விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்

This entry is part 23 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

 சுப்ரபாரதிமணியன்

——–

அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம். அப்புறம் அவன் அப்பா  பெயர் சுந்தரம். அம்மா பெயர் காத்தாயி. இரண்டு பேரும் செத்துப் போய் விட்டார்கள்..அப்புறம் .. அவன் செய்யும் தொழில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியானது இல்லை.வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்துக் கொண்டு காய்கறி, பழங்கள் விற்பது.. அப்புறம் ..  அப்புறம்…அப்புறம் அவனைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.அப்புறம் அவன் வயது 45, குழந்தைகள் இல்லாதவன். அதை ஒரு தொந்தரவாக  எடுத்துக்கொள்வதில்லை.அவ்வளவுதான்.

அவனுக்கு மூன்று நாடகளாக தூக்கமில்லை கைபேசியில் நடு இரவில் ஏதாவது தொலைபேசி அழைப்பு வந்து விடுகிறது.முந்தின நாலாம் நாள் இரவு சித்தப்பா வகையில் ஒருத்தர் செத்துப் போனதற்காய் திருப்பத்தூருக்கு போய் விட்டு வந்தான். துக்க கலக்கம் ஏதும் இல்லை. தூக்கக் கலக்கம். நக்சலைட்டுகளுக்கு எதிராக செத்துப்போன  காவல் துறையினருக்கு நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூண் அருகில் செத்து கிடந்தார். ஓயாத போதையில் உயிர்பிரிந்திருக்கிறது. வீட்டில் யாருக்கும் பிரயோசனமில்லதவராக் 68 வயது வரை இருந்தவர். பெயிண்ட் அடிக்கும் வேலையில் சம்பாதிப்பது. பெயிண்ட் வாசம் உடம்பிலிருந்து மறைகிறவரைக்கும் தண்ணி போடுவது என்று 55 க்கு மேல் வாழ்க்கையைக் கழித்தவர்.

ரொம்பவும் களைத்துப் போயிருக்கிறாள் என்று அவனை சீக்கிரம் தூங்கச் சொன்னாள் அவன் மனைவி. அவளுக்கு 40. உதிரியாக ஏதாவது வேலை செய்வாள். அதுவும் அவனுக்கு வேலை இல்லாமல் காசு புழக்கம் இல்லாத போது. அப்புறம் ஹோம் மேக்கர். அப்புறம் அவ்வளவு அழகானவள் இல்லை. உடம்பு சற்று பூரித்திருக்கும். அவள் உடம்பின் பூரிப்பைப் பார்த்து அவன் சோப்புக் கட்டி  போல நிகுநிகுவெனு இருப்பதாகச் சொல்வான்.  அவன் திருப்தியாய் முயங்கி களைத்துக் கிடக்கையில் தேக்கு மரம்யா  என்பாள்.அப்புறம் .. அப்புறம் .. அவளைப் பற்றிச் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

அவன் தள்ளுவண்டியை  வாடகை எடுத்த இடத்தில்  தின வாடகையைக் கொடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்த போதே ஒன்பது மணியாகியிருந்து.சொந்தமாய் ஒரு தள்ளு வண்டி வாங்குவதே அவனின் சமீப லட்சியம். நீண்ட நாள் லட்சியம் கூட..நீ பயணத்தால் ரொம்பவும் களைத்துப் போயிருக்கிறாய் நன்றாகத்தூங்க வேண்டும் என்று ஆசீர்வதித்தாள். உன்னுடன் ம்ல்லாடி களைத்து விழுந்தால்தான் நல்ல தூக்கம் வரும் என்றான்.அவள் புரிந்து கொண்டாள். ஆனால் விரதத்தில்  இருக்கின்றேனே.. என்றாள். இருந்தால் என்ன.. சமீபத்தில் நாலைந்து வருடங்களாக சித்திரையில் விரதம் இருக்கிறாள். குழந்தை வேண்டுதல்தான், கொண்டத்து அம்மன் கோவிலில் குண்டம் மிதிப்பாள். தீச்சட்டி எடுத்துப்ப்போவாள்.18 நாள் விரதம். நாள் நெருங்கி விட்டது அவனின் ஞாபகத்தில் இருந்தது. இது போன்ற சமயத்தில் அவளின் ஒத்துழைப்பும் இருக்கும். வெண்ணிலா அய்ஸ் பிடிக்கும் என்பாள். களைத்துப் விழும் வரைக்கும் ஒத்துழைப்பாள்.அப்படித்தான் ஒத்துழைத்தாள். விரதகாலத்தில் நேரடியான கலவியை மறுப்பாள் விரதம் இருக்றேனே. இது விரதத்துக்கு விரோதம் இல்லையா. உங்களுக்கு தேவை. நிறைவேற்ற  வேறு வழி இல்லை.அவன் அயர்ந்து வெயிலில் அலைந்து திரிந்ததன்  உடம்பு நோவு போக தூங்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் தூங்கியிருப்பான். கை பேசியிலில் ஒரு அழைப்பு.வழக்கமாய்  வரும் அழைப்புகள் எதுவும் இந்த நேரத்தில் இருக்காது. கைபேசிக்காரர்கள் குறுஞ்செய்திகளை இரவில் அனுப்பாமல் இருக்கிற நாகரீகம் அவனுக்குப் பிடித்திருந்தது.  அது குறுஞ்செய்தியில்லை. அழைப்புதான். கரகரத்தகுரலில் பேச ஆரம்பித்தான். பேச்சென்றில்லாமல் கைபேசியில் அழுகுரல் கேட்டது. அய்ய்ய்யோ.. என்றபடி. அவன் துண்டித்து விட்டு முழுதுமாய் அணைத்து விட்டான். அவள் தூக்கம் கலைந்து அவள் தலை விரிகோலமாய் நின்றாள். அவளின் தலையை இசுக்கி முன்னம் கலைத்திருந்தான்.”வழக்கமாத்தா தூக்கத்தைக் கெடுக்கறதுகு.. நாய்க..”  அவன் உபயோகப்படுத்து குறைந்தபட்ச கெட்ட வார்த்தை நாய். யோனியில் ஆரம்பித்து அதை சுவைப்பது வரை நிறைய கைவசம் வைத்திருப்பான்.  அவனுக்கு சமீபமாய் இது போல் இரவில் தொலைபேசி அழைப்புகள் வருவது சாதாரணமாகிவிட்டது. நல்ல தூக்கத்தைக் கெடுப்பதற்கென்று வரும் அழைப்புகள். அழுகிற குரல் கேட்கும். வாகனச் சப்தம் கேட்கும். சில சம்யம் சிரிப்பொலி  கேட்கும். பல நாட்கள் கைபேசியை அணைத்து விட்டுத் தூங்குவான். அல்லது சைலண்ட்டில் போட்டு விட்டுத் தூங்குவான்.சைலண்ட்டில் போட்டு விட்டுத் தூங்குகிற நாட்களில் அழைப்பெதுவும் வருவதில்லை என்பது போல் அதை செய்ய மறந்த நாட்களில் திடுமென வரும். தூக்கம்  கெட்டு விடும்.அவனுக்கு விரோதிகள் யார் என்று பட்டியல் போட்டுப் பார்த்தான்.நாலைந்து பேர் தென்பட்டனர். மல்டிலெவல் மார்கெட்டிங்கில் அவன் பணம் முதலீடு செய்ததில் ஏமாற்றமடைந்தது.சூரிட்டி கையெழுத்தில் ஏமாந்து பஞ்சாயத்தில் போய் நின்றது.  ஒரு கட்டிட மேஸ்திரியை  கிண்டலடித்ததால் அவன் நீ என்ன பெரிய கலெக்டரா என்று கேட்டது. கடைசியாக வாடகைக்கு இருந்த இடத்தில்  பக்கத்து வீட்டில் இருந்தவனுடன் சண்டை. அவன் ஒரு வகையில் மன நோயாளி போல. சரியாக வேலைக்குப் போக மாட்டான். சோம்பலாய் கிடப்பான். பொது மருத்துவமனைக்குப் போய் தூக்க மாத்திரை வாங்கி வருவான்.பெரும்பாலும் அவன் சரியாகத் தூங்கவில்லையென்றால்   அவளே கூட்டிக் கொண்டு போவாள். அவனைப் பார்த்து சுந்தரம் மனைவி லூசுப்பயலே என்று அவன் காது பட சொல்லப்போக அவன் எட்டி உதைக்க, இவள் செருப்பை எடுத்துக் காண்பிக்க ரகளைதான். இந்த புது வாடகை வீட்டிற்கு வந்த பின் இந்த வகை இரவு அழைப்புகள்.லூசுப்பையன் கைபேசி பயன்படுத்துவதில்லை.  அவன் மனைவியிடம் உண்டு. அவளுக்கு இந்த வகை தொல்லை  தரும் தைரியம் இருக்காது. டிராபிக் சப்தம், மழை விழும் சப்தம்,  அழுகைச் சப்தம் இவையெல்லாம் புது சைனா செட்டில்   இருப்பதை சுந்தரம் அறிவான்.அவன் வழக்கம் போல் கெட்ட வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தான். தன் தூக்கம் கெட்டுப் போகச் செய்கிறவர்களைச் சபித்தான்.மனைவியும்  அவன் சொல்லாமல் விட்ட கெட்ட வார்த்தைகளை உதிர்த்தாள். பக்கத்து வீட்டில் யாராவது கோபித்துக் கொள்ளலாம் என்ற யூகத்தைச் சொன்ன பின்   அவள் நிறுத்திக் கொண்டாள்.அவள் வாங்கியிருந்த கைபேசி கால்மணி நேரத்திற்கொரு முறை வரவேற்பு சப்தம் எழுப்பி இரவில் தொல்லை  கொடுத்ததால் அவள் அந்த கைபேசிக்கம்பனியை மாற்ற வேண்டி இருந்தது.

தூக்கம் கலைந்து விட்டது. கைபேசி அழைப்புபோலிருந்தது. அவன் கைபேசி ஒளிரவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கலாம்,இனி தூக்கம் வராது. அல்லது வெகு தாமதமாகும்.தூங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பினால் விரத்தில் இருப்பதாய் சொல்வாள்.கைபேசியை எடுத்து  தாறுமாறாய் பொத்தான்களை அழுத்தினான். அடுத்த முனையில் யாரோ தூக்கக்கலக்கத்தில்  ஹலோ என்றார்கள்.

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    விரதம் இருந்தாலும் கணவனின் தேவை உணர்ந்து பூர்த்தி செய்யும் ஒரு மனைவியைப் பற்றி கூறும் நுணுக்கமான சிறுகதை. பாராட்டுகள் நண்பர் சுப்ரபாரதிமணியன் அவர்களே. டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *