வெகுண்ட உள்ளங்கள் – 1

author
0 minutes, 41 seconds Read
This entry is part 8 of 9 in the series 31 மே 2020

கடல்புத்திரன்

        இக்குறுநாவலில்….,

      சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைத்து சில பொதுவான அபிப்பிராயங்களை கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன்.

      இயல்பான பேச்சுத்தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படியே எழுத முயன்றேன். “பேச்சுதமிழ் பற்றிய ஆய்வுப் புத்தகம்” (வன்னிய சிங்கம் எழுதியது) ஒரு உற்சாகத்தைத் தந்தது. இரு தமிழ் வழக்கை விட்டு (உரையாடலை பேச்சுத் தமிழிலும் மற்றதை செந்தமிழிலும் எழுதுதல்) ஒரு தமிழில் (எல்லாவற்றையும் பேச்சுத் தமிழில்) எழுதிப் பார்க்கப்பட்டது

       இது என்னுடைய கன்னி முயற்சி. இந்த தொடர்கதை ஒரு சமயம் தரம் பெற்றுவிட்டால் எழுத்துலக வழிகாட்டியான ராஜம் கிருஷ்ணனுக்கு, அண்ணர் கிரிதரனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.

      மற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

      சாமானிய ஒருவனின் தற்கொலைக்கு சமூகச்சீரழிவு காரணமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கிராமப்புறத்திலும் அல்லது ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் நிகழும் அசாதாரணச் சாவுகள் அவ்விடத்திலேயிருப்பவர்கள் அறிந்தேயிருப்பார்கள். அதிலுள்ள நியாய மறுப்புகளை எல்லாம் அவ்விடத்திலிருக்கிற‌ அனைவரும் அறிந்தேயிருப்பார்கள்.

     அவற்றை கதையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அந்த வகையிலாவது அவர்களுக்கு அஞ்சலி மலர்களைத் தூவுங்கள்.

      தமிழீழத்தின் மண்ணில், மரணத்தைத் தழுவியவர்களின், சகோதரப் படுகொலைக்குள்ளானவர்களினதும் கணக்கெடுப்புகள் வெளிப்படட்டும் !

     ஒரு சந்ததியாவது, ஒரு காலத்திலாவது, நமது மண்ணில் நிகழும் ‘அநியாயச் சா’வைத் தட்டிக் கேட்கட்டும் !

      நாவலில், நமது மண்ணின் பெயர்களை தாராளமாகப் பாவிக்கலாம் என்ற கொள்கையை ஏற்றிருக்கிறேன்.

      பாத்திரங்களின் பெயர்களை மாற்றியும் கற்பனை கலந்து உருவாக்கியும் நடமாட விட்டிருக்கிறேன்.

      இதில் நாவல் பண்புகள் பேணப்பட்டிருக்கிறதா என்பதை அறியேன்.

இருந்தபோதும் ஒரு முயற்சியாக உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன்.

           28 ஆண்டுகளிற்குப் பிறகு ….எடுத்து மீள வாசித்த போதே…. வள்ளம்,படகு என்ற சொற்களை பாவித்ததில் சிறு குழப்பம் இடம் பெற்றிருப்பது தெரிந்தது.அதோடு மேலும் சில குறைகள் இருப்பதும் தெரிந்தன.அவற்றை ஓரளவு சீர் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.

     இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது.அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நாலு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம்.அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல்.தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி,அங்காலப் பக்கம் இருப்பது வேலணைத் தீவு.காரைநகர்,பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு,மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும்.

     ராஜபட்சா அரசாங்க காலத்தில் அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது.கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட் டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது. ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை.

     இந்த இடத்தில் தான் …1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது.   

     இந்த கதையிலே ஒவ்வொரு முறையும் கை வைக்கிற போதும் நீண்ட நாள்களை விழுங்கிறது. முதல் தடவை எழுதிய போதும் சரி,இப்ப , திரும்ப ஒரு தடவை சீர் பார்த்து எழுதுற போதும் சரி போதும், போதும் என்றாகிப் போகிறது

    இனி வாசியுங்கள் !

         இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் … இருக்கலாம் !

                                ஒன்று

 தீவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கிற அந்த சிறிய கடல்பரப்பு ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கனகனின் பூட்டன் காலம் அல்லது அதற்கு முந்தியதாக இருக்கலாம். அங்கே சிறிய துறையிருந்ததற்கு அடையாளமாக உள்ளே சென்ற மேடையொன்று அழிந்து சிதைந்து காணப்பட்டது.

அவன் அப்பன் சிலவேளை “அப்படியே றோட்டு தீவுக்குச் சென்றது. இப்ப கடல் மூடிவிட்டது” என்று கதையளப்பான். ஒருவேளை அப்படி யிருக்குமோ என்று அவனும் நினைப்பதுண்டு. ஏனெனில் தார்ப் பருக்கைகளோடு கூடிய றோட்டு ஒன்று கடலுக்குள்ளே போயிருப்பதையும் யாரும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

அவ்விடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் பாவிக்கிற இடமாகவே அது கனகாலமாக புளங்கி வருகிறது. அவர்கள் தங்குவதற்கான ஒரு நீண்ட வாடி ஒரு புறத்தில் அமைந்திருந்தது.முந்தி ஒலைக்கொட்டகையாக இருந்ததை ஒருமாதிரியாக அரச மானியத்தைப் பெற்று அஸ்பெஸ்டாஸ் கூரையோடு கூடிய சீமெந்துக் கட்டிடமாகக் கட்டியிருந்தார்கள்.

அந்தப்பகுதி பிரபல்யமாகவும், அவசியமானதாகவும் வரும் என்று எந்த மீனவனும் நினைத்திருக்க மாட்டான். சிறிய வள்ளத்தில் சென்று மீன் பிடித்து வருகிற அவர்களை புதிதாக ஒரு பிரச்சினை மூழ்கடிக்கப் போகிறது என்று மூக்குச் சாத்திரமா அவர்களுக்குத் தெரியும்.

கடல் பரப்பு அமைதியாக இருந்தது. மனதில் எரியும் கனலை அடக்க முடியாதவர்களாக அண்ணன் முருகேசு, கோபாலு, தில்லை, சப்பை போன்ற பிரதிநிதிகள் இடுப்பில் ஆயுதத்தைச் சொருகியிருந்த அந்த திக்குவாய்ப் பெடியனை சூழ்ந்திருந்தார்கள்.

கனகன், அன்ரன், நகுலன், நடேசு செட் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரமாக நின்றது.

“தம்பி, இது சரியில்லை. அவங்களை அந்தக் கரையிலிருந்து ஒடுறதுக்கு நீ ஒப்புதல் தந்தாய். இப்ப, ஒரு வள்ளம் இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருக்கிறது. உவங்களுக்கு சரியான பாடம் படிப்பிக்கேலும். நீ ஒப்புதல் தந்திருப்பதால் நாம எல்லாம் பொறுமையாக இருக்கிறம். அவங்களுக்கு நீ திட்டவட்டமாக வரையறை சொல்லி அதைக் கடைப் பிடிக்க வைக்க வேணும்” முருகேசின் கோபப் பேச்சு கனகனை சிறிது கிலி கொள்ள வைத்தது.

இவன் பயம் அறியாதவன். உயர் சாதிப்பெண்ணைக் காதலிச்சு, கூட்டிக் கொண்டு வந்து வாழ்கிறவன். நண்பர்கள் சிலருடன் எளிமையாக ஐயனார் கோவிலில் தாலி கட்டுறபோது அந்த சாதியினர் ஊருக்குள் அட்டகாசம் செய்ய வந்தார்கள். திருக்கை வால், மண்டா, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு துணிவாக எதிர் கொண்டவர்கள் .ஆட்தொகை, ஆயுதம் பற்றி எல்லாம் கவலைப் படாத கூட்டம்.

இப்ப,இயக்கப் பெடியன் ஒருத்தனையே காட்டமாக எதிர் கொள்கிறார்கள்.

இவர்கள், சடாரெனச் சுட்டுத் தள்ளி விடுவார்கள். கனகனால் அவனை மறிக்க முடியுமா? தெரியவில்லை. எனவே, பயந்த மனதுடன் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தீவு மக்கள் முன்னர் பண்ணை வழியாலும் காரைநகர் வழியாலுமே சென்று கொண்டிருந்தார்கள். கோட்டையில் அரசபடைகள் குவிக்கப் பட்டு பண்ணைப்பாதையில் ‘மண்டை தீவு முகாம்’ திறக்கப் பட்ட போது, அது அடைபட்டு விட்டது. காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக் காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக…. இரண்டாவதும் தடைப்பட்டு விட்டது.இதனால், கவனிப்பாரற்று கிடந்த அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவையை பயன் படுத்த‌பிரசித்தமடைந்து விட்டன.

இவ்விடத்தில்,சிறிய வள்ளங்களை மட்டும் அதிகமாக கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள், தலைக்கு இரண்டு மூன்று ரூபா என வசூலித்து மக்களை தீவுப்பகுதியில் கொண்டு போய் விடத் தொடங்கினார்கள்.

இரு கரைகளிலும் மினி பஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வரத்தொடங்கின. பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க் கடை, தேத்தண்ணிக் கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்று விட்டது. அவர்களுடைய தீவுப் பகுதித் தோழன் ஒருத்தன் கூட பீத்தல் தட்டிகளுடன் ஒரு சிறிய மண்ணெண்னெய்க் கடை போட்டு விட்டிருக்கிறான்.”என்னடா,இப்படி போட்டிருக்கிறாய்?மழை வந்தால் தெப்பமாய் நனைத்து விடுவாய்யே?”என்று அன்டன் கேட்க ,”இது தொடக்கம்”என்று சொல்லிச் சிரிக்கிறான்.

கடல் வலயச் சட்டங்களால் மீன் பிடிப்பு  அறவே இல்லாதிருந்தது.
கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்தார்கள். அதன் வருவாய் போதவில்லை.பொதுவாக எல்லா மீனவர்களுமே சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். இந்த வருவாய் அவர்களது வறுமையை கணிசமான அளவு விரட்டியது எனலாம். பரவாய்யில்லையாய்… இருந்தது.

தொழிலற்றிருந்த நவாலி, ஆனைக்கோட்டை மீனவர்கள் தம் பெரிய வள்ளங்களை உடனடியாக‌ கல்லுண்டாய் கடலினுாடாக ஒட்டி கொண்டு அங்கே வந்தார்கள். அவர்களின் ஒரு வள்ளத்தில் இவர்களுடைய‌ இரு வள்ளங்களை அடக்கலாம். ஒரு ட்ரிப்பிலே வந்தவர்கள் அதிக பணம் காண‌,உழைக்க.இவர்களுக்கு கோபம் உண்டாகியது. கோபம் எப்பவும்  நாசம் விளைவிக்கிற ஒன்று.

எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப்பகுதி ஒரியக்கத்தின் பொறுப்பாளரான அந்த திக்குவாய்ப் பெடியன் ஒரளவுக்கு ஏற்றிருந்தான். அதன் படி வாலையம்மன் பகுதியினர் தீவுக்கு ஆட்களை, சாமான்களை கொண்டு போவதென்றும் மற்றவர்கள் தீவுப் பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பார்ப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே, பெரிய வள்ளம் ஒன்று இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு போயிருந்தது. முழுமையான‌ மீறல். எனவே வாலையம்மன் பகுதியினர் வள்ள ஒட்டத்தை நிறுத்தி விட்டு நியாயம் கேட்கத் தொடங்கினர்.

ரவுண் பக்கமிருந்து தீவுப் பகுதியிற்கு உத்தியோகத்திற்குப் போக வந்தவர்களும், ரவுணிற்கு பல்வேறு தேவைகளுக்காக போக வந்த தீவு மக்களும் ….இரு பகுதியிலும் குவியத் தொடங்கினார்கள்.

கடற்பரப்பு வள்ள ஒட்டமற்று புயலுக்கு முன்னால் வருகிற அமைதி போல இருந்தது.அந்தப் பெடியன், அமைதியாயிருக்கச் சொல்லிக் கேட்டிருந்தான்.

‘ஒட்டிய ஆட்கள் யார்’ என அவன் விசாரிக்கையில் அக்கரையிலிருந்து சனத்துடன் ஒரு பெரிய வள்ளம் கரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

கதைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவன்  மீதுள்ள நம்பிக்கை விழுந்து போனது .“டேய் ஒட்டுறவனிட கையை முறியுங்கடா” கத்தினான் முருகேசு. கரையை அடைந்த அதனுள் பஞ்சனும்,தில்லையும் பாய்ந்து ஏறி ஒட்டிகள் இருவரையும் பிடித்து இழுத்து வீழ்த்தி பறித் தெடுத்த‌ துடுப்புத் தடிகளால் போட்டு சாம்பித் தள்ளிவிட்டார்கள். ஒருத்தனுக்கு முழங்கால் உடைந்து போனது. மற்றவனுக்கு பலமான கண்டல் காயங்கள். இந்த சண்டைக்கிடையில் மக்கள் மிண்டியடித்து இறங்கிக் கொண்டது.

அந்த‌  பெரிய‌ வள்ளம் அக்கரைச் சேர்ந்து பதினைந்து நிமிடம் இருக்கும். அக்கரையிலிருந்து ஐந்தாறு  பெடியள்களுடன் நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி வேகமாக‌ விரைந்து வந்தன.அவர்களுக்குள் திகில் பரவத் தொடங்கியது.

“வருகிறவர்கள் மற்ற  இயக்கத்துப் பெடியள்களடா” என தில்லை கத்தினான்.

“நீ தானே ஒப்புதல் தந்தாய்” என்று முருகேசன் தொட்டு பலர் திக்குவாய்யனைச் சூழ்ந்து கொண்டனர்.

நிலைமை சீர் கேடாகி விட்டது என்று அனைவருக்கும் புரிந்தது. கனகன் அண்ணணை இழுக்க ஒடினான். மற்றவர்களும் தம் உறவினரை இழுத்துக் கொண்டு வர ஒடினார்கள்.அதற்கிடையில் யாரும் எதிர்பாராத‌ நிகழ்வுகள் நடந்து விட்டன.

———————————————

Series Navigationகவிதைகள்‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *