வராலுக்கு வெண்ணெல்

 

வளவ. துரையன்

 

சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும்.  பாண்மகன் ஒருவன் வலைவீசி வரால் மீன்களைப் பிடிக்கிறான். அம்மீன்களை விற்று வரத் தன் இளையமகளிடம் கொடுத்து அனுப்புகிறான். அப்பெண் அம்மீன்களை ஓலைப்பெட்டியில் எடுத்துக் கொண்டு விற்கச் செல்கிறாள்.

 

தலைவி ஒருத்தி அந்த வரால் மீன்களை வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக ஓலைப்பெட்டி நிறைய வெண்ணெல்லைக் கொடுத்து அனுப்புகிறாள். நெல்லானது “யாண்டுகழி வெண்ணெல்” என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதாவது அந்நெல் ஓராண்டுக்கு முன் அறுவடையானதாகும் பழைய நெல்லைக் குத்தி அரிசியாக்கி உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் மீன்களுக்குப் பதிலாக நெல்லைக் கொடுக்கும் அளவுக்கு அந்த ஊர் வளமாக இருந்ததாக அறியப்படுகிறது. தவிர வலைவீசி மீன்பிடிப்போர்க்கு மீன்கள் அதிகம் உணவாகக் கிடைக்கும் ஆனால் நெல்லரிசி கிடைக்காது. அது போலவே உள்ளுரில் வசிப்போர்க்கு மீன்கள் கிடைப்பது அரிது. எனவேதான் அவர்கள் இருவரும் தங்களிடம் இருப்பதைக் கொடுத்து வேண்டியதைப் பெறுகிறார்கள்.

 

இஃது ஐங்குறுநூறு காட்டும் காட்சியாகும். தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர்பால் தங்கினான். அவர்கள் செய்த பற்குறி, நகக்குறி அவன் உடலில் தங்கி உள்ளன. இப்பொழுது அவன் மீண்டும் அவன் தலைவியிடம் வருகிறான். அப்பொழுது அக்குறிகளுடன் நீ இங்கு வரவேண்டாம் எனத் தலைவி உரைக்கிறாள். அவனை மறுத்தாலும் அவன் ஊரானது வெண்ணெல்லுக்கு மாற்றாக வரால் மீன்களைப் பெறும் வளமானது என்று அவன் ஊரைப் புகழ்ந்துதான் மொழிகிறாள். அவள் அடிமன ஆழம் தலைவனிடம் இருப்பது புரிகிறது. புலவிப்பத்து பகுதியின் எட்டாம் பாடல் இதுவாகும்.

 

            “வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்

            வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்

            யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!

            வேண்டேம் பெருமநின், பரத்தை

            ஆண்டுச்செய் குறியோடு ஈண்டுநீ வரலே.

 

இதேபோலப் பண்டமாற்றுமுறையை இன்னொரு பாடலும் காட்டுகிறது. இதில் வரும் ”பாண்மகள் முள்எயிற்றுப் பாண்மகள்” எனக் காட்டப்படுகிறாள். கூர்மையான பற்களை உடையவள் என்பது புரிகிறது. கெடிறு எனும் ஒருவகை மீன்களைக் அகன்ற வட்டிலில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு பெரும்பயறு வாங்கி வருகிறாள். அப்படிப்பட்ட வளமான ஊரைச் சேர்ந்த தலைவன் பரத்தையார்பால் சென்றவன் மீண்டு தலைவியைச் சேர வருகிறான்.

அப்பொழுது தலைவி கூறுகிறாள். ”பாணர் குடிப்பெண்  கெடிற்று மீன்களுக்குப் பதிலாக வட்டில் நிறைய பயற்றைப் பெறும் ஊரைச் சேர்ந்தவனே! நீ முன்பு சொல்லி அனுப்பிய பாணன் பொய் உரைப்பவன் என்பதை நானும் என் தோழியரும் அறிவோம்; ஆகவே நாங்கள் உங்கள் பொய்களுக்கு ஏமாற மாட்டோம்” புலவிப்பத்தின் ஏழாம் பாடல் இதுவாகும்

                                          

            ”முள்எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த

            அகன்பெரு வட்டி நிறைய, மனையோள்

            அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர!

            மாண்இழை ஆயம் அறியும்நின்,

            பாணன் போலப் பலபொய்த் தல்லே.”

 

தலைவியைப் பிரிந்து மீண்டு வரும் தலைவனைத் தோழி பார்க்கிறாள். தலைவி அவனையே நினைந்து இத்தனை நாள்கள் இருந்ததை அவனுக்கு உணர்த்த எண்ணுகிறாள். அதற்கு ஓர் உவமை கூறுகிறாள். அதாவது பொய்கையில் வளரும் ஆமையின் குஞ்சுகள் தம் தாயின் முகத்தை நோக்கி வளர்ந்து கொண்டே இருக்கும். அஃது இயல்பான இயற்கை உணர்வாகும். ”பிரிந்திருக்கும் காலத்தில் தலைவி உன் மார்பை நோக்கியே வாழ்ந்து கொண்டிருந்தாள். அதை நீ அறிய வேண்டும். எப்படித் தெரியுமா? நீர்நிலையில் இருக்கும் ஆமைக்குஞ்சுகள் தம் தாயின் முகத்தையே நோக்கிக் கொண்டு இருக்கும் அதேபோலத்தான் இவள் இருந்தாள்” என்று தலைவின் தோழி கூறுகிறாள்.  தோழியின் கூற்றாக புலவிப்பத்தில் வரும் நான்காம் பாடல் இது.

 

            ”தீம்பெரும் பொய்கை யாமைஇனம் பார்ப்புத்

            தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு

            அதுவே ஐயநின் மார்பு;

            அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே.”

 

இவ்வாறு ஐங்குறுநூறு தலைவனையும் தலைவியையும் காட்சிப்படுத்தும் போது  அக்கால நடைமுறைகளையும் இயற்கைக் காட்சிகளையும் காட்டுகிறது எனலாம்.

    

 

 

             

           

 

 

Series Navigationஉளைச்சல்பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)