வானத்தில் ஓர் போர்

ரோகிணி கனகராஜ்

இருட்டு நிசப்தத்தைப்
போர்த்திக் கொண்டு
சுருண்டு படுத்திருந்த
வேளையில்…
வானத்தில் ஓர்போர்
நடந்துக்கொண்டிருக்கிறது…
 
போர்வீரர்களென 
திரண்ட மேகங்கள்
ஆவேசக் காட்டெருமைகளென
முட்டிமோதிக்கொள்கின்றன…
இடியின் சத்தம் குதிரையின்
 குளம்பொலியென
கேட்டுக்கொண்டிருக்கிறது…
 
பளபளவென வாளெடுத்து
சுழன்றுசுழன்று வீசுகின்றன
மின்னல்கள்…
அரசியல்வாதிக்குப்
பயப்படும் அப்பாவி
மக்களென அஞ்சிநடுங்கி
விண்மீன்களும் நிலவும்
ஓடிஒளிந்து கொள்கின்றன…
 
வானமகள் கண்ணீர்விட்டு
அழுகிறாள் வீணாய்போன
இந்த யுத்தம் தேவையா என
விழித்துக்கொண்ட
ஊருடன் சேர்ந்து மெல்ல
விழித்துக்கொள்கிறது
அதுவரை சுருண்டுப்
படுத்திருந்த இரவும்…
Series Navigationதுயரம்கொரனாவின்பின்னான பயணம்