அன்னாய் வாழி பத்து

This entry is part 7 of 7 in the series 26 ஆகஸ்ட் 2018

ஐங்குறு நூறு——குறிஞ்சி

.மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில் இவர் பாடிய பாடல்கள் பல காணப்படுகின்றன. இவர் மதுரைக்குக் கிழக்கில் உள்ள வாதவூரில் பிறந்தார் என்று கூறுவர். பாரி இறந்த பின் அவனுடைய மகள்களை இவர் திருக்கோயிலூருக்கு அழைத்துச் சென்று அங்கு ஆண்ட மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்களுக்குத் திருமணம் செய்து  கொடுத்தார். பின்னர் அவ்வூரருகே ஓடும் பெண்ணையாற்றின் துருத்தியில் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

மலையும் மலைசார்ந்த பகுதிகளும் குறிஞ்சி எனக்கூறப்படும்

=============================================================================

அன்னாய் வாழி பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் ‘அன்னாய் வாழி” என்று தொடங்குவதால் இப்பகுதிக்கு அன்னாய் வாழிப் பத்து என்று பெயர் வந்தது.

”அன்னாய் வாழிவேண்[டு] அன்னை! என்னை

தானும் மலைந்தான்; எமக்கும் தழையாயின;

பொன்வீ மணிஅரும் பினவே

என்ன மரங்கொலவர் சாரல் அவ்வே

[என்னை=என்+ஐ=தலைவன்; மலைந்தான்=சூடினான்; பொன்வீ=வேங்கைமரப் பூ;]

அவ ஒருத்தனைக் காதலித்துத் தெனமும் சந்தித்துப் பேசி வரா. அதை மறைமுகமாத் தன் தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.

”அன்னையே! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு; அவன் மரத்திலேந்து தழையெல்லாம் பறிச்சு அதாலே தழை ஆடை போட்டுக்கிட்டான். எனக்கும் அதே தழையாடைதான் வந்தது. அந்த மரத்தோட பூவெல்லாம் பொன்னைப்போல இருக்கு; நீலமணி போல அரும்பெல்லாம் இருக்கு; அந்த மலைச்சாரலிலே இருக்கற அதெல்லாம் என்ன மரங்களோ?”

அவன் தந்த தழையாடையையே அவளும் போட்டுக்கிட்டா; அதால அவதான் அவனைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறான்றதை மறைமுகமாச் சொல்ற பாட்டு

=============================================================================

அன்னாய் வாழி பத்து-2

அன்னாய், வாழி! வேண்டு அன்னை! நம்ஊர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே!

[குறுமக=இளஞ்சிறுவன்]

அவன் இப்ப அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் பொண்ணு கேட்டு வரான்; அதைப் பாத்தத் தோழி சொல்ற பாட்டு இது.

அவன் வர்ற குதிரையைப் பாத்துட்டுத் தோழி சொல்றா.

”அன்னையே! இதைக் கொஞ்சம் கேளு; நீளமான மலை இருக்கற நாட்டைச் சேந்தவன் அவன்; அவன் வர்ற குதிரைக்கு நம்ம ஊர்ல இருக்கற பார்ப்பனச் சின்ன பசங்க தலையில வச்சிருக்கற குடுமி போல தலைமயிர் இருக்குது பாரு;”

==============================================================================

அன்னாய்வாழி பத்து—3

அன்னாய்!  வாழி! வேண்டு அன்னை! நம்படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவல் கீழ்

மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே.

[படப்பை=தோட்டம்; உவலை=தழை; கூவல்=கிணறு; மா=விலங்கு; கலிழி=கலக்கிய]

அவ தன் ஊட்டை விட்டுட்டு அவனோட போயிக் கல்யாணம் செஞ்சுகிட்டா; அப்புறம் ஒரு நாளு பொறந்த ஊட்டுக்கு வரா; அப்ப அவளோட தோழி அவகிட்ட “ஏண்டி, நீ போன ஊருல தண்ணி நல்லாவே இருக்காதே: நீ அதை எப்படிக் குடிச்ச”ன்னு கேக்கறா. அதுக்கு அவ பதில் சொல்ற பாட்டு இது.

அன்னையே! இதைக் கேளு; நம்ம தோட்டத்துல கெடைக்கற தித்திக்கற தேனோட கலந்த பாலை விட அவன் ஊருல தழையெல்லாம் மூடி இருக்கற பல வெலங்கெல்லாம் குடிச்சுக் கலக்கிய தண்ணி ரொம்ப இனிப்பா இருந்துச்சு”

அவனோட இருந்தா கலங்கிய தண்ணி கூட தித்திக்குமாம்

==============================================================================

அன்னாய் வாழி பத்து—4

அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! அஃதுஎவன்கொல்?

வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,

பெயர்வழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,

நல்லள் நல்லள் என்ப

தீயேன் தில்ல; மலைகிழ வோற்கே!

[வரையற மகளிர்=தெய்வ மகளிர்; கழீஇ=குழுமிகூடி; நிரை=கூட்டம்]

அவன் அப்ப அப்ப வந்துட்டுப் போறானே தவிர கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்றானேன்னு அவ வருந்தறா; அப்ப அவன் வந்து மறைவாக் காத்திருக்கான்; அவனும் கேக்கற மாதிரி அவ தோழிகிட்ட சொல்றா இது.

”அன்னையே! இதைக் கொஞ்சம் கேளு! மலையில இருக்கற தெய்வப் பொண்ணுங்க போல ஊர்ல இருக்கற எல்லாரும் ஒண்ணாச் சேந்து நான் போற எடமெல்லாம் என்னைப் பாத்து, “இவ ரொம்ப நல்லவ, நல்லவன்னுதான் சொல்றாங்க ஆனா நான் மலையிலேந்து வர்ற அவனுக்கு மட்டும்தான் நான் கெட்டவளா இருக்கேன் போல இருக்கு”

=============================================================================

அன்னாய் வாழி பத்து—5

அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! என்தோழி

நனிநாண் உடையள்;நின்னும் அஞ்சும்;

ஒலிவெள் அருவி ஓங்கு மலைநாடன்

மலர்ந்த மார்பின் பாயல்

தவ நனி வெய்யள்; நோகோ யானே.

[வெள்ளருவி=வெண்மையான அருவி; நனி நாண்=மிகுதியான வெட்கம்; பாயல்=படுக்கை; வெய்யள்=விருப்பம் உடையவள்]

[அவளைப் பொண்ணு கேட்டுக் கல்யாணம் பேச வராங்க; ஆனா அவளோ, ”என்னாடா நாம வேற ஒருத்தரை நெனச்சுகிட்டிருக்கோம்; இவங்க இப்படி வராங்களே; அம்மா அப்பா சம்மதிச்சுடுவாங்களோ”ன்னு வருத்தப்படறா. அவ வருத்தப்படறதைப் பாத்த செவிலித்தாய், தோழிகிட்ட என்னா காரணம்னு கேக்கறா. அப்ப தோழி செவிலிகிட்டச் சொல்ற பாட்டு இது.

”அன்னையே! இதைக் கொஞ்சம் கேளு; இவ மனசில இருக்கறதை வெளியில சொல்ல முடியாத வெக்கம் உடையவ; அப்படிச் சொன்னாலும் நீ கோவிச்சுக்கப் போறேன்னு பயப்படுவா; அவ நெலமயை நெனச்சு நானே வருத்தப்படறேன்; நல்லா வெள்ளையான அருவி கொட்டற மலையைச் சேர்ந்த அவனோட மார்பையே படுக்கையா வச்சுகிட்டுத் தூங்கறதையே அவ விரும்பறா”

==============================================================================

அன்னாய் வாழிப்பத்து—6

அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! உவக்காண்

மாரிக் குன்றத்க்துக் காப்பாள் அன்னன்;

தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்

பாசி சூழ்ந்த பெருங்கழல்,

தண்பனி வைகிய வரிக்கச் சினனே.

[உவக்காண்=உவ்விடத்தே காண்பாயாக; [உ என்பது சுட்டெழுத்து] மாரி=மழை; காப்பாள்=காவல்காரன்; தொடலை=மாலை;தூவல்=மழைத்துளி; கழல்=காலில் அணியும் அணி]

அவனும் அவளும் ராத்திரியில ஒரு எடத்தில சந்திப்பாங்க; அன்னிக்கு அந்த எடத்திற்கு அவளும் அவளோட தோழியும் வராங்க. அவங்க வர்றதுக்கு முன்னாடியே அவன் வந்து காத்துக்கிட்டு நிக்கறான். அதைப் பாத்த தோழி அவகிட்ட சொல்ற பாட்டு இது.

”அன்னையே! இதைக் கொஞ்சம் கேளு; மழைக் காலத்துல மழை அதிகமா வந்து கொளத்தோட கரை ஒடைஞ்சிடாம காத்து நிக்கற காவக் காரன் போல அதோ அவன் நிக்கறான் பாரு. மழைத்துளியால நனைஞ்சு போன மாலையையும், நல்லா ஒளி வீசற வாளையும், பாசிங்க சுத்தி இருக்கற கழலையும், இறுக்கிக் கட்டி இருக்கற கச்சையும் உடைய அவன் அதோ அங்கே நிக்கறான்”

ஒனக்காக எல்லாத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு அவன் நிக்கறான் பாத்தியான்னு மறைவாச் சொல்றா.

==============================================================================

அன்னாய் வாழிப் பத்து—7

அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நன்றும்

உணங்குவ கொல்லோ. நின்தினையே! உவக்காண்

நிணம்பொதி வழுக்கின் தோன்றும்,

மழைதலை வைத்தவர் மணிநெடுங்குன்றே!

[உணங்குதல்=உலர்தல்; உவக்காண்=அதோ காண்; நிணம்=இறைச்சி; வழுக்கு=இறைச்சியை மூடி இருக்கும் வெண்படலம்]

மழையே பேயல; அதால வெதைச்ச தெனையெல்லாம் வாட ஆரம்பிச்சிடுச்சு; அதால இனிமே காவக்காக்கவும் அனுப்ப மாட்டாங்க; அவனைச் சந்திக்க முடியலியேனு கவலைப்பட்ட அவளுக்குத் தோழி சொல்ற பாட்டு இது.

’அன்னையே! வாழ்க; இதைக் கேளு; ஒன் தெனைப்பயிறு காஞ்சு போயிடாது. ஏன் தெரியுமா? அதோ பாரு; இறைச்சியை மூடி இருக்கற வெள்ளையான வழுக்கை போல அவன் இருக்கற ஒயரமான நீலமலை மேல மேகமெல்லாம் படிஞ்சிருக்கு.”

மேகம் இருக்கறதால மழை வரப் போகுது; அதால தினை வளரும்; நீயும் காவல் காக்கப் போகலாம், அவனைப் பாக்கலாம்னு மறைவா சொல்றா

==============================================================================அன்னாய் வாழிப் பத்து—8

அன்னாய், வாழி வேண்டு அன்னை! கானவர்

கிழங்குஅகழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன்மலி

புதுவீத் தாஅம் அவர்நாட்டு

மணிநிற மால்வரை மறைதொறும்,

அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே

[கானவர்=காட்டுவாழ்வினர்; புதுவீ=புது மலர்; தாஅம்=உதிர்ந்து விழும்; மால்வரை=பெரிய மலை; ஆர்ந்தன=நிறைந்தன]

அவனும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதைத் தோழி, செவிலிகிட்டச் சொல்லி அவங்க மனசையும் மாத்திக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டா; அதால மகிழ்ச்சியான தோழி செவிலிகிட்ட சொல்ற பாட்டு இது.

”அன்னையே! வாழ்க! இதைக் கேளு; காட்ல வாழற குறிஞ்சி நிலக் கானவருங்க கெழங்கு எடுக்கறதுக்காக தோண்டிய குழியெல்லாம் நெரம்பற மாதிரி பொன் நெறத்துல இருக்கற வேங்கை மரத்துப் பூவெல்லாம் உதிர்ந்து கெடக்கும்; அவனோட நாட்ல நீலமணி போல இருக்கற பெரிய மலை இவ கண்ணிலேந்து மறையும் போதெல்லாம் அழகான பூப்போல இருக்கற இவ கண்லேந்து கண்ணீர் வருதே!”

கானவருங்க அவங்களுக்காகக் கெழங்கு தோண்டி எடுத்த குழிகளை, வேங்கைப் பூ நெரப்பற மாதிரி, அவன் அவனுக்காக அவளை எடுத்துகிட்டுப் போவான்னு மறைவா சொல்றா

============================================================================

அன்னாய் வாழி பத்து—9

அன்னாய் வாழி வேண்டுய் அன்னை! நீமற்று

யான்அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்

கொண்டல் அவரைப் பூவின் அன்ன

வெண்தலை மாமழை சூடித்

தோன்றல் ஆனாது அவர் மணிநெடுங் குன்றே.

[வேண்டுதி=கேட்பாய்; கொண்டல்=கீழைக்காற்று; வெண்தலை=வெண்நிற மேகம்]

பணம் சேத்துகிட்டு வந்து ஒன்னைக் கல்யாணம் செஞ்சுக்குவேன்னு சொல்லிட்டு அவன் பிரிஞ்சு போயிட்டான். அவ அவனையே நெனச்சு வருந்தறா. அப்ப தோழி “நீதான் அவனைக் கொஞ்சம் மறக்கணும்”னு சொல்றா; அதுக்கு அவ சொல்ற பாட்டு இது

”அன்னையே! இதைக் கேளு, நீதான் அவனைக் கொஞ்சம் மறக்கணும்னு சொல்றே! ஆனா அவனோட மலை நீல நெற மணி போன்றது. அதோட உச்சியானது கீழக் காத்தால மலர்ற அவரைப் பூப்போல இருக்குது; அந்த மலை என் கண் முன்னாலயே நிக்குதே! நான் எப்படி அவனை மறப்பேன்?”

==============================================================================

அன்னாய் வாழிப் பத்து—10

அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பைப்

புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர்நாட்டுப்

பூக்கெழு குன்றம் நோக்கி நின்று,

மணிபுரை வயங்கிழை நிலைபெறத்

தணிதற்கும் உரித்தவள் உற்ற நோயே!

[அவளை ஊட்டை விட்டு வெளியே போக முடியாதபடிக்குக் காவல் போட்டாச்சு; அதால அவ மெலிஞ்சு போயிட்டா; “சரி, ஏதோ தெய்வக்குத்தம்னு நெனச்சு வெறியாட்டு எடுக்க ஏற்பாடு செய்யறாங்க; அப்ப தோழி செவிலிகிட்டசொல்ற பாட்டு இது

[படப்பை=தோட்டம்; புலவுச் சேர்துறுகல்= இறைச்சி நாற்றம் உள்ள குண்டுக்கல்]

”அன்னையே! இதைக் கொஞ்சம் கேளு; நம்ம தோட்டத்துல இருக்கற இறைச்சி நாத்தம் வீசற குண்டுக்கல் மேல ஏறி நின்னுக்கிட்டு அவன் நாட்டுல பூக்கள் எல்லாம் நெறய இருக்கற மலையை, நீல மணியெல்லாம் போட்டிருக்கற அவ பாக்கும் நெல அவளுக்கு வந்திடுச்சின்னா அந்த மலையே அவ நோயைத் தீத்திடும்”

அந்த மலைக்குச் சொந்தக்காரனை அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாதான் நோயி தீரும்னு மறைவா சொல்றா.

=============================================================================அன்னாய் வாழிப் பத்து நிறைவு

===============================================

======================================================

 

 

 

Top of Form

Series Navigationஎனக்கோர் இடமுண்டு !
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *