வண்ணைசிவா கவிதைகள்
வண்ணைசிவா
1
தனிமையில் உறங்கும் சாத்தானை கடந்து சென்றான் தேவன்
சட்டென விழித்துக் கொண்ட சாத்தான்
இன்றிரவு துணைக்கு என்கூடவே படுத்துக் கொள் பயமாக இருக்கிறது என்றது
உனக்கா பயம்?
உன்னைப் பார்த்து தானே அனைவரும் பயப்படுகின்றனர்
என்ன புதுகதையாக இருக்கிறது என்றான்
பலர் என் வேலையை தட்டிப் பறித்து கொண்டனர்
அவர்கள் பலமாக நான் வலுயிழந்து விட்டேன்
பிறகு எப்படி அவர்களுக்கு அஞ்சாமல் நான் இருப்பது தேவனே
என்னோடு நீ உறங்கு.
மேலும் ஒரு
கோரிக்கை வைத்தது சாத்தான்
மனித சாத்தான்களிடம் இருந்து தன்னை காப்பாற்ற.
சாத்தான் தேவனாக மாறிக்
கொண்டே வருகிறான்
மனிதர் பலர் சாத்தானாக மாறிக் கொண்டே வருகிறார்கள்.
2
வனத்தை சுற்றிக் கொண்டிருந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி
வழி தவறி நகர வீதியில்
சுற்றி கொண்டிருக்கிறது
பலரின் கண்களை ஈர்க்கும் விதமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருக்கிறது
வண்ணங்கள் நிரந்தரம் இல்லை என்பதை உணராமல்
எங்கும் நிறத்தை
காட்டி மயக்கப் பார்க்கிறது.
வண்ணம் குழைந்த வாழ்க்கை
இனிமை தரும் என்ற தேன்தடவிய சொல்லை தூவி.
வீதிவீதியாக பறந்து செல்கிறது.
நச்சு விதையை விதைத்து.
பின்னூட்டங்கள்