அரவான்

This entry is part 18 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார்.அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது.

 

அவனது நடைவேகத்துக்குக் காரணம் விடலைப் பருவ பையன்களின் கேலி.தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் சில மாதங்களாய் உணர்ந்து கொண்டு வந்தான்.தன்னை ஒத்த பிராயமுடையவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தன்னிலிருந்து வேறுபடுவதை எண்ணி அச்சம் கொண்டான்.

 

அரும்பு மீசை உதட்டின் மேல் வளர்ந்து, குரல் உடைந்து சற்றே கரகரப்பாக மாறிக் கொண்டிருந்த டீன் ஏஜ் பையன்கள் நிறைந்த வகுப்பில்,நந்தகுமார் குரல் மட்டும் கீச்சி கீச்சுவென ஒலிக்கும் போது வகுப்பே சிரிப்பலையில் மூழ்கும்.

 

சமூக அறிவியல் வாத்தியார் பாடத்தின் இடையே பொது அறிவு வினாவிற்கான பதிலை ஒவ்வொரு மாணவனாக எழுப்பி கேட்டுக்கொண்டு வரும்போது எழுந்து நின்ற நந்தகுமாரை “தெரியாதுன்னா அப்படியே சும்மா நிக்கவேண்டியது தானடா, என்னடா மேனா மினுக்கியாட்டம் நெளியற நிமிர்ந்து நின்னுடா விறைப்பா” என்று நையாண்டி செய்த போது மாணவிகள் அனைவரும் முகத்தைப் பொத்திக் கொண்டு சிரிக்க நந்தகுமாரின் முகம் வாடிப்போய் காற்றுப் போன பலூனாகிவிட்டது.உள்ளுக்குள் உடைந்து போனான்.அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அனிச்சையாக நடக்கும் செயலுக்கும் நந்தகுமார் தொடர்ந்து தண்டணைப் பெற்று வந்தான்.

 

பள்ளியின் நுழைவாயிலை அடைந்தவுடன் அவன் மனம் நிம்மதியடைந்தது.ஆமாம்! இன்று அவன் எதிர்ப்படவில்லை.இரு தினங்களாய் வாட்டர் டாங்க் அருகில் அமர்ந்து கொண்டு அவ்விடத்தைக் கடந்து செல்லும் போது ஒம்போது என உரக்கச் சத்தமிடுபவனிடமிருந்து தப்பித்து வந்துவிட்டோமென்று பெருமூச்சுவிட்டான்.

 

மறுநாள் காலை பாத்ரூமில் குளிக்கும் போது அக்கா முகத்தில் தேய்த்துவிட்டு மீதம் வைத்திருந்த மஞ்சளைப் பார்த்தான்.நீண்ட நாட்களாய் அவனது மனதில் ஒரு குறுகுறுப்பு,மஞ்சள் பூசி குளித்து ரோஸ்பவுடர் அப்பிக் கொண்டு கண்ணாடியில் தன் எழிலை பார்த்துவிட வேண்டுமென்று.

 

நீண்ட நேரமாய் நிலைக்கண்ணாடி முன்பு முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த நந்தகுமாரை அவனது அப்பா ரெங்கநாதன் அவனுடைய கையைப் பற்றித் திருப்பி “என்னடா அப்படியே மெய்மறந்து பார்த்துகிட்டு இருக்கிற மூஞ்சிய தேனா வழியுது” என்று கேட்டபோது அவனது முகத்தில் அப்பியிருந்த மஞ்சளைப் பார்த்துவிட்டு ஓங்கி கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.கேடுகெட்ட ஒரு புள்ளையை திருஷ்டிப் பரிகாரமாதிரி பெத்து வச்சிருக்கா;அவனவன் சின்ன வயசிலேயே கம்ப்யூட்டர்,ரோபோன்னு ஆராய்ச்சி பண்ணி டாக்டர் வாங்குறான்;இவன் முகத்துல மஞ்சளைத் தடவிகிட்டு பொட்டபுள்ள மாதிரி அழகு பார்த்துகிட்டு இருக்கான்.இந்தக் கண்றாவியெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து எனத் திட்டினார்.

 

இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அப்பாவுடன் பக்கத்து ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிய நந்தகுமார்,ஆண்கள் இருக்கை காலியாயிருக்க அவர்களின் அருகே உட்கார கூச்சப்பட்டு பெண்கள் உட்கார்ந்திருக்கும் ஸீட்டில் மத்திம வயதுடைய பெண்ணருகில் அமர,அவன் இவனுடைய முகத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

 

பேருந்தின் பின்பகுதியிலிருந்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கநாதன் அவனை நோக்கிப் பாய்ந்து வந்து ஓர் அறை அறைந்து “இனிமே வீட்டுப்பக்கம் வராத ஒழிஞ்சுபோ எங்கயாச்சும்;நீ பண்ற கூத்தையெல்லாம் பொறுத்துகிட்டு இருக்கமுடியாது.உன்னை அவதுப்புல,உன்னைய பதினைஞ்சு வருஷமா வளர்த்தேன் பாரு அதுக்கு என்னையத் துப்பிட்டுப் போறா.போ ஒரேயடியா இன்ணையோட தலை மூழ்கிட்டேன்” எனச் ஆவேசத்துடன் சொல்லிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் சென்று மறைந்தார்.

 

ஆண்கள் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டு வார்த்தைகளால் காயப்படுத்தி துரத்தியடிக்கப்படுவதும்.தானாய் ஒதுங்கி தனிமையில் அறையில் அடைந்து கிடந்த போது பித்துப் பிடித்துவிடும் நிலையிலிருந்துத் தப்பிக்க பெண்களிடம் நட்புணர்வுடன் பழகப்போய் அவர்களால் பிராணியைப் போய் முகம் சுளித்து அருவருப்பாய் விரட்டப்படுவதுமான இந்த அன்றாட நிகழ்விலிந்து தன்னைக் காப்பாற்ற,தன் உணர்வை புரிந்துகொண்டு அரவணைக்க ஓர் அன்புள்ளம் இல்லையா இந்த உலகில் என்ற கேள்விகோடு ஏதோ ஒரு ஊரில் நடத்துனரால் இறக்கிவிடப்பட்டு கால்போன போக்கில் நடக்கத் துவங்கினான்.

 

பாதைகள் கிளைகிளையாகப் பிரிந்து சாலை போக்குவரத்தால் நெருங்க இயலாத பொட்டல் கிராமத்திற்கு அவனை இழுத்துச் சென்றது.இருள் மெல்லக் கவ்வத் துவங்கியது,

குளத்தருகே அமர்ந்திருந்த அவனை அருகாமையிலிருந்து வரும் சத்தம் ஈர்த்தது.

 

அவ்விடத்தை அவன் அடைந்த போது கோவில் திருவிழாவில் பாரதத்திலிருந்து விராடபர்வம் தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது.

 

பாண்டவர்கள் வனவாசத்தின் இறுதில் அஞ்ஞாதவாசத்தில் ஐவரும் மாறுவேடமிட்டு விராட தேசத்தில் நுழைகிறார்கள்.விராட தேசத்து அரசபையில் தங்கள் திறமையை அரசன் முன்பு வெளிப்படுத்தி பணியாட்களாக சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள்.தருமர் அரசனுக்கு அருகில் மதியூகியாயிருந்து அவ்வப்போது அரசருடன் பகடையாடுபவராக,பீமன் சமையற்கலைஞனாக,அருச்சனன் திருநங்கை வேடமிட்டு அந்தப்புர பணிப்பெண்ணாக,நகுலனும் சகாதேவனும் கால்நடைகளைப் பராமரிப்பவனாக பாண்டவர்கள் தங்களின் ராஜவம்ச வாழ்வை மறந்து சாதாரண வேலைக்காரர்களாக ஆகும் காட்சிகளில் அக்கிராமமே தெருக்கூத்துக் கலைஞர்களின் நடிப்பை ஆவென வாயைப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அந்தப்புரத்தில் சேவைபுரியும் திருநங்கை வேஷமிட்ட அருச்சுனன் கதாபாத்திரத்தை சுற்றிலும் அரவானிகள் கூட்டம் நிற்பதைப் நந்தகுமார் அங்கு கண்டான்.அவனது விரக்தியடைந்த மனதில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது

 

கூத்து முடிந்தது அரிதாரத்தைக் கலைந்து வேறு ஊருக்குக் கிளம்பி கொண்டிருந்த அரவானிகளிடம் வந்து மிரள விழித்தபடி நி்ன்றான்.

 

“என்ன பையா யாரு நீ?” என்றாள் ஒரு அரவானி

 

“நான் வீட்டைவிட்டு ஓடிவந்துட்டேன், என்னைய உங்க கூட்டத்துல சேர்த்திருப்பீங்களா?” என்றான் அப்பாவியாக.

 

வயதில் மூத்த அரவானி அவனை தன்னருகே அழைத்து விபரத்தைக் கேட்க,நடந்த அனைத்தையும் கூறினான்.

சில நிமிடநேரம் யோசித்த அவன் ”சடங்கு முடிஞ்சாத்தான் எங்க சமூகத்துல சேர்த்துப்போம்,அதுக்கு மும்பை போகணும் பயமில்லாம?” என்றாள்.

 

சரியென்று தலையாட்டினான்

 

இரு தினங்கள் கழித்து மும்பை செல்லும் ரயிலில் இரு அரவானிகளுடன் அமர்ந்திருந்தான் நந்தகுமார்.மௌனமாக அமர்ந்திருந்த அவனைப் பார்த்து “என்னப்பா சோகமாயிருக்குற இப்படி ஆயிட்டோம்ன்னா …., எப்படி ஆயிட்டோம் நம்ம சொல்லு?”

 

“……”

 

“ஸ்டேஷனுக்கு வர்ற வழியில இறுதி ஊர்வலம் போனிச்சேப் பார்த்தியா?”

 

“பார்த்தேன்” என்றான்

 

“பாடையில படுக்கவைச்சிக் கொண்டு போறாங்களே, அது என்ன?”

 

“பொணம்”

 

“சரி ஆம்பளையா? பொம்பளையா? அது?”

 

“பொம்பளை”

 

“பத்தியா கல்யாணங்கட்டி மவராசியா வாழ்ந்து குழந்தை குட்டிகளோட இருந்தவ உயிர் போச்சுனா அவ பொணமாயிடுறா;நாம இறந்தாலும் பொணம் தான்.சடலத்துல இது அரவானிப் பொணம்ன்னு வேறுபாடு இருக்கா என்ன? எல்லாம் தசைப் பிண்டம் தான்.நம்ம சமூகத்தைப் பத்தி பையிள்ல ஒரு வாக்கியம் வரும் படிச்சிருக்கியா பரலோக ராஜ்யத்தில் அவர்களுக்கு இடமுண்டுன்னு, அதை நினைச்சு இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக்கணும்”

 

“இனிமே சோத்துக்கும் உடுத்த துணிமணிக்கும் என்ன பண்ணப் போறோம், பிச்சையெடுக்கிற நிலைமை வந்திருமோன்னு பயப்படுறீயா?ஏன் உன்னால சொந்தக் கால்ல நின்னு சுயமா சம்பாதிக்க முடியாதா என்ன?இது ஒரு ஊனம்னு நினைக்காத படிப்பு,வேலைன்னு உன்னை பிஸியா வைச்சிக்கிட்டீனா உன்னைப் பத்தின ஞாபகம் மறந்து காலம் தன்னால ஓடிடும்.”எனக் கூறி அவனைத் தேற்ற முயன்றாள் அந்த அரவானி.

ரயில் இருளை கிழித்தபடி அதிவேகமாக பல்வேறு ஊர்களை கடந்து சென்று கொண்டிருந்தது.தூங்காமல் விழித்துக் கொண்டு ஓரிடத்தில் நிலைகுத்திய பார்வையோடு ஜன்னலருகே உட்கார்ந்திருந்த அவனைப் பார்த்த அரவானியில் ஒருவள் மெல்ல அருகில் வந்து “ஊரை இழந்திட்ட,உறவை இழந்திட்ட, ஆனா நம்பிக்கையை இழந்திட்டீனா வாழ்றது கஷ்டமாயிடும்,எதையும் தைரியமா எதிர்கொள்ளனும்.இங்க நிலையா இருக்கிற இயற்கை நம்ம மேல ஒரு பாகுபாடும் காட்டறதில்லை,நிலையில்லாத வாழ்க்கையில நீர்க்குமிழி மாறி கண நேரம் வந்து போற மனிதர்கள் தான் நம்மை உதாசீனப்படுத்துறாங்க.அடுத்தவங்க நம்ம என்ன நினைப்பாங்களோன்னு எண்ணிக்கிட்டே இருந்தா யாரால எதைச் செய்ய முடியும் சொல்லு ராமர் மேல வைச்ச நம்பிக்கையில அனுமார் ஒரே தாவல்ல கடலைத் தாண்டிட்டார்.ராமச்சந்திர மூர்த்தி கடலைத் தாண்ட சேது பாலம் கட்ட  வேண்டியதாப் போச்சு.நாளைக்கு விடியும்னு நம்பிக்கையிருந்தாம்ப்பா படுக்கையில நிம்மதியா உறங்க முடியும்” என்ற அரவானியின் ஆறுதல் வார்த்தைகள் அவனது மனக்காயத்தை ஆற்ற அப்படியே உறங்கிப்போனான் நந்தகுமார்.

 

அன்றைய காலை பொழுது அவனுக்கு விடிந்தது.மும்பை நகரம் அவனுக்கு வியப்பளித்தது.இப்பூமியில் இப்படியும் ஒரு நகரம் இருக்க முடியுமா?என வானுயர்ந்த கட்டிடங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தான்.ஏதோ ஒரு உந்து சக்தி தன்னை தள்ளிக் கொண்டே வந்து இங்கு நிறுத்தியிருப்பதை எண்ணினான்.

 

இனிமேல் தன் பெயர் நந்தகுமார் இல்லை, நந்தகுமாரி நந்தகுமாரி நந்தகுமாரி என மூன்று முறை மனசுக்குள் அழுத்தமாக உச்சரித்தான்.அவமானங்கள் அனைத்தும் அவனுக்குள் வைராக்யம் வேர்விடுவதற்கு வித்திட்டன. காற்று முழுவேகத்தோடு அவன் மீது மோதி தோளில் சுமந்து வந்த பழைய நினைவுக் குப்பைகளை அடித்துக் கொண்டு அரபிக்கடல் நோக்கிச் சென்றது.

—————————————————————————————–

mathi2134@gmail.com

Series Navigationதியாக தீபம் – அன்னை இந்திரா (1917 – 1984)சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

ப மதியழகன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    தெளிவான, இலக்குடன் கதை சொல்லும் முறையில் இருக்கிறது. கதை ஆரம்பப் புள்ளி வளர்ந்து வளர்த்து அலங்கோலமாக போகப் போன ஒரு வாழ்வு எப்படி தன்னம்பிக்கையில் முடிந்தது என்பதை அழகான கோலமாக காட்டுகிறது. கிடைக்கும் அனுபவங்களுக்கு ஏற்ப எழுதுங்கள், போலித்தனமின்றி. எழுதித் தள்ள வேண்டும் என்று எழுதாமல் இருப்பதே ஒரு இலக்கிய சேவைதான். நன்றாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள். இது எப்படி திண்ணையில் கவனிப்பாரட்டு கிடக்கிறது என்று தெரியவில்லை…

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு மதியழகன்,

    அருமையான உயிரோட்டமுள்ள படைப்பு. வாழ்த்துக்கள் நண்பரே.

    அன்புடன்
    பவள சங்கரி

  3. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் திரு.மதியழகன்
    மனதை நெகிழச் செய்த கதை. சிறப்பான முறையில் எழுதி இருக்கிறீர்கள்.
    ஒரு மாற்றத்தை மனம் ஏற்கும் விதம் தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டிருந்தது.

    ///நிலையில்லாத வாழ்க்கையில நீர்க்குமிழி மாறி கண நேரம் வந்து போற மனிதர்கள் தான் நம்மை உதாசீனப்படுத்துறாங்க.அடுத்தவங்க நம்ம என்ன நினைப்பாங்களோன்னு எண்ணிக்கிட்டே இருந்தா யாரால எதைச் செய்ய முடியும் சொல்லு ராமர் மேல வைச்ச நம்பிக்கையில அனுமார் ஒரே தாவல்ல கடலைத் தாண்டிட்டார்.ராமச்சந்திர மூர்த்தி கடலைத் தாண்ட சேது பாலம் கட்ட வேண்டியதாப் போச்சு.நாளைக்கு விடியும்னு நம்பிக்கையிருந்தாம்ப்பா படுக்கையில நிம்மதியா உறங்க முடியும்”////

    என்றென்றும் நிஜமான வார்த்தைகள்…மிக்க நன்றி,பாராட்டுக்கள்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *