மோடியின் சதுரங்க ஆட்டம்

 

சிறகு இரவிச்சந்திரன்.

 

நரேந்திர மோடியின் ஒரு செயல், சில நாட்களுக்கு முன் பரம வைரிகளாக இருந்தவர்களைக் கூட, ஒன்று சேர்த்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். விசயம் ஒன்றுமில்லை. அவரது பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டின் அதிபர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆசியாவில் பெரிய நாட்டின் இளம் பிரதமர் (!) மோடி எடுத்த ராஜதந்திர முடிவு இது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்:. அண்டை நாடுகளுடன்  எந்நேரமும் பகைமை பாராட்டாமல், சுமுகமான உறவை வைத்துக் கொள்வது ஒரு சீரிய நிர்வாகத் திறன் என்று அவர்கள் கருத்து சொல்கிறார்கள். தமிழர் என்கிற் உணர்வைத் தாண்டி, ஒரு இந்தியன் என்கிற உணர்வோடு பார்த்தால், இது கொஞ்சம் சரியாகத்தான் தோன்றும்.

ஆனால் தமிழக அரசியல் என்றும் பரந்துபட்ட இந்திய அரசியலோ, அல்லது தொலைநோக்கு பார்வை கொண்ட உலக அரசியலோ அல்ல. இங்கே நடப்பதெல்லாம் செய்தித்தாள் அரசியல் தான். இன்றைய பரபரப்புக்கு மட்டுமே இங்கு முக்கிய இடம். நாளை நிலையில்லாதது என்கிற தத்துவத்தில் அபார நம்பிக்கை கொண்டவர்களே தமிழக அரசியல் தலைவர்கள்.

நியாயமாகப் பார்த்தால், இந்தியாவின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக, தன் நாட்டிலேயே தீவிரவாதிகளுக்கு புகலிடமும் பயிற்சியும் கொடுத்து வரும் பாகிஸ்தான் அரசின் அதிபரை அழைத்ததற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் இங்குள்ள கட்சிகள். ஆனால் தமிழகத்தை எப்போதும் தனிநாடாகவே பாவித்து கோலோச்சிக் கொண்டிருக்கும் கோமகன்கள், இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இன்னொரு பக்கம், தன் வரைபடத்தில், இந்திய பகுதிகளை சேர்த்து, புதிய கண்டமாக காட்டி சீண்டி வரும் சீன அதிபருக்கும் கண்டனம் இல்லை. அப்படியே கண்டனம் தெரிவித்து, குறுஞ்செய்தி அனுப்பினாலும், அதை சீன தயாரிப்பு அலைபேசியில் இருந்து தான் அனுப்ப வேண்டும். அந்த அளவிற்கு சீனப் பொருட்கள் இங்கே குவிந்து கிடக்கின்றன.

ஆனால் ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சி, இன்று, மத்திய அரசில் பங்கேற்று, பதவிகள் பெற்று, அதன் பிரதிநிதிகள் இந்திக்குப் பெயர்ந்ததை ஜீரணிக்க முடியாமல், எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற நிலையில் கையில் எடுத்த்துதான் இலங்கைத் தமிழர் பிரச்சினை. ராஜீவ் பிரதமராக இருந்த போது, அமைதி காக்க அனுப்பப்பபட்ட இந்திய ராணுவத்தின் அத்து மீறல்களை இன்னமும் நியாய உணர்வுள்ள இந்தியக் குடிமகன் மறக்க மாட்டான். அப்போது அதைக் கண்டிக்காமல், பதவி அரசியல் நடத்திக் கொண்டிருந்தவர்கள், இந்திய அரசு, விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்த உடன், வேறு வழியில்லாமல் வாய் மூடி மௌனியானார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, ரகசிய பயணம் மேற்கொண்ட வைகோவை, கட்சியை விட்டு விலக்கினார்கள்.

இப்போது தமிழர் நலன் என்று ஒரு ஆயுதத்தை கையிலெடுத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும், முன்னேற்ற கழகம், எப்போதும் தன் முன்னேற்றத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை, சிந்திக்கும் தமிழன் ஒவ்வொருவனும் அறிவான். நடந்த தேர்தலில், மரண அடி வாங்கி ஊசலாடிக் கொண்டிருக்கும் கழகம், உள் கட்சி / குடும்ப்ப் பூசல்களை, மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்க, எதையாவது பற்றிக் கொள்ள அல்லாடிய போது கிடைத்தது தான் இலங்கை அதிபருக்கு மோடி விடுத்த அழைப்பு.

இலங்கை தமிழர் விசயத்தில் ஒரு சூப்பர் காயை நகர்த்திய செல்வி, இலங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையுடன் உள்ள வர்த்தக செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானமே போட்டு, தனக்கு கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் கொண்டார். ஆனாலும் பிற நாடுகளான பிரான்சு, கனடா, இங்கிலாந்து போல, இன்னும் இந்தியாவில், இலங்கையிலிருந்து அகதிகளாக ஓடிவரும் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை, அனுமதி பெறாத குடியேறிகளாக பாவித்து, கைது செய்து, சிறையில் அடைக்கும் நியதியே இங்கு உள்ளது.

திருட்டைப் பற்றி தகவல் தெரிவிப்பவரையே, முதல் குற்றவாளியாக சந்தேகிக்கும் போலீஸ் மனப்பான்மையே இன்னும் இங்கு ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது. இலங்கைக்கு சற்றும் குறையாத நிலையில் தான், தமிழகத்தின் அகதி முகாம்களும் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களை விட, திகார் சிறைச்சாலையே மேல் என்று முடிவு கொண்டு, இலங்கைத் தமிழர்கள் குற்ற  செயல்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வீராவேசமாக தமிழர் நலன் பேசும், தமிழக அரசியல் ‘தல’கள், இந்த முகாம்களை எட்டிக் கூட பார்ப்பதில்லை. அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை. தஞ்சம் என்று வந்தவர்களை, தவிக்க விடுபவர்களுக்கு, இலங்கை தமிழர்களைப் பற்றி  பேச என்ன அருகதை இருக்கிறது? எப்படியாவது தமிழர்களுக்கு தனி நாடு வாங்கி, இங்குள்ள இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்பும் நாளையே, அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுரிமை இல்லாத அகதிகளுக்காக குரல் கொடுப்பதில் நமக்கு என்ன லாபம் என்பதே இந்த அரசியல் வியாபாரிகளின் சிந்தனை.

இதற்கு நடுவில் தான் மோடி, தமது பிரதமர் ஆகும் தருணத்தை, அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு பாலமாக மாற்ற எண்ணி, அழைப்பு விடுத்திருக்கிறார். அதை காங்கிரஸ் கட்சியும் வரவேற்று இருக்கிறது. தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.கவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் சொல்லியிருக்கிறார்.

தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வின் வை.கோ., மோடி தன் அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார். அவர் அப்படித்தான் சொல்வார். தி.மு.க.வின்  தலைவர் கண்டனம் தெரிவித்ததோடு விட்டு விட்டார். “ அந்த பொம்மை தரலேன்னா விளையாட்டுக்கு வரமாட்டேன் “ என்று அடம், பிடிக்கிறது செல்விக் குழந்தை. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லையாம் அம்மா. மோடிக்கு இந்த செல்ல சிணுங்கல்கள் எல்லாம் புதிதாக இருக்கும். அவர் பார்த்த அரசியல் வேறு. கொஞ்ச காலம் ஆகும் அவருக்கு இந்த அழிச்சாட்டியங்களை எல்லாம் புரிந்து கொள்ள.

மோடியின் பதவி ஏற்பு விழாவில் ராஜபக் ஷேவும் சீன அதிபரும், பங்கேற்றால் என்ன ஆதாயம்? தனிப்பெரும்பான்மையுடன் ஒரு பிரதமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார் என்பதை அவர்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள். மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் இருந்த போது தாங்கள் செய்த சர்வதேச அரசியல் சித்து வேலைகள் இப்போது செல்லாது என்பதை உறுதியாக உணர்ந்து உஷாராவார்கள். கொஞ்சம் வாலை சுருட்டி வைத்துக் கொள்வார்கள்.

எல்லைகளின் அருகில் இருக்கும் நாடுகளுடன் சுமூக உறவு என்பது, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். தொழில் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் இருக்கும் அவநம்பிக்கை களையப்படும். அந்நிய செலாவணி அதிகரிக்கும். இந்திய ரூபாய் பலமாகும். அமெரிக்க டாலர் விலை குறையும்>
இந்த சமயத்தில் கச்சத்தீவை மீட்போம் என்கிற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு வேளை மோடியின் தலைமையில், அதுவும் நடந்து விட்டால், அதை பேசாமல் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடாகக் கொடுத்து விடலாம். தனி நாடு கிடைத்த உடன் தமிழர்கள் எப்படி மாறிப் போவார்கள் என்பது பார்க்க வேடிக்கையாக இருக்கும் என்பது என் எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.

0

Series Navigation