‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. குகைமனம்

கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன்.

சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும்

உள்ளே சற்றே அகன்றிருக்கும்

சில குகைகள் மலைகளில்

சில கடலாழங்களில்

சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா

நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில்

பதுங்கியிருந்த சேங்கள்ளனை

உடலெல்லாம் எண்ணெய் தடவி அவன் கையிலகப் படாமல்

சிறைப்பிடித்த தன் பாட்டனாரின் பெருமையை

இன்னும் அவ்வப்போது என் தாய் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

சில குகைகளுக்குள் சூரியக்கதிர்கள் உள்நுழையும்

சிலவற்றில் அனுமதி மறுக்கப்படும்.

உள் அப்பிய இருட்டில்

அடுத்த அடியில் அதலபாதாளம்போல்

அச்சம் நிறைந்ததில் அரைக்கணம் விக்கித்துநின்று பின்

ஆர்வம் அதைவிட நிறைக்க அடியடியாய் நகரும் கால்களில்

இடறாத பொருளெல்லாம் இடறும்போல்

படக்கூடும் நீண்டகைகள் பொக்கிஷப்பெட்டகம் மீது

ஐயோ காலைச்சுற்றுவது என்ன கந்தல் கயிறா? கருநாகமா?

காட்டுராஜாவின் உறுமலா அது? அல்லது நான் மூச்சுவிடும் ஓசையா?

இருளின் ஒளியில் எனக்குத் தெரியக்கூடும் இருபுறமுமான இறுகிய பாறைச்சுவர்களில் இல்லாத சித்திர எழுத்துகள்.

குகையின் மறு ஓரம் யாரேனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்களோ?

எத்தனை காலமாய்?

ஒருவேளை சற்றே எக்கினால் மேற்புறம் என் தலை தொடும் இடத்தில்

தேவதையொன்று எனக்காகத் தன் இறக்கைகளைக் கழற்றிவைத்திருக்கலாம்.

தேடிப்போகாமலேயே குகைகளுக்குள் புகுந்துபுறப்படும் வாழ்வில்

தேடித்தேடிச் சரண்புகும் குகைகளாய் கவிதைகள்.

  • அவரவர் உயரம்

உயரத்தில் உங்களை உட்கார்த்தத் தயார்

உங்களுக்குத்தான் அதற்கான உத்வேகம் இல்லை

யென்பவரிடம்

உயரம் என்றால் என்ன என்று கேட்க

உன்மத்தம்பிடித்தவரைப் பார்ப்பதுபோல்

அரையடி பின்வாங்கி

உற்றுப்பார்க்கிறார்.

பின் பயம் நீங்கி பரிகாசம் பொங்க

’உருப்பட்டாற்போல்தான்’ என்றுகூறி

படபடவென்று கைதட்டிக் கெக்கலிப்பவரைப் பார்த்து

ஒன்றும் புரியாமல் நிலம்படர்ந்தபடி

அத்தனை இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கின்றன

ஆகாயமும்

அந்திச் சூரியனும்.

  • போக்குவரத்து

ஆட்டோவில் விரையும்போதுதான்,

அதன் அதிரடி வளைவுகளின்போதுதான்

அதிகம் நினைக்கப்படுகிறார் கடவுள்.

ஆனாலும் அதன் அதிவேகத்தில்

வீதியோரத்தில் படுத்துக்கிடக்கும் அந்த

முன்னாள் மெக்கானிக் இந்நாள் பிச்சைக்காரர்

என் பார்வைக்குப் படாமல்போவது

எத்தனை பெரிய ஆறுதல்.

வண்டிகள் ஓடாத மாதங்களில்

அந்தப் பேருந்துநிறுத்த அமர்விடம்

மெலிந்தொடுங்கிய முதியவரொருவரின்

திண்டுமெத்தை திண்ணைவீடு தென்னந்தோப்பு….

இன்று….

தேட முற்படும் கண்கள் கையறுநிலையில்

திரும்பிக்கொள்கின்றன மறுபக்கம்.

நாளை மற்றுமொரு நாளுக்கும்

இன்று புதிதாய் பிறந்தோமுக்கும்

இடையில்

நடைப்பயணம் மனக்கால்களில்.

கடையிருந்தால் காசில்லை,

காசிருந்தால் கடையில்லை.

மடைதிறந்த வெள்ளத்திற்கும்

உடைப்பெடுத்த அணைநீருக்குமுள்ள

ஒற்றுமை வேற்றுமை என்னென்னவெனும்

கேள்வியின் அர்த்தனர்த்தங்கள்

விடைக்கப்பாலாக

அடைமழை வருவதற்கான அறிகுறியாய்

புறத்தே கருமை அப்பியிருக்க,

வெறுமை நிரம்பிய கூடத்திலிருக்கும்

இருக்கையொன்றில்

அருவமாய் அமர்ந்திருப்பவருக்கு

நான் எவ்வாறு வணக்கம் தெரிவிக்க?

Series Navigationலூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வைபயணம் மாறிப் போச்சு