யாராவது கதை சொல்லுங்களேன் !

சோம.அழகு

 

இப்படிக் கேட்காமல் எந்தவொரு பிள்ளையும் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்திருக்காது. அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா என அனைவரிடமும் கேட்டிருப்போம். அம்புலி மாமா, பஞ்சதந்திரக் கதைகள் எனக் கேட்டு ஓய்ந்த நேரத்தில்….இல்லை ! இல்லை ! இதையெல்லாம் சொல்லிச் சொல்லி அவர்கள் ஓய்ந்த நேரத்தில் நமக்கு அவர்களின் பால்ய காலத்தைப் பற்றி அறிய ஆவல் எழும்.

சட்டென நிமிர்ந்து உட்கார்ந்து அவர்கள் தங்கள் இளமைக் காலத்துக்கே சென்று, நேற்று அல்லது அதற்கு முன்தினம் நடந்ததை விவரிப்பது போன்று நேர்த்தியாக ரசித்து ரசித்து விவரிப்பார்கள்.

வெயில் சுள்ளென உறைக்கும் 3 மணியளவில் வாழைமட்டையில் எடுத்துச் சென்ற மூக்குப்பொடியை, நண்பர்களுடன் சென்று கோபாலசாமி கோயில் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தாத்தாக்களின் மூக்கில் தூவி விட்டு வருவதை அப்பா விவரிக்கையில் அந்த மண்டபத்தின் தூண் பின்னால் நானே மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கும்.

கோனார் தெருவில் மூக்காண்டி வாத்தியார் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தாராம். இரவு, காற்றுக்காக கட்டிலை வீட்டின் வெளியே போட்டு உறங்கிக் கொண்டிருந்த மனிதரைத் தன் நண்பர்கள் கட்டிலோடு தூக்கிச் சென்று அடுத்த தெருவில் விட்டு வந்த கதை ஒவ்வொரு முறையும் அவர்களது பால்ய காலக் கதைகளில் இடம்பெறும். இதைக் கேட்கையில், அந்த முகம் அறியா மனிதர் தூங்கி விழிக்கும் வரை அந்தச் சந்தின் முடிவில் ஒளிந்திருந்து, அவர் விழித்ததும் அந்தப் பேய் முழியை நேரில் காண்பதைப் போலவே சிரிப்பு வரும்.

பம்பரம், கோலி, கில்லி, மழைக்கால விளையாட்டாகிய கம்பிக்குத்து என வரிசையாக அப்பா நினைவுகூர்கையில் இதையெல்லாம் அறியாததற்காக ஒருபுறம் வெட்கமும் மறுபுறம் பொறாமையும் தலைதூக்கிற்று.

அக்காலத்திய ‘டெரர்’ தமிழாசிரியர் கிரகோரி, மிகவும் அமைதியான (பாவப்பட்ட) ஜீவனான பென்ஸ் வாத்தியார் (அவரது பழைய சைக்கிளால் வந்த பட்டப்பெயர்), அனைவரின் கேலிப்பொருளான நெய்க்குருவி சார் ( தலைமுறை தாண்டி வந்த பட்டப்பெயர் ஆதலால் பெயர்க்காரணம் என் அப்பா தலைமுறையினருக்குத் தெரியாது ) – எனது கற்பனை உலகில் இவர்களது வகுப்பறைக்குள் எல்லாம் அப்பா என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

மாலை பள்ளி முடிந்து வந்தவுடன் எனது பூட்டி ஆச்சி களி உருண்டையில் நடுவில் குழியிட்டு நல்லெண்ணை ஊற்றித் தருவதை அப்பா சொல்கையில், சாப்பாட்டில் அவ்வளவு பிரியம் இல்லாத எனக்கே எச்சில் ஊறும்.

அம்மா பெரும்பாலும் தன் தாத்தாவுடன் செலவிட்ட தருணங்களையே நினைவு கூறுவாள். தாத்தா தினமும் ஒரு இளநீர் அருந்துவாராம். நல்லசிவன் மாமா பெயருக்கேற்றாற் போல் மிகவும் நல்ல பிள்ளையாக முழு இளநீரையும் தம்ளரில் ஊற்றிக் கொடுத்து, அளவு குறைவாக இருப்பதாக தாத்தாவிடம் திட்டு வாங்க, பழனி மாமாவோ பாதி இளநீரைக் குடித்து விட்டு பாதிக்கும் மேல் தண்ணீர் ஊற்றிக் கொடுத்து ‘சபாஷ்’ வாங்குவார்களாம். போதாக்குறைக்கு தாத்தா பழனி மாமாவிடம், “ நீ எளநீ வெட்டுனாதாண்டே நெறைய வருது. நல்லசிவன் வெட்டுனா கொஞ்சந்தான் இருக்கு. பாதிய குடிச்சிட்டு தாரானோ ?” என்பார்களாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டிருக்கையில் பழனி மாமா, “ அவன் பெரிய தம்ளர்ல ஒரே தடவையா குடுத்து முடிச்சிருவான். நான் குடிச்சதுக்கு பதிலா ரெண்டு பங்கு தண்ணி ஊத்தி ஒரு சொம்புல வச்சு சின்ன தம்ளர்ல ஊத்திக் குடுப்பேன். திரும்ப திரும்ப ஊத்தும்போது தாத்தா நெறைய இருக்கறதா நினைச்சுட்டா……” என சிதம்பர ரகசியத்தை அம்பலப்படுத்த, நல்லசிவன் மாமாவோ “ அடப்பாவி ! துரோகி! ” என எங்கள் எல்லோருக்கும் கேட்கும்படியாகவே மனதில் திட்டிக்கொண்டிருந்தார்கள்.

மின்சாரம் இல்லாதது ஒரு குறையாகவே தெரியவில்லை என்று ஆச்சி தத்தா அந்தக் காலத்துக் கதைகளைச் சொல்லும் போது எனக்குத்தான் வியர்த்துக் கொட்டும். பேருந்து இல்லாமல், தொலைபேசி கூட இல்லாமல், முக்கியமாக ‘கூகுள்’ இல்லாமல் எப்படி ஜீவித்திருந்தார்கள் என்பது என் மனதைத் துளைத்தெடுக்கும் கேள்வி.

பல கதைகள் கேட்டவையாக இருந்தாலும் 84வது முறை கேட்கும்போது கூட முதன்முறை கேட்பது போலவே தோன்றும். எப்படித்தான் அலுக்கவே மாட்டேன் என்கிறதோ ? தெரியவில்லை. இப்படியாகப் பல கதைகளைக் கூறி, பிறகு வழக்கமாக எல்லோரும் ‘கவித்துவமாக’ சலித்துக்கொள்வது போல், “ம்ம்….! அதெல்லாம் ஒரு காலம்……..நல்லாத்தான் வாழ்ந்தோம்” என்பார்கள்.

தினமும் காலை எனக்கு இட்லியும் கதையும் ஊட்டுவது தாத்தாதான். கதைகளில் எனக்கென சில மாற்றங்களைச் செய்வார்கள் தாத்தா. நஞ்சு தோய்த்த கனியை உண்டு மயங்கிய ஸ்னோ வொயிட்டுக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்திய நான்தான் வேறொரு கதையில் திருடனைப் பிடித்து அரசனிடம் ஒப்படைத்தேன். தாத்தா ஆச்சியிடம் கதை கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ, என்னிடமும் என் தங்கையிடமும் சொல்வதற்குக் கதைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எங்கள் கற்பனையையும் கலந்து கட்டி அடிக்கும்போது பிரமாதமான ஃபேன்டசி கதைகளாக அவை உருவெடுத்துவிடும். என் தங்கையின் கதைகளில் பச்சை காக்காவும் பிங்க் யானையும் வருவதுதான் உச்சம். எங்களைப் போல் கொடுத்து வைத்தவர்கள் எத்தனை பேரோ?

அருமையான கதைசொல்லிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். அனைவரும் பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்கள். எனில், எனது தலைமுறையில் அப்படி யாரும் இல்லையா ? பிறகுதான் புலப்பட்டது. எனது தலைமுறையில் இருந்து பள்ளியே சுமையாகிவிட்டதால், கதை இருந்தால்தானே சொல்வார்கள் ? பிள்ளைகளை, பள்ளி ‘ஒழுக்கம்’ என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகாரத்தினால் கட்டிப்போடுகிறது. வீட்டில் டோரா புஜ்ஜியும் சோட்டா பீமும் கட்டிப்போடுகிறார்கள்……….பெற்றோரும் அதையே விரும்புகின்றனர்.

இப்படி வளரும் பிள்ளைகள் நாளை தங்கள் பிள்ளைகளுக்கு என்ன கதைகள் சொல்லுவார்கள் ? அவை எப்படிப்பட்டவையாக இருக்கும் ?

 

“ Candy crushல 48வது levelல 22வது move பத்தி criticalஆ think பண்ணிட்டு இருக்கும்போது உன் அத்தை வந்து tabஅ பிடுங்கிட்டுப் போயிட்டா…….இல்லனா அந்த levelல record create பண்ணியிருப்பேன்…..”

 

“ Temple Runல மூச்சிரைக்க ஓடிட்டு இருந்தேனா…..அந்த monsterஅ tackle பண்ண neatஆ plan வச்சிருந்தேன். Correctஆ என் அம்மா சாப்பிட வரச்சொல்லி phoneஅ வாங்கிட்டா………ப்ச்…..”

 

“ Subway Surfல எவ்வளவு Gold coins சம்பாதிச்சேன் (!?) தெரியுமா ? கடைசி life வேற…..பயங்கர tension…Track மாறும்போது திடீருன்னு trainல அடிபட்டு செத்துட்டேன்….( செத்துப் போயாடா கதை சொல்லிட்டு இருக்கே ?)” என்று 27வது முறையாக தான் உயிர்நீத்த(!) கதை ஓடிக்கொண்டிருக்கும்.

இக்கதைகளுக்குக் கொஞ்சமும் சளைத்தவை அல்ல, நிஜ உலகிற்கும் கற்பனை உலகிற்கும் வித்தியாசம் இல்லாமல் தெருத்தெருவாகச் சுற்ற வைக்கிற ‘Pokemon Go’ கதைகள் !

போகிற போக்கைப் பார்த்தால், சிறுவர் கதைகளுக்கென ஒரு துறையை உருவாக்கி அதையும் பாடமாக வைப்பார்களோ ?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ‘ பிள்ளைகள் எந்திரமாகி விட்டார்கள். வருங்காலத்தில் இவர்களை அடிமைகளாக்கி வேலை செய்ய வைக்கத் தேவைப்படும் அந்தக் குறைந்த அளவு கற்பனை வளமும் கருத்தாக்கமும் கதைகளை ஊற்றுவதன் மூலம் ஓரளவு சாத்தியப்படுமோ ? ’ என ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவன அரைவேக்காட்டிற்குத் தோன்றலாம். உடனே பள்ளிகளில் ‘STORIES’ period என ஒன்றை ஏற்படுத்தும் நிலை உருவாகி,          ‘M.A. கதைசொல்லி’ பட்டம் பெற்ற ஒருவர் கதை சொல்லிக்கொண்……இல்லை! வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பார்.

இந்தக் கற்பனைக்கே பீதியடைகிறது மனம். இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் உணர்கிறேன்……

“ நான்    ஆசீர்வதிக்கப்பட்டவள் ”.

 

 

-சோம.அழகு

Series Navigationகதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]கவி நுகர் பொழுது-கருதுகோள்