அச்சாணி…

This entry is part 43 of 45 in the series 4 மார்ச் 2012

அச்சாணி…
ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு…
பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி குடும்பத்தை சுற்றி பின்னோக்கி சென்றது .பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்….நடந்நிகழ்ச்சிதான்…..இருந்தாலும்…இன்று நினைத்தால்……கூட….எல்லாம்…. நேற்று நடந்தது போல் இருக்கு.

வாசல் தெளித்துக் கோலம் போட பக்கெட் தண்ணீரோடு கதவைத் திறக்கும்போது…..அதற்காகவே காத்திருப்பது போல…ஒரு இளம் பெண் அவள் அருகில் கிழிந்த பாவாடையைக் கட்டிக் கொண்டு மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தையும்…அவள் இடுப்பில் ஒரு வயதில் ஒருஆண்குழந்தையும்…தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு….தன் அம்மாவின் புடவை முந்தானையைப் கையோடு பிடித்தபடியே மிரண்ட பார்வையோடு….தயங்கி நிற்க….இவர்களின் பின்னால் ஒரு இளைஞன்….ஒரு மூட்டையோடு தலையை.. சொரிந்து கொண்டு பின் தள்ளி தயங்கி நிற்க…
காலங்கார்த்தால யார் இவர்கள்…என் மனதின் கேள்வி…?
யாரு நீங்க…..?
ஏன்…. இங்க நிக்கறீங்க…?
என்ன வேணும் உங்களுக்கு….?
அடுக்கடுக்காக கேள்வி கேட்கும்போதே என் அறிவு..பேசாம கதவை சாத்திண்டு உள்ள போ….என்று ஆணையிட்டது….!
கூடவே…கண்கள் அவர்களை எடை போட்டது.

இவளே…. சின்னப்பெண்ணாயிருக்காளே…..இவளுக்கு இரண்டு குழந்தைகளா? அடப் பாவமே..என்ன கஷ்டமோ…?
மனிதாபிமானம் அறிவைப் புறம் தள்ளியது.
எனக்குள் இருக்கும் ஆர்வம் மேலிட…சொல்லும்மா எங்கே இருந்து வரீங்க நீங்க…?

அவளோ…வாய்க்குள்ளே…. நுழையாத ஏதோ ஒரு குக்கிராமத்தின் பெயரைச் சொல்லி….அங்கேர்ந்து வரோமுங்க….என்றாள்.
நாங்க ஏறின பஸ் கண்டக்டர் எங்கள இந்தப் பக்கமா போயி வேலை தேடுன்னு இறக்கி விட்டுட்டு போய்ட்டாருங்க…..
அதான்…இங்க வந்து உக்காந்திருக்கோமுங்க .வேலை ஏதாச்சும்…கிடைக்குமான்னு….ஹைதராபாத்துக்கு வந்தோமுங்க…

“இந்த ஊருல உங்களுக்கு தெரிஞ்சவுங்க யாராச்சும் இருக்காங்களா..?
அவர்கள் சொன்ன எதையும் நம்ப மறுத்த அறிவு…ரொம்ப புத்திசாலித் தனமாக எண்ணிக் கொண்டு கேள்வி கேட்டது..

“இது வரைக்கும் யாரும் இல்லீங்க….இந்த ஊரு..எங்களுக்கு புதுசுங்க….இப்போ..இப்போதான் முதல் முதலா…உங்ககிட்டத்தான் நாங்க பேசறோம்ங்க…..அவள் தொண்டையில் இருந்து பயத்தோடு எச்சில் விழுங்கிக் கொண்டு….தயங்கி தயங்கி சொல்லி முடிக்கிறாள்…

அந்தப் பெண் குழந்தை..மெல்ல..இந்த ஊரை நான் டிவி ல சினிமால பார்த்திருக்கேன்….என்றாள்…வெட்கப்புன்னகையோடு..
என் மனசோ……உண்மை…உண்மை…அவர்கள் சொல்வதெலாம் உண்மை .என்று பின்பாட்டுப் பாடியது.

சரி கொஞ்சம் தள்ளி அந்தப் பக்கமா உட்காருங்க..வாசல் தெளிக்கணும்னு .சொல்லிக் கொண்டே..நான் பாட்டுக்கு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட்டு…கதவை சார்த்தப் போனேன்..மனசு தடுத்தது…இருந்தும் பட்டும் படாமல் கதவை சார்த்தி வைத்து….உள்ளே சென்று..என் கணவரை எழுப்பினேன்….இங்க பாருங்கோ..யாரோ…ஒரு குடும்பம் எங்கிருந்தோ …நூறு கிலோமீட்டர் தாண்டி இங்க வந்து வேலை செய்து பிழைசுக்கலாம்னு வந்திருக்கா…அவங்களோட ..ரெண்டு …குழந்தைகளையும் பார்க்க ரொம்ப பாவமா இருக்கு……கொஞ்சம் நீங்க வெளில வந்து யாரு…என்னன்னு விசாரியுங்கோளேன்…..

காலைப்பொழுது…விசாரணையில் விடிந்தது அவருக்கு….என்னது…? என்ன சொல்றே…நீ…? இரு வரேன்….!

அடுத்த ஐந்து நிமிஷத்தில் வாசலில் அவர்..அவருக்குப் பின்னால்.. நான்.. வசதியாக…ஒரு கையால் கதவை பிடித்துக் கொண்டு..
அப்போ தானே எந்த அசம்பாவிதம் நடக்கும் முன்னே..கதவை சாத்திக் கொள்ள முடியும்…நாம இருக்கற ஜாக்ரதையில் நாம் இருக்கணும்…..அறிவு…அறிவு…! அப்போ அடிக்கடி இது போல் கொலை கொள்ளைகள் நடந்த வண்ணம் இருப்பது செய்தியில் வந்தபடி இருக்கும்.

ஆமா…இவாள யாரு உள்ள வரைக்கும் விட்டது..?னு இவர் கேட்க…என் அறிவில் ஒரு மின்னல்….
ஏய்…இந்த புது குடியிருப்புக்கு..காவலுக்கு ஆள் வைக்கணும் என்று நேற்று தான் நாம பேசிக் கொண்டிருந்தோம் ..அதற்குள்…இப்படி ஒரு குடும்பம் வந்து கதவைத் தட்டும்னு எதிர் பார்க்கலை….

இவர் பாட்டுக்கு ஏதேதோ கேள்விகள் கேட்க….நான் இடைமறித்து.. உங்க ரெண்டு பேரோட பேர் என்ன..? என்று கேட்க…
“ஸ்ரீனிவாசன்…இவள் என் மனைவி லச்சுமி …இந்த ரெண்டு குழந்தைகளும் எங்க பிள்ளைங்க……மூத்தது சுஜாதா, இளையவன் விஷ்ணுவர்த்தன்.”
ஐயா…ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்க……! மறுபடியும் அவன் வேலைக்கு வாயால் விண்ணப்பம் வைத்தான்.

நான் இவரிடம் …அவங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புங்க..ஏதாச்சும் சாப்ட்டுட்டு வரட்டும்…அப்பறமா பேசலாம்னு பிறகு வரசொல்லுங்கன்னு..சொன்னதும்..

எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாங்க…நாங்களே கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உங்களை பார்க்கிரோம்ங்க ….வேலை மட்டும் இல்லைன்னு சொல்லாதீங்கம்மா…..அந்தப் பெண் லக்ஷ்மி உரிமையோட..சொல்லிவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பினாள்.

நானும் வீட்டுக்குள் காலை வேலைகள் அழைக்க…பரபரத்தேன்..
பார்த்தாப் பாவமா இருக்குல்ல….நான் இவரிடம்…
அதுக்கு நாம சென்ன செய்ய முடியும்..? இவர்..

அம்பதோ…நூறோ…. கொடுத்து அனுப்பிடு…..எந்தப் பிரச்சனையும் நமக்கு வேண்டாம்….சொல்லிவிட்டு ஆபீஸ் கிளம்புவதில் ஆயத்தமானார்.
இல்லன்னா..அவாளுக்குப் பணம் வேண்டாம்…வேலை வேணும்…உழைக்கறேன்னு சொல்றவாள..நாம் பணத்தைக் கொடுத்து சோம்பேறி ஆக்கக் கூடாது…எதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாமே. சரியா..?
“அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை…உன்னால் முடிஞ்சால் செய்..” …அவர் கழன்று கொண்டார்.
“இது போதும் எனக்கு….”
அப்பறம் ..அவங்களுக்கு இந்த ஊர் மக்கள் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்தா..பச்சைக் குழந்தைகளை அழைச்சிண்டு இவ்ளோ தைரியமா இத்தனை தூரம்..வெறும் தன்னோட கை கால….நம்பி…. வந்திருப்பா….நாம தான எதாவது செய்யணும்..பேசியபடியே . மனசு உறுதி மொழி எடுத்தது.

போதும்…போதும்…எங்கேயாவது வம்பில மாட்டிக்கப் போறே…..அப்புறம்…குய்யோ….முறையோன்னா…யாரும் வரமாட்டா..உனக்கு உதவ ஆசீர்வாதமாய் இவரது வார்த்தை…வந்து விழுந்தது.
யாரைக் கொலை பண்ணினானோ…?
எங்கே திருடினானோ …?
சொந்த ஊரை விட்டு ஓடி வந்திருக்கான்…குடும்பத்தோட….அவன் முழியே சரியில்லை…..கதவையே திறக்காதே…சொல்லிட்டேன்…
இவர் ஆபீசுக்குக் கிளம்பிப் போனார்…எல்லா விஷயங்களில் இருந்து எளிதாக தப்பித்துக் கொள்ள இவருக்குத் தெரிந்த ஒரே வழி ஆபீசுக்கு நாழியாச்சு…..!
பையனும் ஸ்கூலுக்குக் கிளம்பிப் போயாச்சு…

வீடு வெறிச்சென்றிருந்தது……மனசு மட்டும் அந்தக் குடும்பத்துக்கு நம்மால என்ன உதவி செய்ய முடியும்னு யோசனை செய்ய ஆரம்பித்தது.
நானும் தயாராகி…அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு…காவலுக்கு ஆள் கிடைத்தாச்சு…அந்தக் குடும்பத்தை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமா என்று விஷயம் சொல்லி….கேட்டு கொண்டிருந்தேன்…
எட்டுக் குடும்பங்கள் இருக்கும் அந்த குடியிருப்பில்…எனது இந்தக் கேள்விக்கு மட்டும் தேவை இருந்தும் யாருமே…..உடனே சரி என்று சொல்லவில்லை….அவ்வளவு ஜாக்கிரதை உணர்வு ஒவ்வொருவரிடமும்.
பார்க்கலாம்…மீட்டிங் வைக்கலாம்….என்று சொல்லி மழுப்பினார்கள்…

அதிலும் சிலர்..எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு இந்த வேலையை சொல்லலாம்னு இருக்கேனே…. என்றார்..
என் மனசு…இது அவ்வளவு எளிதான வேலை இல்லை போல..போராட வேண்டி இருக்கும்…..எப்படியானாலும்… போராடியாவது…இந்த வேலையை லஷ்மி குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்துடணும்னு….உறுதியோடு இருந்தேன்.

சிறிது நேரத்திற்குள் …கதவு தட்டும் சத்தம்… அவர்கள் வந்துவிட்டதை….சொல்லியது..
கதவைத் திறந்ததும்…நினைத்தது போலவே…அவர்களும் எதிர்பார்ப்போடு எதிரில்..நின்று கொண்டிருந்தார்கள்.
லக்ஷ்மி..இந்த சுவிட்சை அழுத்தினால் ..பெல் அடிக்கும்..அப்போ வந்து கதவைத் திறப்பார்கள்…இப்படி கதவைத் தட்ட வேண்டாம்….இனிமேல்…
சொன்னவுடன்…ஒருமுறை அழைப்பு மணியை அழுத்திப் பார்த்தாள்…அம்மாடியோ …என சொல்லி மறுபடியும் அழுத்திப் பார்த்தாள். ஏதோ குழந்தைத் தனமான குதூகலம் அவளுக்கு.
நான் சிரித்துக் கொண்டேன்.
சாப்பிட்டாயா..?
சாப்பிட்டாச்சும்மா …..என்றாள்.
சரி இப்போ சொல்லு….ஆனா எது சொன்னாலும் உண்மைய மட்டும் சொல்லணும்….பொய் பேசினா நான் கண்டுபிடிச்சிடுவேன்……!
அம்மா நான் போய் பேச மாட்டேன்மா….
சரி சொல்லு..

எங்களுக்கு குடிமங்கலம் ஊரு..இங்க இருந்து நூறு கிலோமீட்டர் தூரம் இருக்கும்…அங்க நான்…எங்க அம்மா. அப்பா..எல்லாரும் விவசாய நிலத்தில் தான வேலை செய்தோம்…ஸ்ரீனிவாசு மட்டும் மூட்டை தூக்கற கூலி வேலை. செய்வாரு . எப்பவாச்சும் கட்டட கூலி வேலைக்குப் போவாரு… எங்களுக்கு கலியாணம் ஆகி ஆறு வருஷம் ஆச்சு…நாங்க ரெண்டு பேருமே படிக்கலை..எங்க குடும்பத்துலயும்….அவரு குடும்பத்துல கூட யாரும் ஸ்கூல் பக்கம் போனதில்லை..நாங்க ரெண்டு பேருமே..கைநாட்டு தான் போடுவோங்கம்மா.
ம்ம்…அப்பறம்…
எங்க அம்மா தான் சொல்லிச்சு…நீங்க இந்த ஊருலயே இருந்தா உங்க பிள்ளைங்க கூட உங்கள மாதிரியே கூலி வேலை செய்து பிழைக்க வேண்டியது தான்….அதுவே நீங்க டிவி ல வருகிறா மாதிரி ..நகரத்துக்குப் போனீங்கன்னா….ஏதாச்சும் வேலை செய்து பிள்ளைங்களையும் படிக்க வைக்கலாம்….அங்க நல்ல மனசு உள்ள மனுசங்க நிறைய பேர் இருக்காங்க அவங்க வீட்ல வேலை செய்து பிள்ளைங்கள படிக்க வைங்கன்னு சொல்லி இங்க அனுப்பி வைச்சாங்க..நாங்களும் கிளம்பி வந்துட்டோமுங்க….

இங்க வேலை கிடைச்சால் பிள்ளைங்கள படிக்க வைப்போம் …அதான் எங்க ஆசை…அதான் எங்க லட்சியம்…(அதே மா ஆசா..அதே மா கோரிக்கா…) சொல்லி முடித்தாள். குரலில் உறுதி இருந்தது. கண்ணில் ஒளி தெரிந்தது.

ம்ம்ம்…நல்லது…அந்த பெண் குழந்தையைப் பார்த்து..சுஜாதா…..உனக்குப் படிக்க விருப்பமா?. நான் கேட்கிறேன்….
ஆமாம்…. என்று தலையை ஆட்டுகிறாள்…அப்படியே…..என் தம்பிக்கும்..என்று சிபாரிசு…!

ஸ்ரீனிவாஸ் உனக்கு வாட்சுமேன் வேலைக்கு சொல்லிருக்கேன்..இங்க….செய்வியா?
எந்த வேலை கொடுத்தாலும் சரிம்மா…..உங்களுக்கு மகா புண்ணியம்…!
அதெல்லாம் வேண்டாம்..பார்க்கறேன்……ரெண்டு நாளில் சொல்றேன்..நீயும் வேற எங்கியாச்சும் வேலை கிடைக்குமான்னு தேடிப்பாரு….கிடைக்கும்.
ஆனால் இந்தப் பெண்ணை படிக்க வைக்க நான் என்னால முடிஞ்ச உதவி செய்றேன்..கவலைப் படாதே….சரியா..! ஆதரவா நான் இருக்கேன் என்று என் குரல் உறுதி சொன்னது அவர்களுக்கு.
கவலையா…அவளுக்கா….! அவளோட..தைரியம் உனக்கு கொஞ்சமாவது இருக்கா? என் மனசாட்சி என்னை கேலி செய்தது…:(
சரிம்மா….ரொம்ப ரொம்ப நன்றிம்மா…அவர்கள் ஏதோ நம்பிக்கையோடு…சென்று விட்டார்கள்.

அன்று மாலை மீட்டிங்கில் ஒவ்வொருத்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி..அவர்களுக்குள் தூங்கும் மனிதாபிமானத்தை தட்டி தட்டி எழுப்பி….இந்த வேலையை அவனுக்கு வாங்கிக் கொடுப்பதற்குள்…..போதும் போதும் என்றானது..
அந்த வாட்ச்மேன் வேலை இறுதியில் பகீரதப் பிரயத்தனத்தில் .ஸ்ரீனிவாசன் குடும்பத்துக்கு கிடைத்தது.. ..கீழே மாடிப்படி ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சிறிய இடத்தில் தங்கிக்கொள்ளும் படி..பெரிய மனதோடு இடம் தந்தார்கள்….அதாவது தந்தார்களே…என் மனம் நன்றி சொன்னது.
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களே பொறுப்பு என்றும் எனக்கும் கொக்கி போட்டு வைத்தார்கள்…..முன்னெச்சரிக்கையோடு…
நானும்…சரி சரி..என்று பலி ஆடு மாதிரி தலை ஆட்டி வைத்தேன்….

லக்ஷ்மி பார்த்தாயல்லவா…என்னை எந்த பிரச்சனையிலும் மாட்டி விட மாட்டீர்களே…..!
இல்லம்மா..! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைம்மா…விசுவாசமா இருப்போம்மா….இருவரும் சேர்ந்து சொல்ல..
உண்மையா இருங்க…உண்மையா உழையுங்கள்….இதே மாதிரி மனசோட இருங்க…சொல்லிவிட்டு நகர்ந்தேன்…!
மனதுக்குள் வெற்றிப் புன்னகை…!

அடுத்த ஒரே வாரத்தில்…அந்த வாட்ச்மன் ஸ்ரீனிவாஸ் அங்கு பிரபலமாகிப் போனான்….கூடவே அனைவர் துணியையும் இஸ்த்திரி போட்டுத் தரும் வேலையும் செய்தார்கள் இருவரும் சேர்ந்து கொண்டு.

லக்ஷ்மியோ எல்லார் வீட்டு வேலையையும் செய்யத் துவங்கினாள்…நாள் பூரா வேலை…வேலை..வேலை…என்று….உழைப்பால்….இறைவனை அழைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணை ஒரு கான்வென்ட் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தோம்….எந்த இடமாக இருந்தால் என்ன…..?
எல்லா மனித மனதிற்குள்ளும் குடி இருப்பவன் கருணை இறைவன் தானே…..! குறைந்த கட்டணத்தில்..எந்த நன்கொடையும் இல்லாமல் பள்ளியில் இடம் தந்தார்கள்….பெண்..அன்றைகன்று டீச்சர் சொல்லித் தரும் பாடங்களை சந்தேகம் கேட்க என்னிடம் ஓடி வந்து சொல்லித் தாங்கம்மா…என்று சந்தேகம் கேட்பாள்..

அப்படியே.ஒரு நாள் .லக்ஷ்மி..நீயும் உன் மகள் கிட்ட பாடம் படிச்சுக்கோ…..விளையாட்டாக சொல்லப் போக…அதை அப்படியே .வேத வாக்காக எடுத்துக் கொண்டு…..அவளும் எழுதப் படிக்க கற்றுக் கொள்ள ஆரம்பிக்க…..ஒரு வாழ்வியல் புரட்சி அங்கு ஆரம்பித்தது….மனைவி கணவனுக்குப் பாடம் சொல்லித் தரும் காட்சியும்….அங்கு தான் காண முடிந்தது….எல்லோரிடமும்…பதவிசாகப் பழகும் விதம்…அந்த சின்ன இடத்தில் கொஞ்சம் கூட மனது வருந்தாமல் சுத்தமாகவும் சுகாதாரத்தோடும்..அவள் குடும்பம் நடத்தும் விதம் அனைவரையும் வியக்க வைத்தது….வெறும் முன்னூறு ரூபாய் சம்பளத்தில் வந்து சேர்ந்த அந்தக் குடும்பம்….உழைப்பால் உயர்ந்து….கொண்டே இருந்தது…

இதன் நடுவில் நான் ஊரை விட்டு சென்னை வந்துவிட்டேன்…..லக்ஷ்மி தான் கண்ணீரோடு என்னை வழி அனுப்பினாள்..அப்போது அவளது பெண் சுஜாதா பத்தாவது முடித்திருந்தாள். பையன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான்…படிப்பு ..யோகா, நீச்சல், இசை, நடனம் என்று அனைத்திலும் மின்னிக் கொண்டிருந்தான்…அந்த குடியிருப்பில் இருக்கும் பலருக்கு இவர்களது குழந்தைகளைப் பார்த்து பொறாமை வந்ததுண்டு…எப்படியாவது இவர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணமும் வந்ததுண்டு….அனைத்தையும் லக்ஷ்மி…அவளது குணத்தால்…மாற்றி இருக்கிறாள்….

அவளது மகன் விஷ்ணுவும், சுஜாதாவும்….நீங்க இனிமேல் எப்போ வருவீங்கள் ஆன்ட்டி..? நான் கிளம்பும்போது கேட்டார்கள்…..

நீங்கள் ரெண்டுபேரும் படிக்கணும் என்கிற ஒரே காரணத்தால் உங்க அம்மா அப்பா..சொந்த கிராமத்தை விட்டு இங்கு வந்தார்கள்…..அவங்க மட்டும் இங்க வந்திருக்கவில்லைன்னா நீங்க இவ்வளவு படிச்சிருக்கவே முடியாது…உங்க அம்மா அப்பாவை நீங்க ரெண்டு பேரும்.. எப்பவும் நல்லபடியா வைச்சுக் காப்பாத்தணும்…நீங்க படிக்கறதால உங்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்….உங்க குடும்பமும் நல்ல நிலைமைக்கு வரும்..சந்தோஷம் தானே…..
அதே போல் என் மகனும் பெரிய படிப்பு படிக்க வைக்கணும்ன்னு நானும் அவனைக் கூட்டிட்டு வெளியூருக்குப் போகிறேன்..அவன் படிப்பு முடிச்சதும் மறுபடியும் இங்கயே தான் வருவேன்..அதுக்குள்ள நீங்க ரெண்டுபேரும் காலேஜுக்கு வந்திருப்பீங்க ன்னு .சொல்லி விட்டுக் கிளம்பினேன்..

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் நான்..ஹைதராபாத் சென்ற போது அவர்களைப் நேற்றுப் பார்த்தேன்…என்னால் உழைப்பின் உயர்வையும்…அதன் பிரதிபலனையும் நம்பாமல் இருக்க முடியவில்லை….அதே சமயம் ஒரு பெண்ணின் வல்லமை என்ன என்பதையும் கண்கூடாக பார்க்க முடிந்தது…..ஒரு சாதாரணப் பெண்ணின் மன தைரியம் ஒரு சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக புரட்டி போட்ட விந்தை…..ஆம்….லக்ஷ்மி அழகாக ஆங்கிலத்தில் எழுதுகிறாள்…வரும் கடிதங்களைப் படிக்கிறாள்…ஸ்ரீனிவாசன்…எழுதப் படிக்க நன்கு கற்றுக் கொண்டு…அங்கேயே ஆபீஸ் இல் அட்டெண்டராக வேலை செய்கிறார்.

மூத்த பெண் சுஜாதா இன்ஜினியரிங் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்…மகன் பத்தாவது தேர்வு எழுதுகிறான்..இன்று ஒரு மாதத்திற்கு இருபதாயிரம் சம்பாத்தியம் வருவதாகப் பெருமையாக சொல்லிக் கொண்டாள்.அந்தக் குடும்பத்தின் அச்சாணி அவள் தான் என்ற எண்ணம் துளியும் இன்றி…..சக்கரம் தளர்ந்து விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு தான் மட்டும் அதே இடத்தில்….தேய்ந்து கொண்டு…!
இன்னும் ஒரு படி மேலே… அப்பாவும் பிள்ளையும் பைக் ஒட்டிக் கொண்டு வீடு வீடாக இஸ்திரி செய்த துணிகளை கொண்டு போய் கொடுத்து விட்டு வருகிறார்கள்…
லக்ஷ்மி இஸ்திரிப் பெட்டியோடு வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள்…..மகள் சுஜாதா…தம்பிக்கும் இன்னும் சில குழந்தைகளுக்கும் டியூஷன் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள்…
இறைவனின் பூரண அநுக்ரகம்..கடாக்ஷம் .அந்த சிறிய இடத்தில் பூரணமாய் விழுந்திருப்பதை மனது ஆனந்தமாக ஏற்றுக் கொண்டது..
அவர்களை வாழ்த்திவிட்டு வந்துவிட்டேன்….இருந்தும் மனதில் ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் அடங்காமல் இருந்தது மட்டும் எனக்குள் நிஜம்.

தலை சிறந்த சாதனை பெண்கள் பலர் பேரும் புகழுமோடு…சாதனையாளர்களாக ஏணிப் படியின் மேல் படியில் நிற்கலாம்…..என்னைக் கேட்டால் இதில் ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை….பேரும்… புகழும்…பணமும் பக்க பலமும் இருந்து…..அரசியல் ஆட்சியின் பிடியில் நிமிர்ந்து மேலேறி சென்று சாதனை செய்து சிரிப்பது தானாகவே மேலேற்றிச் செல்லும் இயந்திரம் போலவாகும்.

எழுத்து வாசனையோ படிப்பின் அருமையோ பெருமையோ எதுவும் தெரியாது..ஒரு சின்ன குக்கிராமத்தில் பிறந்து வயற்காட்டில் வேலை செய்து, கட்டிடம் கட்டும் கூலியாளை திருமணம் செய்து கொண்டு…உழைத்து உழைத்து…வியர்வையை காசாக்கி….எத்தனையோ ஏற்ற தாழ்வை வாழ்க்கையில் நித்தம் நித்தம் சந்தித்து வாழ்க்கை வண்டியில் காளை மாட்டுக்கு இணையாக தன்னைப் பூட்டிக் கொண்டு வண்டி இழுக்கும் பசுமாடாக….தங்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளின் எதிர் காலம் மட்டுமே கண்ணில் தெரிய..கணவனும் மனைவியுமாக தாங்கள் படும் கஷ்டத்தை தங்கள் குழந்தைகள் பட்டு விடக் கூடாதென….குக்கிராமம் விட்டு….குழந்தைகளோடும் ஒரு மாற்றுத்துணி மூட்டையோடும் வந்திறங்கிய தைரியசாலிப் பெண்…உழைப்பால் உயர்ந்த இந்த சாதனைப் பெண்ணை நினைக்கும்போது நெஞ்சம் நிமிர்கிறது……

இதை எல்லாம் சாதனையாகவே கருதாமல் இன்னும் தான் அதே குக்கிராமத்தில் வந்திறங்கிய பெண்மணியாய்….எங்கள் மனசுக்குள் உயர்ந்து நிற்கும் போது இந்த பெண்ணின் சாதனையை எதில் பொறிப்பது..? இதைப் போன்ற பெண்மணிகள் பலர் இருக்கலாம்…..என்றாலும் நான் என் வாழ்வில் கண்ட இரண்டாவது பெண்மணி லக்ஷ்மி….அப்போ முதல் பெண்…..??!!!!
அவளைத் தான் நீங்கள் பார்த்திருப்பீர்களே…..!

ட்ரெயின்….விஜயவாடா ரயில் நிலையத்தில் வந்து நின்றது….ஜன்னல் வழியாக எனது கண்கள் ……இங்கும்…. எங்காவது ஒரு லக்ஷ்மி….எதிர்காலக் கேள்விக்குறியோடு நின்று கொண்டிருக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தது. அதே சமயம் பெண்களின் சக்தி வியப்பைத் தந்தது.
(இது முழுக்க முழுக்க உண்மை நிகழ்வைத் தழுவி எழுதியது..இந்தக் கதை யில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் நிஜம். – ஜெயஸ்ரீ ஷங்கர் )

Series Navigationமறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்கணேசபுரத்து ஜமீன்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

7 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ACHAANI by JAYASRI SHANKAR depicts the hidden power in women. The story revolves around an illiterate village woman who leaves her native village and goes to Hyderabad for a better living so that she could educate her two children. The helpless family happens to meet the benevolent and kind hearted narrator who also happens to be the writer JAYASRI SHANKAR! Through her efforts SRINIVASAN is made the watchman of that area and given a monthly salary of RS.300. LAXMI the pivot of the family does odd jobs in houses and also helps SRINIVASAN in ironing clothes. She also learns to read and write and also teaches SRINIVASAN.SUJATHA is in second year Engineering and VISHNUVARTHAN is writing tenth exams.The income per month has reached RS.20,000! Though this is a true story, it is a perfect story with full of inspiration and motivation. Women with all their talents are kept under suppression because of our social norms. With proper motivation, guidance and freedom women could exhibit their might and be useful in their family and society. The writer JAYASRI SHANKAR is commended for her kindness and humanitarian nature in helping the family of LAXMI in this manner. Congratulations for this masterpiece!

  2. Avatar
    s. revathy gevanathan says:

    “acchani…..” sirantha kathai amsam konda padaippu.manitha naeyathai eduthu kaadum arumaiyana kathai. smuthaayathil ethanai paer karunai ullathoodum irekka kunathoodum nadanthu kokirargal. oru kudumpathai vaazha vaitha perumai antha veettu ejamaniyaiye serum. jayasrikku paradukal. s. revathi gevanathan.

  3. Avatar
    jayashree says:

    அன்பின் .ரேவதி ஜீவநாதன்..
    தங்கள் பாராட்டுக்கும் விமர்சனத்திற்கும் எனது நன்றி. இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
    உதவி கோரி கரம் நீட்டுபவர்களும்….உதவிக்கரம் கொடுப்பவர்களும்…மனிதன் உள்ளவரை மனிதமும்
    மறைந்தாவது… வாழும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *