மொழிப்பயன்

Spread the love

துஷ்யந்தன் அணிவித்துப் பின் மறந்துபோன மோதிரத்தை சகுந்தலை
காலந்தோறும் தேடிக்கொண்டேயிருக்கிறாள்
வேறு வேறு வழிகளில் வேறு வேறு வடிவங்களில்.
ஒருவேளை மோதிரம் கிடைத்தாலும் அப்படியே இருக்குமா
அல்லது ஆங்காங்கே நசுங்கியிருக்குமா
என்று அலைக்கழிந்துகொண்டிருக்கும் மனது.
அவளுடைய கானகத்தில் மரங்கள் 
பூத்துக்குலுங்குகின்றன; இலையுதிர்க்கின்றன
அவற்றின் கிளைகளில் அணில்களும் காகங்களும் குயில்களும் இன்னும்
பல பெயரறியா புள்ளினங்களும் அமர்ந்து இளைப்பாறுகின்றன.
அவ்வப்போது சில வழிப்போக்கர்கள் அதன் நிழலில் இளைப்பாறிச் செல்கிறார்கள்
ஒருநாள் பட்டுப்போகலாம் தரு.
எனில் நினைவிலென்றும் உயிர்த்திருக்கும்
அதன் இலைகளின் பச்சையம்.

*** *** ***

செத்த மொழி என்று காறித்துப்பிவிட்டுச் செல்கிறார்கள்.
முத்தனைய கதை கவிதை நாடகம் பிறக்க வழிசெய்தேனன்றி
குத்தமென்ன செய்தேன் நான்
என்று எத்தனை யோசித்தும் ஏதும் புலப்படாமல்
நித்திரைகொள்ளாமல்
சோர்ந்து தனித்திருக்குமொரு மொழியைத் 
தலைவருடிக் கொடுத்திருக்கும் 
ஒன்றுக்கொன்று கொண்டு கொடுத்து
உயிர்த்திருக்கும் சக மொழிகள்.

*** *** ***

ஒரு கட்டத்தில்
கத்துங்கடலருகே அத்தனை பிரம்மாண்டமாய்
பத்திரப்படுத்தியிருக்கும்
தத்தம் தலைவர்களின் 
நினைவுமண்டபங்களை நோக்கி
சுடுநெருப்பாய்க் கொதிக்கும் உச்சிப்பொழுதில்
பொடிநடையாய் நடக்கவும் சித்தமாயிருப்பவர்கள்
செத்தமொழி செத்தமொழி என்றும் 
கத்தி மதிப்பழிக்கக் கண்டு அலைக்கழிந்து நிலைகுலைந்து
தனக்குள் முனகிக்கொள்ளும்

பலன் எதிர்பாராது நமக்கு அள்ளித்தந்திருக்கும்

எந்தவொரு மொழியும்:
‘பெத்த மனம் பித்து’.

*** *** ***

முழுநிறைவானதொரு நூலகம் எரிந்துபோன பிறகும் 
மொழிவாழ்ந்திருக்கு மவர் உயிரணுக்களில்.
பலநேரங்களில் காலமொரு கனன்றெரிந்த நூலகமாய்.
எனில் உயிர்த்திருப்போர் மனங்களிலெல்லாம் உண்டு
கல்லறைவாசிகளுக்கான ‘compact’ குடியிருப்புகள்.
’இறந்தவர்கள் இருக்கும்வரையே இருப்பவர்கள் 
இறக்காமலிருக்கமுடியும்’
_ இஃது வாழ்வின் எளிய சூத்திரம்.
ஒரு மொழியின் வாழ்நாள் 
மனிதக்கை யளவுகோலால்
அளக்கவியலாதவைகளின் திரளாய்…

  • .

Series Navigationபூ !வண்ணைசிவா கவிதைகள்