ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15

This entry is part 9 of 23 in the series 30 நவம்பர் 2014

இடம்: ரங்கையர் வீடு

உறுப்பினர்: ஜமுனா, மோகன்

நேரம்: மாலை மணி ஐந்து.

(சூழ்நிலை: ஜமுனா துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மோகன் வீட்டினுள் வருகிறான்.)

மோகன்: என்ன பண்ணிண்டிருக்கே ஜம்னா?

ஜமுனா: துணிகளை மடிச்சு வச்சுண்டிருக்கேன்!

மோகன்: மடிச்சு ஒரு பெட்டியிலே வச்சுக்கோ… பயணத்துக்கு ரெடியாயிடு.

ஜமுனா: உறுதி வந்துடுத்தா?

மோகன்: ஆமாம்.

ஜமுனா: எத்தனை மணிக்குப் பொறப்படணும்?

மோகன்: மாலை ஆறு மணிக்கு.

ஜமுனா: (கூடத்திலிருந்த கடிகாரத்தைத் திரும்பிப் பார்க்கிறாள்) மணி இப்போ அஞ்சு ஆறது. இன்னும் ஒரு மணி நேரத்திலயா?

மோகன்: ஆமாம்.

ஜமுனா: எங்கே போறோம்?

மோகன்: மெட்ராஸுக்கு.

ஜமுனா: மெட்ராஸுக்குப் போயி எங்க தங்கறது?

மோகன்: (கையிலிருந்த சாவி ஒன்றை உயர்த்திக் காட்டுகிறான்) இதோ பார், ஒரு ஃப்ரண்ட் ரூம் சாவி. அவன் கோடம்பாக்கத்திலே இருக்கான். பிஸினஸ் டூருக்காக நார்த் இண்டியா போறான். வர ரெண்டு மாசம் ஆவும். நம்ம விஷயத்தைச் சொன்னேன்! ரூம் சாவியைத் தூக்கிக் கொடுத்துட்டான்.

ஜமுனா: ரெண்டு மாசத்துக்கு அப்புறம்?

மோகன்: நம்மால ரெண்டு மாசத்திலே ஒரு சொந்த வீடு பார்த்துக்க முடியும்.

ஜமுனா: என்ன தொழில் செய்யப் போறீங்க?

மோகன்: ஒனக்கு எம்மேல முழு நம்பிக்கை வரல்லே ஜம்னா.

ஜமுனா: நம்பிக்கை வேற… விவகார ஞானம் வேறே.

மோகன்: நீ செய்யச் சொல்ற தொழில்.

ஜமுனா: அதையும் நான்தான் சொல்லணுமாக்கும்? உனக்கே தெரியாதா ?

மோகன்: நீ கரெக்டா சொல்லுவே! அதான் உன் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு.

ஜமுனா: உன் திறமை உனக்குத் தெரியனும். என் நம்பிக்கை வேலை தராது. உன்னை நம்பி நான் வர்ரேன்.

மோகன்: பிழைச்சிக் கிடலாம் என்னு துணிச்சல் இருக்கு.

ஜமுனா: அப்போ சரி. நான் பெட்டியிலே துணிமணிகளை எடுத்து வச்சுண்டு, கதவைப் பூட்டி பக்கத்து வீட்டு அம்பிகிட்டே சாவியைக் கொடுத்துட்டு வர்றேன். நீங்க எங்கே நிப்பேள்?

மோகன்: இரு… இரு… பெட்டியும் கையுமா நீ வெளியே கௌம்பினா பாக்கிறவா சந்தேகப்பட மாட்டாளா?

ஜமுனா: அப்போ ஒண்ணு செய்யறேன். பெட்டியை ‘பாக்’ பண்ணி வைக்கறேன். நீங்க ஒரு அரை மணி நேரத்திலே வந்து எடுத்துண்டு போங்கோ. நான் பின்னாடி வர்றேன். எங்கே வரணும்?

மோகன்: எவ்வளவு ‘கூலா’ கேக்கறே? நீ என்ன பண்ணப் போறே, எதை யெல்லாம் விட்டுட்டு என் பின்னாடி வரப்போறேண்ணோ யோசிக்கலியா?

ஜமுனா: நான் யோசிச்சாச்சு!

மோகன்: திடீர்னு ஒரு முடிவு பண்ணிப்பிட்டனேன்னு அப்பறம் நீ வருத்தப் படக் கூடாது.

ஜமுனா: நீங்க வருந்தாமே இருந்தா சரி.

மோகன்: ஒங்க அப்பாவை விட்டுட்டு வர நோக்கு மனசு எப்படித் துணியறது?

ஜமுனா: என்ன… என்னை டெஸ்ட் பண்றேளா?

மோகன்: டெஸ்ட் இல்லே. ஒன்னை இந்த சூழ்நிலை லேருந்து பிரிச்சுக் கூட்டிண்டு போறமேன்னு நேக்கு ஒரு பளு கனக்கறது.

ஜமுனா: அப்போ வேண்டாம்… விட்டுடுங்கோ.

மோகன்: என்ன ஜம்னா, இவ்வளவு லகுவாச் சொல்றே?

ஜமுனா: பின்னே? நான் ஒரு முடிவுக்கு வந்தாச்சு! என்னோட அப்பாவை மாத்த முடியாது. அது நேக்குத் தெரியும் மனசுக்குள்ளாற ஒருத்தரை வச்சுண்டு, பொறத்தியார் ஒருத்தரோட என்னால வாழ முடியாது. அதிலே என்னமோ ஒரு வெளிவேஷம் வந்துடும். கஷ்டமோ சுகமோ எந்த வேஷமும் போட்டுக்காம வாழ்ந்திடணும். சத்யமா இருந்துடணும்.

மோகன்: பின்னே நான் ஒன்னைக் கூட்டிண்டு போக இஷ்டமில்லேண்ணா விட்டுடுங்கறியே…

ஜமுனா: வேற என்ன சொல்லட்டும்? முன்னாடி யோசிக்க வேண்டியதை எல்லாம் பின்னாடி யோசிக்கறேள்! அப்பறமா நீங்க நெனச்சு நெனச்சு வருத்தப் படப் போறதுக்கு, இப்பவே ஒத்திகை பார்த்துக்கறேள்.

மோகன்: இல்லே ஜம்னா… நிச்சயமா நான் அப்புறம் எதுக்காகவும் வருத்தப்பட மாட்டேன். நீ ரெடியாயிரு. நான் ஒரு ஆட்டோவோட அரைமணி நேரத்திலே வர்றேன்! பெட்டியை முன்னாடியும் அனுப்ப வேண்டாம். பின்னாடியும் அனுப்ப வேண்டாம். ரைட் ராயலா நேரே கௌம்பு! ஆட்டோவிலேயே ஜங்ஷனுக்குப் போவோம்.

ஜமுனா: இப்பதான் ஒங்களுக்கு உறுதி வந்திருக்குண்ணு நெனக்கறேன்.

மோகன்: எப்படி வேணும்னாலும் நெனச்சுக்கோ நான் வரட்டுமா?

ஜமுனா: எப்போ வர்றேள்?

மோகன்: அரை மணி நேரத்திலே.

ஜமுனா: சரி, நான் ரெடியாயிருக்கேன் வாங்கோ!

(மோகன் வெளியேறுகிறான்)

(திரை)

[தொடரும்]

Series Navigationஅளித்தனம் அபயம்தொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டை
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *