மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை

Spread the love

ஜெ.பாஸ்கரன்

கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்)

எழுத்துலகின் ‘சின்ன ஜானகிராமன்’ என்று அறியப்படும் ஆ.மாதவன் கதைகள் வித்தியாசமானவை – அவர் வாழ்ந்த கடைவீதியையே களமாகக் கொண்டு, எழுதிய கதைகளின் தொகுப்பு ‘கடைத்தெருக் கதைகள்’. (கிளாசிக் சிறுகதை வரிசை – நற்றிணைப் பதிப்பகம்). அனந்த பத்மனாபர் ஆலயத்தின் கிழக்கு முகமாக அமைந்த ஆலய வீதி, மொத்த,சில்லறை வியாபார ஸ்தலமாகத் திகழ்ந்ததனால், ‘சாலைக் கடைத்தெரு’ எனப் பெயர் பெற்றது. பின்னர், மார்த்தாண்ட வர்மாவின் அமைச்சர், ராஜா கேசவதாஸ்தான், இந்த வணிக வட்டத்திற்கு ‘சாலைக் கம்போளம்’ எனப் பெயர் சூட்டியதாக வரலாறு! இத்தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளும் சுவாரஸ்யமானவை – அதிலும் வித்தியாசமான ‘கோமதி’ கதை பற்றி ‘ தமிழில் இதுபோல் இன்னொரு கதை எழுதப்படவில்லை ‘ என்கிறார் நாஞ்சில் நாடன்!

‘கோமதி’ ஒரு மலடு பசுவைப் பற்றிய கதை – கதையின் நாயகியே கோமதி என்கிற பசுதான்! விலங்குகளை வைத்து கதை சொல்வது புதிதல்ல – உலக நாடோடிக் கதைகள், நாய், பூனை, கிளி என வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிய கதைகள், ஜேம்ஸ் ஹேரியட் (வெல்ஷ் வெட்டர்னரி டாக்டர்) எழுதியுள்ள அனுபவக் கதைகள், கி.ரா எழுதியுள்ள, பசுக்களைப் பற்றிய ‘கறவை’ – சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு பசுவை மையப்பாத்திரமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில், பேசுவதைத் தவிர மற்ற எல்லாம் செய்கின்றது கோமதி! “தந்திரம், சமயோசிதபுத்தி, வீரம், வீறாப்பு, விஸ்வாசம், சரசம், சண்டித்தனம் – புத்திரிக்கண்டம் ‘தொழில்காரிகளை’விடப் பதின்மடங்கு கெட்டிக்காரி!” என்று எழுதுகிறார் மாதவன்!

திவசதானமாக வந்த சொத்து கோமதி; அமாவாசையில் வாலைத் தூக்கிக் கத்தும்போது, பொலி மாட்டுக்காரன் ‘அப்பேர்ப்பட்ட கராச்சி இணைக்குக் கூட கோமதியைத் தாயாக்க வலுவற்றுப் போய்விட்டது’ என்று கை விட, வெட்டினரி டாக்டர் கோமதியை மலடு என்று சொல்லிவிட, அறுவைக்காரர்களிடம் விற்க மனமில்லாமல், வேதம் படித்த சாஸ்திரிகள், ‘எக்கேடோ போ’ என்று விரட்டி விடுகிறார். சாலைக்கடைத் தெருவில் திரியும் கோமதிக்கு பேப்பர், பிளாஸ்டிக், பஸ்ஸுக்கு நிற்கும் பெண்களின் புடவை நுனி எல்லாம் தீனியாகின்றன.

“நல்ல கருப்பி. ஆனால் நல்ல மதமதத்த உடம்புக்காரி. திமிலெல்லாம் சும்மா அப்படி நந்திக்காளை மாதிரிதான். கைமுஷ்டி அளவுக்கு மேல் வளரவே வளராத குட்டைக் கொம்புகள், பரந்த முகம், யானைத்தும்பிக்கை மாதிரி திரட்சியான கை கால்கள். வெயில் அசைவில் பளபளக்கும் சரீரம், பால்மடி திரட்சியில் சிந்தியும், ஜேர்சியுமெல்லாம் கோமதியிடம் சேவகம் செய்ய வேண்டும். இத்தனைக்கும் கோமதி மலடு. ஆனால் இருந்தால் என்ன?”. என்று வர்ணிக்கப்படுகின்ற கோமதியின் சாகசங்களே கதை!

கோட்டையின் இடதுபுறம் பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள காற்றாடி மரத்தடியில் தான் வாசம்! கண்டன்வாசு, ஜாளி மணியன், தலைக்கட்டு வேலப்பன் கோமதியின் சேக்காளிகள் – சோத்துக்கட்டி, பழத்தோல்கள், கப்பைப் பழம், செவ்வாழை எனக் கொண்டுவந்து கொடுப்பார்கள்! மணியனை அதிகம் பிடிக்கும் கோமதிக்கு – மடிமேல் படுத்திருக்கும் மணியனைத் தன் வாலசைவால் கூட உபத்திரம் செய்யாள்!

கோட்டைப் போலீஸ், கார்ப்பொரேஷன் கமிஷணர் யாரும் கோமதியை அணுக முடியாது. கார்ப்பொரேஷன் கொட்டடிக்குக் கொண்டுபோகத் தூதுவன் வந்தால், வட்டாரத்திலேயே இருக்க மாட்டாள் – நிலமை தெளிந்து, ‘குளம்பு தாளமிட’ ஒய்யார நடையுடன் திரும்ப வந்துவிடும் சாமர்த்தியம்!

கோமதியின் மேல் தடுக்கி விழுந்த ஓராளுக்கும், சேக்காளிகளுக்கும் சண்டை முற்றி, 24 மணிகளுக்குள் கோமதியைப் பிடித்துப் பவுண்டரியில் அடைக்க உத்தரவு வருகிறது – அவளைப் பிடிக்கக் கார்ப்பரேஷன் சிப்பந்திகள் படும் பாட்டையும், வாயில் நுறை தள்ளி, நாலு காலையும் வானம் பார்த்து நீட்டியபடி விழும் கோமதியைப் பார்த்துக் கலங்கும் மணியனையும் ஒரு குறும்படம் போல் விவரித்துச் செல்கிறார் மாதவன்.

கோமதியைப் பவுண்டரியில் அடைத்தார்களா? சேக்காளிகள் என்ன ஆனார்கள் என்பது கதையின் எதிர்பாராத முடிவு!

கடைத்தெருவில் கோயில் மாடு போல திரியும் கோமதியை மையப் படுத்தி எழுதியுள்ள கதை வித்தியாசமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட –

இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைக்ளுமே இப்படித்தான் – வாசிக்க வேண்டிய புத்தகம்!

(கடைத்தெரு கதைகள் – ஆ.மாதவன். நற்றிணை பதிப்பகம்)

ஜெ.பாஸ்கரன்.

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வுசொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்