அவன், அவள். அது…! -8

This entry is part 1 of 24 in the series 1 நவம்பர் 2015

( 8 )

      இன்றைக்கு சப்ஜெக்ட் பெண்களைப் பத்தி, பொதுவா லேடீஸ் பத்தி என்னென்ன அபிப்பிராயம் தோணுதோ, நிலவுதோ அதையெல்லாம் எடுத்து வைக்கலாம். ஓ.கே…!

ஓ.யெஸ், ஐ ஆம் ஆல்வேஸ் ரெடி….

நிறைய ஆண்களோட மனசைக் கெடுக்கிறதே இந்தப் பெண்கள்தான். இதைப்பத்தி நீ என்ன சொல்றே? ஒரு ஆணினுடைய வெற்றிக்குப் பின்னாலே நிச்சயம் ஒரு பெண் இருப்பான்னு சொல்வாங்க…அதே போல பல ஆண்களுடைய தோல்விக்கும் குற்றங்களுக்கும் பின்னாலேயும் ஒரு பெண்தான் இருப்பாள்னு நான் சொல்றேன். பெரும்பாலுவும் தினசரிகளிலே வருகிற அங்கங்கே நடந்ததா கேள்விப்படுகிற கொலை, தகராறு கேஸ்களையெல்லாம் பாரு, தூண்டித் துருவி உள்ளே புகுந்தேன்னா மூல காரணம் ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேங்கிற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை. என்ன சொல்றே?

இந்தக் கருத்தை அப்படியே என்னால ஏத்துக்க முடியாது. நீங்க சொல்ற இந்த மாதிரியான தவறுக்கு கல்வியறிவு இல்லாததுதான் காரணம்னு சொல்லுவேன். முதியோர் கல்வி நடத்துறாங்களே, அதெல்லாபம் கூட இந்த மாதிரித் தவறுகளைக் குறைக்க ரொம்ப வழி வகுக்கும்….

அப்படிச் சொல்ல முடியாது சுமதி. படிச்சவன் தவறு செய்யாமலா இருக்கான்? இன்றைக்குக் கல்லூரிகளிலேயும் சரி, பல பெரிய உத்தியோகத்திலே இருக்கிற படிச்சவங்க மத்தியிலேயும் சரி0, பெண்கள் சம்பந்தப்பட்ட தவறுகள் நடக்காமலா இருக்கு? படிச்ச செல்வந்தர்கள் மத்தியிலே, அந்தக் குடும்பங்களிலே அது நாகரீகமா உலா வருது. படிக்காத பாமரன் நடுவிலே அசிங்கமா வெளிப்படுது. அவ்வளவுதான் வித்தியாசம். நீ தவறா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்…இப்போ என்னையே எடுத்துக்கோ…ஆபீசுக்குப் போகும் போதும் வரும்போதும் வெளியிலே எத்தனையோ டீலடீசைப் பார்க்கத்தான் செய்றேன். சிலபேர் கூட பழகக் கூடிய சந்தர்ப்பமும் வரத்தான் செய்யுது. அப்போதெல்லாம் மனசென்ன சுத்தமாவா இருக்கு? தளும்பாத தடாகம் மாதிரி நிர்மலமாகவா இருக்கு? என்னென்னவோ அசிங்கமான எண்ணங்களெல்லாம் தோன்றத்தான் செய்யுது? நானும் தங்கச்சிகளோட பிறந்தவன்தான். அலைஞ்சு திரிஞ்சு அவுங்களுக்குக் கல்யாணம் காட்சி செய்து பார்த்தவன்தான். அவங்க வயதொத்த எத்தனையோ லேடீஸ்கூடப் பழகத்தான் செய்றேன். பார்க்கத்தான் செய்றேன். மனச அப்படியே சகோதரியாவா வரிச்சிடுது? அவங்க உடையையும், சிரிப்பையும், பேச்சையும், பார்க்கிறபோதும், கேட்கிறபோதும், ரொம்பக் கலங்கித்தான் போகுது. தப்புன்னு தெரிஞ்சாலும், மனசு ஒதுக்கிடுதா என்ன? அது நினைக்கிறதை நினைச்சுக்கிட்டுத்தானே இருக்கு?

அப்போ மனசைக் கட்டுப்படுத்தத் தெரியணும். நல்ல பழக்க வழக்கங்கள் அதுக்கு முக்கியம். நல்ல புத்தகங்களையும், நல்ல விஷயங்களையும், படிக்கணும், கேட்கணும். நல்ல ஆட்களோட பழகணும். தியானம், பக்தி யோகம்னெல்லாம் ஈடுபடணும். அதெல்லாம் எதுக்கு வச்சிருக்காங்க? சும்மா பொழுது போகத் தெரிஞ்சிட்டுப் போறதுக்கா? கடைப் பிடிக்கணும்…அதுக்கு முயற்சி பண்ணனும்…

அதிலெல்லாம் கவனம் செலுத்துறதுங்கிறது என்ன சாதாரணமா?

எடுத்த எடுப்பிலேயே எல்லாமும் வந்திடுமா? பயிற்சிதான். இந்த உலகத்துல பயிற்சி இல்லாம எதுவும் சாத்தியமில்லை…அதுக்குத்தான் கோயில், பூஜை, புனஸ்காரம்னு வச்சிருக்காங்க…

இன்றைக்கு வீட்டை விட்டு வெளியிலே காலடி எடுத்து வச்சாலே மனுஷனோட மனசைக் கெடுக்கிற விஷயங்கள்தான் அதிகம்.

கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டுப் போற பெண்கள், ஆபாசமான சினிமா போஸ்டர்கள், இதுவே போதுமே? அந்தக் காலத்திலே வந்த சினிமா, மனுஷனை நல்வழிப்படுத்திச்சு. இப்போ அதுக்கு நேர்மாறா இருக்கு. ஒரு வீட்டுக்குப் போனா பெண்கள் மறைவிலே நின்னுதான் பேசுவாங்க…இப்போ சோஷியல் மூவ்மென்ட்ங்கிற பேர்ல கலகலன்னு கலந்துடறாங்க…அதனால் என்னென்ன தப்பெல்லாம் நடந்து போகுது? கல்யாணமாகி பெண் சுகத்தை அனுபவிச்சிட்ட எனக்கே மனசு இப்படிக் கலங்கிடுதுன்னா, எத்தனை பாச்லர்கள், இளைஞர்கள், இன்றைய சூழ்நிலைக்குக் கெட்டுப் போக வாய்ப்பிருக்கு?

அது எப்படி அத்தனை உறுதியாச் சொல்றீங்க? நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி கெட்டா போனீங்க? அதெல்லாம் தாய் தந்தையரோட வளர்ப்பு முறையைப் பொறுத்த விஷயம். சூழ்நிலைகள் ஒருத்தனை மாத்துறதுக்கு வாய்ப்பிருக்கு. அதை நான் ஒத்துக்கிறேன். ஆனால் இந்த மாதிரியான தவறுகள் பெரும்பாலும் பாச்லர்கள் மத்தியிலே நடக்கலாம்…

கரெக்ட்…நிறையப் பெண்கள் அழகா இருக்காங்கன்னு சொல்றதாவிட அவங்க அணியும் உடைகள் பார்க்கிறவனை டெம்ப்ட் பண்ணுதுங்கிறது என்னோட அபிப்பிராயம். கலர் கலரா உடையும், உடம்பை ஒட்டினாற்போல தைச்சு அணியறதும், இறுகினமனசுள்ளவனைக் கூட கெடுத்துடுது…தப்பு செய்யத் தூண்டுது. இந்த கலர் செலக் ஷன் கூட இதுக்குக் காரணம்னு சொல்லலாம். மஞ்சள் நிறத்திலே டிரஸ் பண்ணினா தோலெல்லாம் பளபளன்னு சிவப்பா ஷைனிங்கா தெரியும். இது உண்மை. வேணும்னா நீ சோதிச்சுப் பாரு. டிரஸ்சைப் பார்த்து மயங்கி விழுந்திடறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா? ஒரு ஆண் தன்னைப் பார்க்கும்போது அவன் மனசிலே கண்ணியமான எண்ணங்கள்தான் உருவாகணும்ங்கிற தோற்றமுடைய பெண்கள் எத்தனை பேர் இருக்காங்க இன்னைக்கு? சொல்லு பார்ப்போம்?

என்னையும் சேர்த்துத்தான் சொல்றீங்களா? – சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தாள் சுமதி.

நீ எந்த டிரஸ்ஸிடீல வந்தாலும் இனி உனக்கு நான்தான், எனக்கு நீதான்…வேறென்ன செய்திட முடியும்ங்கிறேன்…

ஏன்? ஏதாவது செய்துதான் பாருங்களேன்…

சே…சே…இருக்கிற ஒரு சுமை பத்தாதா?

என்னது? அப்போ என்னை சுமைங்கிறீங்களா?

பார்த்தியா…? என்னதான் புத்திசாலித்தனமா பேசினாலும், செய்தாலும் கடைசியிலே சாதாரண சராசரிப் பொம்பளை மாதிரி ஆயிடுறியே…?

அதுலதாங்க மன சாந்தியே இருக்கு…

சீரியஸான விஷயம் அன்று ரொம்பத் தமாஷாக முடிந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டான் இவன். அந்த மாதிரியான விஷயங்களில் சுமதியின் நம்பிக்கை இவனை பிரமிக்க வைத்தது.

அவள்தானா இப்படி முறித்துக் கொண்டு போனாள்? வருத்தத்தில் நெஞ்சம் உருகியது.

இதை நினைத்துப் பார்த்த வேளையில் வாசலில் சேதுராமன் செருப்பைக் கழற்றும் சத்தம் கேட்டது.

Series Navigationஇந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *