அய்யிரூட்டம்மா

This entry is part 11 of 13 in the series 20 மே 2018

‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து மறையும் நேரம் என்றால் பெண்கள் ஓரிருவர், ஓரிருவர் அதற்காக என வந்து விட்டுப்போவார்கள்.
அன்று காலை அப்படிக் குளத்தில் மிதக்கும் ஒன்றை எல்லோருமே கவனித்தார்களா என்றால் அது தான் இல்லை.ஒரு சிலர் மட்டுமே குளத்துத் தண்ணீரில் மிதப்பதைப்பார்த்துவிட்டு ‘இது என்னாடி இது’ என பேசிக்கொண்டார்கள்.மருமங்குடியின் மேலகுளம் கொஞ்சம் ஆழம் அதிகமானது பயிர்ப் பாசனத்திற்கு என்கிற நீர் நிலையும் இல்லை அது. ஊர் மக்கள் புழங்க கொள்ளத்தான் அதன் உபயோகம்
மருமங்குடிக்கு மேற்கே இருக்கும் கல்வராயன் மலைச்சரிவில் இருந்து புறப்படுவது மணிமுத்தாறு. எப்போதேனும் அந்த அந்த வருடத்திற்குள்ளாக மழை ஒன்று கண்டிப்பாகப்பெய்துவிடும் இப்படியாகத்தான் அந்த மணிமுத்தாற்றில் தண்ணீர் வந்து அது பட்டினத்தான் வாய்க்கால் வழி ஓடி மருமங்குடிக் குளங்களை நிரப்பும்.
இந்த ஆண்டும் மேலகுளம் தண்ணீீரால் நிறைத்துக்கொண்டு நிற்கிறது.செவ்வல்லி மலர்கள் அங்கொன்றுமாகப்பூத்து நிற்கின்றன.அல்லி இலைகள் பச்சைப்பசேல் என்று பாயாகத் தண்ணீரின் மேற்பரப்பை ஆக்கிரமித்துவிட்டன.முதலில் ஒருவர் இருவர் என நின்று வேடிக்கை ப்பார்த்தார்கள்.அப்படியாக கூட்டம் ஒவ்வொன்றாக அதிகரித்தது.ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என கும்பல் கும்பலாய்த்தெரிந்தார்கள்.
நீச்சல் தெரிந்த இருவர் தண்ணீரில் இறங்கினார்கள்.யாரோ ஒரு மனிதனின் கால் தான் அது.அதுவரைக்கும் யாருக்கும் சந்தேகம் இல்லை.இருந்தாலும் அதனை உறுதி செய்துகொள்ளவேண்டும்.ஆகத்தான் அந்த இருவரும் மிதப்பது நோக்கி நீச்சலடித்துப்புறப்பட்டார்கள். தண்ணீர் முழுவதும் அல்லிக்கொடியின் ஆக்கிரமிப்பு.மிகக் கவனமாகத்தான் நீந்திச் சென்றார்கள்.குளத்தின் வடகரையில் ஐம்பது பேருக்கு நின்று தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஊர் தலைவருக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கும் தகவல் போனது.
மருமங்குடியில் பத்து தெருக்கள் இருக்கலாம்.அந்தந்த தெருக்களின் பொறுப்பானவர்கள் விசாரிக்கப்பாட்டார்கள்.
‘பிடாரியாயி குருக்களைத்தான் நாலு நாளா நா பாக்குல. அந்த சாமிக்கு எதாவது படைச்சாங்களான்னும் தெரியில.ஆனா ஒண்ணு, பொழுதுபோனா பொழுதுபோனா பொடாரி ஆயி கோவில்ல வெளக்கு மட்டும் எரியுது’
ஒரு நாட்டாமை சொல்லிக்கொண்டிருந்தார்.
தலைவர் பேசினார்.’பிடாரி ஆயி கோவில்ல படைக்க அந்த அய்யரு இல்லன்னா.அதுக்கு மாத்து அய்யிரு வந்து இருப்பாருல்ல’
‘அதான் என் ரோசனையும் எப்பிடி இந்த கத ஆவுதுன்னுதான் வெளங்குல’
தலையை சொறிந்து கொண்டே பதில் சொன்னார் அந்த நாட்டாமை. ஊர்த்தலைவர் தன் கையாளை அழைத்தார்.’லே. நீ போறே.அந்த பாப்பாம் வூடு தெரியுமுல்ல.யாரு அங்கன யாரு இருந்தாலும் கையோட இட்டாந்துடு.இங்கன வந்த பெறவு வச்சிகலாம் கச்சேரி’.’நா கெளம்புறேன்’ சொல்லிய தலைவரின் கையாள் அய்யரின் குடியிருப்பு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
.குளத்தில் நீச்சலடித்துப்போனவர்கள் வெளியில் தெரியும் கை அருகே சென்றுவிட்டார்கள்.’பொணம்தான் மொதக்குது.இங்க பொணம்தான் மொதக்குது.நாத்தம் கொடல புடுங்குது சாமியோவ்’
‘ஆம்பளயா பொம்பளயா’ தலைவர் ஓங்கிக்குரல் கொடுத்தார்.
‘பொணம் ஆம்பிள பொணம்தான்.ஆரு எவுருன்னு பிரியில.நம்பூரு ஆசாமிதான் அது மட்டும் தெரியுது.’
‘மே துண்டு இல்ல வேட்டி எதனா ஆம்படறது வச்சிகிட்டு அத இங்கன கொண்டாங்க முடியுமா’
வி ஏ ஓ குறுக்காகப்பாய்ந்தார்.’பொணம்னா இங்க இப்ப்வே போலிசு வரணும்.அப்புறமாதான் அந்த பொணத்துகிட்ட நாம போவுலாம்”
‘எல்லாம் நானு பாத்துக்கறேன். வரவேண்டிய போலிசுக்கு மாத்திரம் இந்த சேதி சொல்லிடுங்க
‘பாக்குறம்.எப்பிடி கரைக்குக் கொண்டாறதுன்னு பாக்குறம். பொணம் நாறி கொழ கொழன்னு கெடக்கு.மீனுவ பொணத்த அங்க அங்க கடிச்சி கொதறி வச்சி இருக்கு’
நடுக்குளத்திலிருந்து தலைவருக்கு பதில் வந்தது.
தலைவரின் கையாள் அய்யர் குடியிருப்பை நெருங்கினான்.’ஆரு வூட்டுல’ என்றான்.
அய்யரின் மனைவி வெளியே வந்தாள்.
‘யாரு நீங்க உங்களுக்கு என்ன வேணும்’
‘வேற யாரு இருக்கா?’
‘ எங்க வீட்டு அய்யா அவுரு பாண்டி போயி இருக்காரு.நான் மட்டும்தான் இருக்கேன்.’
‘ அய்யிரு வூட்டுல யாரு இருந்தாலும் மேல குளம் வடவண்ட கரைக்கு வரணும்’
‘ஏன் எதுக்கு’
‘ஊரே குளத்தண்ட இருக்கு. நீங்க இங்க குந்தி என்னத்தை பண்ணுறது.’
‘என்ன சேதி சொல்லுங்களேன்’
‘இந்த மருமங்குடிலதான் இருக்கிங்களா,இல்ல வேற எங்காவது குடியிருக்கிங்களா’
அய்யர்வீட்டு அம்மாள் பதில் எதுவும் பேசாமல் திரு திரு விழித்தாள்.
‘அது கெடக்கு. நீங்க உடனே குளத்தண்ட வரணும்.இது ஊரு தலைவரு உத்தரவு’
‘குளத்தண்ட என்ன விஷயம்’ தொடர்ந்து கொண்டாள்.
‘ அய்யிரூட்டம்மா உனக்கு நெசமாலும் அந்த வெஷயமே தெரியாதா மேல குளத்துல ஒரு பொணம் மொதக்குது’
‘இது என்ன விபரீதம்.யாரு அது’
அய்யர் வீட்டு அம்மா தலைவரின் கையாளொடு கூடவே புறப்பட்டாள்.அதற்குள்ளாகப் பிணத்தை க் குளத்தின் கரைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். பிணம் வீங்கிக்கிடந்தது.உடல் ஊறி நாறிக்கிடந்தது.முகம் கோரமாய் அடையாளமே தெரியாமல் இருந்தது.
‘ஆ பூ நூலு தெரியுது.வவுத்துல தொப்புளுக்கும் தாழ. இது அய்யிரு.நம்ப அய்யிருதான். பொடாரி ஆயி கோவிலு அய்யிருதான்.அய்யிரு வேட்டி அந்த கரய பாருங்க. நம்ப ஊருல அவுருதான் இந்த வேட்டி துண்டு உடுத்துறது என்றான் கூட்டத்தில் ஒரு நடுத்தர வயது ஆள்.
‘அய்யிருதான்,அய்யிருதான் நம்ப ஊரு அய்யிரேதான்’ கூடியிருந்த பெண்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.
‘அய்யிரூட்டும்மா ஆ வருதே’ என்றார் ஊர் தலைவர்.
‘எல்லாம் வழி உடுங்க. அய்யிர் வூட்டு அம்மா அந்த பொணத்தை ப்பாக்குட்டும். செத்த வெலவுங்க’ தலைவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
மண் ரோடில் கிடத்தப்பட்டிருந்த சடலத்தைப்பார்த்ததும்’ அய்யோ அய்யோ நான் ஏமாந்து போய்விட்டேனே.கடவுளே.இது என்னப்பா விபரீதம் இது எம்மொதலே பொயிடுத்தே’ அந்த அம்மா தலையில் அடித்துக்கொண்டு கோவென்று அழ ஆரம்பித்தாள். கீழே விழுந்து விழுந்து புரண்டாள்.எழுந்தாள்.
‘இது என்னாடி தும்பம் இந்த அய்யிர் வூட்டு அம்மா வாயும் வயிறுமா இருக்குது அய்யய்யோ பாவம்’ என்றனர் கூட்டத்திலிருந்த பெண்களில் சிலர்.
அய்யரின் உற்றார் உறவினர்கள் துக்கச் செய்தி கேட்டு ஒவ்வொருவராய் மருமங்குடி குளக்கரைக்கு வர ஆரம்பித்தனர்.போலிசுகாரர்கள் இருவர் ஒரு அரசு மருத்துவர் அவரின் உதவிக்கு ஆள் என ஒரு கூட்டம் ஒரு ஆம்புலன்சு வண்டியில் வந்து இறங்கியது.
‘அண்ணன்வூட்டுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு ப்பாண்டிக்கு போனாரே.இப்படி பொணமா நா பாக்குறேனே என் தலை எழுத்து இப்பிடியா இருக்கணும், கடவுளே,நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ’ அய்யர் வீட்டு அம்மா அழுது கொண்டே இருந்தார்.
அய்யரின் தங்கையும் அவர் கணவரும் வந்து அந்த மருமங்குடி அய்யரூட்டுஅம்மாவை க்கட்டிக்கொண்டு அழுதார்கள்.
‘நாலு நாளுக்கு முன்னாடிதானே அண்ணா அத்தன அர்ஜென்ட்டா நீ எங்காத்துக்கு வந்தே. நா உன்ன இந்த செயின கேட்டனா. இந்த மூணு பவுனு சங்கிலி இல்லேன்னா நான் என்ன செத்தா பொயிடுவேன் அதுக்குன்னு ஓடி வந்து குடுத்துட்டு இத பத்திரமா வ்ச்சிக்கோ. நான் நம்ப அம்மாகிட்ட சொன்ன படிக்கு உனக்கு செய்யவேண்டியதை செஞ்சிட்டேன்ன்னு சொல்லிட்டு பெருமைய்யா போனியே. இதுதான் நீ எனக்கு செய்யவேண்டிய ஒரே காரியமா, என்ன அவசரம்னா உனக்கு. கொளத்துல விழுந்தா எங்க நாம நீச்சலிடிச்சி திரும்பி கரைக்கு வந்துடுவம்னு கனக்குற செங்கல்ல இடுப்பு வேட்டில கட்டிண்டு கொளத்து தண்ணீல இறங்கிட்டயாமே.அப்பிடி என்ன அண்ணா உனக்கு வந்துட்து.எம் பலமே இப்ப என்னவிட்டு போயிட்தே. நான் என்ன செய்வேன் எம் மன்னி.என்ன மன்னி நடந்துது. உங்களுக்குள்ள எதானு சண்டையா.என்ன ஆச்சி பச்சை குடும்பமாச்சே, நெருப்பு அள்ளி கொட்டிட்டாளே வாழவேண்டிய குடும்பத்துல .என் வயிறு பத்திண்டு எரியர்தே. நான் என்ன பண்ணுவேன்’ அய்யரின் தங்கை அழுது அழுது புலம்பி எழுந்தாள். அய்யர்வீட்டு அம்மாவின் உறவினர்கள் ஒரு புறம் பாட்டம் பாட்டமாய் அழுதுகொண்டு நின்றார்கள்.’அந்த கடவுளுக்கு கண்ணு இல்லயா பச்சகுழந்தய பாழாக்கி பாழாக்கி பாக்கறானே,தங்கக்கிளியே உன் வாழ்க்கை பொகஞ்சி இப்போ போயிடுத்தே’ இன்னும் எதுஎது தோன்றியதோ எல்லாம் சொல்லி அழுதார்கள்.
‘கொற கதய பாருங்க.போலிசுகாரங்க சாவு கேச எழுதி எடுத்துகிட்டு போயிருக்காங்க.நானும் அத பாத்துகறேன். நம்ம ஊரு அய்யிரு கதை இப்பிடி ஆவ வேணாம் என்னா செய்வே. அந்த டாக்டரும் செத்தது விவரம் எழுதிகிட்டு போயிருக்காரு அழுவுன பொணம். அதானல அது எடுத்துகிட்டு அங்கன ஆசுபத்திரிக்கு போவுல. இதுங்கல. அப்பிடி இல்லன்னா அதுகொடம் ஒரு இமுஷ.. கொற கதயும் பாக்குணும்.’ ஊர்தலைவர் எல்லோர் காதிலும் விழும்படி ஓங்கிச்சொன்னார்.
நாட்டாமை ஆரம்பித்தார்’நாலு நாளா பொடரி ஆயிக்கு ரவ சோறு பொங்கி வச்சாங்களா ஆரு வந்தா ஆரு போனான் சேதி தெரியுணும்’
‘ஆன கதை ஆச்சிபோன கத போச்சி.செத்தவன் சூத்துல சுக்கு வச்சியா ஊதுவ.நாம தான் எல்லாத்தையும் பாத்துகணும் அப்புறம் தலைவரு.நாட்டாமன்னா பெறகு நமக்கு வேலதான் என்னா’ தலைவர் நாட்டாமைக்குப்பதில் சொன்னார்.
அய்யிரூட்டும்மா அந்தத் தலைவரின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அய்யரின் தங்கை தன் அண்ணன் கொண்டு கொடுத்துவிட்டுப்போன அந்த தங்க செயினை வந்த விலைக்கு விற்று காசாக்கினாள். அதனைக்கொண்டேஇறப்புவீட்டு ச்சடங்குகள் பிடாரி கோவில் அய்யர் வீட்டில் தொடர்ந்து கொண்டன.பக்கத்து ஊர் புரோகிதர் வந்து சடங்குகளை செய்ய ஆரம்பித்தார்.ஊர் த்தொழிலாளர்கள் இறப்பு வீட்டு பிற நடப்புக்களை ச்சரியாக அனுசரித்துக்கொண்டு இருந்தார்கள்.
‘என் மூணு பவுனு சங்கிலிய நோவாம கொண்டுபோயி உன் தங்கைக்கு போட்டுட்டு இங்க வந்து குத்துகல்லாட்டம் நிக்கற. அவாளுக்கு கொடுத்த வார்த்தய நீ காப்பாத்தற லட்சணம் இப்பிடியான்னு கேக்கறன். நீ என் கிட்டயே வராதே எங்கிட்ட என்ன படுக்கெ.. எங்கேயானு ரோட்டுல படு.இல்ல உன் தங்ககிட்டயே போயி படுத்துகோ போ’
இப்படி அந்த அயிரூட்டம்மா அய்யரிடம் பேசியதும் ஏசியதும் அன்று நடு இரவே அந்த அய்யர் செங்கற்களை மடியில் கட்டிக்கொண்டு சே இது என்ன கேவலம்’ என்று மருமங்குடி மேல குளத்தில் இறங்கி முடிந்து போனதுவும் இன்றுவரை யாருக்கும் தெரியாதே.
—————————————————————-

Series Navigationமருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்றுவேரா விதையா
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *