ஆறாண்டு காலத் தவிப்பு –

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 29 in the series 19 ஜூலை 2015

பாவண்ணன்

பாரதியார் 11.12.1882 அன்று நெல்லையைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தார். 12.09.1921 அன்று சென்னையில் மறைந்தார். இன்னும் சில ஆண்டுகளில் அவருடைய மறைவு நிகழ்ந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிடும். அவருடைய பாடல்களையொட்டியும் வாழ்க்கையை ஒட்டியும் இன்னும் பல ஆய்வுகள் நிகழ்ந்தபடி உள்ளன. அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல முக்கியமான சம்பவங்களை யதுகிரி அம்மாள், வ.ரா., செல்லம்மாள், கனகலிங்கம், சகுந்தலா பாரதி, ஏ.வி.சுப்பிரமணி ஐயர், வ.சுப்பையா பிள்ளை, சீனி.விசுவநாதன், ரா.அ.பத்மனாபன், தொ.மு.சி.ரகுநாதன் போன்றோர் எழுதிய புத்தகங்கள் மூலம் அறிவதன் வழியாகவே அவருடைய வரலாற்றை நாம் தொகுத்துக்கொள்ளும் நிலையில் இன்று இருக்கிறோம். பாரதியாரைப்பற்றிய முழுமையான ஒரு வரலாற்று நூல் இன்னும் எழுதவேண்டிய நிலையில்தான் உள்ளது. பாரதியாரின் ஒட்டுமொத்தமான பாடல்களுக்கான ஓர் ஆய்வுப்பதிப்பே ம.ரா.போ.குருசாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக 1987 ஆம் ஆண்டில்தான் வெளிவந்துள்ளது. வரலாற்று நூலுக்கு இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?.
பாரதி கிருஷ்ணகுமாரின் ஆய்வுநூலாக சமீபத்தில் வெளிவந்துள்ள ’அருந்தவப்பன்றி சுப்பிரமணி பாரதியார்’ ஒரு முக்கியமான தகவலைக் கண்டறிந்து முன்வைத்திருக்கிறது. அவருடைய கவிதை வரிகள் வழியாகவே, அந்தத் தகவலை அவர் கண்டறிந்திருப்பதுதான் சுவாரசியமான செய்தி.
பாரதியாரின் தொடக்க காலக் கவிதைகளில் ஒன்று கவிதா தேவி- அருள்வேண்டல். ’வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி’ என்று தொடங்குகிறது அக்கவிதை. போகிற போக்கில் ‘பன்னாள் பன்மதி ஆண்டு பல கழிந்தன, நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே’ என்று எழுதிச் செல்கிறார் பாரதியார். நம்மில் பலரும் அக்கவிதையைப் படித்திருப்போம். ஆனால் நம் கண்களுக்குத் தென்படாத சுடரொன்றை கிருஷ்ணகுமார் அவ்வரியில் கண்டுவிட்டார். பல மாதங்களாக, பல ஆண்டுகளாக, தன்னோடு பழகிய காதலியைப் பார்க்காமல் இருப்பதாகத் துயரத்தோடு சொல்வதுபோல, கவிதையென்னும் காதலியைப் பார்க்காமலேயே பல காலம் ஓடிவிட்டது என்று வேதனை படரச் சொல்கிறார் பாரதியார். கவிதையில் தோய்ந்திருந்த ஒரு மனநிலை தன்னைவிட்டு அகன்றுவிட்டதான் உருவான மனபாரம் அவரை அழுத்துகிறது. கவிதை எழுத முடியாத மனநிலையில் தவித்துக் கிடப்பதை ஒருவித தன்னிரக்கத்தோடு நினைத்துக்கொள்கிறார். இப்படி யோசிக்கத் தொடங்கிய கிருஷ்ணகுமாரின் நெஞ்சில் உடனடியாக சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை ஆண்டுகள் கவிதை எழுத முடியாத வேதனையில் பாரதியார் இருந்தார்? வழக்கமாக கவிதைத்துறையில் ஈடுபடும் ஆர்வலர்களின் மன எழுச்சியும் வேகமும் தொடக்க காலத்தில் சூறாவளிக்காற்றைப்போல இருப்பதுதான் வழக்கம். உணர்ச்சிவேகமும் கற்பனையும் இரண்டறக் கலந்து பீறிட்டெழும் பருவம் அது. ஆனால் பாரதியின் வாழ்வில் அப்படி நிகழவில்லை. எழுதத் தொடங்கிய மொட்டுப்பருவத்திலேயே சில ஆண்டுகள் எழுத முடியாத ஒரு தவிப்பில் தத்தளித்திருக்கிறார். அந்த ஆண்டுகளில் பாரதியார் எங்கிருந்தார்? கவிதைத்தேவி அவரை விட்டு விலகும் முன்பாக எந்தக் கவிதையை கடைசியாக எழுதினார்? அவள் மீண்டு வந்ததும் எந்தக் கவிதையை முதன்முதலாக எழுதினார்? கவிதாதேவியைப் பிரிந்திருந்த ஆண்டுகளில் என்ன செய்துகொண்டிருந்தார்? இப்படியான சில கேள்விகளோடு அவரைப்பற்றி வெளிவந்துள்ள ஆய்வுநூல்கள் அனைத்தையும் ஒருமுறை வேகமாகப் படித்துப் பார்த்து விடை தேடத் தொடங்குகிறார். எந்த இடத்திலும் அதைப்பற்றிய ஒரு குறிப்பும் இல்லை என்றதும், தானே அதைக் கண்டறியும் தேடுதல் வேட்டையை தொடங்குகிறார். அவர் கண்டறிந்த தகவல்களின்ன் குறிப்பையே நூலாகத் தொகுத்துள்ளார்.
பாரதியாரின் மனத்துயரம் இக்கவிதையில் வெளிப்படுவதாக கிருஷ்ணகுமார் நினைத்துக்கொள்வதற்குக் காரணம், இக்கவிதையில் பாரதியார் பயன்படுத்தும் ஒரு நாட்டுப்புறக்கதை. ஒரு பன்றியைப்பற்றிய கதை அது. காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒரு முனிவர் ஒருமுறை ஒரு சாபத்துக்கு உள்ளாகிறார். சாபத்தின் விளைவாக அவர் பன்றியாக உருமாறிவிடுகிறார். அருந்தவம் செய்து வாழ்ந்த முனிவர் பன்றியாக உருமாறியதால் அவரை அருந்தவப்பன்றி என்று அழைக்க நேரிடுகிறது. பன்றியாக உருமாறுவதற்கு முன்பாக, தன் மகனை அழைத்து, தான் பன்றியாக உருமாறியதும் தன்னை ஒரு வாளால் வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். ஆனால் பன்றியாக உருமாறி அவர் ஓடுவதைப் பார்த்து, அவரை வெட்டிச் சாய்க்க வாளோடு அவருடைய மகன் பின்னாலேயே ஓடுகிறான். ஆனால் முனிவர் அவனைத் தடுத்து தன் பன்றி வாழ்விலும் சில இன்பங்கள் இருப்பதைக் கண்டுகொண்டதாகவும், சில மாதங்கள் கழித்து வந்து தன்னை வெட்டிக் கொல்லலாம் என்று சொல்லி அனுப்பிவைத்து விடுகிறார். காட்டுக்குள் அலையும் பன்றி தனக்கொரு துணையைத் தேடிக்கொள்கிறது. அதற்குக் குட்டிகள் பிறக்கின்றன. சில மாதங்கள் கழித்து மகன் மீண்டும் வாளோடு வருகிறான். அப்போதும் முனிவர் தன்னை வெட்ட இசைவதில்லை. தனக்கு அந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருப்பதாகவும் தன்னை வெட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்தோடு ஓடிவிடுகிறது. மேலான நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் சில நாட்களில் அந்தப் பொய்மையான வாழ்வில் விருப்பம்கொண்டு, அதிலேயே திளைத்துச் சுகம் காணத் தலைப்பட்டுவிடுகின்றனர் என்று நினைத்தபடி துயரத்தோடு காட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான் மகன். இந்தத் துயரமான கதையை தன் கவிதையில் விவரிக்கும் பாரதியார் அம்முனிவரைப்போல தானும் தன் நிலைதாழ்ந்து, இழிந்த பன்றியின் வாழ்வை வாழ்ந்ததாக ஒரு குறிப்பைத் தருகிறார். இந்த நிலைதாழ்ந்த வாழ்வின் காரணமாகவே கவிதை எழுத முடியாத சூழலில் சிக்கித் திணறியிருக்கவேண்டும் என்ற முடிவை அடைகிறார் கிருஷ்ணகுமார்.
தன் கேள்விக்கான விடையைத் தேடி, அதுவரை பலரும் எழுதி வெளிவந்திருக்கும் பாரதியார் வரலாற்று நூல்களையும் பாரதியார் பாடல்களையும் மீண்டும் படித்துப் பார்க்கிறார் கிருஷ்ணகுமார். அவருடைய பிறப்பு, இளமை, கவிதையாற்றல், தாயார் மறைவு, தந்தையின் மறுமணம், பாரதியாரின் காசி வாசம், தந்தையார் மறைவு என ஒவ்வொரு சம்பவத்தையும் தொகுத்து, ஒவ்வொன்றையும் ஒரு தர்க்கத்தின் அடிப்படையில் அலசிப் பார்க்கிறார். சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளும் வரலாற்றுக் காட்சிகள் வழியாக, அவர் தன் ஆய்வை மேற்கொள்கிறார்.
பாரதியாரின் தந்தை எட்டயபுரத்திலேயே ’எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பேக்டரி லிமிட்டெட்’ என்ற பெயரில் ஒரு நூற்பாலையை உருவாக்கினார். பங்கு ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் இருநூறு பங்குகளை விற்று மூலதனத்தைத் திரட்ட முயற்சி செய்தார். எட்டயபுரம் மன்னர் ஐம்பது பங்குகாளை வாங்கி, அவருக்கு உதவினார். ஆனால் ஆலைக்காக வாங்கிய வெளிநாட்டு இயந்திரத்தை துறைமுகத்திலிருந்து எடுத்துவரவே முடியவில்லை. ஏகப்பட்ட சட்டச்சிக்கல்களில் அகப்பட்டுக்கொண்டார். ஆலை தொடங்கப்படாமலேயே மூடப்பட்டு விட்டது. இயங்காத ஆலையில் முதலீடு செய்த செல்வமனைத்தும் போய்விட்டது. அவர் குடும்பம் வறுமை நிலைக்குச் சரிந்தது. அந்நிய ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நட்பும் சுற்றமும் விலகிவிட்டது. பங்குத்தொகையாகக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கவில்லையே தவிர மன்னரின் ஆதரவையும் கிட்டத்தட்ட அவர் இழந்துவிட்டார்.
அப்போது திருநெல்வேலியில் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் பாரதியார் படித்துக்கொண்டிருந்தார். 1895ஆம் ஆண்டுக்கும் 1898ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் அது. அவருடைய படிப்புச் செலவுக்குக்கூட அவர் தந்தையாரால் பணம் அனுப்ப இயலாத சூழல். அதனால் பாரதியாரே நேரிடையாக மன்னரிடம் உதவி கேட்க முற்பட்டார். 1897 ஆம் ஆண்டில் மன்னருக்கு ஒரு கவிதைக்கடிதம் எழுதி அனுப்பினார். மன்னரை வியந்து போற்றிப் பாராட்டித் துவங்கும் அக்கவிதை அறுபத்திநான்கு வரிகளைக் கொண்டது. ஆனால் அவர் பெரிதும் எதிர்பார்த்த உதவி, கடைசிவரைக்கும் கிடைக்கவில்லை. எதிர்பாராத விதமாக 1898 ஆம் ஆண்டில் அவர் தந்தையார் மறைந்துவிட்டதும், கல்வியைத் தொடரும் பொருட்டு, அவர் தன் அத்தை வீடு இருந்த காசிக்குச் சென்றார். தான் மரணமடைவதற்கு முன்பாக, அந்தக் கால வழக்கப்படி ஏழு வயதே நிரம்பிய செல்லம்மாவை அவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார். காசிக்குப் புறப்படும் முன்பாக, குடும்பத்தின் வறுமையைப் போக்க, ஒரு சில மாதங்கள் அரண்மனையில் பணிபுரிந்தார் பாரதியார். வறுமை சற்றே குறைந்த நிலையில் பாரதியார் மீண்டும் கவிதா தேவியைத் தேடிச் சென்றபோது, அவளோ அவரைவிட்டு மறைந்துபோய்விட்டாள். அவரால் எதுவும் எழுதமுடியவில்லை. அந்தத் துக்கம் அவரை வாட்டியெடுத்தது. ‘‘மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்; பாதகீ! நீ என்னைப் பிரிந்து மற்று அகன்றனை’ என்று துயரம் தோய்ந்த வரிகளில் அந்த அனுபவப்பதிவை உணர முடிகிறது. இதற்குப் பிறகுதான் அவர் காசிக்குச் சென்றார்.
காசியில் படித்துமுடித்து தங்கியிருந்த வேளையில் தற்செயலாக அங்கே போயிருந்த எட்டயபுரம் மன்னர் அவரை நேரில் கண்டு ஜமீனுக்குத் திரும்பி வந்துவிடும்படி அழைத்தார். அதைத் தட்டமுடியாத பாரதியார் மறுபடியும் எட்டயபுரத்துக்கு வந்தார். அந்த அரண்மனை வேலை சில மாதங்களிலேயே அவருக்குக் கசந்துவிட்டது. அங்கிருக்க அவர் மனம் ஒப்பவே இல்லை. அப்போதுதான் 1904 ஆம் ஆண்டில் மதுரை சேதுபதி பள்ளியில் ஓர் ஆசிரியர் விடுப்பில் சென்றதால் உருவான காலி இடத்தைப்பற்றிய செய்தி கிடைக்க, உடனே சிறிதும் தாமதிக்காமல் அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். வேலை கிடைத்ததும் உடனே சென்று சேர்ந்துவிட்டார். ஏறத்தாழ 102 நாட்கள். விடுப்புக் காலம் முடிந்ததும் பணியிலிருந்து அவர் விலகவேண்டியதாகிவிட்டது. அதைத் தொடர்ந்து சென்னைக்குச் சென்று சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியை ஏற்றுக்கொண்டார். இதற்குப் பிறகே கவிதாதேவி தன்னை நெருங்கியதாக உணர்ந்தார் பாரதியார்.
எழுத முடியாமல் இருக்கும் துன்பத்தை படிப்பவர்களின் மனம் கரையும்வண்ணம் குறிப்பிட்டிருக்கிறார் பாரதியார். அவர் அடுக்கடுக்காகப் பயன்படுத்தும் உவமைகள் அவர் மனநிலையை உணர்த்துகின்றன. ஒளியில்லாத வாள்போல, உவகையற்ற முகம்போல, சுதந்திரம் இழந்த தொண்டர்கள்போல, சத்தியம் மறந்த ஒரு சாத்திரக்குப்பைபோல, இடையறாது இருண்டு, இழிந்து கிடந்தது தன் வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் உன் அருள் எனக்குக் கிடைக்கவில்லையெனில் மடிந்துபோவேன் என்றும் எழுத அவர் தயங்கவில்லை. உலகப்புகழ் பெற்ற சாகுந்தலம் என்னும் நாடகத்தை வடமொழியில் எழுதிய காளிதாசன், சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ, இராமகாதையை எழுதிய கம்பர் ஆகியோருக்கு உனது நெஞ்சம் முழுதையும் அள்ளிக் கொடுத்ததுபோல அள்ளிக்கொடுக்கவேண்டும் என்று கூட கேட்கவில்லை, மெல்லிய கனிவான ஒரே ஒரு சொல்லை எனக்கு நீ அருளினாலேயே போதும், உனது குளிர்ந்த மலர்விரல்களால் என் தலையை வருடினால் போதும், அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு நான் வாழ்ந்துவிடுவேன். எளியவனான நான் மீண்டும் உன்னிடம் ஆட்பட, அருள்கூர்ந்து வந்து நெருங்கியிருக்கவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார். மன்றாடும் அந்த வரிகளுக்கு கல்லையும் கரைக்கும் சக்தி உள்ளது. கனவு என்று தலைப்பிட்டு அவர் எழுதிய சுயசரிதையில் கூட, தந்தையின் மரணம் வரைக்கும் மட்டுமே எழுதியிருக்கிறார். அவர் தொடர்ந்து காசி வாழ்க்கையைப்பற்றியும் எழுதியிருந்தால், இந்தத் தவிப்பைப்பற்றியும் எழுதியிருக்கக்கூடும்.
பாரதியார் கவிதைகள் எதுவும் எழுதாமல் தத்தளித்தபடி இருந்த காலம் ஏறத்தாழ ஆறாண்டுகள். அதற்குக் காரணம் வறுமையும் துயரமும். வறுமை காரணமாக தான் ஒரு புன்தொழில் செய்ய நேர்ந்ததையும் அதன் விளைவாக கவிதாதேவி தன்னைவிட்டு விலகியதையும் ஒளிவுமறைவின்றி வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார் பாரதியார். கவிதையின்றி வாழ்ந்த அந்த வாழ்க்கையை ஓர் இழிந்த பன்றியின் வாழ்க்கைக்கு ஒப்பிடுகிறார்.
எழுத முடியாமல் தவித்த பாரதியாரின் இருண்டகால ஆறாண்டு கால வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும்வகையில் சுயசரிதைத்தன்மை உள்ள படைப்புகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து இந்த நூலின் இரண்டாம் பகுதியில் கொடுத்துள்ளார் கிருஷ்ணகுமார். எட்டயபுர மன்னருக்கு எழுதிய கவிதைக்கடிதம், தனிமை இரக்கம் என்னும் கவிதை, கவிதா தேவி – அருள்வேண்டல் என்னும் கவிதை, அரைகுறையான சுயசரிதை, எட்டயபுரத்து வாழ்க்கையை பகடி கலந்த நடையில் சொல்ல முயற்சி செய்து முற்றுப்பெறாத படைப்பான சின்னச் சங்கரன் கதை அனைத்தும் அடுத்தடுத்து உள்ளன. அவை அனைத்தும் கிருஷ்ணகுமார் கண்டடைந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உள்ளன. தற்செயலான ஒரு வாசிப்பின் கணத்தில் மனத்தில் எழுந்த ஒரு பொறியின் வெளிச்சத்தில் கிருஷ்ணகுமார் இவ்வளவு தொலைவு பயணம் செய்து, இதுவரை யாருடைய கவனத்திலும் படாத பாரதியார் வாழ்வின் ஒரு பகுதியின்மீது படும்படி செய்துவிட்டார். அவருடைய பணியை தமிழுலகம் தாராளமாகப் பாராட்ட வேண்டும்.

(அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதியார்- பாரதி கிருஷ்ணகுமார், 7/4 ஏழாவது தெரு, தசரதபுரம், சாலிகிராமம், சென்னை- 93. விலை. ரூ.200 )

Series Navigationமணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வுவாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    கவிதை எழுதா மனநிலை இருந்தால் கூட அதைக் கவிதையிலேயே எழுதக் கூடிய பாரதியார் ஆறாண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார் என்று கூறுவது அவருக்கே இழுக்காகும்

Leave a Reply to valavaduraiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *