அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

k.s 2K.S 1

[முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி

 

கவிதா வெளியீடு. முதல் பதிப்பு : அக்டோபர் 2013. பக்கங்கள் 192. விலை: 125

ஒரு சிறு அறிமுகம்

 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து முக்கிய நிகழ்வுகளை, அனுபவங்களைக் கட்டுரைக ளாக்கும்போது பிரக்ஞாபூர்வமாகவோ அல்லது தன்னையுமறியாமலோ தன்னைப் பற்றிய ஒருவித கதாநாயகத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட, ‘Tragic Hero’ பாவந் தாங்கிய பிம்பத் தைத் துருத்திக்கொண்டு நிற்கச் செய்வது பெரும்பாலான நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த ‘மிகைப்படுத்தல்’ பேசப்படும் நிகழ்வு அல்லது அனுபவத்திலும் தாக்கம் ஏற்படுத்து கிறது. எனில், எந்தவொரு எழுத்தாக்கமும் வாசிப்போரிடத்தில் பரிவதிர்வை ஏற்படுத்தும் போது மட்டுமே, வாசிப்போர் மனங்களில் ஒரு Catharsis உணர்வை ஏற்படுத்தும் போது மட்டுமே அது வாசிப்பனுபவத்தைத் தருவதாகிறது. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புறந்தள்ளிவிட்டு, ”நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன், பம்பரம் விட்டேன், பபுள்கம் சாப்பிட்டேன்” என்று கைபோன போக்கில் தன்வரலாற்றுக் கட்டுரைகளை உப்புச்சப்பில்லாமல் ’உன்னத எழுத்துகள்’ என்ற பாவனையில் எழுதித்தள்ளி அலுப்பூட்டிக்கொண்டிருப்பவர்கள் அனேகம். இத்தகைய கட்டுரைகளில் மெய்யெனப் பொழி யும் பொய்களுக்கு அளவேயில்லாமல் போய்விடுவதும் உண்டு. சிலர் இத்தகைய தன்வர லாற்றுக் கட்டுரைகள் எழுதுதலை சக-மனிதர்களை மட்டந்தட்டி மதிப்பழிக்கப் பயன்படுத்திக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு இலக்கிய சர்ச்சையில் மற்றவர்களின் வலுவான எதிர் வினைகளை மூடிமறைத்து தானே வென்றதாய் தன்னு டைய எதிர்வினைகளையே இறுதிக் கருத்தாய்ப் பிரசுரித்து இறும்பூதடையும் தகிடுதித்தக்காரர்கள் இங்கு நிறையவே உண்டு! இந்த நடப்புண்மைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது சமீபத்தில் கவிதா பதிப்பக வெளியீடாகப் பிரசுரமாகியுள்ள, டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் 17 கட்டுரைகள் இடம்பெறும் ‘அனுபவச் சுவடுகள்’ என்ற தலைப்பிட்ட நூல் கவனத்திற்குரியதாகிறது.

 

 

 

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம்

முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி

 

 

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தமிழிலக்கியப் படைப்புகளை தமிழிலிருந்து ஆங்கிலத் திற்கு மொழியாக்கம் செய்யும் குறிப்பிடத்தக்க வெகு சில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். சம கால தமிழ் இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவரே.  எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மார்த்தமான நண்பர் என்ற அளவில் அவருடைய பல நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திரு.கே.எஸ்.சுப்பிரமணியன் அசோகமித்திரன், திலகவதி, சிற்பி பாலசுப்ரமணியன் போன்ற படைப்பாளிகளின் நாவல், கவிதை போன்ற எழுத்தாக் கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புப் பணியில் முக்கிய மைல்கற்கள் தமிழின் சமகாலக் கவிதையுலகைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர் களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. கதா வெளியீடாக ஒரு தொகுப்பும், உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் சார்பில் ஒன்றும்[ அல்லது இரண்டு?] வெளியாகியுள் ளன. பொதுவாக, ஒருவருடைய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபயர்ப்பதே அந்தக் கவிஞ ருக்குச் செய்யும் சலுகையாகக் கொள்ளப்படும் சூழலில் ஒவ்வொரு கவிஞரையும் தொலை பேசியில் அழைத்து அல்லது கடிதம் மூலம் தொடர்புகொண்டு, அவருடைய கவிதையை மொழிபெயர்ப்பதற்கான அனுமதி பெற்று, தன்னுடைய மொழிபெயர்ப்பை கவிஞருக்கு வாசித்துக்காட்டி திரு. கே.எஸ்.சுப்பிரமணியம் அந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற் கொண்ட பாங்கு முன்னுதாரணமான பண்பு.

ஏறத்தாழ நாற்பது நூல்கள் [அல்லது அதற்கும் அதிகமாய்] தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இவர் இலக்கியம் சமூகம் சார்ந்து எழுதிய கட்டுரைகளும் நூல் வரிவில் வெளியாகியுள்ளன.

அனுபவச் சுவடுகளில் இடம்பெறும் பதினேழு கட்டுரைகளில் வெளிப்படும் கே.எஸ்.சுப்பிர மணியன் என்ற மனிதர் சகமனிதர்களை மதிக்கத் தெரிந்த, அவர்களுடைய தரப்பிலிருந்து விஷயங்களைப் பார்க்க முடிந்தவராக வெளிப்படுகிறார்., சிறு வயதிலேயே தந்தையின் இழப்பும், வறுமையும், ‘ராமகிருஷ்ண இல்ல’ வாழ்க்கையும் சரி, பின், பெரிய பதவியில் மணிலாவிலும், பிறவேறு நாடுகளிலும் வளமாக வாழ்ந்தபோதும் சரி, வெறுப்பையும் வன்மத்தையும் மனதில் சுமக்காத, சக மனிதர்களை நேசிக்கத் தெரிந்த, விழுமியங் களையும் வாழ்வுமதிப்புகளையும் உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற, போற்றலுக்கும் தூற்றலுக் கும் அப்பாற்பட்ட மனிதராக அவர் திகழ்வதை இந்தக் கட்டுரைகளின் வழி காண முடிகிறது. கழிவிரக்கமோ சுய புலம்பலோ தன்னைப் பீடித்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வதை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறார் அவர் என்பது அவருடைய கட்டுரைகளிலிருந்து தெளிவாகிறது. நேர்ப்படும் ஒவ்வொரு நாளிலும், நிகழ்விலும் வாழ்வின் பிரம்மாண்டத்தையும், மகத்து வத்தையும் தரிசிப்பவராகவும், அவற்றின் இரண்ட றக் கலந்த அணுவாகத் தன்னைத்தானே விலகிநின்று தரிசித்துக்கொள்பவராகவும் திகழ்கி றார் திரு.கே.எஸ்.சுப்பிரமணியன்.

பத்துநாட்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதையே பக்கம்பக்கமாக எழுதித் தள்ளுவோர் அனேகம் பேர். அப்படியில்லாமல் இருபது முப்பது வருடங்கள் வெளிநாடு களில் இருந்து அங்குள்ள மக்களோடு பழகி, எல்லாவற்றிலிருந்தும் சாரத்தை மட்டும் எடுத் துக்கொண்டு அவற்றை அடிக்கோடிட்டுக்காட்டும் திரு.கே.எஸ்.சுப்பிரமணியத்தின் வெளி நாட்டு அனுபவக் கட்டுரைகள் அடர்செறிவானவை. ’சுற்றுச்சூழல் – சில வெளிச்சங்கள்’, என்ற கட்டுரை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. மற்றும், ‘பிலிப்பின்ஸ் என்ற ஓர் உலகம்’, பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் சக்திப் புரட்சி’.

இந்தப் பதினேழு கட்டுரைகளிலும் இடம்பெறும் பொதுவான அம்சங்கள் – திரு.கே.எஸ். சுப்பிரமணியத்தின் மனிதநேயம், தன்னைத் துருத்திக்காட்டாத பாங்கு, செய்யும் காரியத்தில் வாசகன் என்ற அளவிலும், மனிதன் என்ற அளவிலும்முழு அர்ப்பணிப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பண்பு, எதிலும் மேலான அம்சங்களையே கவனப்படுத்திக்கொள்ள முற்படும் மனோபாவம். முன்பொரு முறை நேர்ப்பேச்சில் ”‘பிடிக்காத புத்தகத்தைத் திட்டித் தீர்த்து விமர்சிப்பது வீண் நேரவிரயம்; அதைத் தவிர்த்து விடுவேன் நான். நிறைவைத் தரும்விஷயங்களில் நேரம் செலுத்தவே, அவற்றை முன்னி லைப்படுத்தவே விரும்புவேன். அதுவே என்னையும் மற்றவர்களையும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியதுண்டு. இந்த நூலிலுள்ள கட்டுரைகளிலும் அவ்வாறே தன் மனதில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளையும் மனிதர்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்; நெகிழ்வோடும் நன்றியோடும் நினைவுகூர்ந்துள்ளார் அவர். இன்னொரு விதத்தில் பார்க்க, தனக்கு நேரும் மனிதர்கள் நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும் நேர்மறையான தாக்கங் களைப் பெறக்கூடிய பண்புநலன் இவரிடம் பொருந்தியமைந்திருக் கிறது என்றும் கூற முடியும்.

எளிமையான, எனில், உயிர்ப்பான நடையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ‘மனிதம் – ஒரு நிறப்பிரிகையாக’, ‘மொழிபெயர்ப்பு – ஒரு சுவையான மல்லாட்டம்’ என சில கட்டுரைகளின் தலைப்புகளே கூட இவருடைய மொழியாளுமைக்கு சான்றுபகர்கின்றன! இந்த நூலைப் பற்றி ரத்தினச்சுருக்கமாக எடுத்துரைப்பதாய் அமைந்துள்ள எழுத்தாளர் பாவண்ணனின் கடிதவரிகள் நூலின் பின்னட்டையில் தரப்பட்டுள்ளன.

இந்த நூலை கவிதா பதிப்பகத்தார் நேர்த்தியாக வெளியிட்டுள்ளார்கள். அச்சுப்பிழைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வெகு குறைவாகவே உள்ளன. அதே சமயம், காலங் காலமாக வாழ்பவை நூல்கள், பின்வரும் எத்தனையோ தலைமுறைகளால் வாசிக்கப் படுபவை என்ற அளவில், நூலாசிரியர் குறித்த சிறு விவரக்குறிப்பு எந்தவொரு நூலிலும் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. அப்படி ஒரு குறிப்பு இந்த நூலில் இடம்பெற வில்லை என்பது ஒரு குறையாகவே படுகிறது. அடுத்த பதிப்பிலாவது இந்தக் குறை அவசியம் நிவர்த்திசெய்யப்பட வேண்டும்.

Series Navigationஅதிர வைக்கும் காணொளிவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்அதிகாரத்தின் துர்வாசனை.திண்ணையின் எழுத்துருக்கள்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?ஒன்றுகூடல்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !கேட்ட மற்ற கேள்விகள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    ameethaammaal says:

    நன்றி
    இவர்போன்ற கடமையுணர்வுள்ள எழுத்தாளர்கள் அடையாளம் காட்டப்படவேண்டும் காட்டப்பட்டிருக்கிறார்.

Leave a Reply to ameethaammaal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *