”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]

Spread the love

 

’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு நிறைவேற அவன் செங்கிஸ்கான் ஆகிறான்.

அவனின் வரலாற்றை ஒரு சரித்திர நாவல் போலப் படிக்கக் களைப்பு ஏற்படாவண்ணம் தந்திருக்கிறார் முகில்.

பல புத்தகங்களைப் படித்துப் பல ஆதாரங்களுடன் எழுதி உள்ள அவருக்குப் பாராட்டுகள். சிலவற்றை அப்படியே தந்துவிடுகிறார்.

எடுத்துக் காட்டாக செங்கிஸ்கான் பிறந்த ஆண்டு

”கி.பி.1155-லிருந்து 1167—க்குள் என்று பலரும் கூறுகின்றனர். ஆனாலும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுவது கி.பி 1162—ஆகும்.”

என்கிறார்.

அதுபோல டெமுஜின் தப்பித்து ஓடிக் கீழே விழுந்த இடம் பல்ஜூனா ஏரிக்கரை ஆகும். அது எங்கிருந்தது என்பது இன்றுவரை ஐயத்திற்கிடமாகவே இருக்கிறது. சைபீரியக் காடுகளிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் மங்கோலியாவின் கிழக்கு முனையில் இருந்தது என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன என்றும் கூறுகிறார்.

தன் வாழ்க்கை முழுதும் செங்கிஸ்கான் நிம்மதியின்றித் தவிப்பதிலேயே காலம் கழித்தார் என்பது இந்நூலைப் படிக்கும் போது தெரிகிறது.

அவர் தாய் மணமாகி வரும்போதே வேறொரு குழுவால் கடத்தப்படுகிறார். கடத்திய அக்குழுத் தலைவனே பின்னால் செங்கிஸ்கானின் மனைவியையும் தேனிலவு அனுபவிக்கும் போது கடத்துவதோடு அவளைக் கர்ப்பமாகவும் ஆக்கி விடுகிறான்.

பெரியதொரு பேரரசை உருவாக்குவோம் என்று கத்தியால் கீறி ரத்த சம்பந்தமாக உறுதி எடுத்துக் கொண்ட உயிர் நண்பன் ஜமுக்கா எதிரியாகிறான். செங்கிஸ்கான் மிகவும் மதித்த அவனது தந்தையின் நண்பரே படையெடுத்து வருகிறார். அவன் முழுதும் நம்பிய தலைமை மந்திர வாதி டெப் டெங்ரி அவனுக்கு எதிராகச் செயல் படுகிறார். அவனே அடிமையாக்கப்பட்டுக் கழுத்தில் பெரிய மரத்தாலான வட்டமான பலகை மாட்டிவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிறான். ஒரு போரில் விஷ அம்பு கழுத்தில் பாய்ந்து உயிர் போகும் அளவுக்கு வந்து பிழைக்கிறான்.

இத்தனை இன்னல்கள் வந்துற்றபோதும் அவன் தன் பேரரசுக் கனவை நிறைவேற்றுகிறான். அவன் மனத்தில் கொண்டிருந்த தளராத உறுதியும் நம்பிக்கையுமே அவனுக்குத் தன் சிறிய படையை விட அளவில் மிகப் பெரிய சைன்யங்களை வெற்றி கொள்ள அவனுக்கு வழி காட்டுகின்றன.

இப்போதய சீனத் தலைநகரான பெய்ஜிங் எனும் நகரம் அப்போது ஸோங்டு எனப்பட்டது. அதைக் கைப்பற்ற செங்கிஸ்கான் வகுத்த போர்த் திட்டங்களை நூலாசிரியர் எழுதும் போது அவை உண்மையாக நடந்தவைதான் என்றாலும் இன்று நமக்கு சாண்டில்யன் நாவல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

செங்கிஸ்கான் ஒவ்வொரு போர் தொடங்குவதற்கு முன்னரும்  தன் வீர்ர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளான்.  படை வீர்ர்களை ஒன்று சேர்த்து அவன் அவர்களிடம் பேசுவது,

”போர்க்குறிக் காயமே புகழின் காயம்,

யார்க்கது வாய்க்கும்’

எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆற்றும் வீர உரைக்கு ஒத்திருக்கிறது.

இந்நூலைப் படிக்கும் யாவருமே மனம் கனமாகப் போகும் இடம் ஒன்று இருக்கிறது.

செங்கிஸ்கானின் நண்பன் ஜமுக்கா துரோகியாகித் தான் தலைவனாக வேண்டும் என முடிவெடுக்கிறான். வேறு வழியின்றி செங்கிஸ்கான் அவன் மீது படையெடுக்கிறான். ஜமுக்கா தோற்று ஓடித் தலைமறைவாகிறான். அவனது படைத் தலைவர்களே அவனைக் கைதியாக்கி செங்கிஸ்கான் முன் அவனைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

தங்கள் தலைவனையே காட்டிக் கொடுத்த அந்தப் படைத்தலைவர்களை முதலில் சிரச் சேதம் செய்ய ஆணையிட்டு விசுவாசம் தவறியவர்களுக்கு என்ன நேரும் என்பதை செங்கிஸ்கான் யாவர்க்கும் உணர்த்துகிறான்.

அடுத்து நடப்பதுதான் நம்பமுடியாதது. ஆனல் உண்மை.

ஜமுக்காவையும் சேர்த்துக்கொண்டு தான் விரும்பும் பேரரசை அமைக்க விரும்பும் செங்கிஸ்கானிடம், ஜமுக்கா கூறுகிறான்.

’நீ ஜெயித்துவிட்டாய் டெமுஜின்’

தன் நண்பனைக் கட்டியணைக்கும் ஜமுக்கா காதருகில் மெல்லிய குரலில் பேசினான்.

‘டெமுஜின். என்னை இங்கேயே இப்போதே கொன்று விடு’

எவ்வளவு சொல்லியும் கேளாத ஜமுக்காவின் ஆசையை நிறைவேற்ற செங்கிஸ்கான் வேறு ஒருவரை அழைக்கிறான். ஆனல் ஜமுக்காவோ,

”வேண்டாம், உன் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். அது போதும் ரத்தம் சிந்தாத மரணம்’ என்கிறான்.

பிறகு ஜமுக்காவின் பின்புறம் வந்து நின்று வானத்தைப் பார்த்தபடியே செங்கிஸ்கான் ஜமுக்காவின் கழுத்தை நெறிக்கிறான். ஜமுக்காவின் கழுத்து எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்கிறது.

படித்தவுடன் தன் தோல்வியை ஏற்று மீண்டும் நண்பனுடன் சேரமுடியாத மன நிலைக்குத் தள்ளப்பட்டு வீர மரணத்தை, அதுவும் தன் நண்பன் கையாலேயே அது நிகழ வேண்டும் என்று விரும்பும் ஒருவனுக்காக நம் மனமும் அழத்தான் செய்கிறது.

இப்படி நூல் முழுதுமே இதுவரை நாம் அறிந்திருக்கவே முடியாத பலவற்றை முகில் தந்துள்ளார்.

மிக வீரமான போர்க் குணம் கொண்ட மங்கோலியர்க்கு இடி என்றால் பயம். இடி ஓசை கேட்டால் அவர்கள் கடவுளான தெங்ரி சினம் கொண்டுள்ளார் என்பது அர்த்தம். இடி இடிக்கிறதென்றால் அவர்கள் காதுகளை பொத்திக் கொண்டு மறைவிடத்தில் போய் ஒளிந்து கொள்வார்களாம்.

இறந்தவர் உடலை வண்டியில் எடுத்துக் கொண்டு போவார்கள். வண்டியிலிருந்து உடல் எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அந்த இடம்தான் கடவுள் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றத் தீர்மானித்த இடமாம். அங்கேயே நாடோடிப் பாடல்களைப் பாடிவிட்டு உடலைப் போட்டுவிட்டு வந்து விடுவார்கள். பிறகு பிணந்தின்னிப் பறவைகள் அவ்வுடலைத் தின்றுவிடுமாம் இந்த இறுதிச் சடங்கிற்கு sky buriyal என்று பெயர்.

செங்கிஸ்கான் எந்த இடத்தில் இறந்தார்? அவரின் இறுதிச் சடங்குகள் எப்படி நடத்தப்பட்டன? என்பது குறித்த தவகல்கள் எதுவும் கிடையாது என நூலாசிரியர் கூறுகிறார்.

ஆனாலும் ஒரு கோடையின் இறுதியில் இறந்த செங்கிஸ்கானின் உடலுக்கு அவர் மனைவிகளில்  ஒருத்தியான ’யெசுய்’ எளிமையான முறையில் சடங்குகள் நடத்தியதாகவும் மங்கோலியரின் பாரம்புரிய முறையில் அவரின் உடலை மக்கிப் போக விட்டதாகவும் சில குறிப்புகள் உண்டு என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.

விசில் அம்பு எனும் ஓர் அம்பைப் பற்றி நூலில் ஒரு  குறிப்பு வருகிறது. அதாவது எலும்பில் சரியான அளவுகளில் துளையிட்டு அதை அம்பின் கூர்மையான முனையோடு பொருத்தி விடுவார்கள். மானை நோக்கி அது செலுத்தப்படும் போது விசில் சத்தம் போல ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும். மான் எப்போதும் சத்தம் கேட்டால் மிரண்டு திரும்பிப் பார்க்குமே தவிர ஓடாது. எனவே அம்பு அதன் உடலில் பாயும்.

திருமணமாகும் மங்கோலிய மணமகனுக்கு கடினமான ஆட்டுக்கறி வழங்கப்படுமாம். அதை அவன் கஷ்டப் பட்டு கடித்துச் சாப்பிட வேண்டும். திருமண உறவு என்பது அவ்வளவு உறுதியானது என்பதை அது காட்டுமாம்.

வீட்டை விட்டுக் கிளம்புவர்கள் தங்கள் செயலை நல்லபடி முடித்துத் திரும்ப வேண்டும் என்று அவர்கள் வெளியில் செல்லும் போது தண்ணீரை மரக் கரண்டியால் வானத்தை நோக்கித் தெளிக்கும் வழக்கம் அவர்களிடத்தில் உண்டு.

ஒரு குழுவைச் சேர்ந்தவர்களை சிறை பிடிக்கும் போது மாட்டுவண்டிச் சக்கரத்தின் உயரம்வரை வளராத சிறுவர்களைக் கொல்வது கிடையாது. மாறாக அவர்கள் கழுத்தில் மரப்பலகை மாட்டி அடிமையாக வைத்திருந்து அவர்கள் வளர்ந்தபின் அவர்களைக் கொல்வார்களாம்.

டெமுஜினாக இருந்தவர் செங்கிஸ்கானாகப் பேரரசை அமைத்த பிறகு அதுவரை இருந்த மங்கோலியர்கள் சட்டங்களை  மாற்றினார்.

பெண்களைக் கடத்துவது தடுக்கப்பட்டது. அடிமை முறை ஒழிக்கப் பட்டது. கால்நடைகளைத் திருடினால் மரனதண்டனை விதிக்கப் பட்டது.

வேட்டையாடுவதற்கு சில சட்டங்கள் வகுக்கப் பட்டன. தங்கள் தேவைக்கு மட்டுமே வேட்டையாட வேண்டும். மார்ச்சு அக்டோபர் மாதங்கள் விலங்குகளின் இனப்பெருக்க காலம் ஆதலின் அப்போது வேட்டையாடக் கூடாது என்று சட்டம் வகுக்கப் பட்டது.

அனைவருக்கும் மத சுதந்திரம் உண்டு. எந்த மதத்தையும் சார்ந்திருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்.

அடுத்து முக்கியமான ஒன்று;

மங்கோலிய வீர்ர்களும் படைத் தளபதிகளும் கல்வியறிவு இல்லாதவர்கள். எனவே செய்திகள் வாய்மொழியாகச் சொல்லி அனுப்பப் பட்டால் அவை பலர் வாயில் விழுந்து  மாறி விடக்கூடிய அபாயம் உண்டு. ஆகையால் அவை பாடல் வடிவில் சந்தங்களோடு சொல்லி அனுப்பப் பட்டன.

இப்படி இதுவரை நம் கேள்விப்படாத பல புதிய செய்திகளை அறிந்து கொள்ள இந்நூல் வழி வகுக்கிறது.

[செங்கிஸ்கான்—-முகில்—-வெளியீடு : கிழக்கு, 33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை—600 018; பக் : 184; விலை : ரூ 100;

பேச 044—42009601/03/04]

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சீதாயணம் நாடகப் படக்கதை – 18சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3