மிதிலாவிலாஸ்-28

This entry is part 4 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

மிதிலாவிலாஸ்-28
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

இரவு ஆகி விட்டது. அன்னம்மா கிழவி கொசுவை, எறும்பை வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு தூங்கி விட்டாள். மைதிலியின் மனம் வேறு எங்கேயோ இருந்தது.
சித்தார்த்தா அருகில் வந்தான். “மம்மி!” என்று அழைத்தான். மைதிலி தலையைத் திருப்பிப் பார்த்தாள்.
அவன் முழங்காலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த காகிதத்தை அவளிடம் காண்பித்தான். “இன்றுடன் நம் பணக் கஷ்டம் தீர்ந்து விட்டது. ரோஷான்லாலுடன் ஒப்பந்தம் ஆகிவிட்டது. சம்பளமும் அதிகம். நான் வேறு யாரிடமும் வேலை பார்க்கக்கூடாது” என்றான்.
மைதிலி நிமிர்ந்து உட்கார்ந்தாள். “ஒப்பந்தம் முடிந்து விட்டதா? எப்போ?”
“இன்றுதான். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த போது அவர்கள் வந்திருந்தார்கள். இதோ அட்வான்ஸ்.” சந்தோஷமாக பணத்தை அவள் கையில் கொடுத்தான். “நான் சீக்கிரமாகவே வேறு நல்ல வீடு பார்க்கிறேன் அம்மா.”
மைதிலி பணத்தை பக்கத்தில் போட்டு விட்டாள். பேப்பர்களை தள்ளிவிட்டாள். அவை கீழே விழுந்தன. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன ஆச்சு மம்மி?”
“ரோஷன்லாலுடன் நீ செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து பண்ணிவிடு. என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எதற்கு ஒப்புக் கொண்டாய். எனக்கு எந்த வசதிகளும் வேண்டாம். நாளை காலையில் போய் அவரிடம் கொடுத்து அதை ரத்து பண்ணிவிடு.” அந்த காகிதங்கள் பாம்புகள் போல் காட்சியளித்தன மைதிலிக்கு.
சித்தார்த்தா திகைத்துப் போனான். “எதற்காக மம்மி?” வியப்புடன் கேட்டான்.
“ரோஷன்லால் அபிஜித்தின் எதிரி. அவனிடம் நீ வேலை செய்தால் அபிஜித்துக்கு மேலும் அவமானம். ஏற்கனவே நான் அவருக்கு வேதனை கொடுத்திருக்கிறேன். மேலும் அவமானம் நேருவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.” எழுந்து நின்று திடமான குரலில் சொன்னாள் மைதிலி.
சித்தார்த்தா விரிந்த கண்களுடன் நிமிர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“சித்தூ! உனக்கு வருத்தமாக இருந்தாலும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். நாம் எங்கே இருந்தாலும் அபிஜித் மரியாதைக்கு இழுக்கு நேரும்படியாக நடந்து கொள்ளக் கூடாது. ஏற்கனவே அவர் நம்மால் அனுபத்துக் கொண்டிருக்கும் நரகம் போதும்.”
சித்தூவின் முகம் வெளிறிப் போய் விட்டது. குனிந்து பேப்பர்களை எடுத்துக் கொண்டான். அவற்றை சின்னச்சின்ன துண்டுகளாக கிழித்து கீழே போட்டான். “சித்தூ!” அவன் தோளில் கையைப் பதித்தாள்.
சித்தூ அவள் கையை நீக்கிவிட்டு எழுந்து நின்றான்.
“உனக்கு வேதனை ஏற்பட்டாலும் இதைத் தவிர்க்க முடியாதடா கண்ணா!” என்றாள்..
“எனக்கு வருத்தம் இல்லை மம்மி” என்றான். அவன் குரல் தாழ்ந்த நிலையில் இருந்தது.
“உனக்கு வேதனையாக இருந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியாது.”
“புரிந்து விட்டது. நான் எந்த வேலை செய்தாலும் அவர்ப் பற்றி யோசிக்க வேண்டும் இல்லையா?”
“ஆமாம்.”
அவன் நிமிர்ந்து நின்றான்.
“சித்தூ!” ஏதோ சொல்லப் போனாள்.
அவன் கையால் தடுத்துவிட்டான். “உன் விருப்பத்தின் படியே நடக்கும் மம்மி. இதுநாள் வரையில் எனக்குத் தெரியவில்லை.” அவன் போய் விட்டான்.
மைதிலி ஒரு நிமிடம் சலனமின்றி அப்படியே நின்றுவிட்டாள். சற்று நேரம் கழித்து சித்தார்த்தா என்ன செய்கிறான் என்று போய் பார்த்தாள். ரொம்ப சிரத்தையுடன் போட்ட டிசைன்களை எல்லாம் அவன் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தான்.
“சித்தூ!” அருகில் சென்று தடுக்கப் போனாள்.
“என்னைத் தடுக்காதே மம்மி!”
“சித்தூ!” தவிப்புடன் அழைத்தாள்.
அவன் பொருட்படுத்தவில்லை. பதில் சொல்லவில்லை. அவனைச் சுற்றிலும் மௌனம் திரும்பவும் அடர்த்தியாக படர்ந்து விட்டது.
*****
கடியாரத்தில் இரவு பத்து மணியாகி விட்டது.
காலிங்பெல் ஒலித்தது. ஹாலில் உட்கார்ந்து பைலை பார்த்துக் கொண்டிருந்த அபிஜித் போய் கதவைத் திறந்தான். இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?
வாசலில் எதிரே சோனாலி!
“நீயா?” என்றான்.
“ஆமாம் சார்! எங்க உறவினர் வீட்டில் விழாவுக்கு போயிருந்தேன். வீட்டுக்கு திரும்பும் வழியில் வந்தேன்.”
அவன் வழி விடவில்லை. உள்ளே வரச் சொல்லி அழைக்கவும் இல்லை.
“கதவை நீங்களே திறந்தீங்க. வேலைக்காரர்கள் என்னவானார்கள்?”
“இல்லை. லீவில் போய் விட்டார்கள்.”
“எல்லோரும் ஒரே சமயத்திலா? வீடு எப்படி நடக்கும்? நான் உள்ளே வரலாம் இல்லையா?”
வேறு வழி இல்லாமல் வழியை விட்டான். இருவரும் உள்ளே வந்தார்கள். நிசப்தமாய் இருந்த வீட்டை சோனாலி கண்ணால் சுழற்றிப் பார்த்தாள்.
“மேடம் மைதிலியை பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. ஒரு முறை பார்த்துவிட்டு போகலாம் என்று…”
அவனுக்குப் புரிந்து விட்டது. “மைதிலி வீட்டில் இல்லை” என்றான்.
“எங்கே போயிருக்கிறாள் சார்?” தெரியாதது போலவே கேட்டாள்.
அவனுக்கு அதுவும் புரிந்தது. போய் பைலை மூடிவிட்டான். சோனாலி வந்து எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
அவன் பெருமூச்சை அடக்கிக்கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
“உடம்புக்கு சுகம் இல்லையா சார்?”
“நன்றாகத்தான் இருக்கு.”
“இளைத்து விட்டீங்க.” அவன் முகம் சீரியஸ் ஆக இருந்ததைப் பார்த்து நின்றுவிட்டாள்.
அவன் எதுவும் பேசவில்லை.
“ஒரு விஷயம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன் சர்.”
அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“என் மாடலிங் காண்ட்ராக்டை பாதியில் எதற்காக கேன்சல் செய்தீங்க?”
“அந்த ப்ராஜெக்டை கைவிட்டு விட்டதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தோமே?”
“எழுதி இருந்தீங்க. பணமும் முழுவதுமாக அனுப்பி இருந்தீங்க. ஆனால் காரணம் என்ன?”
அவன் பதில் பேசவில்லை.
சோனாலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மௌனம், கம்பீரம் கொஞ்சமும் குறையவில்லை.
“குடிக்க தண்ணீர் வேண்டும் சர்.”
“அங்கே இருக்கு.” தொலைவில் டைனிங் டேபிள் மீது இருந்த ஜக்கை காண்பித்தான்.
சொனால் எழுந்துபோனாள். நிதானமாக தண்ணியைக் குடித்தாள். திரும்பவும் வந்தவள் அவன் சோபாவுக்கு பின்னால் நின்று கொண்டாள்.
“இது உண்மைதானா? மேடம் சித்தார்த்தாவுடன் சிறிய வீட்டில் தங்கியிருப்பது…”
“ஆமாம்.”
“நீங்கள் தடுக்கவில்லையா? இப்படி கேட்கிறேன் என்றும், அதிகப் பிரசங்கம் செய்கிறேன் என்றும் என்மீது கோபித்துக் கொள்ளாதீங்க. அளவுக்கு மீறிய உரிமையை எடுத்துக் கொள்வதாக நினைக்காதீங்க. இத்தனை நாளும் உங்கள் பக்கத்தில் அவளைப் பார்த்து அவள் அதிர்ஷ்டத்தை நினைத்து பொறாமைப் பட்டேன். அவள் இல்லாமல் நீங்கள் இல்லை என்று நினைத்தேன்.”
“……………..”
“அவள் அவனுடன் போனது விசித்திரம் என்றால், நீங்கள் சும்மா இருப்பது அதைவிட விசித்திரம். நீங்க நினைத்தால் அவளை வீட்டுக்கு அழைத்து வர முடியாதா?”
“………………..”
“உங்களிடம் எனக்கு மதிப்பு அதிகம். விருப்பம் கூட. அந்த அபிமானத்தில் தான் இந்த கேள்வியைக் கேட்கும் சாகசம் செய்கிறேன். அவளை நீங்க வீட்டுக்கு ஏன் அழைத்து வரவில்லை? இப்படி வேதனையை அனுபவித்துக் கொண்டு இந்த அவதூறு பேச்சுக்களை எதற்காக தாங்கிக் கொள்ளணும்?”
“அது என் பர்சனல் விஷயம்.”
“நானும் அதைத்தான் நினைத்தேன். இரு மனமும் இணைந்தால் இணைந்து இருப்பீங்க. மனம் முறிந்து போனால் விலகிப் போய் விடுவீங்க. அப்படித்தானே.”
அவன் பதில் சொல்லவில்லை. ஒரு நிமிடம் நிசப்தம். சோனாலி அவன் தலை மீது கையைப் பதித்தாள். அந்தத் தொடுகையை பொறுமையின்று சகித்துக் கொள்வதாக அவன் முகம் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
“காண்ட்ராக்ட் கேன்சல் ஆனதற்கு வருத்தப் படவில்லை. வேறு ஒன்றை என்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும். என் அழகின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தொழில்ரீதியாக உங்களுக்கு அருகில் இருக்க முடியும் என்று ஆசைப்பட்டேன். உங்கள் மனைவி இருக்கும் வரையில் அதுதான் என் எல்லை என்று நினைத்துக் கொண்டேன். அவள் உங்களை விட்டுவிட்டு போய் விட்டாள் என்றால்…”
அபிஜித் சோனாலியின் கையைப் பற்றி அவளை தனக்கு எதிரே கொண்டு வந்தான்.
“ஐ லவ் யூ! ஐ லவ் யூ சர்!” எப்படியோ சொல்லிவிட்டாள்.
“சோனாலி!” அவன் குரல் மிருதுவாக நெருக்கமாக இருந்தது. “என் மனைவி எப்போதும் என்னை விட்டுப் போகவில்லை. நாங்கள் இருவரும் தனித் தனியாக தொலைவில் இருந்தாலும் இருவரும் ஒன்றுதான். என் மனைவியிடம் எனக்குக் கிடைத்த அன்பை, சந்தோஷத்தை இன்னொரு பெண்ணிடம் நான் ஒருபோதும் தேட மாட்டேன். உன் அழகைப் பற்றி எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. நன்றாக படித்திருக்கிறாய். உனக்கு சரியான ஜோடியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் இவை மேலும் சிறப்படையும் நீ என்னுடைய சொந்த விஷயத்தைக் கேட்டதற்கு நான் தவறாக நினைக்கவில்லை. என்னைக் கண்டால் உனக்கு பிடிக்கும் என்று எனக்கு மட்டுமே இல்லை, மைதிலிக்கும் தெரியும். சோனாலி! மனைவியின் மீது கோபத்தினாலோ, பிரிவினாலோ ஆண் உணர்ச்சிப் பூர்வமான கொந்தளிப்பில் இன்னொரு பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வான். அவனுடைய தனிமையை, இழப்பை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண் கட்டாயம் தோல்வியை அடைவாள். என் மனைவியின் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. எங்களுக்கு இடையே எந்த பிரிவும் இல்லை. இப்போ சொல்லு. டூ யூ லவ் மி?”
சோனாலியின் பார்வை தரையில் பதிந்தது. இல்லை என்பது போல் தலையை அசைத்தாள்.
அபிஜித் புன்முறுவல் பூத்தான். “தடீஸ் சோனாலி! ஐ லைக் ஹர்!”
சோனாலி நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் நட்பு கலந்த முறுவல்.
“ஐ யாம் சாரி சர்.”
“சில சமயம் தெரியாமல் தவறு செய்து விடுவோம். அது இயல்பு. ஆர் யூ ஓ.கே.?” என்றான்.
“ஓ.கே. தாங்க்யூ!”
“காபி குடிக்கிறாயா?”
“வேண்டாம் சார். கிளம்புகிறேன்.”
அபிஜித் அவளை கார் வரையிலும் கொண்டு விட்டான். சோனாலி கிளம்பிவிட்டாள். அபிஜித்துக்கு இதயத்திலிருந்து பாரம் நீங்கியது போல் இருந்தது. அவன் திரும்பவும் வீட்டுக்குள் வந்தான். பைலை பார்த்துக் கொண்டிருந்த மும்மரத்தில் கதவைத் தாழ்போட வில்லை. இப்போ கதவை பூட்டப் போன போது கணகணவென்று போன் மணி ஒலித்தது.
மணியைப் பார்த்தான். ஒரு மணி நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் யார் பண்ணுவார்கள்?
போன் நின்று திரும்பவும் டயல் செய்தது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் போய் எடுத்தான்.
“ஹலோ!” மறுமுனையிலிருந்து குரல் பதற்றமாய் ஒலித்தது.
“மைதிலி!”
“அபீ! நான்தான். சித்தூ பூச்சி மருந்து குடித்துவிட்டான்.”
“மைகாட்!”
“நீ சீக்கிரமாய் வா! வாந்தி செய்து கொண்டிருக்கிறான். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சித்தூவுக்கு ஏதாவது ஆனால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்.”
“நீ போனை வைத்துவிடு. உடனே சித்தூவிடம் போ. அவனை கவனி.”
“நீ இங்கே உடனே வருகிறாயா?”
“நீ முதலில் சித்தூவிடம் போ.”
“என்மீது கோபம் எதுவும் இல்லையா?”
“மைதிலி கண்ணு! நேரத்தை வீணாக்காதே. நான் அம்புலென்சுக்கு போன் பண்ணணும். நீ முதலில் போனை வைத்துவிடு.”
மைதிலி போனை வைத்து விட்டாள்.
அவன் உடனே நர்சிங் ஹோமுக்கு போன் செய்தான். நிமிடத்தில் எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன. அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அம்புலென்ஸ் வந்து சேரும்போது அபிஜித் நர்சிங் ஹோமில் இருந்தான். சித்தார்த்தாவை ஸ்ட்ரெச்சரில் அழைத்துப் போகும் போது மைதிலி அதைவிட வேகமாக முன்னால் ஓடினாள். அங்கே நின்று கொண்டிருந்த அபிஜித்தை அவள் கவனிக்கவில்லை. அபிஜித் டாக்டர் அறைக்குள் நகர்ந்து கொண்டான். அழுது கொண்டிருந்த மைதிலியை சிஸ்டர் சமாதானப் படுத்தினாள்.
ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் அபிஜித்திடம் வந்து சொன்னார்.
“ஹி ஈஸ் அவுடாப் டேஞ்சர். மைகாட்! சமயத்தில் அழைத்து வந்து விட்டீங்க என்பதால் காப்பாற்ற முடிந்தது. இல்லா விட்டால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். இந்தக் கால குழந்தைகளை என்னவென்று சொல்வது?” என்றார்.
அபிஜித் வீட்டுக்கு வந்து விட்டான். அவனுக்கு மைதிலியிடம் போக வேண்டும் என்று எந்த அளவுக்குத் தோன்றியதோ, வேண்டாமென்ற நினைப்பு இருமடங்காக இருந்தது.

Series Navigationதொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *