மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19

This entry is part 6 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“தெற்கே அருங்கூர் அருகே கிருஷ்ணபட்டணம் என்ற புதிய நகரமொன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கு குடிவரும் மக்களுக்கு விவசாயத்திற்கான நிலமும், குடியிருப்புக்கான மனையும் வழங்கிவருகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் தேவாலயத்தையும், பங்குச் சாமியார்இல்லதையும் அங்கே கூடக் கட்டிக்கொள்ளலாம்.”

21. பிரதானி நந்தகோபால்பிள்ளை உரையாடலை திசை திருப்பும் காரணம் அறியாது பிமெண்ட்டா யோசனையில் மூழ்கினார். இந்துஸ்தானத்திற்கு வந்திருந்த நான்கைந்து மாதங்களிலேயேப அவர் உள்ளூர் மொழிகளைக் கற்றிருந்தார். குறிப்பாக தமிழர்களின் பேச்சுதமிழுக்கும், எழுதும் தமிழுக்குமுள்ள வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொண்டார். திருச்சபை ஊழியர்கள், உள்ளூர் மக்கள், அரசாங்க பிரதிநிதிகள் எனப்பழகி, பேசும் தமிழை ஓரளவுதான் விளங்கிக்கொள்ளவு பிமெண்ட்டாவுக்கு முடிந்தது. இரவு உரையாடலில் பெண்ணொருத்தியை பலிகொடுப்பது அவர்கள் எண்ணமாக இருந்தது. ஆனால் அவளை பலிகொடுக்காமல் தவிர்த்துவிட்டார்களென்பது அவரது ஊகம். அதற்கு அவர்கள் கூறிய காரணத்தை தெரிந்துகொள்ள அவரது தமிழுக்குப் போதாது. ‘கன்னிகழியாதவள்’ என்று அவர்கள் கூறிய வார்த்தைகள் தலையிலிருந்தன. யாரையேனும் கேட்டுப்பார்க்கவேண்டும்? இருந்தபோதும் மனதிற் தயக்கமிருந்தது. கடல்கடந்து பல்லாயிரம் மைல்கள் பயணித்து இங்கே வந்தது தேவ தூதரின் நல்லாசிகளைப் பாவிகளுக்கு வழங்கி கடைத் தேற்ற, அதற்கு மாறாக இங்குள்ள அரசாங்கங்களின் உள் விவகாரங்களிலோ ஏனைய பிரச்சினைகளிலோ தலையிடக்கூடாதென்று சேசு சபையின் தலமை அலுவலகம் தெளிவாகவே பலமுறை எச்சரித்திருந்தது.

நந்தகோபாலபிள்ளையைப் பார்த்து ஏதோ கேட்கவேண்டுமென்று நினைத்துத் திரும்பியவர் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, பிள்ளையின் முதுகுக்குப்பின்புறம் தெரிந்த ராஜகிரியை சிறிது நேரம் வெறிக்கப்பார்த்தார். நேற்று கிருஷ்ணபுரது நகரை ஒப்பிட்டு சிலாகித்தது நினைவுக்குவந்தது. இப்பொழுது ராஜகிரியும் அவரது விரித்திருந்த கண்களுக்கு அடங்காமல் பூமிக்கும் வானத்திற்குமாக பிரமாண்டமாக நிற்கிறது. உலகில் வேறுமன்னர்களுக்கு இதுபோன்றதொரு இயற்கையான பாதுகாப்புகொண்ட கோட்டை அமைந்து பார்த்ததில்லை; இதனையும் நாட்குறிப்பில் குறித்துக்கொண்டு சேசு சபையின் தலமை குருவிற்கு மறக்காமல் எழுதவேண்டும். ‘இராஜகிரியின் உச்சியைத் தொடாமல் நிலவு பயணிப்பதில்லையென யாரோ எழுதியிருந்ததாக நினைவு’.

– அப்படியென்ன ராஜகிரிமலையை வைத்தகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்

– நேற்று உங்கள் நகரைகண்டு பிரம்மித்தேன். இன்று உங்களுக்கு இயற்கை அளித்துள்ள கொடையைக் கண்டுபிரம்மிக்கிறேன்.

– ம்..

– நீங்கள் ஏன் பெருமூச்சு விடுகிறீர்கள்?

– ஒருவரின் வெற்றி, மற்றவரின் தோல்வி. ஒருவருக்குக் கிடைத்திருக்கிறதென்றால் இன்னொருவருக்கு இழப்பு;

– என்ன சொல்லவருகிறீர்கள்?

– இந்த கோட்டையும் அரணும் எங்கள் முன்னோர்கள் எழுப்பியது.

– கொஞ்சம் விளங்கும்படிச் சொல்லுங்கள்

– ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தகோன் என்பவர் ஆடுகள் மேய்த்தபோது இங்கிருந்த குகையொன்றில் கண்டெத்த புதையலில் கமலகிரியை இணைத்து சிறியதொரு கோட்டையை எழுப்பி அதற்கு ஆனந்த கிரியென்று தமது பெயரை சூட்டினார். தேவனூர், ஜெயங்கொண்டபுரம், மேளச்சேரி என்றிருந்த ஊர்களை இணைத்து ஒரு ராச்சியத்தை ஏற்படுத்தி 50 ஆண்டுகள் ஆளவும் செய்தார்.அவருக்குப்பின் கிருஷ்ணகோன் அரசாண்டார். இவர்தான் இன்றுள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் சூத்ரதாரி. கோபாலசுவாமி கோவிலைக்கட்டியவரும் இவர்தான். அவருக்குப்பிறகு கோவிந்தகோன், புலியக்கோன் ஆகியோர் ஆண்டார்கள்.

– அதற்குப்பிறகு நாயக்கர்கள் கைக்கு வந்ததா?

– இல்லை குறும்பர்கள், ஹொய்சளர்களென பலர்கைக்கு மாறி நூறு ஆண்டுகளாகத்தான் விஜயநகர நாயக்கர்களின் கீழ் இத்தேசம் வந்தது. மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கருக்கு முன்பாக துப்பாக்கிக் கிருஷ்ணப்ப நாயக்கர் என்றொருவர் இருந்தார். அவர் இவருடைய மூதாதையார். கோனார் குடும்பத்தினர் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள். இன்று நாயக்கர்களுக்கு சேவகம் செய்ய வேண்டுமென்பது தலைவிதி. எங்களைப்போல வைணவர்களுக்குச் சேவகம்செய்கிறோமென்பது ஆறுதல் தரும் விஷயம்.

– அப்படியா? எனக்கூறி பிமெண்டா யோசனையின் மூழ்கியபடி நடக்க பிரதானியும் அவரும் அரண்மனைகெதிரே வந்திருந்தனர். கோபுரங்களுடனும் வராந்தாக்களுடனும் கோவில்போல அரண்மனை வித்தியாசமாக இருக்க சில கணங்கள் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

இருவருமாக காவலர்களைக் கடந்து தர்பாருக்குள் நுழைந்தார்கள். நடுவில் இரத்தினக் கம்பளம் விரித்திருக்க இருபுறமும் அமர்ந்திருந்த மனிதர்களை வைத்தும் நடுநாயகமாக அமர்ந்திருந்த மனிதரின் தோற்றத்தையும், அவர் அமர்ந்திருந்த விதமும் மன்னரென புரிந்துகொள்வதில் பிமெண்ட்டாவுக்கு சிரமங்களில்லை. உயர்ரக பட்டிலான அலங்கார இருக்கையின் பங்களில் வெல்வெட்டிலான திண்டுகளிருந்தன. விரல்கனத்திற்கு பொற்காப்புகளும், கொற்கை முத்து பதித்த மோதிரங்களணிந்த கைகள் திண்டுகளில் ஊன்றியிருந்தன. இடையில் பொற்சரிகை கலந்து நெய்த மஞ்சள்நிற பட்டாடை அணிந்திருந்தார் தோளில் அரக்குவண்ன உத்தரீயம். மார்பில் கனத்த தங்கச் சங்கிலி. மார்புமயிரோடு புதைந்துமீளும் முத்தும் பவழமும் இழைத்த பதக்கம். அடர்த்தியாகவும் நீளமாகவுமிருந்த தலைமயிர் பிடறியில் மடிந்துக் குடுமியாகியிருந்தது. தலையை அலங்கரித்த கிரீடத்தில் முத்தும் வைரமும் மின்னிக்கொண்டிருந்த்ன.

முன்னால் சென்ற பிரதானி மார்பை மடித்து -கைகூப்பி வணங்கி நிமிர்ந்தார். பிரதானியை பின்பற்றியவராய் பிமெண்ட்டாவும் வணங்கினார்.

– பாதரெ பிமெண்ட்டா உங்கள் வரவால் நானும், எனது தேசமும், எம்மக்களும் பெருமைபெற்றோம். கிருஷ்ணபுரத்தில் தாங்களும் தங்கள் நண்பர்களும் இருக்கும்வரை ராஜமரியாதை தரவேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

– மாட்சிமை மிக்க மன்னரின் தயவால் எங்கள் சேசுசபைக்கும் அதன் இறைப்பணிக்கும் கௌவுரவம் அளித்துள்ளீர்கள். எங்கள் மன்னருக்கு உரியவகையில் இந்தச் செய்தி போய்ச்சேரும். அவரும் உரிய வகையில் நடந்துகொள்வார். உங்கள் மேலான இராச்சியத்தில் எங்கள் திருப்பணிக்குப் பெருமை சேர்க்க தேவாலயமொன்றைகட்டிக்கொள்ளவும், அத்தேவாலய ப் பொறுப்பை ஏற்கும் பங்குத்தந்தையின் குடியிருப்புக்கும் ஏற்பாடு செய்வீர்களானால், உங்கள் உதவியை என்றென்றும் மறக்க மாட்டோம்.

– நல்ல சுபசகுணத்தில்தான் எங்களிடம் விண்ணப்பித்திருக்கிறீர்கள். தெற்கே அருங்கூர் அருகே கிருஷ்ணபட்டணம் என்ற புதிய நகரமொன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கு குடிவரும் மக்களுக்கு விவசாயத்திற்கான நிலமும், குடியிருப்புக்கான மனையும் வழங்கிவருகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் தேவாலயத்தையும், பங்குச் சாமியார்இல்லதையும் அங்கே கூடக் கட்டிக்கொள்ளலாம்.

– பரம பிதாவுக்குத் தோத்திரம். இப்படியொரு மகிச்சியான செய்தியை இவ்வளவு விரைவாக கேட்கவேண்டிவருமென நாங்கள் நினைத்ததில்லை. .

– பிரதானி!

பிரதானி, அவரது இருக்கையிலிருந்து எழுந்து வணங்கினார்.

– சொல்லுங்கள் பிரபு!

– விருந்தினர்களுக்குப் பரிசாக வேண்டிய அளவிற்கு பட்டு பீதாம்பர்ங்களை அளியுங்கள். அரசாங்க பொக்கிஷத்திலிருந்து தேவாலயத்திற்கு நமது பங்களிப்பாக 200 பொற்காசுகள் வழங்கவும் ஏற்பாடுசெய்யுங்கள்.

– எங்கே நமது கொள்ளிடச் சோழகனார் திருக்குமாரன்.

– இதோ இங்கிருக்கிறேன் பிரபு.! வேங்கடவன் எழுந்து நின்று வனங்கினான். அவனருகே ஓர் இளம்பெண் நிற்பதைப்பார்க்க அவையிலிருந்த பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

(தொடரும்)

Series Navigationபழமொழிகளில் ‘வழி’பதின்பருவம் உறைந்த இடம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *