அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

This entry is part 9 of 28 in the series 12 ஏப்ரல் 2015
எழுத்துக்கள்
வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல!
அவை ஒவ்வொன்றும்
கடி எறும்புகள் ஆனபோது தான்
தமிழ் இலக்கியம்
தூக்கம் கலைத்தது.
புதிய யுகம் காண‌
தூக்கம் கலைத்த அவருக்கு
தூக்கம் ஏது?
தூங்கி விட்டார் என்ற செய்தியில்
செய்திகள் ஏதும் இல்லை.
ஒரு வெட்டியானைப்பற்றிய‌
அவரது சிறுகதைக்கு
இப்போது தான்
பிள்ளையார் சுழி போடுகிறார் என்று
எடுத்துக்கொள்வோம்.
பிள்ளையார் என்று சொல்லால்
அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும்
மார்க்ஸ் எங்கல்ஸின்
டையலக்டிகல் மெடீரியலிஸம்
அவருள்
நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான்
தெரிகிறது.
நடப்பு (தீஸிஸ்)
எதிர்ப்பு (ஆன்டி தீஸிஸ்)
இணைப்பு (சிந்தெஸிஸ்)
என்ற சங்கிலியின் கண்ணிகள்
அவர் பேனாவுக்குள்
தர்க்கம் கழன்றதில்லை.
அவர்
சமுதாய முரண்களின்
சமுக்காளம் நெய்ததில்
எத்தனை வண்ணங்கள்?
அத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்
பின் நவீனத்துவம் பேசியவர்கள்
புளிய மரத்துப்பேய் வளையங்களில்
ஃப்ராய்டிஸக்குஞ்சம் கட்டினார்கள்.
இந்த மண்ணின் உள் நரம்பின்
தமிழ் கூட அவருக்கு
ஒரு உலகக்கோணத்தில்
அந்நியப்பட்டு போயிருக்கலாம்.
அதனால்
அந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்
அவர் விதை தூவியிருக்கலாம்.
ஆனால் அந்த “சிறுகதை மன்னன்”
எழுத்தில் ஒரு  குறுநில மன்னன் அல்ல.
சிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.
வால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்
எழுத்தில் கனல்மூட்டி ரோஜாக்களை
பதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.
சிந்துபூந்துறை ஆற்று பனங்காடுகளின்
ஒரு “கயிற்றரவு”மயக்கத்தை
சமுதாய உள்வலியாய் உள்வாங்கிய‌
ஒரு  புதுமைப்பித்தனின்
ஆவித்துடிப்பையும் ஆங்காரம் ஆக்கியவன்.
“யாருக்காக அழுதான்?”
என்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.
அக்கதையின் கரு
இன்னும் கருக்குலையாமல்
தழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்போது சொல்கின்றான்.
யாருக்காகவும் அழவேண்டாம் என்று.
மரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.
அழுகைகளால்
அந்த சூரியனை நனைக்கமுடியாது!
===============================================ருத்ரா
Series Navigationமுதல் பயணிசேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *