அன்பிற்குப் பாத்திரம்

5
0 minutes, 5 seconds Read
This entry is part 30 of 32 in the series 1 ஜூலை 2012

 

என் நெடு  நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது.  நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு  மதிய சாப்பாடு  எடுத்துச் செல்லும் அலுமினிய டிஃபன் பாக்ஸில் அடைக்கமுடியாத அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டதால் என் அக்கா பள்ளிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த ( எவர் ) சில்வர் டிஃபன்பாக்ஸ் அன்று எனக்குப் பள்ளிக்கு எடுத்துச் செல்லக்  கிடைத்திருந்தது . ரொம்பச் சின்னதாகவும் இல்லாமல் அதேசமயத்தில் ஒரு சம்புடம் போல இருந்தாலும் ரொம்பப் பெரியதாகவும் இல்லாமல் அதன் உடம்பில் ரெண்டு அழகான குருவிகளுக்கிடையில்    ” சகுந்தலா ” என்று அம்மாவின் பெயர்  ‘ டாட் மேட்ரிக்ஸ் ‘ ஸ்டைலில்  பொறிக்கப்பட்ட அந்த டிஃபன் பாக்ஸில் வழக்கமான பழைய சாதமும் மோரும் 1 : 3 என்ற அளவில் விளிம்பு வரை ததும்பி நின்று கொண்டிருந்ததை அடிக்கடி மூடியைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.  அம்மா ஒன்றும் எனக்கு  அதைச் சுலபமாகக் கொடுத்துவிடவில்லை. நான் அந்த டிஃபன் பாக்ஸ்தான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி , அதைக்கொடுக்கவில்லை என்றால் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று மிரட்டியதன் பின்னரே மிகுந்த தயக்கத்துடன் அதில் மேற்சொன்ன ரேஷியோவில் சாதம் பிசைந்து ( கரைத்து ) கொடுத்தாள்.

 

ஆனால், என் தம்பி எனக்கு முன்னமேயே ( எவர் ) சில்வர் டிஃபன் பாக்ஸில் சாதம் கொண்டுபோக ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள், அவன் பேனாவைக் காணாமல் போக்கிவிட்டு, அதே கலரில் எனக்கும் வாங்கிக்கொடுத்திருந்த  என் பேனாவை என் பையிலிருந்து திருட்டுத்தனமாய் எடுத்து வைத்திருந்ததை நான் கண்டுபிடித்துக் கேட்டபோது ஆரம்பித்த த்வந்த யுத்தத்தில் நான் தம்பியின் முகத்தில் குத்துவதற்கு எத்தனித்தபோது அவன் சட்டென்று பக்கத்திலிருந்த அவனின் ஒடுக்கு விழுந்த அலுமினிய டிஃபன்பாக்ஸை எடுத்து அவன் மூஞ்சியை மறைத்துக்கொண்டான். என் மூர்க்கத்தின் பாதி அளவிற்கே நசுங்கிப்போயிருக்கும் அவனின் டிஃபன்பாக்ஸ் அன்று என் பலப்ப்ரயோகத்தினால் நசுங்கியதோடில்லாமல் அவன் மூக்கையும் பதம்பார்த்ததில் ரெண்டு நாளைக்குமுன்  அவன் பார்த்திருந்த கர்ணன்  சினிமா அந்தச் சமயத்தில் கைகொடுக்க என் தம்பி  கீழேவிழுந்து புத்தகங்கள் சிதறிக்கிடந்த உடைந்த டேபிளின் அடியில் கால்களைப் பரப்பி சாய்ந்துகிடந்து கண்கள் செருக சிவாஜியையும் நடிப்பில் மிஞ்சிக்கொண்டிருந்தான். எப்போதும் என் தம்பிக்கே அனுகூலமாய் இருக்கும் அண்ணன்,  என்னமோ அவனே அடிவாங்கியதுபோல  அலற என்னமோ ஏதோ என்று ஓடிவந்த அம்மா என் தம்பி மீது பாசமழை பொழிந்து அவன் பாதிக் கண்களை மூடிக்கொண்டே கேட்ட வரமான புது சில்வர் டிஃபன் பாக்ஸையும் கொடுத்துவிட்டாள். நான் என்னவோ பிரம்மாவின் சிரசைக்கொய்து சாபத்தைச் சம்பாதித்துக்கொண்ட விட்ட சிவன் மாதிரி என் பழைய அலுமினிய டிஃபன் பாக்ஸோடேயே அலைந்துகொண்டிருந்தேன். இப்படி என் தம்பிக்கே ஜூனியராகிப்போய் இப்போதுதான் சாபம் தீர்ந்து அதனால் சில்வர் டிஃபன் பாக்ஸ் கிடைக்கப்பெற்ற என் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.

 

நான் சில்வர் டிஃபன் பாக்ஸ் எடுத்துச் சென்றிருந்த முதல் நாள் எங்கள் கேப்டன் ஷம்சுதீன் , ” ஐயரே ! வாடா இன்னிக்கு ஆஃபிஸ் கேண்டீனுக்குப் போய் சாப்பிடலாம் ” என்று கூப்பிட்டான். அவன் கூப்பிடுவது என்பது கட்டளையிடுவது என்பதாகும். எங்களால் அதைத் தட்டமுடியாது.  ஆஃபிஸ் கேண்டீன் என்பது எங்கள் பள்ளிக்கூடத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் பிரம்மாண்டமான கார்டன்களை முன்பக்கம் கொண்ட மொஹலாய அரசர்களின் மாளிகைகள் போல இருக்கும் ஆஃபிசர் க்வார்ட்டர்ஸ்களைத் தாண்டி ரயிவே ஒர்க் ஷாப்பின் மேற்குப்பக்க வாசலின் சமீபத்தில் இருக்கும் அக்கௌண்ட்ஸ் மற்றும் மெக்கானிகல் பிரிவு அலுவலகங்களில் வேலைசெய்பவர்களுக்காக இருக்கும் கேண்டீன். எங்கள் பள்ளி ஆசிரியர்கள் நிறைய சமயங்களில் காஃபி , வடை, போண்டா போன்றவற்றை வாங்க என்போன்றோரை ( ஷம்சுதீனை அனுப்பினால் பாதிதான் அவர்களுக்குக் கிடைக்கும் )  அனுப்புவதும் இங்கேதான். மைசூர் போண்டா எனப்படும் வஸ்துவைச் சாப்பிட்டால் தொண்டை அடைத்துக்கொள்ளும் என்பதால் அதற்கு அதன் இயற்பெயர் மறைந்துபோய் ‘ தொண்டை அடைப்பான் ‘ என்ற காரணப்பெயர் நிலைத்துவிட்டதுபோல கேண்டீனிலிருந்த பல பதார்த்தங்களும் காரணப்பெயராலேயே அழைக்கப்பட்டன.

 

நாங்கள் கேண்டீனுக்குப்போன சமயத்தில் ஆஃபிசைவிட கேண்டீனிலேயே கூட்டம் அதிகம் இருந்ததால், எங்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது, தொண்டை அடைப்பான் மாத்திரம்தான் கிடைத்தது. அதை வாங்கிக்கொண்டு  கேண்டீனுக்கு வெளியிலிருக்கும் பழைய ஷெட்டின் கீழ் வெராண்டாவில் உட்கார்ந்து ஷம்சுதீன் சொல்லும் சினிமாக் கதைகளைக்கேட்டுக்கொண்டே மெதுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். வழக்கத்திற்கு மாறாக  ஷம்சுதீன் சினிமாக்கதையின் சோகக்கட்டங்களை அதிக உணர்வுபூர்வமாகச் சொன்னதுபோல் அன்று இருந்தது. அந்தச் சமயங்களிலெல்லாம் கதையை நிறுத்தித் தொண்டையைச் சரிசெய்துகொண்டு அவன் சொன்னது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது.  ஒருசமயத்தில் கதையை நிறுத்திவிட்டு இருமி ஒரு பெரிய ஏப்பத்தைவிட்டபின் கொஞ்சம் சரியானதுபோல் இருக்கும்போது, ”  இந்தக் கதை வேண்டாம்டா ! நீ என்னவோ இன்னிக்கு ரொம்ப உணர்ச்சிவசப்படற ! வேற சிரிப்புப் படக்கதையாச் சொல்லுடா ”  என்று பக்கத்திலிருந்த ஜேக்கப் சொன்னான். அதற்கு ஷம்சுதீன் ,  ” போடா அறிவுக்கெட்டக் …..! ” என்ற  வசவோடு ஆரம்பித்து  கதை சொல்லும்போது தனக்குத் தொண்டை அடைத்தது கதையின் சோகத்தினால் அல்ல என்றும், ” எல்லாம் அந்த தொண்டை அடைப்பானால் வந்த சிக்கல் ”  என்றும் ஷம்சுதீன்  கமறிக்கொண்டே சொன்னான். அப்போது ஜேக்கப் சும்மாயிராமல், ” டேய் ! ஆஃபிசுக்குள்ள ச்சில் தண்ணி இருக்கும்டா ! போய்க் குடிச்சா சரியாப்போய்டும்டா உனக்கு ” என்று கொடுத்த விவகாரமான ஐடியா ஷம்சுதீனுக்குச் சரியாகப்பட அவன் உடனே என் கையில் கழுவிவைத்திருந்த சில்வர் டிஃபன்பாக்ஸைப் பிடுங்கிக்கொண்டு வேகமாய் ஆஃபிசை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.  நான் , ”  வேண்டாம்டா ! போகாதடா ! ” என்று கதறியும் பதறியும் பின்னால் ஓடியும் அவனைத் தடுக்க முடியவில்லை.

 

ஆஃபிசுக்குள் போனவன் பத்து நிமிடம் ஆகியும் வெளியே வரவில்லை.சற்று நேரத்தில் உள்ளிருந்து பெருத்த சத்தம் கேட்டது. கொஞ்ச நேரத்தில் ஷம்சுதீன் அந்த அக்கௌண்ட்ஸ் ஆஃபிசின் மோட்டாவான பியூனின் பின்னால் வந்துகொண்டிருந்தான் . உள்ளே போகும்போது சட்டையோடு போனவன் இப்போது அந்த ஆஜானுபாகனோடு சட்டையில்லாமல்  வந்து கொண்டிருந்தான். சட்டை அந்தப் பியூனின் கையில் இருந்தது. மெதுவாகப் பின்னால் நாங்களெல்லாம் பார்க்க வந்துகொண்டிருந்தவன் சட்டென்று அந்த ஆளின் கையிலிருந்த அவன் சட்டையை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு தடதடவென வாசலை நோக்கி ஓடிவந்து எங்களையெல்லாம் தாண்டி பள்ளிக்கூடத்தை நோக்கிச் சிட்டெனப் பறந்துவிட்டான். ஆனால் அந்தப் பியூனின் இன்னொரு கையில் என் சில்வர் டிஃபன் பாக்ஸ் மாட்டிக்கொண்டிருந்தது. ஷம்சுதீன் ஓடிவிட்டதால் எங்களைப் பார்த்து , ” இங்க வாங்கடா ” என்று எங்களைப் பிடிக்க அந்த ஆள் வந்தபோது என்னுடன் வந்திருந்த எல்லோரும் ஓடிப்போய்விட்டார்கள். என் டிஃபன்பாக்ஸ் அவனிடம் இருந்ததால் , என்னால் அவ்வாறு ஓடமுடியவில்லை.

 

மிகுந்த தயக்கத்துடன் அந்த சாப்பாட்டு டப்பாவை அம்மா கொடுத்தது என் மனக்கண்ணில் ஓட, என் அண்ணன், தம்பி எல்லோரும் சேர்ந்துகொண்டு , ” இவனுக்கு எதுக்கும்மா சில்வர் டப்பால்லாம். அலுமினியம்தான் இவனுக்கு லாயக்கு ” என்று சாயந்திரம் சொல்லப்போகும் காட்சியும் மனக்கண்ணில் ஓடியது. அந்த அலுமினியமாவது கிடைக்குமா என்றும் தெரியவில்லை. அந்த பியூனோ ரொம்பக் கோபத்திலிருந்தான். ஆள் வேறு வாட்டசாட்டமாக இரும்பு மனிதனாக இருந்ததால், அவன் கையில் மாட்டாமல் ஆஃபிசின் இன்னொரு வாசல் வழியாக நுழைந்துவிடலாம் என்று அந்தப் பக்கம் போனபோது , அந்த ஆள் எனக்கு முன்னால் அங்கு வந்து என்னைப் பிடித்துவிட்டான். ” என்னடா , எனக்கே போக்குக் காட்டறியா ? நான் யாரு தெரியுமில்லே ? ” என்று கண்களை உருட்டியபோது நான் பயந்துவிட்டேன். நான் அவனிடம் , ” சார் ! நான் இல்ல சார். அவந்தான் சார்! டிஃபன்பாக்ஸ் என்னோடது சார் ” என்று ஏதேதோ உளற ஆரம்பித்தேன். அந்த ஆள் உடனே, ” ஓஹோ ! டிஃபன் பாக்ஸ் ஒன்னோடதா ? வெரி குட் ! இங்க வா ” என்று அந்த ஆஃபிசின் தெற்குக் கோடியில் இருந்த வாட்டர் கூலரின் பக்கத்தில் அழைத்துச் சென்று அங்கு ஷம்சுதீன் ஏறத்தாழ ஒரு எருமைமாட்டைக் குளிப்பாட்டியதைப் போன்ற நிலைமையில் அந்த இடத்தை விட்டுச் சென்றதைக் காட்டி, ” போ இந்த எடத்தை நீட்டா தொடச்சுக்குடுத்துட்டு ஓடு ” என்றான். நானோ ,              ” என்னோட டிஃபன் பாக்ஸ் சார் ”  என்று அழுது கொண்டே கேட்டேன். மொதல்ல இந்த எடத்த க்ளீன் பண்ணு. அப்பறம் பாக்கலாம் அதப் பத்தி ”  என்று சொன்னதைக் கேட்டு நான் ஓவென்று அழ ஆரம்பித்ததைப் பார்த்து, அங்கு வந்த ஆஃபிசர் போன்று தோற்றமளித்த அந்த மனிதர், ” என்ன கஞ்சமலை ? என்ன இங்க கலாட்டா ? என்று மிக மெதுவாகக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்தார். நான் அதற்குள் அவர் பக்கத்தில் போய் , ” சார் என்னோட டிஃபன் பாக்ஸ் சார்! இவரு புடுங்கி வெச்சுண்டுருக்கார் சார். இந்த எடத்த நான் ஒண்ணும் இப்படி பண்ணல சார். இப்படிப் பண்ணினவன் ஷம்சுதீன்தான்  சார். அவன் ஓடிப்போய்ட்டான் சார்.நான் டிஃபன் பாக்ஸ்  இல்லாம வீட்டுக்குப் போனா என்ன வீட்டுக்குள்ள விடமாட்டாங்க சார். ப்ளீஸ் தரச்சொல்லுங்க சார் ” என்று அழுதுகொண்டே சொன்னதைக் கேட்ட அந்தப் பெரிய மனிதர். ” என்ன கஞ்சமலை ! இந்தப் பையன் டிஃபன் பாக்ஸை ஏன் புடுங்கி வச்சுண்டிருக்கே ? இவனா இப்படிப் பண்ணினான் ?” என்று கேட்டபோது, கஞ்சமலை என்கிற பிரம்மாவின் எந்தக் கஞ்சத்தனமும் இல்லாத மலை போன்றிருந்த அந்த மனிதன், ” இல்ல சார் ” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவுடன் அவர் சைகையாலேயே டிஃபன் பாக்ஸைக் கொடுத்துவிடும்படி சொன்னார். கஞ்சமலையோ வேண்டாவெறுப்பாக என்னிடம் என் டிஃபன் பாக்ஸைக் கொடுக்க நான் அப்போதுதான் என் உலகத்தின் ஒளியையே உணர்ந்தேன்.

 

டப்பாவை வாங்கிக்கொண்டு கொஞ்சதூரம் வந்தபின் அந்தப் பெரிய மனிதருக்கு நன்றி சொல்லாமல் வந்தது ஞாபகம் வர , மீண்டும் அந்த ஆஃபிஸுக்குப் போனேன். அவர் அந்தப் பெரிய ஆஃபிஸின் மேற்குப் புற ஆரம்பத்தில் ராஜாக்களின் சிம்மாசனம் போன்றதொரு சேரில் உட்கார்ந்திருந்தார். பெரிய டேபிளின்மேல் பச்சை நிற விரிப்புப் படர்ந்திருக்க அதன்மேல் எஸ்.ஆர். என்று எழுதிய கண்ணாடி,  டேபிள் அளவிற்கு விரிந்திருந்தது. கோபாலன் , சீனியர் அக்கௌண்டண்ட் என்று ஒரு முப்பரிமாணக் கட்டையில் அவர் பெயரும் அவர் வகிக்கும் பதவியும் எழுதியிருந்தது. அவரின் பின்புறம் ஏராளமான சாமிப் படங்கள்விதவிதமான சைஸ்களில் மாட்டப்பட்டு சீரியல் பல்புகள் எரிய அவர் என்னவோ சாமிப்படங்களை விற்கும் கடையின் முதலாளி போலவும் இருந்தார். நான் அவர் பக்கத்தில் நன்றி சொல்லப் போனபோது, யாரோ தவறு செய்திருந்த அலுவலரை மிக மென்மையாகக் கடிந்துகொண்டிருந்தார். ” ஏன் இப்படி திருப்பித் திருப்பித் தப்புப் பண்றீங்க மிஸ்டர் முத்தையா ? உள்ளே எஸ்.ஏ. ஓ கிட்ட போயிருந்துதுன்னா என்ன பதில் சொல்லமுடியும், சொல்லுங்க  ? ” என்று கேட்ட குரலில் எந்தக் கடுமையும் இல்லை. அவர் அணிந்திருந்த கண்ணாடிக்குப் பின் உள்ளடங்கியிருந்த கண்களில் பரிவு மாத்திரமே ததும்பிக்கிடந்தது. எதிரிலிருந்த மனிதர் போனபின், நான் மெதுவாக அவரிடம் ” ரொம்ப தேங்க்ஸ் சார் ” என்று சொன்னபோது சிரித்துக் கொண்டே ஒன்றும் சொல்லாமல் என்னைத் தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார்.

 

நான் அவரை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அதுவும் அடுத்த ஆறு மாதங்களுக்குள்.   ஒருமுறை என் மாமா பையன் வேம்பு திருவாரூரில் இருந்து வந்திருந்தான். அவன் இண்டியன் பேங்கில் வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது , ” இங்கே அக்கௌண்ட்ஸ்ல கோபாலன்னு ஒரு சீனியர் ஒத்தரு இருக்காராம். அவரப் பாக்கணும். ” என்று என் அப்பாவிடம் கேட்டான். ” ஆமா வெட வெடன்னு நெத்தியில ஒத்த நாமம் போட்டுண்டு இருப்பான். யூஸ்லெஸ் ஃபெல்லோ ! என்ன வேணும் சொல்லு ” என்று எப்போதும்போல் அடுத்தவரைப் பற்றின ” யூஸ்லெஸ் ” அபிப்பிராயத்தை அள்ளிவிட்டார். அப்பா சொன்னதை அவ்வளவாக ரசிக்காத வேம்பு , ” இல்ல அவர் வீடு இங்க எங்கேயோ அம்பிகாபுரத்தில இருக்காம். பாக்கணும் ” என்றான் .பின் அப்பா சொன்னதை அரைகுறையாகக் காதில் வாங்கிகொண்டு,  கையில் அட்ரெஸ் இருந்ததால் அப்பா சொன்ன ரூட்டில் சாய்ந்திரம் போய்க்கொள்ளலாம் என்றிருந்துவிட்டான். சாயந்திரம் கிளம்பும்போது ஒருக்கால் வழி தவறிப் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்து,  படிப்பதாக பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என்னைப் பார்த்து , ” டேய் ரமணி ! நீ படிச்சதெல்லாம் போதும். புஸ்தகத்த வச்சுட்டு வா போகலாம் ” என்று என்னை கௌரவமாக அழைத்தபோது அம்மா ஒன்றும் சொல்லாததால் நான் அவனுடன் கிளம்பிவிட்டேன்.

 

அந்த அட்ரெஸ்ஸைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. வேம்புவும் நானும்  அந்த வீட்டிற்குப் போனபோது,  கோபாலன் சார் உடம்பின் நிறைய இடங்களில் திருமண் இட்டுக்கொண்டு அந்த வீட்டின் வெராண்டாவின் நடுவில் தரையில் ஒரு விரிப்பின் மேல் உட்கார்ந்து கண்களைமூடித் தியானத்தில் இருந்தார். ” சார் ” என்ற என் கர்ணகடூர அழைப்பு அவரைப் புனித உலகத்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்திருக்கவேண்டும். அப்போதுகூட மெதுவாகக் கண்களைத் திறந்து, யார் என்பதைக் கண்களைச் சுருக்கிப் பார்த்து, ” வாங்கோ ! யார் வேணும் ” என்று மிருதுவான குரலில் கேட்டார். வேம்பு தான் யார் என்பதையும்  வேம்புவின் நண்பர் தன்னை இங்கு அனுப்பி வைத்திருப்பதையும் சொன்னபோது , ” உள்ள வாங்கோ ! உக்காருங்கோ ” என்று அழைத்துவிட்டு சட்டையைப் போட்டுக்கொள்ள உள்ளே சென்ற போது அவர் கழுத்தின் பின்புறமும் அளவு தப்பாத நாமம் வரையப்பட்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நான் வேம்புவிடம் அதைக் காட்டியபோது அவன் ” உஷ்ஷ் ! பேசாமா இருடா பைத்தியம் ” என்றான்.

 

உள்ளேயிருந்து வந்த அவருடன் இப்போது இன்னொரு பெண்மணியும் வந்தார். அந்தப் பெண்மணி நிச்சயம் அவர் மனைவியாக இருக்க முடியாது. அதிகம்போனால் நாற்பது வயசு மதிக்கலாம். மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் எந்த நிறத்தில்  புடவை கட்டிக்கொண்டாலும் எடுப்பாக இருக்குமாறு இருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாது தலை வகிட்டின் ஆரம்பத்தில் குங்குமம் தீற்றலாக இருக்க நெற்றியில் வெள்ளையாய் ஏதோ பறவை பறக்கிறாற்போல வரையப்பட்ட இரு வளைவுகளுக்கு மத்தியில் ஒரு சிகப்பு ஒற்றைத் தீட்டல் புருவ மத்தியிலிருந்து எழுந்திருந்தது. மூக்கிலும் உதட்டுப் பக்கத்திலும் பூத்திருந்த வியர்வை முத்துக்களை புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே, ” சந்தானம் அனுப்பிச்சாரோ ? ” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் . அத்ற்குள் கோபாலன் சார்,  அவளை ” ஜலம் குடும்மா ” என்று உள்ளே அனுப்பிவைத்துவிட்டு, வேம்புவிடம் அவன் யார் என்ன உத்யோகம் , எங்கிருந்து வருகிறான் என்பதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே என்னையும் பார்த்து நெற்றியைச் சுருக்கி ஞாபகத்தில் என்னை எங்கே பார்த்திருக்கிறோம் என்று சிறிது நொடிகள் யோசித்துவிட்டு வேம்புவிடம் திரும்பிவிட்டார். அவருக்கு இன்னும் வேம்பு ஏன் அங்கு வந்திருக்கிறான் என்று தெரியவில்லை.

 

அதற்குள் உள்ளே சென்று இரண்டு டம்ப்ளர்களில் தண்ணீர் கொண்டுவந்து ஒன்றை பக்கத்திலிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு மற்றொன்றை புடவைத் தலைப்பால் பிடித்துக்கொண்டே  ” தீர்த்தம் எடுத்துக்கோங்கோ ” என்று வேம்புவிடம் நீட்டினாள். அப்போது கோபாலன் சார், ” என்னோட ஒரே பொண்ணு இவ. பேரு அலமேலு. நாங்க அம்புலுன்னு கூப்பிடுவோம். இவ ஆத்துக்காரர், கிருஷ்ணன்.  திருவாரூர் பக்கத்தில அம்மையப்பன்ல ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் வியாபாரம். ரெண்டு பசங்க எனக்கு . ரெண்டு பேரும் டெல்லில இருக்கா ” என்று சொல்லி நிறுத்தினார். அதன்பின் அம்புலு என்கிற அலமேலு , ” எங்காத்துக்காரர்தான் பேங்க் லோன் சம்பந்தமா விஜாரிச்சுக்க இவரை அனுப்பிச்சிருக்கார்.  ” என்று சொன்னபோது கோபாலன் சாருக்கு வேம்புவின் வரவைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பது தெரிந்துபோயிற்று. பிறகு அந்த அம்புலு வேம்புவிடம், ” சார்! இந்த வீடு அப்பாவோட சொந்த சம்பாத்யத்துல கட்டினது. அம்மா இப்போ இல்ல . போய் அஞ்சு வருஷம் ஆச்சு. அப்பாவும் இன்னும் நாலு வருஷத்தில ரிடயர் ஆகப்போறார். இந்த வீடு அப்பாவுக்கப்புறம் என்னோட ப்ரதர்ஸ்களுக்குத்தான் போகும். எனக்கு ஒண்ணும் கெடைக்காது. அதனாலே, இப்ப இந்த வீட்டு பேர்ல ஏதாவது லோன் வாங்கினா , அந்த லோன் அமௌண்ட்டை நான் எடுத்துப்பேன். அப்பாவும் சர்விசுக்குள்ள எடுத்த லோனை  அடச்சுடலாம். அதுக்கப்புறம் நான் ஒண்ணும் வீட்டுக்கான ஷேரை கேட்கவேண்டியதில்லை இல்லயா ? அதுக்குத்தான், எப்படி லோன் போடலாம், எவ்வளவு மேக்ஸிமம் கெடைக்கும். இதைத் தெரிஞ்சுக்கத்தான் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் வேணும்னு எங்காத்துக்காரர் அவருக்கும் உங்களுக்கும் காமன் ஃப்ரெண்டான சந்தானம் மூலமா அனுப்பிச்சுருக்கார். சொல்லுங்கோ ! ” என்று படபடவென ஏதோ மனப்பாடம் பண்ணியதை ஒப்பிக்கிறார்போல் சொல்லிவிட்டு , கோபாலன் சார் பக்கம் திரும்பி, ” அப்பா கொஞ்சம் டீடைல்டா கேட்டுக்கோங்கோ , நான் இவாளுக்கு காஃபி போட்டுண்டு வரேன் ” என்று மறுபடியும் உள்ளே போனாள்.

 

கோபாலன் சாருக்கும் இப்போதுதான் இந்த விஷயம் தெரியப்படுத்தப்பட்டிருப்பது எங்களுக்குப் புரிந்தது. சாதாரணமாக எதையும் வெளிக்காட்டாது கண்ணாடி ஃப்ரேமிற்குள் பதுங்கிக்கிடக்கும் கண்கள், இப்போது  லேசாகக் கலங்கியிருந்ததுபோல் எனக்குத் தெரிந்தது.  தன் மகள் அம்புலு விஷயத்தைச் சொல்லிக்கோண்டிருக்கும்போது முகத்தில் முதலில்  கிரஹணம் பிடிப்பதுபோல் தோன்றிப் பிடித்திருந்த இறுக்கம் சற்று நேரத்திற்கெல்லாம் விலகி மீண்டும் பழைய கோபாலனாகி விட்டார். லோன் சம்பந்தமாக வேம்பு சொன்ன சமாச்சாரங்களை எல்லாம் கேட்டுக் குறிப்பெடுத்துக்கொண்ட அவர், காஃபி வந்தவுடன் எங்களைக் குடிக்கச் சொல்லிவிட்டு, சமையலறைக்குள் போய் பத்து நிமிஷம் கழித்து வெளியே வந்தபோது கையில் ஸ்வீட் பேக்கெட்போல எதையோ எடுத்துவந்தார். நாங்கள் கிளம்பும்போது அதை என் கையில் கொடுத்து,  ” என் ஒய்ஃபுக்கு இது ரொம்ப பிடிச்ச ஸ்வீட் ! அவ சீரா கொண்டுவந்ததெல்லாம் நேத்துபோல இருக்கு ” என்று ஏதோ சொல்லவந்தவர் எமோஷனலாகி நிறுத்திக்கொண்டார். அங்கிருந்து கிளம்பி வீடு வரும்வரை நானும் வேம்புவும் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை.

 

வீட்டிற்கு வந்தபின் கைகால்களையெல்லாம் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தபோது கோபாலன் சார் கொடுத்த ஸ்வீட் கவரை  எடுத்துக்கொண்டு வந்தேன். அதைத்  திறந்தபோது, பால் பேடாக்கள் ஒரு பத்துப் பதினைந்து ஒரு எவர்சில்வர் டப்பாவிற்குள் இருந்தது. கொஞ்சம் வெளிச்சத்தில் பார்த்தபோது அந்த சில்வர் டப்பா ரெண்டு மூன்று இடங்களில் நசுங்கி இருந்தது தெரிந்தது. ஆனாலும் அந்த எவர்சில்வர் டப்பாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

—–

 

Series Navigationகுழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
author

ரமணி

Similar Posts

5 Comments

  1. Avatar
    s.ganesan says:

    ur comment abt goc rly canteen bonda appears to be too harsh…bcos there are many bonda rasikars available in rly accounts office…..any way அன்பிற்குப் பாத்திரம் is another mile stone in ramani’s writting career…mixture of comedy and emotion packed story……well said…

  2. Avatar
    sivagami says:

    டிபன் டப்பாவுக்குள்ளிருந்து இப்படி ஒரு கதையா ! எவர்சில்வர் டப்பாவில் மதிய உணவு கொண்டுசெல்லும் சிறுவனின் ஆசையிலிருந்து சொத்தில் தனது பங்கை வித்தியாசமான முறையில் வாங்கிக்கொள்ள நினைக்கும் கோபாலன் அவர்களின் பெண் கொடுத்த பாதிப்புவரை கதை ஊஞ்சலின் ஆட்டமாக மனதை அந்தரத்தில் பறக்கவைத்தது. கதையின் பலமே ஊடாடும் நகைச்சுவைதானோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் ரமணி.

Leave a Reply to s.ganesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *