அக்னிப்பிரவேசம்-26 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 28 of 28 in the series 10 மார்ச் 2013

அக்னிப்பிரவேசம்-26
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

gaurikirubanandanஅன்றிரவு பாவனாவுக்கு ஏனோ ரொம்ப பதற்றமாக இருந்தது. அது எந்த காரணத்தாலும் ஏற்பட்ட பதற்றம் இல்லை. இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாய் பாஸ்கர் ராமமூர்த்தி மேலும் சாடிஸ்ட் ஆக மாறிக் கொண்டிருந்தான். வீட்டிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டான்.
ஒருகாலத்தில் தந்தையின் பக்கபலம்தான் இருக்கிறதே என்று தைரியமாய் இருந்தாள் பாவனா. அவர் எதைச் செய்தாலும் தீவிரமாய் யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் பண்ணுவார் என்பது அவளுடைய திடமான நம்பிக்கை.. ஆனால் எப்போது விஸ்வம் தன கணவன் பக்கமாகவே சரிந்து பெசிநானோ அப்பொழுதிலிருந்தே அவள் தைரியமெல்லாம் கோழைத்தனமாக மாறிவிட்டது. துக்கம் வந்தது. துக்கம் தொண்டைக்குள் அல்ல. இதயத்தில் துக்கம்.
பாஸ்கர ராமமூர்த்தின் வேலை ரொம்ப சுலபமாகிவிட்டது. கை நிறைய மாமனார் தந்த பணம் இருந்தது. மனம் போனபடி செலவிழிக்கத் தொடங்கினான். அவன் குடித்துவிட்டு வந்து கத்துவது அக்க பக்கத்தில் எல்லோருக்கும் பழகிப் போய்விட்டது.
அந்த எல்லோருக்குள் ராமநாதன் ஒருவன்.
ராமநாதன் ஏதோ இன்ஷ்யூரென்ஸ் கம்பெனியின் ஏஜெண்ட். பகல் முழுவதும் வீட்டிலேயே தான் இருப்பான். அவன் மனைவி ஆபீசிற்குப போய்விட்ட சமயங்களில், அந்த தெருவில் உள்ள எல்லோர் வீட்டிற்கும் போய் அவர்கள் விஷயங்களில் எல்லாம் ரொம்ப அக்கரையுடன் தலையிட்டு, வம்பு பேசிவிட்டுத் திரும்புவான். பெண்களை வலையில் வீழ்த்துவதற்கு அது ஒரு யுக்தி. யாருக்குமே சந்தேகம் வராது. அந்தப் ‘பார்வை’ கொண்ட பெண்கள் மட்டும் அவன் பேச்சைப் புரிந்துகொள்வார்கள். இரண்டாம் பேருக்குத் தெரியாமல் காரியம் சுலபமாக நடந்து போய்க் கொண்டிருக்கும்.
அந்த விதமாய் அந்த தெருவில் அவனுக்குச் சில பெண்களுடன் நெருங்கிய உறவு இருந்து வந்தது. தெருவில் எல்லோருக்கும் வேண்டியவனாகவும், நல்லவனாகவும் இருந்து வந்த ராமநாதனுக்கு ரொம்ப நாட்களாகவே பாவனாவின் மீது ஒரு கண் இருந்து வந்தது. அவ்வளவு அழகான பெண் பாஸ்கர ராமமூர்த்திகுப் போய் மனைவியாய் வாய்த்திருக்கிறாளே என்று எண்ணிக்கொண்டான். அவளைக் கவர்வதற்கு பலவிதமான முயற்சிகள செய்யத் தொடங்கினான்.
முதலில் மைத்துனி உறவு கொண்டாடியபடி பேச்சுக் கொடுத்தான். பிறகு பால்பாகெட் வாங்கித் தரத் தொடங்கினான். போகப் போக ஒன்று அல்லது இரண்டு மணிநேராம் ஆற அமர உட்கார்ந்து கொண்டு விடுவான். ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்வான். காதல் என்றால் என்ன என்று விளக்குவான். தன் மனைவியைப் பற்றிப் பேசுவான். மனிதன் சந்தோஷமாய் வாழ்க்கையை அனுபவிப்பதில் தவறு இல்லை என்று உதாரணம் காட்டுவான். வசந்தியைத் திட்டித் தீர்ப்பான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வேற்று ஆணுடன் கொஞ்ச நாட்கள் பேசிப் பழகிய பிறகுதான் அந்த ஆள் “அந்தப் பார்வையுடன்” தன்னிடம் பேசுகிறான் என்பதை பெண்கள் புரிந்துகொள்வார்கள் . பாவனாவுக்கு முதலில் புரியவில்லை.
ஒருநாள் பிற்பகலில் ராமநாதன் வந்து கதவைத் தட்டினான். அவள் கதவைத் திறந்ததுமே அவன் ஒரு பாக்கெட்டை அவசரமாய் அவள் கையில் திணித்துவிட்டு போய்விட்டான். அவள் புரியாமல் அதைப் பிரித்தாள். அதற்குள் இன்னொரு பாக்கெட் இருந்தது. அப்படியே பிரித்துக்கொண்டே போகப் போக கடைசியாய் ஒரு சாக்லேட், பாதி தின்றது இருந்தது. பாவனா அருவருப்பு அடைந்தவளாய் அதைக் கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போட்டாள்.
தலையணையில் முகம் புதைத்து ரொம்ப நேரம் அழுது தீர்த்தாள்.
மறுநாள் பிற்பகல் அவன் கதவைத் தட்டியபோது அவள் திறக்கவில்லை. அதைத் தொடர்ந்து தினமும் அதேபோல் நடந்தது. அப்பொழுது அவன் என்ன சொன்னானோ தெரியாது. பாஸ்கர் ராமமூர்த்தி ஆத்திரமடைந்தான்.
“கொஞ்சமாவது இங்கித ஞானம் வேண்டாமா? பாவம், வீட்டுச்சாவி இல்லாமல் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொள்கிறேன் என்று சொன்னதற்கு துரத்தி அடித்துவிட்டாயா?” என்று கத்தினான்.
“அவன் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.” என்றாள் பாவனா.
“காமாலைக்காரனுக்கு உலகமே மஞ்சளாய்த் தான் தெரியும். உன் புத்தி அந்த மாதிரியாய் இருப்பதால் அவனும் அப்படிப்பட்டவன் என்று எண்ணிவிட்டாயா?
அந்த நான்கு சுவர்களுக்கு நடுவில் நடந்ததை ராமநாதன் ஊகித்துக் கொண்டிருப்பான் போலும். மேலும் துணிந்து விட்டான்.
பாவனா இருந்தது இரண்டு அறைகள் கொண்ட போர்ஷன். குளியலறை பின்பக்கத்தில் இருந்தது. அங்கே காத்திருந்து இருட்டில் அவள் வந்ததுமே இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு உதட்டில் அழுத்தமாய் முத்தம் பதித்தான். எதிர்பாராத இந்தச் செயலுக்கு அவள் விக்கித்துப் போய்விட்டாள். அதையே சாதகமாய் எடுத்துக் கொண்டு அவன் மேலும் முன்னேறப் போனான். பாவனா அவனிடமிருந்து திமிறிக்கொண்டு உள்ளே ஓடிப்போய் கதவைச் சாத்திக்கொண்டு விட்டாள்.
ரொம்ப நேரம் வரையில் அவள் இதயம படபடத்துக் கொண்டிருந்தது. இந்த மாதிரி பிரச்சனைக்கூட யாருக்காவது வருமா என்று நினைத்துக் கொண்டாள். கணவனிடம் அதைச் சொல்லவில்லை. தானே பாடம் புகட்டும் அளவுக்கு துணிச்சல் இருக்கவில்லை. நாளைக்குத் தன் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம். கல்லூரியில் படித்திருந்தால் இழுத்துக் கன்னத்தில் ஒன்று கொடுக்கும் தைரியம் இருந்திருக்கும் என்று தோன்றியது. கல்லூரியில் படித்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு ரோட் சைட் ரோமியோக்களை குறைந்தபட்சம் எதிர்த்துப் பேசும் தைரியம் கூட இருக்காது என்றும், தமக்குள் குமுறிக் கொண்டு இருப்பார்கள் என்றும் பாவனாவுக்குத் தெரியாது.
அதற்குப் பிறகு ராமன்சாதன் சில நாட்கள் கண்ணில் படவில்லை. கண்ணில் பட்டாலும் படாதது போல் போய்க் கொண்டிருந்தான். அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனால் அது ஒரு டெக்னிக் என்று அவளுக்குத் தெரியாது. முதலில் கொஞ்ச நாட்கள் ஆர்வம் காட்டிவிட்டு பிறகு திடீரென்று விட்டுவிட்டால் பெண்களிடம் ஆர்வம் ஏற்படும் என்ற தியரி அவனுடையது.
ஆனால் பாவனாவிடம் அப்படிப்பட்ட ஆர்வமே இல்லாததால் அவனுடைய தியரி பொய்த்துவிட்டது.
பத்துநாட்கள் கழிந்தன. ஒருநாள் கதவு தட்டிய சத்தம் கேட்டு சமையல் அறையில் வேலை செய்துக் கொண்டிருந்த பாவனா வந்து கதவைத் திறந்தாள். ராமநாதன்!
“ராமமூர்த்தி இல்லையா?”
“இல்லை. வெளியே போயிருக்கிறார்” என்று அவள் கதவைச் சாத்தப் போன பொழுது, கதவைத் தள்ளிக்கொண்டே “என்னை ஒன்பது மணிக்கு வரச்சொன்னான். வந்துவிடுவான் என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கிறேன்” என்று உள்ளே வந்து உட்கார்ந்துவிட்டான்.
பாவனா சமையல் அறைக்குப் போய், தன் வேளையில் ஆழ்ந்திருந்தாள்.
“சாக்லேட் நன்றாக இருந்ததா இல்லையா என்று சொல்லவே இல்லை.” சமையலறை வாசலில் வந்து நின்றான். பாவனா பதில் பேசவில்லை.
“எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிக் கஷ்டபட்டுக் கொண்டு இருக்கப் போகிறாய்? அவன் விஷயம் எனக்குத் தெரியும். கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும் உனக்குச் சுகம் இல்லை. உன்னைப் பார்த்தால் பாவமாய் இருக்கு.”
“வெளியில் போகிறாயா? சுடச்சுட இந்த சாமபாரை உன் மூஞ்சில் வீசட்டுமா?” பாவனா கோபமாய்க் கத்தினாள்.
“எல்லோரும் டி.வி. பார்ப்பதில் மூழ்கிப் போயிருப்பாங்க. உன் கணவன் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு வரமாட்டான்” என்று நெருங்கி வந்தான்.
“கிட்டே வராதே. வந்தால் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தாரைக் கூப்பிடுவேன்.”
“ரொம்பத்தான் நடிக்காதே. நீ கத்தினாலும் உன் கணவன் அடிக்கிறான் போலிருக்கு என்றுதான் எண்ணிக் கொள்வார்கள் தினமும் நடக்கிறது தானே. ஒருமணி நேரம் இருக்கு. யாருக்கும் தெரியப் போவதில்லை” என்று மேலும் அருகில் வந்து இடுப்புக்கு அருகில் கைய வைத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.
பெரிதாக கத்தப் போன அவள் வாயை அவன் உதடுகள் தடுத்து நிறுத்திவிட்டன. பாவனா திமிறினாள். ஏற்கனவே பலவீனமாய் இருந்த அவளால் அவன் பலத்திற்கு முன்னால் எதுவுமே பண்ண முடியவில்லை. இந்தப் போராட்டத்திற்கு இடையே கதவு திறந்துக் கொண்டதை அவள் பார்க்கவில்லை.
“எவ்வளவு நாளாய் நடக்கிறது இந்தக் கூத்து?” என்ற பாஸ்கர ராமமூர்த்தியின் குரலைக் கேட்டதும் ராமநாதன் பாவனாவை விட்டுவிட்டான். ஒருவினாடி அந்த அறையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் படியான நிசப்தம் ஏற்பட்டது.
அந்த நிசப்ததைச் சிதறடித்தபடி, “பாவனா! இப்போ என்ன செய்வது?” என்றான் ராமநாதன். நான்கே வார்த்தைகள். அவை புரிவதற்கு அவளுக்கு நான்கு வினாடிகள் பிடித்தன.
மனிதர்களில் அப்படிப்பட்ட ஸ்பான்டேனிடி (spontanity) இருக்கும் என்று அவளுக்கு அதுவரையில் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு துரிதமாய் பிளேட்டை மாற்றி விடுவான் என்று எண்ணியிருக்கவில்லை.
பாஸ்கர் ராமமூர்த்தி இன்னும் சிலையாய் அப்படியே நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் முகம் மெல்ல மெல்ல ஆவேசத்தால் சிவந்து கொண்டிருந்தது.
“இப்போ வேண்டாம். வந்துவிடுவான் என்று சொல்லிக்கொண்டுதான் இருந்தேன். அனாவசியமாய் பிடிபட்டுவிட்டோம்.” முணுமுணுத்தாற்போல் சொல்லிவிட்டு ராமநாதன் பின் கதவைத் திறந்துகொண்டு போய்விட்டான். ராமமூர்த்தி விருட்டென்று உள்ளே வந்து அவள் கன்னத்தில் பளீரென்று ஒரு அறை விட்டான்.
“தேவடியா மவளே! நாள் முழுவதும் வீட்டில் இருந்துகொண்டு நீ பண்ணும காரியம் இதுதான் என்று சொல்லு” என்று அவள் கூந்தலைப் பிடித்துக் குனியச் செய்து முதுகிலும், கழுத்திலும் வெறி பிடித்தவன் போல் அடிக்கத் தொடங்கினான். கைகளால் தன்னைத் தடுத்துக்கொள்ளவும் அவளுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அவன் அடித்த அடியில் உதடு கிழிந்து ரத்தம் வரத்தொடங்கியது.
“இல்லைங்க. எனக்கொன்றுமே தெரியாது. அவன்தான் உள்ளே வந்தான்.” இரு கரங்களையும் கூப்பியபடி வேண்டிக்கொண்டே பதிலளித்தாள். யுக யுகமாய் பாரதநாட்டுப் பெண்களுக்கு பிரதிநிதியாய் முழங்காலில் அமர்ந்துகொண்டு அவள் கணவனை பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.
அவனானால் அவளை கண்ணா பின்னாவென்று அடித்துக் கொண்டே கழுத்தைப் பற்றி மேலே தூக்கினான்.
“எவ்வளவு நாளாய் இந்த விவகாரம் நடந்து வருகிறது? இன்னும் எத்தனை பேருடன் உனக்கு சமபந்தம் இருக்கு?”
அவள் பதில் சொல்லும் முன் வாய்மீது இன்னொரு அடி விழுந்தது. வேகமாய் அவன் பிடித்து தள்ளிவிட்டதில் அவள் தெருவில் வந்து விழுந்தாள். அதற்குள் தெருவில் மக்கள் கூடிவிட்டார்கள்.
ராமநாதன் தன் மனைவியிடம் என்ன சொன்னானோ தெரியாது. அவள் கைகளை ஆட்டியபடி உரத்தக் குரலில் கத்திக்கொண்டிருந்தாள். “என் வீட்டுக்காரர் அவள் ஷோக்குகளைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டுதான் இருந்தார். நான்தான் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இன்னிக்கு குட்டு வெளிபட்டதுமே கதையையே மாற்றிவிட்டாள் மகராசி!”
அந்த வீதியில் இருந்த எல்லா பெண்களுமே பாவனாவின் அழகைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்கள்தாம். அந்த தெருவில் இருந்த ஆண்களில் பெரும் பாலானவர்கள் பாவனாவை ஓரக்கண்ணால் சைட் அடித்தவர்ள்கள்தான்..
அவளுக்கு இவ்வாறு நேர்ந்ததில் பெண்களின் ஈகோ திருப்தி அடைந்தது. ‘இவ்வளவு அழகானவளுக்கு அத்தனை மோசமான குணம் இல்லாமல் எப்படி போகும்?’ என்ற திருப்தி! தம் அழகற்றத்தன்மையை நினைத்து ஆறுதல் அடையும் தன்மை!
மனைவிமார்களைப் பார்த்து கணவன்மார்கள் பயந்தார்கள். பக்கத்தில் மனைவி மட்டும் இல்லாமல் இருந்தால் அதில் பாதிபேர் அவளுக்கு ஆதரவு தந்து இருப்பார்கள். ஆனால் அந்த ஆதரவு சகமனுஷி என்ற நோக்கத்தில் இல்லை. சின்ன வீடாய்… தற்காலிகமாக..
இப்பொழுது மனைவிமார்களைத் திருப்திப் படுத்துவதற்காக ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாய் பேசத் தொடங்கினார்கள்.
“புருஷன் வெளியில் போனதுமே இவனைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டாளா? மைகாட்! (என்னைக் கூப்பிடாமல் போய்விட்டாளே?) என்றான் ஒருத்தன்.
“ரொம்பவும் திமிர் பிடித்து அலையத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட பெண்களை பிறந்தவீட்டுக்கு அனுப்பி வைத்தாலும் ஆபத்துதான்.
( இவளுடைய பிறந்த வீடு எங்கே என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்)
“எப்போ பார்த்தாலும் ஜன்னல் அருகிலேயேதான் நின்று கொண்டிருப்பாள். (நான் எவ்வளவு முறை அப்படியும் அப்படியுமாய் அலைந்திருப்பெனோ?) என்றான் இன்னொரு கணவன்.
இப்பொழுது ராமனாதனுக்குத் துணிச்சல் வந்துவிட்டது.
முன்பே சொன்னதுபோல் அந்த தெருவில் சில பெண்களுடன் அவனுக்கு உறவு இருந்து வந்தது. இப்பொழுது இதில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை என்று நிரூபித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு அவர்களைத் தனியாய்ச் சந்திக்கும் பொழுது கஷ்டம். எல்லோரிடமும் நீதான் என் தேவதை. என் மனைவியையும், உன்னையும் தவிர வேறு எந்தப் பெண்ணையுமே எனக்குத் தெரியாது என்று ஒவ்வொருவரிடமும் தனிதனியாய்ச் சொல்லியிருக்கிறான். அதைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இப்பொழுது கடைசியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்துவிட்டான்.
“என்னவோ கூப்பிடுகிறாளே என்றுதான் உள்ளே போனேன். என் கணவனுக்கு ஆண்மையில்லை. எனக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. இரண்டாம் பேருக்குத் தெரியாது என்று சொல்லிக் கையைப் பிடித்தாள்.”
அங்கே திடீரென்று ஊசி விழுந்தாலும் கேட்கும்படியான நிசப்தம்!
பாஸ்கர் ராமமூர்த்தி ஆண்மை இல்லை என்ற செய்தி அவ்விடத்தில் வெடிகுண்டாய் வெடித்துவிட்டது.
ஆண்கள் ஐயோ இந்தச் செய்தி முன்னாடியே தெரிந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? இன்னும் தீவிரமாக முயற்சி பண்ணியிருக்கலாமே என்றெண்ணிக் கொண்டார்கள். ராமநாதனை அவன் இலாகா பெண்மணிகள் எல்லோரும் அன்பாய் பார்த்தார்கள். தன் காதலன் பாவனாவைப் போன்ற அழகியைக்கூட மறுத்துவிட்டான் என்ற உணர்வு அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. ராமநாதனுக்கு வேண்டியதுகூட அதுதான். அவன் எய்த அம்பு நேராய் போய் தைத்துக் கொண்டது.
பாவனாதான் அவனை அழைத்தாள் என்று அங்கே உறுதியாய் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கணவனின் குறையைப் பற்றிக் காதலனிடம் சொன்ன அந்தப் பெண்ணை எல்லோரும் அருவருப்புடன் பார்த்தார்கள்.
பாஸ்கர் ராமமூர்த்தியின் முகம் கொல்லனின் உலைக்களமாகிவிட்டது. இத்தனை அவமானத்தை எந்த ஆண்மகன்தான் தாங்கிக்கொள்வான்? அந்த ஆவேசத்தில் தானே ராமநாதனுக்கு இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லி செக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் அட்ரஸ் வாங்கிக்கொண்டதை மறந்துவிட்டான். இப்போது இவ்வளவு பேருக்கு முன்னால் \ இந்தப் பெண் தன் மானத்தை வாங்கிவிட்டாள். கோபம தலைக்கேற அவளை அடிப்பதற்காகக் குனிந்தான்.
அதற்குள் ஒரு கை அவனைத் தடுத்தது.
அது வசந்தியின் கை.
“அண்ணா! உனக்கு மூளை கலந்கிவிட்டதா? நிறுத்து” என்றாள்.
“உனக்குத் தெரியாது வசந்தி! இந்தத் தேவடியாள்…”
“அண்ணா!” உருமினாள் வசந்தி. “உன் பண்பு என்னவாச்சு? கால்காசு வரதட்சணை வாங்கிக்கொள்ளாமல் பாவனாவைப் பண்ணிக்கொண்டது இதற்காகத்தானா?”
“ஆனால் இவள்…”
“தவறு செய்திருக்கலாம். தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்துகொண்டால் அவள் உள்ளம் தகித்துக்கொண்டு போய் விடும். இந்த உலகத்தாருக்கு முன்னால் முகத்தைக் காட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டு விடுவாள். அதானே தவிர நீ மிருகத்தனமாய் நடந்துகொள்ளாதே.”
பாவனா வியப்புடன் வசந்தியை நோக்கினாள். அவ்வளவு வேதனையிலும் கூட அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வசந்தியா இப்படிப் பேசுகிறாள்? நம்பவே முடியவில்லை.
“உனக்குத் தெரியாது வசந்தி” என்றான் ராமமூர்த்தி. “எவ்வளவு நாளாய் இந்த நாடகம் நடந்து வருகிறதோ? நான் இல்லாத நேரம் பார்த்து இந்த ராமனாதனைக் கூப்பிட்டு என்னைப் பற்றிப் பொய் சொல்லி இருக்கிறாள். பாவம்! அவன் நல்லவனாய் இருக்கத் தொட்டு…” திரும்பவும் எல்லாம் நினைவுக்கு வந்ததும் திரும்பவும் ஆவேசப்பட்டான்.
“பாவனா மீது இனி ஒரு அடி விழுந்தால் நான் செத்துவிட்டதற்கு சமம். என்மீது ஆணை!” என்றால் வசந்தி.
ஓங்கிய அவன் கை அப்படியே நின்றுவிட்டது.
‘எழுந்து பாவனா” என்று அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் வசந்தி. நாடகம் மேலும் தொடரும் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
“உண்மையிலேயே அவன் தெய்வம்தான்” என்று ராமமூர்த்தி பற்றி யாரோ பேசிக்கொண்டது பாவனாவுக்குக் கேட்டது. அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவளைச் சோர்வு ஆட்கொண்டது. எப்படி உள்ளே வந்தாளோ அவளுக்கே தெரியாது. முன் அறையில் தரையில் அப்படியே சரிந்துவிட்டாள்.
வசந்தி கதவைச் சாத்தினாள்.
இரவு பதினொரு மணி ஆயிற்று. மனதளவிலும் இவ்வளவு அடிகளை தாங்கிக்கொள்ள பாவனாவால் முடியவில்லை. மயக்கம் வந்தவள் போல் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
உள்ளே ராமமூர்த்தி வசந்தியைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்தாய்? அவளை அப்படியே கழுத்தைப் பிடித்துத் தள்ளித் துரத்திவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?” என்றான்.
“எங்கே துரத்துவாய்? நாளைக்கு அவள் கோர்ட்டுக்குப் போனால் என்ன பண்ணுவாய்?”
“கோர்ட்டுக்குப் போய்விடுவாளா? மூஞ்சியில் காறித் துப்புவார்கள். புருஷன் வீட்டில் இல்லாத போது எதிர்வீட்டுக்காரனை அழைத்தாள் என்று..”
அவன் வார்த்தைகள் இன்னும் முடியவில்லை. வசந்தி அலுத்துக் கொண்டாள். “அதை எல்லாம் கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. அவர்கள் யாருமே கோர்ட் வரையில் வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் உன் விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிடும்.”
ராமமூர்த்தியின் முகம் வாடிவிட்டது. “அவ்வளவு தூரம் நான் யோசித்துப் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிஜம. அவள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. அவளை இனி ஒரு நிமிஷம் கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது.”
“சகித்துகொள்ளச் சொல்லி யார் சொன்னார்கள்?”
“பின்னே?”
“இங்கே வந்து நிலைமையைப் பார்த்ததும் ஒரு நல்ல யோசனை வந்து விட்டது எனக்கு.”
“என்ன யோசனை?”
“எல்லோருக்கும் முன்னால் நான் என்ன சொன்னேன்? எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தால் அவள் உள்ளம் தகித்துக்கொண்டு போய்விடும். இந்த உலகத்தாருக்கு முன்னால் முகத்தைக் காட்டமுடியாமல் தற்கொலை பண்ணிக்கொண்டு விடுவாள் என்றேன். நினைவு இருக்கா?”
“ஆமாம்.”
“இப்போது அவள் தகித்துக் கொண்டு போனாலும் நம் இரக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செத்துப் போய்விட்டதாய் அக்கம் பக்கத்தில் எல்லோரும் நினைப்பார்கள். நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தாலும் அதே விஷயத்தைத்தான் போலீசாரிடம் சொல்வார்கள்.”
ராமமூர்த்தி திக்பிரமையுடன் பார்த்தான் அவளை. வசந்தி சிரித்துக்கொண்டே மேலும் சொன்னாள்.
“அதோடு அவள் அப்பன் கொடுக்க முடிந்ததையெல்லாம் எப்படியும் தந்துவிட்டான். இனிமேல் ஒரு பைசா கூடா அவனிடமிருந்து பெயராது. இவளுடன் எப்படியும் உனக்குச் சரிபட்டு வராது. இப்போ இவள் செத்தாலும், இத்தனை பேர் சாட்சிகள் இருப்பதால் குட்டு வெளிப்பட்டுவிடும். கள்ளத் தொடர்பு இருப்பது வெளியில் தெரிந்துவிட்டதால் அவளே தற்கொலை பண்ணிக்கொண்டாள் என்று….”
(தொடரும்)

Series Navigationமூன்று வருட தூங்குமூஞ்சி நெதாரோ
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *