விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று

This entry is part 23 of 33 in the series 27 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை

சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. பார்க்கப் போகிறவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிடந்தால் ரெண்டு நிமிஷம் உபசார வார்த்தை பேசிவிட்டு, நர்ஸ் மிஸ்ஸியம்மாக்களின் ஸ்தன பாரத்தை வெறித்த பிறகு பார்க் ஸ்டேஷன் ஓரமாக மசால்வடையும் போண்டாவும் பித்தளை தம்ளரில் சூடான காப்பியும் குடிக்கலாம் என்ற நினைப்பில் பிறந்த உற்சாகமாக அது இருக்கக் கூடும்.

ஸ்டேஷன் வாசல் பக்கம் ஒருத்தன் கை நிறைய நோட்டீசுகளை வைத்துக் கொண்டு வினியோகித்தபடி இருந்தான். பாகவதர் டாக்கி எதுக்காவது இருக்கும். நீலகண்டன் அசிரத்தையாக வாங்கிக் கொண்டு கண்ணை மேயவிட எழுத்தெல்லாம் பூச்சி பூச்சியாக ஊர்ந்தது.

சாளேஸ்வரம் பாடாய்ப் படுத்துகிறது. மூக்குக் கண்ணாடி இல்லாமல் பொடி எழுத்து எல்லாம் கண்ணாமூச்சி காட்டுகிறது. அச்சுப் போடுகிற மகானுபாவன்கள் எல்லோரும் வெண்டைக்காய் எழுத்தில் போடணும் என்று எதிர்பார்க்க முடியுமா?

நோட்டிசைக் கண்ணுக்குப் பக்கமாகப் பிடித்துக்கொண்டு வாசிக்க முயற்சி செய்ய, விநியோகித்த பையனே சின்ன சிரிப்போடு சொன்னான்.

சாமிகளே, வர்ற மாசம் ஒத்தவாடை தியேட்டர்லே சுயமரியாதை மகாநாடு. அவசியம் வந்து குடும்பத்தோடு கலந்துக்கணும்.

பக்கத்தில் மெகபோனும் இன்னும் நிறைய நோட்டீசுமாக நின்ற ரெண்டு பேர் காணாததைக் கண்டது போல் சிரித்தார்கள்.

நீலகண்டன் சாடி அந்தாண்டை விலகிப் போனான். பிராமண துவேஷிகள். இன்னும் கொஞ்ச நேரம் இந்தப் பிரதேசத்தில் திரிந்தால் பூணூலையும் அறுத்து விடக்கூடும்.

மெயில் பத்திரிகைக்கு இதைப் பற்றி கடுமையாக விமர்சித்து ஒரு கடிதாசு எழுதணும். பிரியமான பத்ராதிபருக்கு, நாளது தேதி. கிடக்கட்டும். வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் எழுத உட்காரலாம். மனசிலேயே உருப்போட்டுக் கொண்டு போய் ஜட்கா வண்டி மேலோ, ஜெனரல் ஆஸ்பத்திரி பொண வண்டி மேலேயோ முட்டிக் கொள்ள வேண்டாம்.

உசிர்க் காலேஜ் என்கிற சிங்கம் புலி திரியும் மிருகக் காட்சி சாலை கால்வாய்த் தண்ணீரைக் கடந்து இருப்பது. அங்கே இருந்து அவ்வப்போது மாமிச நெடியும், யானை பிளிறலும், வேறே ஏதோ மிருகத்தின் உறுமலுமாக காற்றில் கலந்து வந்தது. பகல் முழுக்க அந்தப் பிரதேசத்தில் கட்டுச் சோற்றோடு அலைந்து திரிந்து சிறுத்தைப் புலியையும் ராட்சசக் குரங்கையும் ஆசனவாயில் குத்தி குரோதமாக உறும வைத்துப் பார்த்துத் திருப்தியடைந்து, புளியஞ்சோறு சாப்பிட்ட ஏப்பம் மேலெழ, குடும்பம் குடும்பமாக செண்ட்ரல் ஸ்டேஷனை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

நுகத்திலிருந்து பின்னால் கால் வைத்து ஏறும் சின்ன மரப்படி வரை மூட்டை முடிச்சுகளைத் திணித்துக்கொண்டு, தாட்டியான சேட்டுகளும் அவர்களை விட உடம்பு பருத்த சேட்டாணிகளும் ஜட்கா வண்டிகளில் செண்ட்ரல் ஸ்டேஷனுக்குள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். இந்தக் குதிரைகள் நின்றால் பிராணனை உடனடியாக விட்டுவிடும் என்று நீலகண்டன் நினைத்தான்.

சேட்டுகள் எப்படியோ, அவர்கள் நடத்துகிற மிட்டாய்க் கடைகளில் செண்ட்ரலுக்கு வெளியே கூட்டம் நிரம்பி வழிந்ததையும் அவன் கவனித்தபடி செண்ட்ரலுக்கு இடது வசம் வால்டாக்ஸ் ரோடில் திரும்பினான். நாயுடு வீட்டுக்கு இந்தப் பக்கமாகத்தான் போக வேண்டும்.

நாயுடு கோர்ட் சிரஸ்தாராக பட்டணப் பிரசித்தமாக இருந்து இந்த வருஷ ஆரம்பத்தில் தான் ரிடையர் ஆனான். அதாவது நீலகண்டன் ரிடையர் ஆகி பத்து மாசத்துக்கு அப்புறம்.

உள்ள படிக்கு நான் உனக்கு பத்து நாள் முந்திப் பிறந்தவன்’பா. எங்க நாய்னா எதுக்கும் இருக்கட்டும்னு கிராமத்து கர்ணம் கிட்டே பத்து நாள் பிந்திப் பிறந்ததாப் போடச் சொன்னாராம். அந்தாளு காது டப்சா காது போல. இல்லே நாய்னா மேலே மரியாதை. பத்து நாள் பத்து மாசம் பிந்தியே போட்டுக் கொடுத்திட்டான். அதான் உன்னை விட அதிக நாள் மர ஜாமானைத் தேச்சுட்டு எளுந்து வரேன்.

ரிடையர் ஆன தினத்தில் நாயுடு நீலகண்டன் தோளில் தட்டிச் சிரித்தான். வருஷ ஆரம்பத்தில் ஒரு சாயந்திரம் கோர்ட் காம்பவுண்டில் நடந்த பிரிவு உபசாரக் கூட்டம். நீலகண்டனையும் வரச் சொல்லிக் கூப்பிட்டிருந்தான். இதேபோல் கையில் பட்டணம் பொடி கம்பெனி விளம்பரம் அடித்த மஞ்சள் பையும், குடையுமாக நீலகண்டன் போயிருந்தான். ரிடையர் ஆனதும் தன்னிச்சையாகக் கையில் ஏறுகிற சமாச்சாரம் இது ரெண்டும் என நாயுடுவிடம் சொன்னான் அவன்.

நாயுடு ரிடையர் ஆன கையோடு சிந்தாதிரிப்பேட்டையில் குடக்கூலிக்கு இருந்த வீட்டை காலி செய்துவிட்டு ஆனைக் கவுனியில் பூர்வீக வீட்டுக்குக் குடித்தனம் மாற்றி விட்டான்.

பென்ஷன் பணத்துலே குடக்கூலி என்னாத்துக்கு அநாவசியமா? மூத்திரத்துலே மீன் பிடிச்சு நாலு சல்லி மிச்சப் படுத்தினாத்தான் மருவாதையா ஒரு கதம்ப மாலையைப் போட்டு நெத்தியிலே ஒரு சல்லியை ஒட்ட வச்சுத் தூக்கிப் போய்க் கொளுத்துவாங்க. இல்லியோ கோவிந்தா கொள்ளிதான்.

நாயுடு அதையும் அனுபவித்துச் சொல்லிச் சிரித்தான். நீலகண்டனுக்குச் சிரிக்க முடியவில்லை. ஐம்பத்தொன்பது வயசிலேயே சாவைப் பற்றி யோசிக்கணுமா என்ன? பென்ஷன் ஆர்டரே இன்னாருக்கு, இன்னாரின் விதவைக்கு என்று தானே அச்சடித்து வருகிறது? இன்னும் ஒரு வருஷத்தில் அறுபது. சஷ்டி அப்த பூர்த்திக்கு இருந்தால் லட்டு உருண்டை. போய்ச் சேர்ந்தால் வீட்டில் எள்ளுருண்டை.

அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

என்ன அய்யரே, அசமஞ்சமா சிரிக்கறே. மஞ்சாப் பையிலே என்னா கொண்டாந்திருக்கே? ரிடையர் ஆனதும் நான் படிக்க கொக்கோக புஸ்தகமா?

நாயுடு அவன் கையில் பிடித்திருந்த துணிப்பையை உரிமையோடு பிடுங்கினான். நாசமாய்ப் போனவன், எத்தனை கழுதை வயசானாலும் மாறுவேனா என்கிறான். அதுவே நீலகண்டனுக்கு சந்தோஷமாக இருந்தது.

பையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கிரந்தப் புஸ்தகமும், போன மாசத்து கலாவல்லி பத்திரிகையும் இருந்தது. இந்து நேசன் இல்லையா என்று விடாமல் பிடித்தான் நாயுடு. அவனை ரோஜாப்பூ மாலையும் கழுத்துமாக, கையில் ஏழெட்டு போண்டா வடை மூட்டையோடு ஜட்காவில் வீடு வரை கொண்டு விட கோர்ட் உத்யோகஸ்தர்கள் குழுமிய போது, ஒருத்தரும் வேணாம் என்று சொல்லி விட்டான் நாயுடு.

அய்யரே, நீ ஏறு வண்டியிலே. சமுத்திரக் காத்து வாங்கிட்டே வீட்டுக்குப் போயிடலாம். துணைக்கு வா.

அவன் வாத்சல்யத்தோடு கூப்பிட்ட இடம் முன்னால் குடக்கூலிக்கு இருந்த சிந்தாதிரிப்பேட்டை மாடி வீடு.

இந்த சௌகரியத்தை விட்டுட்டு மாசக் கடைசியிலே ஸ்தலம் மாறணும்பா என்றான் நாயுடு அப்போது முகத்தில் அலுப்பு தெரிய.

பழகின சௌகரியமும், அதிகாரமும், கூப்பிட்ட குரலுக்கு ஒருத்தனோ ரெண்டு பேரோ வந்து நிற்கிற பதவிசும் எல்லாம் ஓய்ந்து போனதால் வந்த அலுப்பு என்று நீலகண்டனுக்குப் புரிந்தது.

வீட்டுக்குள்ளே வந்துட்டுப் போயேன் என்று நாயுடு திரும்பத் திரும்பக் கூப்பிட்டும் நீலகண்டன் இன்னொரு சமயம் வரேன், ஆத்துலே அவ தனியா இருக்கா என்று மறுத்து விட்டான்.

அட, என்ன கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆன புருஷன் பொஞ்சாதியா? அய்யரம்மாவுக்கும் ஐம்பது வயசாவது ஆயிருக்காது? தனியா இருக்க விடமாட்டேங்கறியேப்பா இப்பவும்.

போடா உனக்கு எல்லாமே கொனஷ்டைதான்.

நாயுடுவைக் கொண்டு வந்து விட்ட அதே ஜட்கா வண்டியில் நீலகண்டன் புறப்பட்டான். செண்ட்ரல் போய் எலக்ட்ரிக் ரயில் பிடித்து நுங்கம்பாக்கத்தில் வீடு போய்ச் சேர ராத்திரி எட்டு மணியாவது ஆகிவிடும் என்ற பரபரப்பு அப்போது.

அடுத்த வாட்டி நீ வரும்போது ஆனைக் கவுனி போயிருப்பேன். அட்ரஸை போஸ்ட் கார்டுலே போட்டு அனுப்பறேன். அவசியம் வா. உன் கிட்ட சில சமாசாரம் ஒப்படைக்கணும். மறந்துடாதே.

அதுக்கு பத்து நாள் சென்று சொன்னபடிக்கே நாயுடு போஸ்ட் கார்டில் வலது பக்கம் வரிசையாகத் தலை சாய்த்த இங்கிலீஷ் எழுத்துகளில் குசலம் விசாரித்து விட்டு ஆனைக்கவுனி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த சுபச்செய்தியையும் விலாசத்தையும் அனுப்பி விட்டான். நீலகண்டன் அங்கே போகத்தான் இப்படிப் பத்து மாதம் ஆகிப் போனது.

எங்கே சார் போவணும்?

கை ரிக்ஷாவை இழுத்து வந்தவன் விசாரித்தான். அனேகமாக ஆற்காட்டுப் பிரதேசத்து ஆளாக இருக்கும். வாப்பா போப்பா என்று சகஜமாக சகலரையும் கூப்பிடுகிற நடைமுறை நீலகண்டனின் சர்க்கார் அதிகாரி மிடுக்கையோ முன் வழுக்கையைத் தாண்டி ஒளி வட்டமாகப் படர்ந்திருந்த வெள்ளை ரோம வளையத்தையோ கருதி சார் ஆகி இருக்கும்.

எல்பண்ட் கேட் போலீஸ் ஸ்டேஷன்

அய்யோ ஆனக்கவுனி தாணா கச்சேரியா? ஆள வுடு.

அவனுக்கு ரிக்ஷா இழுத்துப் பிழைக்கும் வகையில் அந்த சர்க்கார் அலுவலகத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போக வேண்டாம்பா. அதுக்குக் கொஞ்சம் அப்பாலே.

ஏழுகிணறா?

அதுக்கும் முன்னாலே.,

ஏதோ சொல்றே போ சார். எட்டணா கொடு.

மிஞ்சினா ரெண்டு இல்லே மூணு பர்லாங்கு. இதுக்கு எட்டணாவா?

விலைவாசி ஏறிடுச்சு சாமி.

சாமி ஆறணா கொடுக்க சம்மதிக்க, கைரிக்ஷா சவாரி வாய்த்தது.

ஜன நெரிசல் அதிகமாகி விட்டது. நீலகண்டன் மிஷினரி ஸ்கூலில் படிக்கிற காலத்தில் அப்பா வைத்தியநாதன் கையைப் பிடித்துக் கொண்டு இங்கே ஒற்றைவாடை கொட்டகையில் கிட்டப்பா பாடி நடித்த ஏதோ நாடகத்தைப் பார்க்க வந்திருக்கிறான். அது கிட்டப்பா இல்லை என்று மூளை உடனே சொன்னது. பெங்களூர் ராஜா அய்யங்கார்.

ஷீர சாகர சயனா என்று உச்சக் குரலில் பாடிக்கொண்டு அய்யங்கார் மேடையை இடம் வலமாகச் சுற்றும்போது அவன் தூங்கிப் போயிருந்தான். காலேஜில் படிக்கும்போது மினர்வா தியேட்டரில் சினிமா பார்க்க ஒரு தடவை வந்து, தாமதமாக ராச்சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போனதால் வைத்தியநாதய்யரும் கோமதியம்மாளும் உயிர் விடுமளவு விசாரத்தில் ஆழ வைத்ததும் கூடவே நினைவு வந்தது. அதுக்கு அப்புறம் ஜியார்ஜ் டவுண் ஏரியாவில் திரிவதை ஆகக் குறைத்துக் கொள்ளவும், அதுவும் பகலில் மட்டும் என்றாகிப் போயிருந்தது அந்தக் காலத்தில். நாயுடுவோடு அவன் வீட்டு முகப்பில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதெல்லாம் சாயந்திரம் ஐந்து மணிக்கு முடிந்து பார்க் ஸ்டேஷனுக்கு டிராம் ஏறிவிடுவான்.

நாயுடு காலேஜில் நீலகண்டனுக்கு ஒரு வருடம் ஜூனியர். எஃப் ஏ பாஸ் ஆன கையோடு பி.ஏவுக்காக காத்திருக்காமல் அவன் நாயனா கோர்ட் உத்தியோகத்தில் ஆகக் கடைசி வரிசை குமஸ்தனாக இழுத்து விட்டுவிட்டார்.

நாயனா ஜட்ஜ் துரைக்கு பங்கா இழுக்கிற உத்தியோகத்தில் இருந்ததால் இது வாய்த்ததாக நாயுடு பல தடவை சொல்வதுண்டு. அப்போதெல்லாம் சந்தோஷமாக இருந்தால் நாயனாவை குலதெய்வமாக கண்ணில் நீர் கோர்க்க வார்த்தையால் நமஸ்கரித்துப் புல்லரிப்பான் அவன்.

சரியான தினமாக இல்லாவிட்டால், எத்தச் செஞ்சு எளவைக் கூட்டினாரு எங்க நாயனா. ஒயுங்கா படிக்க வைச்சு பி.ஏ முடிச்சிருந்தா இங்கே கோர்ட்டிலே வளுக்கை மண்டையானுக்கு எல்லாம் முடி பிடுங்கிட்டு இருக்க வேணாம் பாரு. அதான் தெவசம் கூட குடுக்காம போய்யான்னு விட்டுட்டேன் என்று தரையில் போட்டு ஓங்கி மிதிப்பான்.

இந்த வீடுதான். இத்தனை வருடம் இந்தப் பக்கமே வராமல் இருந்தாலும் ராஜா அய்யங்காரின் ஷீர சாகர சயனா மாதிரி இதெல்லாம் ஞாபகம் இருக்கிறது. நாள் நட்சத்திரம் திதி இப்படி தினசரி நடவடிக்கையைத் தீர்மானிக்கிற காரியம் தான் மறந்து போகிறது. அமாவாசை என்று நினைவு வராமல் சாம்பாருக்கு சின்ன வெங்காயம் வாங்கிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை வாசல் படி ஏறி கற்பகத்திடம் வசவு வாங்குகிறான். அம்மா திவசத்துக்கு சாஸ்திரிகளை கூடத்தில் உட்கார வைத்துவிட்டு பஞ்ச கச்சமாக வேஷ்டியை உடுத்த பிரயத்தனப்பட்டால் அது லாலி பீலி என்று சதுர்க்காரி உடுதுணி மாதிரி இடுப்பைச் சுற்றி வழிகிறது. எந்தப் பக்கம் மடித்து எப்படி உள்ளே செருகி எப்படித் தழைக்க வேண்டும் என்பது குழப்பமாகத்தான் மனசில் தங்கி இருக்கிறது.

வாய்யா அய்யரே, இப்பத்தான் இன்னாண்ட வர வழி தெரிஞ்சுதா?

வாசல் நடையில் கயிற்றுக் கட்டில் போட்டு உட்கார்ந்திருந்த நாயுடு எழுந்திருந்து அவன் கையைப் பற்றிக் கொண்டான்.

ரிடையர் ஆனதுமே கிழண்டு போயிட்டியேடா. ஆபீஸ் போகாத ஏக்கமா?

நீலகண்டன் நிஜமாகவே நாயுடுவைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு போய்விட்டான். அவனுடைய மிடுக்கும் வெள்ளை வேட்டியும், இந்துஸ்தானி கோட்டும், தொப்பியும் தொப்பையும் போன இடம் தெரியவில்லை. மங்கிய சிவப்பும் பச்சையுமாக சாரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு, மேலே அழுக்கு கதர் துண்டால் நரை பரந்த நெஞ்சை மூடிக்கொண்டு கஷ்கத்தில் கொத்தாக முடி தெரிய நிற்கிறவன் சிரஸ்தார் நாயுடு இல்லை. அவனுடைய நிழலோட சோகையான நிழல்.

நீயும் அப்படித்தான் இருக்கே. கண்ணாடியிலே பார்த்துக்கோ. இல்லே கற்பகத்தைக் கேளு.

ராஜா அய்யங்கார் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் நீல வர்ண லேஞ்சியை ஆட்டிக்கொண்டு மேடையில் இடமிருந்து வலமாகச் சுற்றியபடி சொன்னார். அவருக்கும் வயதாகி இருந்தது.

இது ஒரு கஷ்டம். திடீர் திடீர் என்று ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் பிரக்ஞை சர்வ சுதந்திரமாக வேறே எங்கேயோ மேய்ந்து விட்டு, ராச்சாப்பாட்டுக்கு வீடு திரும்ப வேண்டிய அவசரத்தோடு திரும்ப விட்ட இடத்துக்கு வருகிறது.

உக்காரு அய்யரே. சமுத்திரக் காத்து பிச்சுக்கிட்டு போவுது பாரு. உங்க நொங்கம்பாக்கத்துலே இதெல்லாம் கிடைக்குமா?

நாயுடு உள்ளே போய் தேக்கு மரத்தில் கடைந்து செய்த ஒரு பழைய நாற்காலியை சர்வ சாதாரணமாகத் தூக்கி வந்து கயிற்றுக் கட்டிலுக்கு நேரே போட்டான்.

இவனுக்கா உடம்பு சரியில்லை என்று பார்க்க வந்தோம்?

மனசில் தோணியதை எல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்வதும் அலைபாய்வதும் ரிட்டயர் ஆனதுக்கு பிற்பாடு நீலகண்டனுக்கு ஏற்பட்ட இன்னொரு கோளாறு. சனியனை விட்டுத் தள்ளு. இப்படி பட்டியல் போடுகிறது கூட அதே போலதான்.

நாயுடு பக்கம் கோணல் மாணலாக மடித்த மெயில் பத்திரிகை. சாயந்திரம் அஞ்சு மணிக்குத்தான் வந்திருக்கும். படித்து விட்டு அதே போல் மடிப்பு கலையாமல் திரும்ப வைக்க சில பேருக்குத்தான் முடியும். நாயுடு அந்த கோஷ்டியில் பட்டவன் இல்லை என்பது நீலகண்டனுக்குத் தெரிந்தது.

மெயிலைப் புரட்டிப் பார்த்தான். ராஜகோபாலாச்சாரி ராஜகோபாலாச்சாரி ராஜகோபாலாச்சாரி. முதல்மந்திரி தவிர வேறே ராஜதானியில் யாரும் மூச்சு விடுவதில்லை.

அய்யங்கார் வந்தாலும் வந்தாரு, மரம் ஏரறவங்க அல்லாரும் குடும்பம் குடும்பமா தெருவுக்கு வந்துட்டாங்கப்பா. கள்ளை எத்தினி நாளைக்கு நிறுத்தி வைக்க முடியும் சொல்லு. ஒரு மரத்துக் கள்ளு மாதா கையால ஊட்டுற கஞ்சித்தண்ணி மாதிரி. ராஜகோபால ஆச்சாரிகள் ஒரு தபா குடிச்சா விடுவாரா அய்யரே?

நாயுடு வம்பு வளர்க்க வாகாக ராஜாங்க விஷயம் பேச ஆரம்பித்தான். உலக நடப்பு. சும்மா கோண்டு மாதிரி கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் ஏதொண்ணும் தெரியாத மனுஷன் என்று தோன்ற ஆரம்பித்து விடும். கிரிக்கெட் பற்றி யாராவது பேசினாலும் இப்படித்தான்.

அடே நாயுடு, அய்யங்கார் மந்திரியானதும் தானே கோவில் பிரவேசச் சட்டம் வந்தது. வியாபாரி வித்து வித்து கோடி கோடியா லாபம் சம்பாதிக்கறதுக்கு நியாயமா நாலு காசு வரி கட்டணும்னு கொண்டு வந்தது. சுனா மானா சர்க்கார் என்ன பண்ணினது முன்னாடி? இப்போ என்னமோ கிழிக்கறேன்னு கான்பரன்ஸாம்.

சட்டைப் பையில் இருந்து செண்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் அந்தப் பையன் விநியோகித்த நோட்டீசை எடுத்து நீட்டினான். நாயுடுவிடம் சொல்லலாமா அவனுடைய நக்கலையும், கூட நின்ற கட்சிக் காரர்களுடைய பரிகாசத்தையும்.

வேணாம். நாயுடுவும் சுனா மானா ஆதரவாக இருக்கலாம். ஊஹும். நெற்றி நிறைய திருமண்ணோடு இவன் எங்கே ஒற்றைவாடை டாக்கீஸ் மகாநாட்டில் பிரசங்கம் கேட்கப் போய் உட்கார?

நாயுடு நோட்டீசை வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேறே வேலை இல்லே என்றபடி தரையில் போட்டான். கொடுத்த மரியாதைக்காவது அதை மெயில் பேப்பருக்குள் செருகி வைத்திருக்கலாம்.

நீலகண்டன் நிமிர்ந்து உட்கார்ந்தான். எருமை மாடு கத்துகிற சத்தம். காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஷெட் இறக்கி ரெண்டு எருமைகளைக் கட்டி வைத்திருந்தது சிரத்தையில் பட்டது. நாயனா காலத்தில் இதெல்லாம் இங்கே இருந்ததாக நீலகண்டனுக்கு நினைவில் இல்லை.

இரு, புண்ணாக்கு வச்சுட்டு வந்துடறேன். ரிடையர் ஆனதுக்கு ஏதாச்சும் வேலை பார்க்க வேணாமா. அதான் பொண்டாட்டியைச் சுத்தாம எருமையைச் சுத்திட்டு கிடக்கேன்.

நாயுடு சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு கொட்டிலுக்குப் போனான்.

ஒரு பசுமாடு வாங்கி வீட்டில் வளர்த்தால் என்ன?

நீலகண்டனுக்கு நப்பாசை வந்தது.

மாடு எல்லாம் லட்சுமிதான். ஆனா பின்கட்டு முழுக்க சாணி போட்டுத் தள்ளும். அதைக் கறக்கப் படிக்க வேணும். சைக்கிள் ஓட்டுகிறது போல நறுவுசான வேலை அது. நீலகண்டனுக்குப் படிந்து வராது.

என்னைக் கரையேத்துடா குழந்தே. பசுமாடு எல்லாம் அமோகமா அப்புறம் வாங்கலாம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்தக் குரல் கேட்டது. நீலகண்டனுக்கு மாத்திரம் முணுமுணு என்று கேட்ட சத்தம்.

உள்ளே தான் இருக்கேன். கூட்டிண்டு போயிடேன். புண்ணியமாப் போயிடும்.

இருட்டு படர்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 45ஆவணப்படம்: முதுமையில் தனிமை
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *