அத்தைமடி மெத்தையடி

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும்.

எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு. சின்னக்குழந்தையில் ஒரு முறை தஞ்சாவூரில் ஐயாவின் கிராமத்துக்கு ( வயல் ) போயிருந்தபோது குளியாட்டுகிறேன் என்று சொல்லி ஒரு குளக்கரையோ அல்லது ஆறா என்று தெரியவில்லை. அதில் நான் இறங்க பயப்பட்டு கரை ஓரமாக நிற்க ”பயப்பட வேண்டாம்டா ஆத்தாப் பொண்ணு, வா “ என்று கைபிடித்துப் பயம் நீக்கி ( அப்பத்தாவுடன் முடியிறக்க நான் எந்த ஊர் கோயில் ஊரணிக்குச் சென்றாலும் படியில் உக்கார்ந்து கப்பில் மோந்து ஊத்திக் குளிக்கும் ரகம்.) தண்ணீரில் நின்று கொண்டார்.

என் கால்களை அவரின் கால்களில் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்தால் கூட்டி மடித்து வைத்துக் கொள்வது போல கோர்த்துக் கொள்ளச் செய்து உடலை ஒரு கையால் பிடித்து மறுகையால் மல்லாக்கத் தலையை மட்டும் அலசியபோது சூரிய வெளிச்சத்தால் கண் கூச குளு குளுவென்று தண்ணீர் சிகையையும் தலையையும் நனைக்க கண்ணில் எரிச்சலில்லாமல் தண்ணீர்க்கூச்சமும் மறைந்தது. மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்க வைத்தார். அதன் பின் ஒரே ஆட்டம்தான். ( அப்போவெல்லாம் கிராமங்களில் இருப்பவர்கள் காலைக்கடன் எல்லாத்துக்கும் கம்மாக்கரைக்குத்தான் போவார்கள்.)

திரைப்படங்களில் கே ஆர் விஜயாம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் ஏனென்று தெரியாமல் அத்தையின் ஞாபகம் வந்துவிடும். அதுக்கு அந்தப் பாட்டும் ஒரு காரணம்.

எவ்வளவுதான் படங்களில் நடித்துவிட்டாலும் அவர் ஒரு குழந்தை முகம் கொண்டவர். காதல் காட்சிகளில் கூட வளர்ந்த குழந்தைபோன்ற மென்மையான முகபாவங்களே இருக்கும். “ பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும். “ இதில் முஸ்லீம் பெண்ணாக நடிப்பார். அசல் முஸ்லீம் பெண்ணைப் ( மும்தாஜைப் ) பார்த்தது போலவே ஒரு தோற்றமயக்கம் ஏற்படும்.

“ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி” இந்தப் பாடலில் அந்த ரோஸ் நிற ஸ்லீவ்லெஸ் சூடிதாரில் அசல் குழந்தைதான். நளினமாகவும் மென்மையாகவும் இருப்பார். அதே படத்தில் தேடினேன் வந்தது என்று பிள்ளைத்தனமாக ஆடும் ஆட்டமும் கொள்ளை அழகு.

மன்னவனே அழலாமா என்று வெள்ளை உடை அணிந்து பாடி அழவும் வைத்திருக்கிறார். சில சமயம் இருட்டில் நிலவில், மேகங்களில் கூட வெண்ணிற உடையில் விஜயாம்மா தெரிந்திருக்கிறார். !

கே ஆர் விஜயாவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலத்தில் என் பெரியம்மா பெண் ரேவதி ரவுடி ராக்கம்மா படத்தில் ஒரு சீனில் டேபிள் ஃபேன் சுற்றும்போது தூங்கும் கே ஆர் விஜயாவின் சுருட்டைக்கூந்தல் பம்மென்று காற்றில் அசைவது பற்றி சிலாகித்துக் கூறினாள்.

(வீட்டில் பிள்ளைகள் பார்க்கக்கூடிய படம் என்றால்தான் அப்போது எல்லாம் கூட்டிச் செல்வார்கள். கை கொடுக்கும் கை, கண்ணா மூச்சி , எல்லோரும் நல்லவரே, தேவரின் தெய்வம், திருமலைத் தெய்வம், திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், குழந்தையும் தெய்வமும் இது போன்ற படங்கள்தான் அப்போது பார்த்திருக்கிறோம். சில படங்களுக்கு முழுக்கதையையும் கேட்டு ரசித்திருக்கிறோம். அப்போ எல்லாத்துக்கும் நேரம் இருந்தது. வானொலியில் ஒலிச்சித்திரம், அகிலபாரத நாடகம் எல்லாம் கேட்க. )

அந்த சீன் எப்ப வரும் எப்ப வரும் என்று விலாவாரியாகக் கேட்டுக் கொண்ட நான் அடுத்த நாள் படம் பார்க்கச் சென்றபோது அந்த சீன் வருவதற்காகக் காத்திருந்தேன். சில நொடிகளே வந்த அந்த சீனில் பம்மென்று புடவையும் முடியும் காற்றில் பறக்க புருவமும் இமைகளும், அழகான நாசியும் இதழ்களும் கொண்ட பூவைப்போல, மச்சம் வைத்த வட்ட நிலவைப் போல அவர் தூங்கும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. நம் சகோதரிக்குப்பிடிக்கும் என்றால் நமக்கும் பிடித்துவிடும்தானே. ! வெகுளித்தனமான அழகோடு அவர் நடித்த படங்களில் ஒன்று ரௌடி ராக்கம்மா. ராமு படத்தில் ஜெமினியோடு பாடும் பாடலிலும் கொள்ளை அழகுதான். இயல்பாய் அழகாய் பொருந்தி இருப்பார் எந்த வேடத்துக்கும்.

முத்துராமனோடு ஒரு படத்தில் நடித்திருப்பார். அதில் இந்தப் பாடல்வரும். “ உன்னைப்பார்க்கவேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் ரசிக்க வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனதிலே. இதை என்னவென்று எடுத்துச் சொல்ல முடியல. ஐ டோண்ட் நோ. ஐ லவ் யூ.. “ இதை எல்லாம் ரேடியோவில் கேட்கும்போதே திக் திக் என்று இருக்கும். ஐ லவ் யூ என்பதெல்லாம் அப்போது மிகப் பெரிய உச்சரிக்கக்கூடாத வார்த்தை. ஆனால் அந்த வார்த்தை தன்னுடைய த்ரில்லை இழந்து பலகாலமாகிவிட்டது. இன்றைய நட்பில் கூட ஒருவருக்கொருவர் இதை எல்லாம் சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள்.

பட்டினத்தில் பூதம் படத்தில் அவர் டபிள் பீஸ் ஸ்விம் சூட் போட்டு ஒரு பாடலில் நடித்திருப்பார். சான்ஸே இல்லை. சிலருக்கு உடல் மட்டுமே நன்றாக இருக்கும். சிலருக்கு முகம் மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால் கே ஆர் விஜயாம்மாவுக்கு முகம் உடல் இரண்டுமே அழகு.

ஆண் பெண் இருபாலாருக்குமே ஆண் பார்வை ( MALE GAZE ) உண்டு. என்று ஒரு பேட்டியில் டான்சர் அனிதா ரத்னம் ( டிவிஎஸ் க்ரூப் ) சொல்லி இருந்தார். அது சில வருடங்களாக அனலைஸ் செய்துபார்க்கும்போது உண்மை என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் அப்போதைய ஹீரோயின்கள் போல ( சாவித்ரி, ) விஜயாம்மாவும் குண்டாகி விட்டார். நல்ல நேரம் படத்தில் எம்ஜியாரோடு நடிக்கும்போது அது நன்கு தெரியும். இது தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உள்ள ஒரு ஹெரிடிட்டி சாபம் போல.

சென்னையிலிருந்தபோது என் அண்டைவீட்டிலிருந்த அம்முபுஜ்ஜியோட அம்மா சொன்னதுதான் எங்கள் நட்பையே ஆட்டம் காணச்செய்தது. நடிப்பவர்களின் நடிப்பை மட்டும் பாராமல் அவர்களின் வாழ்க்கையை அலசுவது என்ற பொதுபுத்திக்கு அவரும் விலக்கல்ல. நடிகைகளின் வாழ்வு பற்றி பொதுக்கருத்து பொதுவார்த்தை சொல்வது பெரும்பாலும் ஆண்கள் என்றாலும் அதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்று அன்று தோன்றியது. அப்போது வெளிவந்த தினமலர் வாரமலரிலும் இதுபோன்ற தொடர் ஒன்றைப் படித்தேன்.

நமக்குப் பிடித்தவரைப் பற்றி யாரோ என்னன்னவோ சொன்னால் ஏற்படும் மன உளைச்சல் அளவிட இயலாதது. நமக்கு அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது. எப்படி வக்காலத்து வாங்குவது. அடுத்து அவர்களுடன் பேசலாமா வேண்டாமா என்பதும் புரிபடாது.

நமக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வது. மற்றதை அவரிடமே விட்டுவிடுவது என்பதைக் கற்க எனக்குப் பல வருடங்கள் தேவைப்பட்டது. மேலும் சிலரை எந்தக் காரணத்துக்காகவும் வெறுக்கவே முடியாது . அதுபோலத்தான் கே ஆர் விஜயாம்மாவும்.

அடுத்து அடுத்து அவர் அம்மன் படங்கள் செய்ததும் எண்டையர் தமிழ்நாடும் வணங்கியது அனைவரும் அறிந்ததே. தன்னைக் காலடியில் போட்டு மிதித்த சமூகத்தைத் தன் காலில் விழுந்து வணங்கவைப்பது வெகுசிலருக்கே வாய்க்கிறது.

தசாவதாரத்திலும் நடித்திருக்கிறார். எவ்வளவு பெரிய உருவம் என்றாலும் எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் சிலரிடம் மறைவதில்லை. பாந்தமும் மென்மையும் அழகும் எந்த வயதிலும் ஒரு சிலருக்கே வாய்க்கிறது.

இது ஒரு பெட்(PET) மனோநிலையாக இருக்கலாம். ஒருவரை ரசிக்க, ரசிகையாயிருக்க அவரது வாழ்க்கைச் சரிதமோ, சரகமோ முக்கியமில்லை. துறைசார்ந்த சாதனைகளே போதும் என்பது என் எண்ணம்.

Series Navigation
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Revathi Narasimhan says:

    இப்போது சில மாதங்களுக்கு முன் நீலகிரியில் அவரைப் பார்த்தேன் .கறுத்து இளைத்து வயதாகி இருந்தார். சாதாரணப் பெண்ணைப் போலவே ஷாப்பிங் செய்தார். பில் போடும்போது அந்தப் பெண்ணிடம் அவர்தானா இவர் என்றேன்.ஆமாம்மா.வயசும் ஆகிவிட்டது.மேகப் போட்டுப் போட்டு முகமும் இப்படியாச்சு.யாரும் கவனிப்பதில்லை என்றார். எவ்வளவு பெரிய நடிகை. அப்பா வீட்டுப் பின்புறம் இருக்கும் ராமன் தெருவில் தான் இருந்தார். வாழ்க்கை கொடுமையானது நடிகைகளுக்கு. எனக்குக் கற்பகம் மட்டும் மறக்கவில்லை.நன்றி தேன்.

Leave a Reply to Revathi Narasimhan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *