வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37

சீதாலட்சுமி

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

 

QUEST PROGRAMME

பன்னாட்டு அரிமா சங்கம் தோற்றுவித்த ஓர் திட்டம்

65 நாடுகளில் 31 மொழிகளில் இத்திட்டம் செயல்படுத்த பயிற்சித் திட்டமும் வரையப்பட்டது.

சிறுவர்கள், இளம் காளைகள் திறனை வளர்க்கவும் தவறான பாதைகளில் திரும்பி விடாமல் தடுக்கவும் தோன்றிய திட்டம்.

1 தன் பொறுப்பை உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்தல்

2 சொல்ல நினைப்பதைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொள்ளல்

3 இலக்கை உணர்ந்து அதனை நிர்ணயம் செய்து கொள்ளல்

4. ஆக்க பூர்வமான, ஆரோக்கியமான முடிவுகளை எடுக்கத் தெரிந்து கொள்ளல்

5. குடி, போதை போன்ற தீய பழக்கங்கள் நெருக்கும் பொழுதும் அதனை அண்டவிடாமல் உறுதியாக நிற்கப் பழகுதல்

 

அமெரிக்காவில் பல பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சிந்தித்து, விவாதித்து உருவான திட்டம். அமெரிக்க இளைஞர்கள்தான் முதலில் கோரிக்கை வைத்தனர். நடக்கும் செயல்களும் பத்திரிகை செய்திகளும் பார்த்து அமெரிக்க நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டற்ற சுதந்திர வாழ்க்கைக்கு அடிமைப்பட்டவர்கள் என்றுதான் தோன்றும்.

அமெரிக்காவில் என் மகன் 20 ஆண்டுகளாக வசிக்கின்றான். என் பேரனுக்கு 21 வயதாகின்றது. அவனுடன் படித்த, பழகிய அமெரிக்கச் சிறுவர்களிடம் நானும் பழகியிருக்கின்றேன். அந்தக் குடும்பங்களில் பலவற்றுடன் நான் பழகி இருக்கின்றேன். பல நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்களில் வயதானவர்களின் எண்ணங்கள் நம்மைப் போன்று பழமையில் இருப்பதைப் பார்த்திருக்கின்றேன். சிறிது சிறிதாக அவர்களின் வாழ்வியல் மாறியிருக்கின்றது. பக்கத்து நாடுகளிலிருந்து போதை மருந்துகள் எல்லை கடந்து உள்ளே வருகின்றன.

அடுத்து இன்னொரு பிரச்சனை. புலம் பெயர்ந்து வந்த காலத்தில் அடிமைகளாக பல ஆப்பிரிக்கர்களைக் கூட்டி வந்தனர்.  கறுப்பர்களை வெள்ளை நிறத்தோர் நடத்திய முறைகளால் அவர்களின் மனங்களைக் காயப்படுத்தியதுடன் பலவகை இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். வன்முறையின் வரலாறு எழுதப்பட்டால் இதனைக் குறிக்காமல் இருத்தல் முடியாது. அதே கறுப்பர்கள் இசையிலும், கலைகளிலும் முக்கியமாக விளையாட்டுக் களங்களிலும் அவர்கள் திறனைக் கண்டவுடன் முன்னிலையில் இருப்பவர்கள் பாராட்டப் பெற்றனர். மைக்கேல் ஜாக்சனை நாம் மறக்க முடியுமா? ஒரு சிலருக்குக் கிடைத்த புகழை வைத்து அந்த இனம் முழுமையும் சோதனைக் களத்திலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.

நாங்கள் அமெரிக்கா போன சமயத்தில் என் பேரன் 10 மாதக்குழந்தை. வளரவும் சிறுவர் பள்ளிக்கு அனுப்பும் பொழுது “அவன்  brown நிறத்தவன் பழகாதீர்கள்” என்று தங்கள் குழந்தைகளைத் தடுத்த தாய்மார்களை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். இப்பொழுது வெளி நாட்டார் அதிகம் வர ஆரம்பிக்கவும் அந்த முணுமுணுப்பு காணவில்லை.

முன்பு ஒரு முறை இந்த நாட்டில் ஹிப்பியிசம் இருந்தது. சூழ்நிலைகளால் மனம் வெறுத்தவர்கள் பொறுப்பு வேண்டாம் என்று ஒதுங்கி விருப்பம் போல் அலைய ஆரம்பித்தனர். இன்னொரு காரணமும் சொல்லப்படுகின்றது. வியட்னாம் போருக்கு இளைஞர்கள் அனுப்பப்பட்டதால் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் போகட்டும் என்று அலைய விட்டதாகவும் ஓர் செய்தி உண்டு. சுவாமி சச்சிதானந்த சுவாமிகள் இதனை மாற்ற முயற்சிகள் செய்து ஓரளவு வெற்றியும் அடைந்ததை ஏற்கனவே எழுதியிருகின்றேன். இப்படி சூறாவளிபோல் ஏதாவது சமுதாயத்தை தாக்கும் பொழுது சிறுவர்களும் இளம் காளைகளும் தடுமாறுகின்றனர். பெரியவர்களைக் கேட்டால் பிள்ளைகள் அனுபவப்பட்டு திருந்தட்டும் என்று சொல்கின்றதையும் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். எப்படியோ சிலர் சேர்ந்து தங்கள் வளமான, அமைதியான வாழ்விற்குப் பெரியவர்களை நாடினர். அந்த உணர்வே ஓரளவு மனத்தில் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் கொடுக்கின்றது.

எல்லோரும் மனிதர்கள் தானே. ஒதுக்கப்பட்டவர்களின் மனம் முரண்படுவது இயல்பானது. வன்முறை வளர்ந்தது. விளையாட்டுப் பொருள்போல் துப்பாக்கியும் கிடைக்கும். குழந்தைகள் வாங்க முடியாவிட்டாலும் வீட்டில் பெரியவர்கள் வாங்கி வைத்திருப்பதை எளிதாக எடுக்க முடியும். மிகச் சிறுவயதிலேயே செக்ஸ் பழக்கமும் பலருக்கு ஏற்பட்டுவிடுகின்றது.

விளையாட்டாகச் சொல்லும் ஒரு சொல் எல்லோரும் அறிந்ததே

நம் குழந்தைகள் எங்கே என்று ஒரு கணவன் கேட்கின்றான். அதற்கு அவன் மனைவி சொன்ன பதில்

Your children and my children are playing with our childran

இத்தகைய சூழலில் வளரவேண்டியிருக்கின்றது. வாழ வேண்டியிருக்கின்றது

மனிதன் எங்கு வாழ்ந்தாலும் மனிதன் தான். அவனுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும். உடல் நிலை ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு நாட்டிலே  காடுகளில் மலை நாடுகளில் வாழ்ந்தாலும் மனம் விரும்புவது அதைத்தான். ஆனால் அவன் வாழும் சூழலுக்கேற்ப மாறிவிடுகின்றான்.

இங்கே படிக்கும் காலத்திலேயே சுயமாக ஆய்வுகள் செய்கின்றார்கள். நண்பர்களின் வாழ்க்கை திசை மாறிப் போகும் பொழுது படும் துன்பங்களையும் பார்க்கின்றார்கள். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் கூட துரும்பு கிடைத்தால் கூட அது மூலம் தப்பிக்க முடியாதா என்று எண்ணுவானாம். இளவயதுப் பிள்ளைகள் நினைத்ததில் வியப்பில்லை. இந்த சூழ் நிலையில் வளர்ந்தும் நல்ல வாழ்க்கைக்கு வழி காட்டப் பெரியவர்களை அவர்கள் நாடியதுதான் போற்றுதற்குரியது.

அந்த வயதில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைக் கல்லூரி பேராசிரியர்கள் அறிவார்கள். எனவே அதற்கேற்ப திட்டம் அமைக்கப்பட்டது.

திட்டம் போட்டால் போதுமா? செயல்படுத்துவது எப்படி? அதற்கு நிதி வேண்டியிருந்தால் என்ன செய்வது? இந்தப் பிரச்ச்னை அமெரிக்காவை மட்டும் நினைத்தல் சரியா? மற்ற நாடுகளிலும் அந்த வயதுப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் திட்டத்தை எப்படி விரிவு படுத்துவது?

அரிமாசங்கம்

இதன் கிளைகள் உலகத்தில் பரவலாக இருக்கின்றன. இதன் உறுப்பினர்களில் பெரும் பாலானோர் வசதி படைத்தவர்கள். அறிஞர்கள். செயல்படுத்தும் வழிகளைச் சுலபமாக்க காண முடிந்தவர்கள்.

திட்டம் பிறந்தது.

செயல்படுத்த பயிற்சிக் களம் தோன்றியது. முதலில் செய்திகளை முறைப்படி அறிந்து கொள்ள மற்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு பயிற்சி கொடுத்தனர். கையேடுகளும் தந்தனர். அவர்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று அங்கே பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்தனர். அதன் பின்னர்தான் களத்தில் பணி செய்பவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப் பட்டது.

பள்ளி ஆசிரியைகள், தொண்டு நிறுவனத்தில் ஏற்கனவே களப்பணி செய்பவர்கள், சமூகப்பணி செய்ய விரும்பும் ஆர்வலர்கள் இவர்களைக் குழுக்களாக அமைத்து மூன்று நாட்கள் பயிற்சி என்று ஒவ்வொரு குழுவிற்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சி பெற விரும்புகின்றவர்கள் பயிற்சிக் கட்டணம் கட்ட வேண்டும். எப்பொழுதும் இலவசமாக வருவதிற்கு மதிப்பில்லை. அக்கறை யுள்ளவர்கள்தான் பணம் கொடுத்து பயிற்சிக்கு வருவர்.

நானும் பயிற்சிக்குச் சென்றேன்.

இத்திட்டப்பணிகள் எப்படி செயல்பட்டன என்று சொல்வதற்கு முன்பு இரு எடுத்துக்கட்டுக்கள் கூற வேண்டும். அப்பொழுது புரிதல் எளிதாக இருக்கும்.

பணி ஓய்வு பெற்ற பிறகு நான் அமெரிக்காவிலும் தமிழகத்திலும் மாறி மாறி இருப்பேன். கணினி பயின்ற பிறகு நண்பர்கள் வட்டம் பெரிதாகிவிட்டது. உலகம் முழுவதிலும் எனக்கு நிறைய பிள்ளைகளும் கிடைத்தனர். குழுமங்களின் என் பங்கீட்டால் என்னைப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் நண்பர்களிடம் என்னைப்பற்றி பேச அவர்களும் மெயில் மூலம் நண்பர்களாகிவிடுவர்.

அப்படி ஒருவர் கிடைத்தார். பெயர் சொல்ல விரும்பவில்லை. சென்னைக்குச் சென்ற பொழுது அவர் அழைப்பின் பெயரில் அவர் இல்லத்திற்குச் சென்றேன். நான் அங்கு சென்ற பொழுது அவருடன் மேலும் இருவர் இருந்தனர். ஏதோ தொழில் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசும் பொழுது அந்த நண்பர் அடிக்கடி ஒரு பெரியவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெரியவர் பலரும் அறிந்தவர். சிந்தனையில் சிறந்தவர். நாட்டுப் பற்றுள்ளவர். அவர்கள் அப்பொழுது பேசும் பேச்சிற்கும் அந்தப் பெரியவர் பெயருக்கும் சம்பந்தமில்லை. வந்தவர்களுக்கு ஓர் அதிகாரியின் சிபாரிசு வேண்டும். இவர் தனக்கு அவரைத் தெரியும் என்று கூறியிருக்க வேண்டும். அந்த உரையாடலில் பெரியவர் பெயர் வர வேண்டிய தில்லை. சில நிமிடங்களில் அவர் மீது வைத்திருந்த மதிப்பு குறைந்தது. வந்தவர்கள் சென்றனர்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம். நண்பர் வைத்திருக்கும் அமைப்பு பற்றி விசாரித்தேன். அதற்கும் அவர் பெரியவர் பெயரைச் சொல்லி அவர் அறிவுரைப்படி அதை ஆரம்பித்ததாகக் கூறினார். எல்லோரும் இளைஞர்கள். வேலையில் இருப்பவர்கள். மாதம் ஒரு முறை கூடிப் பேசுவார்கள். எதிர்கால இந்தியாவின் வளம் இளைஞர்கள் கைகளில் இருப்பதால் இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஏற்படுத்திய அமைப்பு என்றார். அந்த அமைப்பின்  நோக்கம்பற்றி கேட்டேன். பல சொன்னார். அவைகளில் ஒன்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்திவிடுவதைத் தடுக்க வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும். படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள், படிப்பில் திறன் குறைந்தவர்கள் இவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்.

இரண்டு குறிக்கோள்களும் அருமையானவை. “எப்படி செய்கின்றீர்கள்” என்று கேட்கவும் பதில் இல்லை. எதாவது ஒரு இடமாவது தேர்ந்தெடுத்து குறிக்கோள்கள் நிறைவேற்ற முயற்சிகள் நடக்கின்றதா என்று கேட்டேன். விழித்தார். பின்னர் அவர் கூறிய பதில் “ எல்லோரும் வேலை பார்க்கின்றவர்கள். அவர்களுக்குக் களம் சென்று பணியாற்ற நேரம் இல்லை. எனவே கூடிப் பேசுவதுடன் சரி “ என்றார். இவர்கள்தான் ஏற்கனவே படித்து முடித்து நல்ல வேலைக்கும் சென்று விட்டார்கள். வெறும் பேச்சினால் பயன் என்ன இருக்கின்றது என்று கேட்டேன். அவர் பேசாமல் இருந்தார்.

உடனே நான் வழி சொன்னேன்.

ஏற்கனவே பணியாற்றுகின்றவர்கள் அடிக்கடி செல்ல முடியாதுதான். ஒன்று செய்யலாம். ஒரு குழுவாக அல்லது இரு குழுக்காளாகப் பிரிந்து அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கருகில் வேலை தொடங்கலாம். அதாவது பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்,   நற்காரியம் செய்யவதில் விருப்பமுள்ள ஓரிருவர் கிடைப்பார்கள் அவர்களை வைத்து அப்பகுதியில் இன்னும் சிலரைச் சேர்க்கச் சொல்லலாம். பள்ளிக்குச் சென்று படிப்பை நிறுத்தியவர்கள் பட்டியல், படிப்பில் அவ்வளவு தேர்ச்சி இல்லாதவர்கள் பட்டியல் இரண்டையும் வாங்கச் சொல்லலாம். உள்ளூர் மனிதர்கள் மூலமாக பணியை ஆரம்பிக்கலாம். முதலில் தேக்கம் இருப்பினும் போகப் போக ஒத்துழைப்பு கிடைக்கும். இளைஞர்கள் சில நாட்கள் வரை தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒருவர் அல்லது இருவராக வந்து உள்ளூர்க் குழுவிற்கு வழிகாட்டி ஊக்கம் அளிக்கலாம். அப்படி ஆரம்பித்தால் இப்பணி சிறிது சிறிதாக நல்ல பாதையில் செல்ல முடியும்” என்றேன். அந்த நண்பர் பதில் கூறவில்லை. இளைஞர்கள் கூடி வெறும் பேச்சில் நேரத்தை வீணாக்குவதில் அர்த்தமில்லை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

எல்லோரும் களப்பணிதான் செய்ய வேண்டுமென்பதில்லை. பல நிலைகளில் கலந்துரையாடலும் பலனளிக்கும்.

சென்னையில் இருந்த பொழுது என்னைப் பார்க்க சிலர் வந்திருந்தனர். எல்லோரும் வயதானவர்கள். பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் இருந்தனர். அவர்கள் ஓர் அமைப்பை வைத்திருந்தார்கள் அவர்கள் கூட்டத்தில் பேச என்னை அழைக்க வந்திருந்தார்கள். நான் இயலாமையைச் சொன்னேன். ஆனாலும் அவர்கள் போகாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படியே பேச்சு ஒரு முக்கியமான விஷயம்பற்றி திரும்பியது. அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்றவர். நிறைய கடன்கள் வாங்கிவிட்டதால் இப்பொழுது கஷ்டப்படுகின்றார். மகள் திருமணத்திற்கும், மகன் படிப்பிற்கு நன்கொடை கொடுத்தும் படிக்க வைத்ததிலும் ஏற்பட்ட கடன். இப்பொழுது அந்த மகனும் திருமணமாகவிட்டு மனைவியுடன் போய்விட்டான். அவருக்குக் கிடைக்கும் ஓய்வுத் தொகையில் கூட, கடன் இருந்ததால் அதற்குக் கொடுத்துவிட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

முதலில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பிறகு நான் பேச ஆரம்பித்தேன். இனி வரும் காலத்தில் ஒருவன் திருமணமானவுடன் தங்கள் முதுமை காலதிற்கென்று ஆரம்ப முதல் பணம் சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். ஓய்வூதியம் வருவது வரட்டும் ஆனாலும் சேமிப்பும் தொடரட்டும். எக்காரணம் கொண்டும் திருமணங்களை ஆடம்பரமாகச் செய்யக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்தை மாற்ற ஆரம்பித்தால் பழகிவிடும். படிப்பதற்கும் பெரும் கடன் வாங்கிப் படிக்க வைக்கக் கூடாது. இந்த ஆசாபாசங்கள் குறைய வேண்டும். ஆரம்பமுதல் பிள்ளைகள்  படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கிப் படிக்கட்டும். வேலை கிடைக்கவும் மகனே அக்கடனைத் திருப்பிக் கட்டட்டும். இந்தப்பழக்கமும் கொண்டுவர வேண்டும். அன்பு வேறு. அன்புக்கு அடிமையாகி அசடுகளாவது வேறு. காலம் மாறிவிட்டது. மகன் மாறிவிட்டான் என்று சொல்வதும் சரியல்ல. காலம் மாறியதால் அவனும் மாறிவிட்டான். நாமும் காலத்திற்கேற்ப உண்மைகளைப் புரிந்து கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றேன்.

வந்திருந்தவர்கள் முணங்க ஆரம்பித்துவிட்டார்கள். கலாச்சாரத்திற்கு மாறக நான் பேசுவதாகக் கூறினார்கள். கூட்டுக் குடும்பம் நம் ஆரம்பக் கலாச்சாரம். இப்பொழுது அது மாறிவிட்டதே. மகன் தனிக்குடித்தனம் போவது இயல்பாகிவிட்ட பின் ஒருவன் தன் முதுமை காலத்தில் நிம்மதியாக வாழ வழி செய்து கொளவதில் என்ன தப்பு என்றேன். அவர்களிடம் தொடர்ந்து சொன்னேன். அவர்கள் அமைப்பில் பேச நான் சரியானவள் இலை என்றேன். இருப்பினும் ஒரு நாள் பார்வை யாளராக வந்து பார்க்க வருகின்றேன் என்று மட்டும் சொன்னேன்

ஒரு நாள் சில இளைஞர்களுடன் அங்கு பார்வையாளராகச் சென்றேன். அங்கே ஒருவருக்கொருவர் தங்கள் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக்க பூர்வமாக எதையும் பேசவில்லை. இலக்கியத்தில் அல்லது வாழ்வியல் பற்றிய விஷயங்கள் ஏதாவது ஒன்றைப்பற்றிப் பேசியிருந்தால் கூடப் பரவாயில்லை. என்னுடன் வந்தவர்கள் , “அம்மா, இதுமாதிரி கூட்டங்களுக்கு எங்களைக் கூட்டி வராதீர்கள். எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். இருக்கும் தன்னம்பிக்கையும் போய்விடும” என்றார்கள். கூட்டம் நடத்துவது என்பது கூட ஓரளவு அர்த்த முள்ளதாக இருக்க வேண்டும். இவர்களை எங்கும் சென்று பணியாற்ற எதிர்பார்க்க வில்லை.

பணிகளில் இருவகையுண்டு. ஒன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டு செய்வது. இன்னொன்று களத்தில் இறங்கி பணி செய்வது. அமைப்பில் அதற்கேற்ப வழிவகைகளை வகுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அரிமா சங்கம் கொடுக்கும் பயிற்சிக்குப் பிறகு அவர்கள் பணி செய்ய வேண்டிய களம், செய்ய வேண்டிய பணித்திட்டம் செவ்வனே வகுத்துக் கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

சிறுவர்களை, இளைஞர்களை வழிநடத்தப்பட வேண்டிய பணிக்குச் செல்கின்றவர்களுக்கு முதலில் தகுதி இருக்க வேண்டும். வெறும் படிப்பும் பயிற்சியும் மட்டும் இருந்தால் போதாது. அவர்களின் ஆர்வம், கற்றுக் கொடுத்தால் அதனை வளர்க்கும் திறன் இருக்குமா என்று புரிந்து கொள்ள வேண்டும். புத்திமதிகள் கசக்கும்.

Communication skill

விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இன்றியமையாதது.

சங்கீதம் கற்றவர்கள் அனைவரும் தாங்களாக ஸ்வரங்கள் போடுவதோ ராகம் பாடுவதோ முடியாது. பாட்டுவாத்தியார் சொல்லிக் கொடுத்ததை மட்டும் பாடத்தெரிந்தவர்கள்தான் அதிகம். அவர்களில் நானும் ஒருத்தி. எனக்கு சுயமாக ஸ்வரங்கள் போடத்தெரியாது.

என் அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன்.

வாடிப்பட்டியில் வேலைக்குச் சென்ற பொழுது ஒரு கிராமத்திற்குச் சென்றேன். இறங்கிய இடத்தில் ஓர் பெட்டிக் கடை இருந்தது. அங்கே சில இளைஞர்கள் நின்று கொண்டு நான் இறங்கியவுடன் என்னைப் பார்த்து ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். நான் கூச்சப்படவில்லை. பயப்படவும் இல்லை. நானே அவர்கள் அருகில் சென்று  போக வேண்டிய வீட்டிற்கு வழி கேட்டேன். அப்படியே பழக்கமானோம். கிராமத்து இளைஞர்களுக்கு அப்பொழுது நான் காட்டிய வழிகள்..

சுதந்திர தினம், பாரதியார் பிறந்த நாள் போன்றவைகள் வரும் பொழுது நிகழ்ச்சிகள் நடத்தச் சொன்னேன். பேச்சுப் போட்டி, நாடகங்கள், விளையாட்டுகள், இன்னும் சில கலை நிகழ்ச்சிகள் பயிலச் சொன்னேன். அவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாகப் பயின்றார்கள். கையெழுத்து புத்தகங்கள் தயாரிக்கச் சொன்னேன். எழுத ஆரம்பித்தனர். படம் வரைய ஆரம்பித்தனர். என்னைக் கண்டவுடன் ஆவலுடன் வருவார்கள். வருடம் முழுவதும் ஏதாவது பண்டிகைகள், விழாக்கள் வரத்தானே செய்கின்றது. பொழுதும் அர்த்தமுடன் போயிற்று. நட்பும் வளர்ந்தது. அவர்கள் திறமைகளும் வளர்ந்தன.

ராஜியும் நானும் பல கலைகள் தெரிந்தவர்கள். எங்களைப்போல் இன்னும் சிலர் இருக்கலாம். அதனால் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் சாதித்துவிட்டார்கள் என்று கூற முடியாது. எனவே இது போன்ற திட்டங்கள் பரவலாக வளரவில்லை.

அமெரிக்காவில் இந்த திட்டம் எந்த அளவு நடைமுறைப் படுத்தப்பட்டது என்று நான் பார்க்க வில்லை. அதனால் என்னால் மதிப்பீடு செய்ய முடியவில்லை. இந்த திட்டம் பற்றிய நோக்கங்களைக் கொடுத்திருக்கின்றேன். படிப்பவர்கள் இதைவிட அருமையான , அர்த்தம் நிறைந்த திட்டங்கள் வகுத்து நம் எதிர்காலச் செல்வங்களைச் சீராக்குங்கள். அடுத்த பகுதியில் நானும் விளக்குகின்றேன்.

நானும் ராஜியும் ருக்மணியும் புதிதாக ஒரு திட்டம் வகுத்தோம். மிகவும் அருமையானது. கணினி மூலம் நடத்துவது. அதே நேரத்தில் சில இடங்களுக்குச் சென்று  களத்திலும் நடை முறைப் படுத்துவது. அதனை அமெரிக்காவில் நான் ஆரம்பிக்க வேண்டுமென்றும் என்றும் பின்னர் அவர்கள் இருவரும் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்திருந்தோம்.

அமெரிக்காவில் என் முயற்சிகள் அருமையாகத் தொடங்கின. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாத தடை ஒன்று ஏற்பட்டுவிட்டது. அந்த திட்டம் இன்னும் என் கையில் இருக்கின்றது. இப்பொழுது புதிய மாதவி தலைமையில் ருக்மணியும் இன்னும் சிலரும் செய்யலாம் என நினைத்திருக்கின்றோம். சென்னைக்கு நான் செல்லும் பொழுது ஓரளவு பயிற்சி கொடுக்க வேண்டும். அந்த திட்டம் அப்படியே காகிதத்தில் முடங்கிவிடக் கூடாது.

திட்டங்கள் தீட்டிவிடலாம். ஆனால் செயல்படுத்த இறங்கும் பொழுது பல தடைக் கற்கள் குறுக்கே வரும். பல முயற்சிகள் தோற்கும் சில முயற்சிகள் வெல்லும். மனம் தளரக் கூடாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

சில நேரங்களில் திட்டங்கள் சரிவரச் சிந்திக்காமல் தீட்டப்பட்டுவிடலாம். அதனைப் புரிந்து கொண்டவுடன் தயங்காமல் அதனைத் திருத்திடலும் வேண்டும்.

நான் ஊட்டியில் பணியாற்றும் பொழுது ஓர் அனுபவம் ஏற்பட்டது. எனக்கு முன் பணியாற்றிய அதிகாரி ஓர் திட்டம் வரைந்து அரசுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் பணியில் சேரவும் அதனை ஆரம்பிக்க உத்திரவு வந்தது.

ஊட்டியில் ஒரு கிராமத்தில் சாக்பீஸ் செய்யும் பயிற்சி நிலையம்.

இதற்கு சுண்ணாம்புக் கல் பொள்ளாச்சியில்;இருந்து வர வேண்டும். சாக்பீஸ் செய்தால் ஒன்றின் விலை அப்பொழுதே 35 ரூபாய் கணக்கு வந்தது. யார் வாங்குவார்கள். ? அடுத்து சாக்பீஸ் செய்தால் காய வைக்க வேண்டும். பனியும் குளிரும் நிறைந்த இடம். அவ்வூருக்கு மின்வசதியும் கிடையாது. இப்படி ஓர் அர்த்தமற்ற திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு ஆரம்பிக்கவும் உத்திரவு வந்தது. நான் ஆரம்பிப்பது சரியல்ல என்று எழுதியிருந்தற்கு என் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கடிதம் வந்தது. பிறகு விபரமாக எல்லாம் எழுதினேன். அதற்குமேல் அந்த மையம் ஆரம்பிக்கப் பட்டிருந்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். பெயரும் கெட்டிருக்கும்.

ஒன்றைச் சரியல்ல என்று தெரிந்தவுடன் துணிந்து நின்று தடுத்திடல் வேண்டும்.

தொடரை நான் சீக்கிரம் முடிக்க விரும்புவதால் விரிவாக எழுதவில்லை. சிகிச்சை எடுத்துச் சிறிது ஓய்வும் எடுத்த பின்னர் இன்னும் பல முக்கியமான தகவல்களை எழுதுவேன்.

“திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல.மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்தளவு கிடைக்காவிட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஓர் அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் நீங்கள் என்றும் வருந்தக் காரணமிருக்காது.”

என்.கணேசன்   ( வாழும் கலை )

தொடரும்

படத்திற்கு நன்றி

 

 

 

Series Navigationவாழ்க்கைச் சுவடுகள்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்