வெளியிடமுடியாத ரகசியம்!

 

 

_கோமதி

 

இளவரசு வெகு தொலைவிலிருந்து மாற்றலில் வந்திருந்தான். ஆபீசில் எல்லா ருக்குமே அவனை ரொம்பவும் பிடித்துவிட்டது. உரத்த குரலில் பேசக்கூட மாட்டான். கேட்ட கேள்விக்கு பதில் தவிர வேறு பேச்சே கிடையாது. சரியான நேரத்துக்கு வருவதும் வேலை முடிந்தவுடன் கிளம்புவதும் அவன் வழக்கம், மனைவி மக்களை தன் ஊரிலேயே தன் பெற்றோரிடம்விட்டு வந்திருந்தான். அதனால் வாரா வாரம் ஓடுவதுமில்லை. கடிதம் எழுதுவதோடு சரி, மாதசம்பளம் வாங்கிய உடனேயே வீட்டுக்கு அனுப்பி வைப்பான்.

 

சிக்கனம் என்பதை அவனிடம்தான் கற்கவேண்டும். ஒருசிகரெட் வெற்றிலை பாக்கு, மூக்குப்பொடி என்று எந்த பகடிக்கமுமில்லை. சீட்டாட்டம் நண்பர் களுடன் அரட்டை சினிமா, டிராமா, என்ற பழக்கமுமில்லை, கூடவே வேலை செய்பவர்கள் இப்படிக்கூட ஒரு மனிதனா? என்று வியந்து நின்றார்கள், அவன் கேட்டது போலவே அவன் ஊருக்கே அவனுக்கு மாற்றலும் வந்துவிட்டது. எல்லாருமே அவனை வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார்கள்.

 

வாசுவுக்கு எல்லாரிடமும் அட்ரஸ் போன்நம்பர் வாங்கிவைத்துக்கொள்வது ஒரு பழக்கம் அவன் டயரியில் உறவினர் நண்பர்கள் தவிர சினிமாக்காரர்கள், அரசியல்தலைவர்கள் பிரமுகர்கள் என்று எதைத்தேடினாலும் உடனே கிடைக் கும். இளவரசுவின் அட்ராஸ் போன் நம்பரும் இருந்தது. மறுபடி ஆறுமாதங் களான பின் வாசு ஒரு திருமணம் என்று போக இளவரசுவின் ஊர் போக வேண்டி இருந்தது அவன் மனைவியின் உறவினர் வீட்டு கல்யாணம் அப்போது இளவரசுவையும் பார்க்க எண்ணினான். அவன் கொடுத்த அட்ரஸில் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தபோது ஒருவன் ”யார்வேணும்? என்றான்.

 

வாசு மிடுக்குடன் இளவரசு என்று தொடங்குவதற்குள் என்ன? எங்க தலைவரை பேர் சொல்லிக்கேக்குறதில் இருக்குதா? என்று வாசுவை குதித்தபடி அடிக்க வந்தான். வாசு பிரமித்தவனாக நின்றபோது உள்ளே இருந்து ஒரு நடுவயது பெண்மணி வெளியே வந்து “யாரது? கஸ்மாலம்! ஏதாச்சும் தண்டச் செலவுக்கு வழி வைக்கும்’’ என்று கத்தியபடி வந்தாள். வாசு பயந்தவனாக

ஆறு மாசத்துக்கு முன்னே எங்க கூட மெட்ராஸிலே வேலை பாத்தாரு, அவரு இங்கே இருக்கிறதாச் சொன்னாரு. இருந்தா பாக்கலாமேன்னு சும்மா தான் வந்தேன். அவரில்லயா? என்றான்.

 

, “அவரை இப்படி சும்மா வாச்சும் பார்க்க முடியாது.“முன்னமேயே வரட்டு மான்று கேட்டுகிட்டு அவரே வான்னு சொன்னாதான் அவரைபாக்க முடியும் ஆனாலும் இந்த மெட்ராஸ் போய் வந்த பின்னே ரொம்பவே சீப்பாயிட்டாரு, ஒருத்தருக்குமே ஒரு பயமில்லாம போயிடிச்சு’’ என்று சொல்லி அந்தப் பெண்மணி உள்ளே போளிணிவிட்டாள்.

 

அங்கே நின்ற ஆள். “ஏன் நிக்கறே! போய்யா! இங்கெல்லாம் ராஜா, மஹாராஜா

வந்துகூட பார்க்க முடியாம திரும்புவாங்க இவன் வந்துட்டான். பாத்துட்டுப் போக’’ என்று கேலிபேசினான்.

 

தெருமுறையிலிருந்த ஒருவன் ”என்னய்யா? பாத்தியா தலைவரை? என்று கேட்டான் ’இல்லை என்று வாசு தலை அசைக்கவும், அவன் “அட, இந்தநாள்ள நம்ப ஜனாதிபதியைக்கூட போய் பார்த்துட்டு வந்துடலாம், ஒரு பேட்டை ரௌடியை பரம்பரை தாதாவை சட்டுன்னு பார்த்துட முடியுமா? படிப்படியா முறையாத்தான் போவணும்’’ என்றான.

 

வாசு ஊர் திரும்பி தன் நண்பர்கள் யாரிடமும் இளவரசுவை சந்திக்கப்போன வரலாறு பற்றி மூச்சுகூட விடவில்லை. அவனால் ஜீரணிக்கமுடியாத விவரத்தை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள அவனால் முடியவேயில்லை

 

 

 

 

Series Navigationஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!மீள்பதிவு