் துணைபுரிகிறது. தனிமாந்தராக நின்று, நூற்றுக்கணக்கான சட்டங்களை அவற்றின் நுண்பொருள்கள் திரியாமல் மொழிபெயர்த்து வெளியிடுகிற சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்களிடம் நான் பேசிய போது, சட்ட நூல்களைத் தமிழில் கொண்டுவருவதற்கு இந்த அகராதிதான் அடிப்படை என்றார். மேலும் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பலதமிழ்ச் சொற்களில் ஏதாவது ஒருசொல் பொருத்தமாகக் கிடைத்துவிடும். அல்லது அந்தச் சொல்லிலிருந்து நீ்ட்டியோ குறுக்கியோ சற்று மாற்றியோ புதுச்சொல்லை உருவாக்கிவிடமுடியும் என்றார்.

ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் புதுச்சொற்கள் குவிந்துவிட்டன. மேலும் அந்த அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல தமிழ்ச்சொற்கள் கூட, இன்றைய அளவில் மாற்றப்பட்டுப் புழக்கத்தில் வழக்கத்தில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக license என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணக்க முறி, இணக்க ஆணை, இசைவுரிமை என்றவாறு பொருள்தரப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் லைசன்ஸ் என்ற அந்தச் சொல்லுக்கு உரிமம் என்ற இன்னும் பொருத்தமான தனிச்சிறப்பான சொல் வந்துவிட்டது. அதுபோல் Bus என்பதற்கு விசைக்கலம் உந்துவண்டி ஆகிய தமிழ்ச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் Bus என்பதற்குப் பேருந்து என்ற சொல் வந்து நிலைத்துவிட்டது. ஆனால் இந்த உரிமம், பேருந்து ஆகிய சொற்கள் இன்றுவரை அந்த அகராதியில் ஏறவே இல்லை. இவைபோன்ற திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டியுள்ளன. 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்ட எந்த ஆங்கிலச் சொல்லுக்கும் இந்த அகராதியில் இடம்இல்லை. அகராதியைப் புதுப்பிக்க எந்த நடவடிக்கையையும் சென்னைப் பல்கலைக் கழகம் எடுக்கவில்லை. இருந்தாலும் நல்வாய்ப்பாக அந்த அகராதியை ஒளிவருடல் செய்து மறுபதிப்பு செய்து வந்துள்ளனர். ஆனாலும் பரவலாக விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்பது ஒருகுறைதான்.

 

தமிழ்ப்பேரகராதி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் நிகண்டுகள் என்ற பெயரில் அகராதிகள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டில் திவாகரம் என்ற நிகண்டு உருவாகி உள்ளது. பிங்கலம், சூடாமணி, பாரதி தீபம், அகராதி நிகண்டு என ஏராளமான நிகண்டுகள் இருந்துள்ளன. தமிழுக்குச் சற்றும் தொடர்பில்லாத இத்தாலி மொழிபேசிய வீரமாமுனிவர் தமிழ்கற்று, தமிழ்காப்பியம் படைத்து, தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்து, தமிழ் உரைநடை வளர்த்துள்ளதோடு மட்டுமல்லாமல் சதுரகராதி என்ற தமிழ்அகராதியை 1732 ஆம் ஆண்டில் முதன்முதலில் உரைநடையில் உருவாக்கித் தந்துள்ளார். இதுதான் முழுமையான அகர வரிசையில் உருவான முதல் அகராதி ஆகும். தற்கால அகராதிகளுக்கு எல்லாம் இதுவே முன்னோடி. தமிழ் – இத்தாலி  இரு மொழி அகராதி, தமிழ் – இத்தாலி – போர்ச்சுகீசியம் என்ற மும்மொழி அகராதி ஆகியவற்றையும் உருவாக்கித் தமிழ்பரவப் பாடுபட்டுள்ளார். அதனால்தான் வீரமாமுனிவரை அகராதியின் தந்தை என அழைக்கிறோம். அவரைப் போலவே தமிழ்கற்றுத் தேர்ந்த பல பாதிரியார்களின் பெருமுயற்சிகளால் பல தமிழ் – ஆங்கிலம் அகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பேப்ரீசியஸ் அகராதி, வின்சுலோ அகராதி, ராட்லர் அகராதி ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்தக் காலக் கட்டத்தில் நம்நாட்டுப் பேரறிஞர்கள் பலர், தங்களின் தனிப்பட்ட முயற்சிகளால் சிறப்பான அகராதிகள் பலவற்றை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்துள்ளனர்.

இந்நிலையில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை அரசும்  சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து தமிழ்ப்பேரகராதியை ஒரு லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் உருவாக்கத் திட்டமிட்டது. நிறைவடையும் போது ரூ. 4,10,000 செலவாகி இருந்தது. இந்த அகராதிக்காகப் பல்வேறு குழுக்கள் நிறுவப்பட்டன. அக்குழுக்களில் பல்வேறு மொழிப்புலவர்கள், சமய அறிஞர்கள், தமிழறிஞர்கள், வழக்கறிஞர்கள் இடம்பெற்று நற்பணிக்கு- சொற்பணிக்குத் துணைநின்றுள்ளனர். முதன்மை ஆசிரியராக சாண்ட்லர் என்பவர் 1913 முதல் 1922 வரை பணியாற்றியுள்ளார். இறுதியாக ச. வையாபுரி பிள்ளை அவர்கள் முதன்மை ஆசிரியராக 1926 முதல் பணியாற்றி அகராதித் தொகுப்பை 1939ல் நிறைவு செய்துள்ளார். ஆற்றல் வாய்ந்தவர்களின் அரும்பெரும் முயற்சிகளால் இணைப்புத் தொகுதியையும் சேர்த்து ஏழு  தொகுதிகளாகத் தமிழ்ப்பேரகராதி உருவாக்கப்பட்டது. இதில் 1,24,405 சொற்கள் உள்ளன. அந்தத் தமிழ்ச்சொற்களுக்கு உரிய தமிழ்ப்பொருள்கள் மட்டுமன்றி ஆங்கிலப்பொருள்களும் தரப்பட்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. ஒவ்வொரு சொல்லுக்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளிட்ட பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரகராதியும் கால வளர்ச்சிக்கு ஏற்பப் புதுப்பிக்கப்படாமல் அப்படியே உள்ளன. மேலும் மறுபதிப்புகளும் அவ்வளவாக வரவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டில் பேரகராதியின் முதல்தொகுதியை மட்டும்  சென்னைப் பல்கலைக் கழகம் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பிற தொகுதிகள் விற்பனைக்கும் இல்லை. மறுபதிப்பும் காணவில்லை.

ஆனாலும் தற்காலச் சூழலுக்கேற்பத் தனிஆர்வலர்கள் சிலர் தமிழ் – தமிழ் அகராதிகளை உருவாக்கி உள்ளனர். அதில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடத்தக்கது. அதுவும் மறுபதிப்புக் கண்டபோது மேலும் பல சொற்களை இணைத்துக்கொண்டது போற்றற்குரியது.  1925ஆம் ஆண்டிலே கூட ச.பவானந்தம் (பிள்ளை) முயற்சியில் தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியொன்று வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சையில் இயங்கும் தமிழ்ப்பல்கலைக்கழகமும் குறிப்பிடத்தக்க அளவில் பெருஞ்சொல்லகராதி, கலைச்சொல் அகராதி உள்ளிட்ட பல அகராதிகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் பல அகராதிகள் பதிப்பகத்துறையில் இருப்பு இல்லை. மேலும் தமிழக அரசின் கலைச்சொல்லாக்கக் குழுவின் முயற்சியால்  கலைச்சொல் பேரகராதி 14 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  சென்னைப் பல்கலைக் கழகத்தின் இரு பேரகராதிகளும் தமிழக அரசின் கலைச்சொல் பேரகராதியும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன என்பது பேராறுதல்,

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், அண்மைக்காலமாகத் தான் எழுதிவரும் படைப்புகளில் கட்டுரைகளில் புதுப்புது நேர்த்தியான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி வருகிறார். மேலும் பிறமொழிச் சொற்களுக்கு உரிய அழகிய தமிழ்ச்சொற்களை உருவாக்கத் தருகிறார். அந்தப் பிறமொழிச் சொற்களைப் பெரும்பாலும் அவர் அடைப்புக்குறிக்குள் எழுதுவதில்லை. அப்படி எழுதாமலே அந்தச் சொற்கள் நமக்குள் நுழைந்து அறிமுகமாகி உடன்பழகிவரும் தோழர்கள்போல் மாறிவிடுகின்றன. தேய்வழக்காகிப் போன தமிழ்ச்சொற்களுக்குக்கூடப் புதுச்சொற்களைப் படைத்து வருகிறார். இவரைப் போலவே நம் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள், பல்வேறு தளங்களில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், புதுச்சொற்களை உருவாக்கி வருகின்றனர். தற்போது நிகழ்ந்துவரும் நவீன கவிதைப் போக்கில் புதுப்புதுச் சொல்லாட்சிகள் உருவாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தனித்தமிழைக் கொள்கையாகக் கொண்டவர்களின் சொல்லாக்கங்கள் நிறைந்துள்ளன. தினமணியின் தமிழ்மணியில் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன், தமிழறிஞர்           தெ. ஞானசுந்தரம் ஆகியோரைக் கொண்டு சொல்வேட்டை நடந்தது. தினமணியின் இந்த முயற்சியால் பல புதுச்சொற்கள் உருவாக்கப்பட்டு நாளிதழ்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

தன்னார்வமாய் வட்டாரச் சொற்களைத் தொகுத்துப் பலர் வெளியிடுகின்றனர். துறைதோறும் உள்ள கலைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைப் பலர் தாமாக உருவாக்கியும் தொகுத்தும் சொந்தச் செலவில் வெளியிட்டும் வருகின்றனர் என்பது ஆறுதல் தரக்கூடியது. பல்வேறு துறைகளின் கலைச்சொற்களுக்கு இணையாகத் தமிழில் சொற்களைப் படைத்தளித்தவர்களில் மணவை முஸ்தபா மற்றும் புலவரும் பொறியாளருமான செந்தமிழ்ச் சேய் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இச்சொற்களை எல்லாம் ஒருங்கிணைத்து அதிகாரப் பூர்வமான அகராதிகளை உருவாக்க வேண்டியது அதிகார அமைப்பின் கைகளில்தாம் உள்ளது.

ஒரு கோவில் என்றாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு என்ற பெயரில் கட்டாயம் புதுப்பிக்கும் பணியைச் செய்கிறார்கள். அதனால்தான் அந்தக் கோவில்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்று வருகின்றன. அதுபோல்தான் அகராதிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

தமிழுலகில் எத்தனை அகராதிகள் வந்திருந்தாலும் இன்றளவும் அறிஞர்களால் பெரிதும் ஆளப்படும் அகராதிகள் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப்பேரகராதி மற்றும் ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் மட்டும்தாம். முன்னரும் பின்னரும் வந்த அகராதித் தொகுப்புகளையும் இன்னும் தொகுக்க வேண்டிய சொற்களையும் உள்ளிட்டு மேலும் சிறப்பான முறையில் மேற்கண்ட இரு அகராதிகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

Series Navigation2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்புதுணைவியின் இறுதிப் பயணம் – 9