வெகுண்ட உள்ளங்கள் – 8

கடல்புத்திரன்

                                                       எட்டு

இருளத் தொடங்கியிருந்தது.

“வாவன்ரா.காம்பில தமிழன் சிந்திய ரத்தம் வீடியோ கசட் இருக்கு. சுந்தரம் வீட்டு தொலைகாட்சியில போட கேட்டிருக்கிறம். ஒம் என்றவையள்’ என்று அவனை திலகன் கூப்பிட்டான். அவளின் நினைவை விரட்ட உதவியாயிருக்கும் என்று புறப்பட்டான்.காம்பில் யாரும் இருக்கவில்லை. சுவரோடு அகன்ற இரு வாங்குகள் போடப்பட்டிருந்தன. ஆளுக்காள் ஒவ்வொன்றில் ஃபிரியாக ஏறி கால்களை நீட்டினார்கள். படுத்துக் கிடந்தபடி கதையளப்பில் ஈடுபட்டார்கள்.

வாங்கில் கிடந்த புத்தகங்களை அவன் கிளறிப் பார்த்தான். சமூக விஞ்ஞான வெளியீடு மனதைக் கவர்ந்தது. உதைப்  போல் நிறையப் புத்தகங்கள் வெளி வர வேண்டும் என்று நினைத்தான். புத்தகங்களை புரட்டிய போது அவன் எதிர்பார்த்தது போல் சாதி பற்றிய நீள‌மான‌ கட்டுரை ஒன்றும் இருந்தது.

திலகன் எழும்பி கசட்டும் போட்டு கேட்கக் கூடிய வானொலியில், இதயக்கோவில் கசட்டைச் செருகினான். காம்ப் முழுவதையும் சோகத்தோடு கூடிய பாட்டுக்கள் ஆக்கிரமித்தன. அவன் மனநிலையில் கேட்க நல்லாயிருந்தது.

“இந்த வீடியோவை முன்னம் பார்த்திருக்கிறாயா?” என்று திலகன் கேட்டான்.பெரும்பாலும் உள்ளுக்க ஒடின படம் என அன்டன் சொல்லியது ஞாபக மும் வந்தது. கனகன் இல்லை என தலையாட்டினான்.

“இந்த முறை கலவரத்தால் கொழும்பிலயிருந்து பல கப்பல்கள் அகதித் தமிழர்களை நிறைத்துக் கொண்டு வந்தன பார்.. லங்காராணி, மேரி இப்படி கடைசியாக இந்திய சுற்றுலா சிதம்பரக் கப்பலும் வந்திருக்கிறது.

கே.கே.எஸ்.துறைமுகத்தில் அவர்கள் இறக்கப்பட்டதையும் அயலிலுள்ள நடேஸ்வராக் கல்லூரி காயப்பட்டவர்களை பராமரிக்கும் ஆஸ்பத்திரியாக‌ செயற்பட்டதையும், அவர்கள் அளித்த‌ சிறிய பேட்டிகளும் வீடியோவாக்கப் பட்டிருக்கின்றன‌. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் முழுமையாக பங்களித்திருக்கிறார்கள். மாணவர்கள் அதோடு பழைய கலவர புள்ளி விவரங்களை இணைத்து’மிதவாத அரசியல் செயற் பாட்டை விபரித்ததும்.இப்பிரச்சனைகளின் காரணிகள் எவை என்பது பற்றி விளக்கம் கொடுத்ததுமாக. நல்லமுறையில் வீடியோ படமாக்கியிருக்கிறார்கள்” என்று சிறிய விளக்கமே கொடுத்தான்.

“நீ அருளர் எழுதிய ‘லங்காராணி’ புத்தகம் வாசித்திருக்கிறாயா?” என்று மேலும் அவன் கேட்டான். கனகன் அப்புத்தகம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறானே தவிர, கண்டதில்லை. “இல்லை” என்றான்.

திலகனுக்கும், தானும் இயக்கத்தில் இழுபடா விட்டால் வாசித்திருக்க மாட்டே னே என்பது சட்டென புரிய, தவறை உணர்ந்து கொண்டான்.

“77 கலவரத்தின் போது கொழும்பிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் லங்காராணி. அந்த கப்பலில் வந்தவர்களில் ஒருவராக இந்த அருளர் இருக்க வேண்டும். அந்த கப்பலில் இருந்தவர்களைக் கொண்டு எமது மக்களின் அபிலாஷைகளையும் ஊசலாட்டங்களையும் இளைய மட்டத்தினரின் குமுறல்களையும் தத்ரூபமாகவும் அழகாகவும் நாவலாக‌ படைத்திருக்கிறார் என்று அதைப் பற்றி ‌ சிறிய விளக்கமும் கொடுத்தான்.

“அதை ஒரு சாம்பிள்’ என்றால் அதைவிட மோசமான இம்முறை அவலத்தை களஞ்சியப்படுத்தும் முயற்சியாக தமிழன் சிந்திய ரத்தம் வீடியோவை பெரிதாக‌ எடுத்திருக்கிறார்கள்” என்று மேலும் சொன்னான். “உனக்குப் படம் பார்த்தால் எல்லாமே விளங்கும்” என்றவன் பாட்டுக் கசட் ஒரு பக்கம் முடிந்திருக்கவே மாற்றிப் போட எழும்பினான்.

“டீ ஏதும் குடிக்கப்போறியோ. எனக் கேட்டான்.

“போட்டால் குடிக்கிறதுக்கு என்ன” என்றான் கனகன். திலகன், “நீயும் என்ர  கேஸ் தான்”சொல்லி சிரித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு அந்தப் பெரிய சாதிக் கட்டுரையை வாசித்து முடிக்க முடியாது என்று பட்டது. மூடி பழைய இடத்திலே வைத்து விட்டான் .

அலுப்படிக்கவே, அவனும் எழும்பி உள்ளே போனான். ஹோலின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு கிரனேட்டுக்கள், எம் 80 என்கிற இரும்புத் தட்டுடன் கூடிய தகரக்கூடுகள், சிறிய வயர்க்குவியல், சற்றுத் தள்ளி பேப்பர் புத்தகக் கட்டுகள், சுவரில் பல நோட்டீஸ் படங்கள் என இருந்தன.

கனகன் வியப்புடன் அவற்றைப் பார்த்தவாறு நின்றான். ஒருவித அறியும் ஆர்வம் அவனுள் கிளர்ந்தது. டீயுடன் வந்த திலகன் ஒரு படத்தைக் காட்டி “இவனை உனக்குத் தெரியுமா” என்று கேட்டான்.தெரியாது என அவன் தலையை அசைத்தான். “ஒரு தடவை இங்கிருக்கும் அகதி முகாம் ஒன்றுக்கு இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களை படகில் ஏற்றி வந்த போது நேவியால் சுட்டுக் கொல்லப் பட்டு விட்டான்”.

அவனோடு கூட வந்த‌ இறந்தவர்கள் படங்களும் அதே துண்டுப் பிரசுரத்தில் இருந்தன. “சிறந்த ஒட்டி. அவனுடைய இழப்பு எங்களுக்கு எல்லாம் பெரிய பாதிப்பு” என்றான்.

அவர்களின் வாழ்க்கை இன்னொரு விதமானது என்பது கனகனுக்குப் புரிந்தது. அதில் பெருமைப் படுவது, கல்யாணம் கட்டி வாழ்வதில்லை. அரசியல் பிரச்சனைகளுக்கு உயிரைத் துறப்பது தான். சாதாரணமாக எல்லாருக்கும் உள்ள கடமைகளை மறந்து விட்டதால் இப்படியானவர்கள் மேல் போராட்டம் பொறிந்து விட்டது.

முன் விராந்தைப் பக்கம் பழையபடி இருவரும் வந்தமர்ந்தார்கள்.

பனை மரங்களிலிருந்து இதமான காற்று தவழ்ந்து வந்தது.
“எப்படியடா.உன்ரை ஆள்? என்ன சொல்றாளடா?” என்று திலகன் சிரிப்புடன் கேட்டான்.அவனுக்கு ஒட்டை வாயன்’ என்று அன்டனைத் திட்டவேண்டும் போல் தோன்றியது.

‘எந்த விதமாக இயக்கத்துக்குப் போனான்’ என்பதை அறிய நல்ல சந்தர்ப்பம் என கனகனுக்குப் பட்டது.“என்னை விடடா, இதில் உனக்கு எப்படியடா விருப்பம் ஏற்பட்டது ?” என்று கேட்டான். ‘இவள்’ எ ன்ற மாதிரி  இவ னுக்கு கேட்டது.

“எதைக் கேட்கிறாய் ?” என்று விளங்காமல் திலகன் அவனைப் பார்த்தான். மணியைப் பற்றிக் கேட்கிறானோ என்று நினைத்தான்.

கனகன், “இயக்கத்துக்குப் போனதைக் கேட்கிறேன்” என்ற போது மூச்சு வந்தது.

“ஒ ! அதுவா , ஒருவிதத்தில் உங்க நடந்த பிரச்சனை தான் காரணம் என்று சொல்லலாம்” தொடர்ந்தான்.”அக்கா தற்கொலை செய்ய முயற்சித்ததை அறிந்த போது வீட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சின்னக்கா அண்ணனை ஏசினாள். கடைசியில் என்னைப் போகச் சொன்னார்கள். சாதியைத் தூக்கி பிடிப்பதும் அதன் காரணமாக அக்காவை வெறுப்பதும் எனக்கு  அறவே பிடிக்காமல் இருந்தது. இங்க, வந்த போது எனக்கு உங்கள் எல்லாரையும் பிடிச்சுப் போச்சு. திரும்பிய போது எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆவலாக செய்திகள் கேட்டார்கள். இருந்தாலும் சின்னக்கா அடிக்கடி போறதை விரும்பவில்லை.

அண்ணன் ஏன் அப்படி இருந்தானோ?  தெரியவில்லை,  துப்பரவாக போவதை விரும்பவில்லை. சின்னதுகள்(இரண்டு தங்கச்சிகளும்,இரண்டு தம்பிமாரும்) அக்காவைப் பற்றி மேலும் அறிய‌ ஆசைப்பட்டதுகள். அடுத்த கிழமை நானாகவே இங்கு வர  வெளிக்கிட்டேன். அக்காவை பார்க்கப் போகிறேன், ஏதாவது சொல்ல வேணுமா என்று விசமத்துக்குக் கேட்டேன். அண்ணன் என்னை அடிச்சு அறையில் பூட்டி வச்சுட்டான்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த குமார் என் பள்ளி நண்பன். என் பிரச்சினையை அவனோடு ஏற்கனவே கதைத்திருந்தேன். அவன் ஒரு ஐடியா தெரிவித்தான். “டேய் நீ வந்து எங்க காம்ப்பிலே இரண்டு நாள் நிண்டிட்டுப் போ. உன்னை இயக்கத்திற்குப் போனவன் என்று நினைப்பினம். பிறகு உன்னோட யாரும் சோலிக்கு வரமாட்டினம்’ என்றவன்.

தம்பி மூலமாக அவனுக்கு செய்தி அனுப்பினேன்.

அவன் வீட்டில் வந்து என்னைக் கூப்பிட்டான். அண்ணனுக்கு இயக்கம் என்றால் சிறிது பயம். பேசாமல் கதவைத் திறந்து விட்டான். எங்கட எ.ஜி.எ. பிரிவில் வேலை செய்வது நல்லதில்லை என பட்டதால் இங்கே வந்தேன். இப்ப என் மனசுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது தெரியுமா ? ,அக்காவை வெறுக்கிறதுக்கு சரியான காரணமில்லை. சாதி  கெளரவப் பிரச்சினைகளை எவ்வளவு காலம் வைத்திருப்பார்கள், பார்க்கலாம் ! ”

கனகனுக்கு கேட்க படு ஆச்சரியமாக இருந்தது !.

மாலை எட்டு மணிக்கு பெடியள் செட் காம்பிற்குள் புகுந்தது. சுந்தரத்தின் வீட்டில் வீடியோ போட்டுப் பார்க்கும் போது அன்டனும் நகுலனும் வந்து விட்டார்கள்.

படம், யாழ்ப்பாண மக்களுக்கு உண்மைகளை சிறிதளவாவது உணரவைக்கும் தன்மை படைத்ததாக இருந்தது. அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் ஏமாற்றியதை கோர்வைப்படுத்தி விளக்கமாக தெரியப் படுத்தினார்கள். கண்ணை கலங்க வைக்கும் சிறு,சிறு பேட்டிகள். தொடர்ந்தும், இரத்தம் சிந்த வேண்டியிருக்கிற இருண்ட‌ எதிர்காலம் ?

“இந்த வகைப் படங்களையும் செய்திகளையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பதால் தான் எங்களுக்கு ஒரளவு மக்களைப் பற்றி அறிய முடிகிறது. சிந்திக்க முடிகிறது. மக்கள் நல ஆய்வுத் திட்டங்களை வரையறுத்து செயல் படுத்த ஊக்கம் பெறுகிறோம்”. என்ற‌ திலகனின் உணர்ச்சிப் பேச்சு சிறிது அசர தான் செய்கிறது. இயக்கம் ஒரு தாய்யாய் ‘இரு கை நீட்டி கூப்பிடுவது’ போல் பிரேமை தோன்றியது. விலங்கிடப் பட்ட தமிழன்னை விடுதலைக்காக கூப்பிடுவது போலப் பட்டது.

படம் முடிந்த பிறகு பெடியள் கலைய அவர்கள் காம்ப்பிற்கு திரும்பினார்கள்.

வீடியோக் கசட்டை வைத்து விட்டு பொறுப்பாக நிற்கிற ரவியோட கதைத்துக் கொண்டு சமையலுக்கு உதவி செய்தார்கள். அங்கேயே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டார்கள். கருவாட்டுக் குழம்பும் சோறும் ருசியாக இருந்தது. புழுக்கமாக இருக்க.”ரவி, நாங்க போயிட்டு நாளை வாறம். அக்கா வீட்ட தங்கியிடு வேன்’ என்று விடை பெற்றான். திலகன் வரும் போது காற்று சற்று அடங்கி விட்டிருந்தது.

மன்னி வீட்டு வளவில் சாக்கையும் பாயையும் போட்டு படுக்கை விரித்தார்கள். கனகனும் அவர்களோட வந்திருந்தான். வசந்தி கடிதம் தர அந்தரப்பட்டதையும் வேலை அலைச்சலில் பிறகு வருகிறேன் என வர நேரிட்டதையும்…. அன்டன் தெரிவித்தான். திலகன் சிரித்தான். “இதை நீ  சொல்லாமலே விட்டிருக்கலாமே” என்றான்.

“ஏன் கனகு நீ அவயள் வீட்டில் நேரே போய் கேட்டுக் கட்டிக் கொள்ளன். எங்களைப் போல நீ இயக்கமில்லையே” என்று நகுலன் கேட்டான். திலகனுக்கு அப்பவே அன்டனின் நிலைமை புரிந்தது. பாசறை வகுப்புகள் நடைபெறும் போது சுயவிமர்சனம் கடைசியாக நடைபெறும் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய பல விசயங்களை அதிலே தெரிவிப்பார்கள். தம்மைப் பாதித்த சாதி, சுய, பெண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் கணிசமானளவு  சொல்வார்கள். அன்டனும் ஒருமுறை தன்னுள் மறைத்து வைத்திருந்த வசந்தி மேலுள்ள காதலைத் தெரிவித்திருந்தான்.

காலம் வர தெரியப்படுத்தலாம் என காத்திருந்தான். இயக்கம் என வெளிக்கிட்ட பிறகு, காதலாவது, குடும்பமாவது ? அவனில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆபத்தை முதலில் எதிர்நோக்கிப் போகிறவர்களாக இருப்பதால் வாழ்வைப் பற்றி திடமாக நினைக்க முடியாதிருந்தது. கனகன் அவளை விரும்பிய போது உதவி செய்திருக்கிறான்.

திலகனுக்கு அன்டன் மேல் அனுதாப உணர்வு பிறந்தது. யார், யார் மேல் அனுதாபப் படுவது ?, வெறுப்புடன் சிரித்துக்கொண்டான்.

“டேய்,  நகுலன் சொல்றது சரிதான். காலத்தைக் கடத்தாமல் …வீட்டில் நேரே போய் கதைத்துப் பார். இல்லாவிட்டால் நாங்கள் கதைக்கிறமடா” திலகன் கூறினான்.

ஆச்சரியத்துடன் கனகன் அவர்களைப் பார்த்தான். ‘இயக்கம் பொதுவாக பலரை துணிச்சல்காரர்களாக‌ மாற்றி விட்டது. சிந்தனை வீச்சையும் செயல் துடிப்பையும் சிறிது கூட்டி விட்டது. புரிந்தது.

சிறியவர்களை பெரியவர்களாக்கி விட்டது .பெடியள் அணியில் திலகனைத் தவிர மற்றவர்கள் உள்ளூர். அவன் சம்பந்தப்படுவதை நல்லபடியாகப் பார்க்க மாட்டார்கள். அண்ணா உட்பட பலர் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தியும் விடுவார்கள்.

பாவம் மன்னி ! ,அவட ஒரே இரத்த உறவாய் வந்து நிற்பவன் இவன். தன் விடயத்தால் அக்கா தம்பியின் உறவு பாதிக்கப்பட வேண்டாம். கண நேரத்தில் ஒடிய சிந்தனையால் “மச்சான் நேரம் வரேக்கை நானே கேட்கிறேன்” என்றான்.

Series Navigationதுயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்