ஆச்சி – தாத்தா

author
3
0 minutes, 11 seconds Read
This entry is part 8 of 12 in the series 12 மார்ச் 2017

granpa

சோம.அழகு 

 

இச்சொற்கள் நம்முள் ஏற்படுத்தும் இன்பமும் குதூகலமும் அலாதியானவை. இவர்களால் பாசத்தையும் உணர்வுகளையும் ஊட்டி வளர்த்தெடுக்கப் பட்டதால்தான்  இன்று பெரும்பாலான மனித மனங்கள் முழுமையாக வறண்டு விடவில்லை. இந்த அவசர உலகத்தில் நமது வாழ்வின் எச்சூழ்நிலையிலும் எத்தருணத்திலும் நமது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தி, தொல்லியல் ஆராய்ச்சிக்கு ஏதுவாய் நம்முள் புதைந்து கிடக்கும் குழந்தைமையை மீட்டெடுக்க வல்ல அற்புதர்கள் ஆச்சியும் தாத்தவும். நமது உணர்வுப்பூர்வமான வாழ்க்கையைத் தொடங்கி வைத்து அதற்கு சாட்சியாய் நிற்பதும் அவர்களே ! இக்கட்டுரையை எனது ஆச்சி தாத்தாவை வைத்து அமைத்தல் இயற்கையாகவும் நியாயமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

 

எனது அப்பா வழி ஆச்சி-தாத்தா : அழகம்மாள்-சுப்பராயன். தாசில்தாராக இருந்து பணிநிறைவு பெற்ற சுப்பராயன் தாத்தாவின் சிக்கனம் உலகப் புகழ் பெற்றது. சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் இடையில் இழையோடும் அந்த மெல்லிய கோட்டின் அருகிலேயே தாமசிக்கிறார்கள் தாத்தா. நேரத்திற்குத் தகுந்தாற்போல் கோட்டிற்கு அங்கும் இங்குமாக ஒரு எட்டு வைத்து மாறிக்கொள்வார்கள். தாத்தாவைப் பற்றி பூட்டி ஆச்சியிடம் (சோமசுந்தரத்தம்மாள்(95)) பேசும்போதெல்லாம் அவளிடம் இருந்து தவறாமல் வரும் வார்த்தைகள் – “எங்க அப்பா கிட்டதான வளந்தான். அவுக கடைசி காலத்துல இவன்ட்ட , ‘யப்பா ! கடைசி காலத்துல கைல நாலு காசு இருந்தாத்தான் மரியாதை. வாழ்க்கைக்குப் பணமும் முக்கியம்டா. கெட்டியா புடிச்சிக்கோ’ ன்னு சொல்லிட்டு கண்ண மூடிட்டாக. இப்படியா சொல்லிட்டு போவாக !” . உயரிய கொள்கைகளைக்(!) கற்றுத் தந்த தமது தந்தையை ஒவ்வொரு முறையும் கடிந்து கொள்வாள்.

 

ஒவ்வொரு விஷயத்திலும் சுப்பராயன் தாத்தாவின் பார்வையும் அணுகுமுறையும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அவற்றில் சில :

 

  • ஸ்பெயினில் வருடந்தோறும் நடைபெறும் ‘லா

டொமாட்டினா’ திருவிழாவைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். “தக்காளி விக்கிற வெலைக்கு எப்பிடி வேஸ்ட் பண்ணுது பாரு……கழுதைகள்” என்று தாத்தா நிஜமாகவே பொங்கி எழ, நாங்களோ, “தாத்தா ! இது விளைச்சல கொண்டாடுற பண்டிகை. நம்ம ‘பொங்கல்’ மாதிரி” என்றோம். “இருக்கட்டுமே…..அதுக்குன்னு இப்பிடியா? உழவர் திருநாள்னா சாமிய கும்பிட்டோமா…..டோர்ட்டிலாவுக்கு தக்காளி சட்டினி வச்சு சாப்பிட்டோமானு இல்லாம என்னது இது?” என்ற தாத்தாவிடம் அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லாமல் தோல்வியைத் தழுவினோம்.

 

  • ஒரு தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் ஓர்

இனிப்புப் பலகாரத்தைச் செய்து முடித்து, “இது ரொம்ப ரொம்ப சுவையானதா இருக்கும். கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். செஞ்சு பார்ப்பீங்கள்ல ?” என்ற பெண்மணியிடம், “ம்க்கும்……..முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்……. பத்தாததுக்கு ரெண்டு கிண்ணம் நெய் வேற. பின்ன….. அது என்ன கழுதையா இருந்தா என்ன ? நல்லாத்தான் இருக்கும்” என்று வீட்டிலிருந்தவாறே விமர்சனம் பறந்து கொண்டிருந்தது தாத்தாவிடம் இருந்து.

 

  • “………….பாத்திரம் பளபளக்கும். இந்த சோப்பு

வாங்கினால் ஒரு கவர்ச்சிகரமான டம்ளர் இலவசம் ” – விளம்பரம். “டம்ளர்ல என்னடா கவர்ச்சி வேண்டிக்கெடக்கு ? சோப்புக்கு என்னத்துக்கு டம்ளர் ஃப்ரீ ? கரைச்சுக் குடிக்கவா ?” என்று பன்னாட்டு நிறுவனங்களையே வெட்கித் தலை குனிய வைத்த தாத்தாவிற்கு அன்றைக்குப் பெரிதாக ‘ஓ’ போட்டோம்.

 

  • ஒரு முறை ஒரு குறிப்பிட்ட கட்சியினரின்

முகத்திரையைக் கிழித்ததற்காக ஒரு வார இதழின் பிரதியை நூற்றுக்கணக்கில் வாங்கிக் கொளுத்திக் கொண்டிருந்தனர் அக்கட்சியினர். ஏனோ ‘லா டொமாட்டினா’ சம்பவம் நினைவுக்கு வர, தாத்தாவிடம் நல்ல பெயர் வாங்கும் உன்னத நோக்கில், “பத்திரிக்கை என்ன ஓசியிலயா கிடைக்குது. எவ்ளோ பேப்பர் வேஸ்ட். காசை இப்படியா கரியாக்கணும் ? ப்ச்…..” என்று அநியாயத்தைக் கண்டு கொதித்தெழுந்ததைப் போல் நடித்து ஏதோ பெரிய தத்துவமுத்தை உதிர்த்துவிட்டதைப் போல பெருமிதத்தோடு பாராட்டை எதிர்நோக்கி தாத்தாவைப் பார்த்தேன். “எரிக்கட்டும்……துட்டு கொழுப்பு……நல்லா எரிக்கட்டும்……காசு குடுத்து வாங்கித்தான எரிக்கிறான். அப்புறம் என்ன ? பத்திரிக்கைக்காரனுக்கு பத்திரிக்கை எப்படி வித்தா என்ன ? இன்னும் சொல்லப் போனா இவன் கொளுத்த கொளுத்த நெறைய பிரிண்ட் போடுவான். பத்திரிக்கைக்கு லாபம்தானே “ – அரியதொரு விளக்கம் தந்து ‘சரியாத்தான் யோசிக்கிறோமா?’ என்று   என்னைக் குழப்பினார்கள் தாத்தா.

 

  • தாத்தாவின் எண்பதாவது பிறந்தநாளுக்கான

கொண்டாட்டங்களைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் , “சாப்டுட்டு சாப்டுட்டு உட்கார்ந்தே இருந்தே எல்லாவனுக்குந்தான் வயசாகும். 80 வயசு வரை உயிரோட இருக்குறது எல்லாம் ஒரு சாதனையா ? போய் வேற உருப்படியான வேலை இருந்தா பாருங்கடா….” என்ற தாத்தாவின் யதார்த்தமான வார்த்தைகளின் கணம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது.

 

பத்தாம் வயதில் ஒரு நாள் ஏதோ ஒரு விசேஷ வீட்டில் எஞ்சோட்டுப் பிள்ளைகளுடன் கதை சொல்லி விளையாடிக் கொண்டிருக்கையில்தான் தெரிந்தது – என் தாத்தாவிற்குத்தான் மகாபாரத – இராமாயணக் கிளைக்கதைகள் உட்பட நிறைய கதைகள் தெரியும் என்று. இந்த 25 வயதிலும் தாத்தவிடம் கதை கேட்கப் பிடிக்கிறது. குழந்தைக்குச் சொல்லும் குதூகலத்துடன் பிசிறு தட்டாமல் அதே ஏற்ற இறக்கங்களுடன் கதைகளைக் கண்முன் படமாக்கும் ஒரு சிறந்த கதைசொல்லி – சுப்பராயன் தாத்தா. தமது பத்தொன்பதாம் வயதில் கிருஷ்ணகிரியில் (அந்த ஊர் எங்கு இருந்தது என்று யாருக்குமே தெரியவில்லையாம்; தாத்தா தன்னந்தனியாகப் போன கதையே அரை மணி நேரத்திற்கு ஓடும்) வேலை பார்த்த கதையைக் கூறுகையில், தாம் தங்கி இருந்த வீட்டின் அடுத்த வீட்டு கரீம் பாய் தனது பதினைந்து வயது மகளைக் காப்பி கொண்டு வரச் சொல்லியதையும் அதை வியர்த்து விறுவிறுத்து உள்ளங்கையில் வாங்கியதையும் ஒரு முறை நினைவு கூர்ந்தார்கள். எண்பது வயது தாத்தாவிடம் பத்தொன்பது வயது சுப்பராயனின் கூச்சமும் படபடப்பும் வெளிப்பட்ட (யாருக்கும் காணக் கிடைத்திராத) அத்தருணத்தைப் பொக்கிஷமாக மனத்திரையில் படம் பிடித்துக் கொண்டேன். பெரும்பாலும் தாத்தாவுடன்தான் எங்கும் செல்வேன். எனவே எங்கள் பகுதியில், “அதாம்பா…..ஒரு பெரியவர் கூடவே கையப்புடிச்சிட்டு வருமே……உச்சிக்குடுமி போட்ட பொண்ணு……சுருட்டை முடி” – 13 வயது வரை இதுதான் எனது அடையாளம். எங்கள் பகுதியில் என் வயது பிள்ளைகள் யாரும் இல்லாததால், தாத்தாவே விளையாட்டுத் தோழனாகவும் மாறினார்கள். எல்லா விளையாட்டுகளிலும் வலுக்கட்டாயமாகத் தாம் தோற்பது மட்டுமல்லாமல், ஏதோ என் முயற்சியில் நான் வென்றதைப் போலக் கொண்டாடுவார்கள் தாத்தா. அம்மா-அப்பா, ஆச்சி-தாத்தா என ஒரே வீட்டில்தான் இருந்தோம் என்பதையும் தாண்டி ஆச்சி-தாத்தாவிடம்தான் வளர்ந்தோம், நானும் என் தங்கையும்.

 

அம்மா பணிக்குச் செல்பவள் என்பதால், என் தங்கை முழுக்க முழுக்க இருந்தது அழகம்மாள் ஆச்சியிடம்தான். 2 வயது வரை ஆச்சியை ‘அம்மா’ என்று அழைத்து வந்தவள் விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் என்னைப் பார்த்து ‘ஆச்சி’ என மாற்றியிருக்க வேண்டும். எனது அப்பா உட்பட 4 ஆண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தவளின், ‘பெண்பிள்ளை ஒன்று இல்லையே’ என்ற மனக்குறையையும் வருத்தத்தையும் முதலில் போக்கி வைத்தவள் நான். எனவே, அவளது வளர்ப்பில் ஆச்சிக்குரிய பாசத்தோடு அம்மாவிற்குரிய கண்டிப்பும் கலந்திருந்தாலும் பாசமே மேலோங்கியிருக்கும். முதல் பேத்தியான என்னை மகளாக பாவிக்கும் ஆச்சியிடம் பெயரை மட்டுமல்ல…..உருவத்தையும் கடன் வாங்கியிருக்கிறேன். கோமதி ஆச்சி (எனக்கு பூட்டி: அழகம்மாள் ஆச்சியின் அம்மா) எல்லா வேலைகளையும் நிறுத்தி நிதானமாக அவளே செய்வதைத்தான் விரும்புவாள் எனினும் அவள் அக்கம்பக்கம் கதை பேசச் செல்கையில் தான் அனைத்து வேலைகளையும் விரைவாகவும் துப்புரவாகவும் செய்து முடித்துத் திட்டு வாங்கும் விநோதத்தைச் சொல்லிச் சிரிப்பாள் அழகம்மாள் ஆச்சி. எங்கள் குடும்பத்தில் அவளைச் ‘சுத்த பிராமணத்தி’ என்றே அனைவரும் கிண்டல் செய்வோம். கோமதி ஆச்சி எதையும் பொறுமையாக சொல்லித்தர மாட்டாள் என்றும் என் ஓட்டி ஆச்சியிடம்தான் (அவள் பெயரும் அழகம்மாளே!) எல்லா வேலைகளையும் கற்றதாகக் கூறுவாள் என் ஆச்சி. எட்டாவது வரை படித்திருந்த அவளுக்கு டீச்சராக வேண்டும் என்று கொள்ளை ஆசையாம். டீச்சர் டிரைனிங் படிக்க வெளியூர்தான் (அடுத்த ஊராகவே இருந்தாலும் பஸ் ஏறிப் போனா எங்களுக்கு வெளியூர்தான் பாஸ்!) செல்ல வேண்டும் என்பதால் வீட்டில் அனுமதி தரவில்லையாம். “இப்போ அழகா பென்சன் வாங்கிட்டு இருந்திருப்பேன். உன் பூட்டி ஆச்சி பார்த்த பார்வை……” என்று இன்றும் குறைபட்டுக் கொள்கிறாள்.

 

20 வயது வரை அவளது மகளாக மடியில் படுத்து  இது போன்ற கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அதன் பிறகு அவள் மகளாகிப் போனாள். தன் தாயிடம் கூட சொல்லியிராத , தான் பட்ட பல கஷ்டங்களையும் என்னிடம் கொட்டித் தனது மனதின் இறுக்கத்தை மெல்ல மெல்ல தளர்த்திக் கொண்ட போது, அவள் என்னிடம் கண்ட தாய்மையை உணர்ந்தேன். எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பிக்கையில் அழுபவள், கூறி முடிக்கையில் எவ்வித சலனமும் இன்றி, மரத்துப் போய்விட்டதை, மிரட்சியான பார்வையில் வெளிப்படுத்துவாள்.  அவளது கண்ணீர், வலி அத்தனையையும் என் தோளில் ஏற்றிக் கொள்ள முயன்ற போது முதுகெலும்பு அழுந்தி ஒடிந்து விழும் போல வலித்தது. அவளுக்கு ஆறுதலுரைத்து ஆற்றுப்படுத்தும் கடமை எனக்கிருப்பதால், அவள் வெடித்து அழும் போதெல்லாம் என்னையும் மீறி வர முனைந்த கண்ணீர்த் துளிகளைப் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கஷ்டப்பட்டு உள் அனுப்பிய பல தருணங்கள் இப்போதும் நினைவில் உள்ளன.

 

கமலா ஆச்சியின்  (அம்மாவின் அம்மா) கதை இதற்கு சற்றும் சளைத்ததல்ல. 8 வயதில் தாயை இழந்து, உடன் பிறந்த 6 சகோதரர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நோய்களுக்குப் பலி கொடுத்து 15 வயதில் தனித்துப் போனவள், கமலா ஆச்சி. தந்தை, மாற்றாந்தாய் அவர்களது பிள்ளைகள் என எல்லோரும் உடன் இருந்தாலும் உளவியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, அத்தனிமை அவளைச் சுக்கு நூறாகக் கிழித்திருக்கக் கூடும். காலை முதல் இரவு வரை உளுக்கெடுத்த வேலைகள் மட்டுமே அவளை உயிர்ப்புடன் வைத்திருந்திருக்கும். (நேரம் கிடைத்திருப்பின்) யாருடன் விளையாடி இருப்பாள்? யாருடன் மனது விட்டுப் பேசி இருப்பாள்? பூப்படைந்ததும் ஒத்தாசைக்கு யார் உடன் இருந்தார்கள்? அவளுக்கே இக்கேள்விகளுக்கான விடை தெரியாது.

 

20 வயதில் கல்யாணம். இவ்வுலகில் தனது இருப்பிற்குக் கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரமே மாணிக்கவாசகத்திற்கு (எனது தாத்தா) மனைவி ஆனதுதான் என பரிபூரணமாக நம்பும் ஒரு மனுஷி. எனவே எதற்கெடுத்தாலும் தாத்தவை முன்னிலைப் படுத்தித் ‘தன்முனைப்பாளராக’ மாற்றியதில் ஆச்சியின் பங்கு அளப்பரியது! நான்காவது வகுப்புக்கு மேல் அவளைப் படிக்க வைக்கவில்லை. ஆனால், அரிசி வியாபாரம் பார்க்கும் தாத்தா இரண்டரை கிலோ பொன்னி, நான்கேமுக்கால் கிலோ சம்பா என கால்குலேட்டரில் கணக்கு முடிக்கும் முன்பே விலையைச் சொல்லி காசு வாங்கி மீதி கொடுத்து வியாபாரத்தை முடித்திருப்பாள், ஆச்சி. நானும் என் தங்கையும் ‘பிறந்த நாள்’, ‘கல்யாண நாள்’ போன்ற சொற்களை ஆச்சியின் முன் சொல்வதை முற்றிலும் தவிர்க்க முயல்வோம். “பிப்ரவரிதான சங்கர் மாமாவுக்குப் பிறந்தநாள்” என்று நாங்கள் எங்களுக்குள் பேசுவது காதில் விழுந்தால் ஆச்சி தொடங்கி விடுவாள் – “ஆமா! தை அமாவாசை அன்னிக்குப் பொறந்தான். பிரசவம் பார்த்த மருத்துவச்சி கொழுந்தனுக்கு அன்னிக்குத்தான் கல்யாணம்.  அதுக்கு 3 வருஷம் கழிச்சு தை மாசம் கீழத் தெரு பிரேமாவோட ஓர்ப்படியோட ஒன்னு விட்ட தங்கச்சிக்கு வளைகாப்பு……….” என அனைத்தையும் ஒரு முறை அசைபோட்டு எங்களைத் திணறடிப்பாள். (முதல் வாக்கியத்திற்குப் பிறகு அவள் கூறும் யாரையும் எங்களுக்குத் தெரியாது) “வடக்குப் பக்க அடுக்குல இரண்டாவது வரிசையில கிழக்கு மூலையில இருக்கு”- அடுக்களையில் உப்பு டப்பாவின் இடத்தைக் கூட திசைகளோடு சொல்லி எங்களைப் பேந்த பேந்த முழிக்க வைப்பாள்.

 

அவள் வாழ்க்கைப்பட்டது ஒரு கூட்டுக்குடும்பம் என்பதால் அவளது காலை உணவு நேரத்தின் போது மதிய உணவுக்கான முதல் பந்தி நடந்து கொண்டிருக்கும். இரவு 11 மணிக்கு அமர்த்தப்படும் கங்கு, காலை 4 மணிக்குக் காபி போட மீண்டும் என் ஆச்சியுடன் விழித்துக் கொள்ளுமாம். நாள் முழுக்க எரிந்து கொண்டே இருப்பதால் லேசாக ஊதினாலே கனன்று கொண்டிருக்கும் கங்கு பற்றிக் கொள்ளும் என்பாள். அவளுக்கு மகன், மகள், மருமக்கள், பேரன், பேத்தி என்ற வித்தியாசமே கிடையாது. அனைவரும் அவளின் பிள்ளைகள்.  “எப்பிடி ஆச்சி பொறந்ததுல இருந்து ஓய்வே இல்லாம இவ்ளோ வேலை பார்க்குற? சலிக்கவே சலிக்காதா? களைப்பா இல்லயா?” – பூ கட்டிக்கொண்டிருந்த அவள் தோளில் சாய்ந்தபடி கேட்டேன். “இப்பிடி ஒரு பேத்தி பொறந்து இவ்ளோ கேப்பேன்னு அப்போ யோசிச்சு பார்க்கக் கூட நேரம் இருந்ததில்லையே. அப்படியே ஓடிடிச்சு காலம். என்னமோ பொறந்தேன்; எப்படியோ வளந்தேன். 3 தங்கமான பிள்ளைகள். அப்புறம் இப்பிடி ஒங்கிட்ட கதை சொல்லிட்டு இருக்கேன்….” என்று சிரித்தபடியே அடுத்த பூவைத் தொடுக்கும் முன் என் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினாள்.

 

எல்லோர்க்கும் அவரவர் ஆச்சிகளைப் பற்றிய கணிப்பு ஒன்று இருக்குமே. எனக்கும் அதேதான்……..”இவர்களல்லவா இரும்பு மனுஷிகள்”.

 

கமலா ஆச்சியை எழுதி விட்டு மாணிக்கம் தாத்தாவை விட்டேன்….நான் செத்தேன். நிஜமாகவே சிறுபிள்ளையைப் போல் செல்லக் கோபம் காட்டும் தாத்தாதான் தமது மூன்று பிள்ளைகள் (எனது அம்மா, 2 மகன்கள்), அண்ணன் பிள்ளைகள் பத்து என அனைவரையும் படிக்க வைத்துக் கரை சேர்த்தார்கள். விவரம் தெரிய ஆரம்பித்தவுடன், பூட்டி தாத்தாவின் ஆணைக்கிணங்க சொந்த ஹோட்டலில் சப்ளையராகவும் சமையல்காரராகவும் வேலை. பிறகு பருத்தி, கடலை, கானம், மிளகாய் வற்றல், புளி என மொத்த வியாபாரக் கடை. இதற்காகக் கன்னியாகுமரியின் சுற்று வட்டாரங்களில் தொடங்கி விருதுநகர் வரை வருடம் முழுக்க அலைச்சல். அம்மாவின் கல்யாணத்திற்கு ஒரு பூ சோள விளைச்சலே கைகொடுத்தது என்று மேல்நோக்கிக் கைகூப்பி இத்தனை வருடங்கள் கழித்து இப்போதும் இறைவனுக்கு நன்றி சொல்கிறார்கள் தாத்தா. “சத்து எல்லாம் பிழியப்பட்டு கடைசியில் சக்கையாத்தான் போவ. ஆனா வேற வழி இல்ல மாணிக்கம். அண்ணனோட 700 ரூபாய் சம்பளம் 10 பிள்ளைகளுக்குப் போதாது. நீதான் பாத்துக்கணும்.”- பூட்டி தாத்தவின் கடைசி வார்த்தைகளை சிரமேற்கொண்டு செய்து முடித்திருக்கிறார்கள். தமது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவோ குடும்பத்தோடு இருக்கவோ நேரமில்லாமல் போனாலும் எந்தக் குறையும் வைத்ததில்லை என்று அம்மா சொல்லுவாள்.

 

Hypochondriac (இதற்கான தமிழாக்கம் தெரியவில்லை ) ஆன தாத்தாவிடம் தவிர்க்க வேண்டியவை – உடல் நலம் குறித்த பேச்சுக்கள். அவர்களே ஆரம்பிப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். “ரொம்ப சூடா எதையும் குடிச்சா நாளடைவுல உணவுக்குழாயில புற்று நோய் வந்…..”- முடிக்கும் முன்பே “நிசந்தான்……எனக்குக் கூட தொண்டையில ஒரு மாதிரி இருக்கு. செக் அப் பண்ணனும்” என்பார்கள். யாராவது சைனஸ் பிரச்சனை பற்றிப் பேசக் கேட்டால், தலைக்கு மிக அருகாமையில் வளர்ந்து நின்றுவிட்ட முடிக்கு ஒரு மாதத்திற்காவது தண்ணி காட்ட மாட்டார்கள். கடும் மூட்டு வலி, தைராய்டு, சர்க்கரை வியாதி என அவதிப்பட்டாலும் வெளிக் காட்டிக் கொள்ளாத ஆச்சியை மாமா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில், வலுக்கட்டாயமாக உடன் சென்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்தையும் சோதனைக்குள்ளாக்கி ஒரு பிரச்சனையும் இல்லாதது கண்டு வருத்தப்படும் அதிசயப் பிறவி, தாத்தா. ஏனெனில், எல்லோரும் ஆச்சிக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருப்போம். எண்பது வயதில் தனக்கு வயதாகிவிடத் தொடங்கி விட்டதோ(?!) என வருத்தப்படும்(!) தாத்தாவிற்கு Face lift, Hair transplantation போன்றவை இன்னும்  தெரியாமல் இருப்பது, சென்ற பிறவியில் நாங்கள் செய்த புண்ணியம்.

 

இவர்கள் நால்வரின் பேத்தியாகப் பிறக்க, சென்ற பிறவியில் எந்த நாட்டைக் காப்பாற்றிப் புண்ணியம் செய்தேனோ? ஆச்சி-தாத்தாவிடம் எனக்கு இருக்கும் நெருக்கமும் ஒட்டுதலுமே, வழியெங்கும் நிறைந்திருக்கும் முன் பின் தெரியாத ஆச்சி தாத்தாக்களிடமும் வாஞ்சையோடு சிறிது நேரம் உரையாடி விட்டுச் செல்லுமாறு பணிக்கிறது.

 

பெற்ற 5 பிள்ளைகளும் துரத்திவிட, குளோரிந்தா சர்ச்சில் யாசித்து வாழும் ராசம்மா ஆச்சி; அடுத்த தெருவில் இருந்து தொடங்கும் நகரத்தின் பேரிரைச்சலையும் வேகத்தையும் பொருட்படுத்தாது தமது நிதானமான பழங்கால வாழ்வின் நினைவுகளை, அதில் இருந்த அழகியலை, குலசேகர ஆழ்வார் தெருவில் உள்ள தமது வீட்டின் வாசலில், நாற்காலியிலும் அதனருகில் உள்ள திண்ணையிலும் அமர்ந்து அசைபோடும் ராமசாமி தாத்தாவும் வடிவு ஆச்சியும்; தீப்பெட்டி அளவிலான அறையில் வசிக்கும் வசதியிலும் கூட தனது உணவை நாய்க்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் முதுமையின் தனிமையை விரட்டுவதில் ஓரளவு வெற்றி அடைந்து கொண்டிருக்கும் செல்லம்மா ஆச்சி; தொண்டர் சன்னதி திருப்பத்தின் இடதுபுறத்தில், அந்தத் தள்ளாத வயதிலும் யாரையும் எதிர்ப்பார்க்காமல் தன் வயிற்றுக்குத் தானே பொறுப்பு என உழைக்கும் பல அவ்வைகளின் பிரதிநிதியான, அகத்திக்கீரை விற்கும் சங்கரி ஆச்சி; தனது மகனைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்த பிறகு, தனக்கு இனி கஞ்சி கிடைக்காது என உணர்ந்த அடுத்த நொடி, விளை நிலங்களைப் பேரனுக்கு எழுதி வைத்துவிட்டு, சொந்த ஊர் புதுமனையை விட்டு பாளையங்கோட்டைக்கு வந்து, வேர்களை வலுக்கட்டாயமாகத் தொலைத்த வலியைச் சுமக்க தெம்பும் நினைத்து வருத்தப்பட நேரமும் இல்லாமல் சிறு சிறு வேலைகளைச் செய்து நாட்களைக் கடத்தும் சண்முகவேல் தாத்தா.

 

இது மாதிரி பல கதைகளைக் கேட்டுப் பழகியிருந்தாலும் இவர்களிடம் நேரடியாகக் கேட்ட போது மனது பிசையத்தான் செய்தது. அவர்களின் அத்தனை துயரங்களையும் கேட்டு, “கவலைப்படாதீங்க தாத்தா/ஆச்சி…………” ………. ‘எல்லாம் சரியாகிடும்’ என்ற பொய்யான நம்பிக்கையை செயற்கையாக அளிக்க மனமில்லாமல், அதற்கு மேல் என்ன சொல்வது என்றும் தெரியாமல் சரியான வார்த்தைகளுக்காகத் தட்டுத் தடுமாறுவதை உணர்ந்தவர்களாய், அவர்களே அந்த வெற்றிடத்தை நிரப்புகிறார்கள். “நீ நல்லா இருக்கணும் தாயீ……. நல்லா படிச்சு பெரிய ஆளா வாம்மா……” என்று மனதார வாழ்த்தி, தமது கரங்களால் எனது கன்னங்களைத் தடவி எடுத்துச் சொடுக்கிட்டு திருஷ்டி கழித்து அனுப்பி வைக்கிறார்கள். இவர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கையில்தான் உரைத்தது – நமது ஆச்சி-தாத்தா மட்டுமல்ல……உலகின் அத்தனை முதியவர்களும் எதிர்ப்பார்ப்பது/ஆசைப்படுவது – “எப்படி இருக்கீங்க?”, “சாப்பிட்டீங்களா?” போன்ற ஒற்றை வரிக் கேள்விகள், கனிவான விசாரிப்புகள், நம்முடைய சில மணித்துளிகள். இவை போதும் முதியவர்களின் ஒட்டு மொத்த பாரத்தையும் இறக்கி வைக்க.

 

இப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இவர்களைக் கடக்கையில், பார்த்து சிரித்துக் கொண்டே ‘டாட்டா’ காட்ட நான் கையை உயர்த்தும் முன்பே இவர்களின் பொக்கை வாய்ச் சிரிப்பும் டாட்டாவும் தயார் நிலையில் என்னை மலர்ச்சியோடு வழியனுப்புகின்றன. இதுக்கு மேல வாழ்க்கைல வேற என்னங்க வேணும்? கோயிலாவது…….? சாமியாவது…….?

 

 

  • சோம.அழகு
Series Navigationதொடுவானம் 161. பயிற்சி மருத்துவம்ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    r. jayanandan says:

    “ஆச்சி – தாத்தா ” , மனதை நெருடி சென்றது. உண்மைதான். இன்றைய, இயந்திர வாழ்க்கையில், உறவுகளை மறந்தோம். அன்பின் பிடியில் வளர்த்தெடுத்த, தாத்தா – பாட்டிகளைக்கூட பார்த்து குசலம் விசாரிக்க நமக்கு நேரம் கிட்டுவது கிடையாது. ஆனால், கைப்பேசியில் ஒரு மணி நேரம் கூட, பொருளாதார லாபத்திற்கு கதைக்க நேரம் உண்டு.

    வாழ்வின் ஆணி வேர்களை மறந்து, எந்த மரம் செழித்தோங்கும்.

    – ஜெயானந்தன்.

  2. Avatar
    இராய செல்லப்பா says:

    சோம அழகு எழுதியுள்ள இந்தக் கதை /கட்டுரை, மூன்று தலைமுறைகளின் குடும்ப நாவலாகும் அளவுக்கு நிகழ்ச்சிகள் நிரம்பியதாக இருக்கிறது. ஒரு குழந்தைக்குமேல் பெறாமல் இருக்க விரும்பும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இது போல எண்ணிப்பார்க்கத்தக்க வாழ்க்கை இனி அமையுமா? இவர்கள் இழந்துகொண்டிருப்பது மிக அதிகம்தான். சோம அழகு இன்னும் இதுபோன்ற வாழ்வியல் காட்சிகளை எழுத்துப்படுத்தவேண்டும்.

    – இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

  3. Avatar
    அன்னம் says:

    ஆச்சி-தாத்தா உறவுகளின் அருமையை சொல்லோவியமாக வடித்த நடை உள்ளத்தைத் தொடுகின்றது. “உலகின் அத்தனை முதியவர்களும் எதிர்ப்பார்ப்பது/ஆசைப்படுவது – “எப்படி இருக்கீங்க?”, “சாப்பிட்டீங்களா?” போன்ற ஒற்றை வரிக் கேள்விகள், கனிவான விசாரிப்புகள், நம்முடைய சில மணித்துளிகள். இவை போதும் முதியவர்களின் ஒட்டு மொத்த பாரத்தையும் இறக்கி வைக்க.” என்பது இந்தத் தலைமுறை இளைய சமுதாயத்திலுள்ள ஒருவரிடமிருந்து சக இளைஞர்களுக்கு விடுக்கும் உளப்பூர்வமான அன்பு வேண்டுகோள்; வேலை-வேலை-பணம்-பணம் என்று ஓய்வு-ஒழிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்குமானது.

Leave a Reply to அன்னம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *