ஸிந்துஜா கவிதைகள்

1

சுடும் உண்மை 

இருளிலிருந்து

இருளுக்குப் போக

விரும்புவர்களை 

விளக்குகள்

அணைப்பதில்லை. 

2.

ஞானம் 

உன் பேச்சு

உன் காதிலேயே

விழாத போது

மற்றவரெல்லாம்

எப்படிக் கேட்பர்

உன் பேச்சை?

3

நிதர்சனம் 

என் நாவல்களைப்

பாராட்டவும்

விழா எடுக்கவும்

ஒரு குழு தேவை.

ஏஜன்ட்டுகள்

விண்ணப்பிக்கவும்.

4

இந்தியா எனது இந்தியா 

முதலாமவர்

கொலைக்குற்றம்

சாற்றப்பட்டு

வக்கீல் ஆபீசில் இருந்தபடி

ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியைப்

புரட்டி 

வார்த்தைகளைத்

தேடுகிறார்

வெளியே விட்டெறிய.

இரண்டாமவர்

ஜாமீன் ஜாக்கிரதையில்

கேம்பிரிட்ஜ் அகராதியில்

சாது வார்த்தைகளைக்

கண்டு பிடித்து

விட்டெறிகிறார் நடுங்கியபடி

முதலுக்கும் இரண்டுக்கும்

தலையான மூன்றாவதோ

மன்னிப்புக் கேட்டதை

மறந்து விட்டு

மறுபடியும் யாரோ

எழுதிக் கொடுத்ததை

வாங்கி

உளறத் தயாராகிறது.

தொலைவில்  

சிரித்தபடி இன்னும் சில

ரொட்டித் துண்டுகளை

வீதியில் எறிந்து  

இடையூறுகளைக் களைந்த  

மகிழ்ச்சியில்  

தன் வேலையைப்

பார்க்கச் செல்லுகிறார் 

எஜமான்.   

5

கிணற்றுத் தவளைகள் 

கைதட்டல் கேட்டு

அலறிப் புடைத்து

நாலைந்தும் ஏழெட்டுமாய்

எட்டிப் பார்த்தன

வெளியே தகதகக்கும்

வெளிச்சம் கண்டு

மீண்டும்

கிணற்றுக்குள்

போய் விழுந்தன

6

மனக் காட்சி 

காற்றடிக்கையில்

நீர் நடக்கிறது

வயல்காட்டின் மேல். 

7

சகிக்க முடியாத சஜி    

மணமாகிப்  

பேரன்கள் 

பெற்று விட்ட காலத்தில் 

சஜியின் பிரேமையில் 

தோய்ந்து கிடந்தார்  

பிள்ளை..

‘கொடுமையைப் பாரேன்’ 

என்று சிரித்தாள் எதிர்வீட்டம்மா.

‘இந்த சவத்து முகத்த   

கலியாணதப்ப    

பாக்க 

எனக்கே சகிக்கல  

சஜியும் பிஜியும் 

இது பின்னால்  

அலையத் 

தலையெழுத்தா என்ன 

அதுகளுக்கு?’

என்று நொடித்தாள் 

சம்சாரம். 

8

கலைஞன்  

நடக்க இன்னும் 

வெகு தூரம் இருக்கையில் 

முடிந்ததாய்த் 

தோன்றும் பாதை 

ஓர் 

இளைப்பாறும் இடம்தான்.

‘பாறியதும் 

புதிய பாதையைத் 

தேடி

மேலே செல்கிறான்.

Series Navigationபேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்புஇனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.