ஆலிங்கனம்

This entry is part 8 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி வைத்து விட்டுப் போவார்கள். அதையும் அவர் தொடமாட்டார்தான். ஆனால் வாழ வேண்டிய மகன் பசியில் துடிப்பானே என்று எண்ணி எடுத்துக் கொள்வார். கொடுப்பது யாரென்று தெரிந்தால் தான் யாசகம். தெரியாத போது இறைவன் கொடுத்ததாக இருக்கட்டும் என எண்ணிக் கொள்வார்.

வீட்டின் முன் இருந்த ஒரே மாமரத்தின் பருத்த அடிபாகத்தில் கட்டப்பட்டுக் கிடக்கும் வேதா மாடு. விடியல் சிவப்பும் வெள்ளையும் கலந்த தோலுடன் அம்சமாகக் காட்சி அளிக்கும் அது. தினமும் குளித்து, அதை ஒரு முறை சுற்றி விட்டுத்தான் மற்ற காரியமே சாஸ்திரிகளுக்கு. அவரைப் பொருத்தவரை வேதா ஒரு காமதேனு. எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்கிற நம்பிக்கை. பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் தேவாதி தேவர்கள் வசிப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அதன் கோமியம் தான் வீடு சுத்தி. சாணம்தான் வரட்டி. பால்தான் ஆகாரம். வேதாவுக்கும் யாசகம் கேட்காமலே புல்லுக்கட்டு யாராவது போட்டு விடுகிறார்கள்.

ஒற்றைப் பனைமரம் போல் நிர்கதியாக நிற்கும் சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலும் ஒரு சோதனை வந்தது. நாற்கர சாலை வரப்போகிறதாம். அரசு அவர் வீட்டைக் கேட்டது. மாவட்ட ஆட்சியாளர் புண்ணியவான். மேலிடத்தில் சொல்லி, கோயில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அவர் வேலை பார்த்து வந்த சிவன் கோயிலும் சிதிலமாகி இடிந்தே போனது. அதனால் வருமானமும் முடங்கிப் போனது.

0

சாம்பசிவ குருக்கள் அந்த ஊருக்கு வந்த போது பதினாறு வயசிருக்கும். போளுர் கிராமத்திலிருந்து, அவருடைய அப்பாதான் அவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மாட்டு வண்டியில் இருவரும் வந்தது இன்னும் அவருடைய ஞாபகத்தில் நிற்கிறது. ஒத்தை மாட்டுவண்டி. வெள்ளை நிறம், வெய்யில் மழையில் கொஞ்சம் மங்கி மாநிறமாக இருந்தது அந்த மாடு. ஆனால் அதன் கொம்பு வெகு ஜோர். சும்மாவா சொன்னார்கள் மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்று. எப்பவோ கிடைத்த வர்ண மிச்சங்களை, அந்த மாட்டு வண்டிக்காரன், அவன் ரசனைக்கேற்ப, அதன் கொம்புகளில் தடவியிருந்தான். தேர்ந்த வேலையாக இல்லாவிடினும், அது அந்த மாட்டுக்கு அழகு சேர்த்திருந்தது. அதன் கழுத்தைச் சுற்றி அவன் கட்டியிருந்த மணி வண்டியின் ஓட்டத்திற்கு ஏற்றார்போல் ஒலித்துக் கொண்டிருந்தது. செம்மண் பாதையில் வண்டி போன போது சுற்றிலும் பசுமையான வயல்கள் கண்ணுக்கு இதமாக இருந்தன.

0

சாம்புவிற்கு அவருடைய அப்பா சின்ன வயசிலிருந்தே தேவாரம், திருவாசகம் போன்றவற்றையெல்லாம் முறையாக பயிற்சி கொடுத்திருந்தார். சின்ன வயசிலிருந்தே அவருக்கு முருகன் மேல் அளவிடமுடியாத பக்தி. கந்த புராணக்கதைகளை கேட்டவாறே, அம்மா சாதம் ஊட்டியதும் கொஞ்சம் பெரியவனானதும், கோயிலில் நடக்கும் கதாகாலட்சேபங்களுக்கும் போனதும், அவருக்கு முருகன் மேல் அபார பிரியத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. ஓரளவுக்குமேல் படிக்க வைக்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக, அவரும் வேலை தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலை செய்வதாக இருந்தால் அது முருகன் கோயிலில்தான், முருகன் காலடியில்தான், என்று ஒரு ஆசையை வைராக்கியமாகவே அவர் வளர்த்துக் கொண்டிருந்தார். சாம்புவைப் பிரிய அவருடைய அப்பாவிற்கு மனமில்லைதான். ஆனாலும் அவர் இருந்த போளூரில் ஒரே ஒரு சிவன் கோயில் தான் இருந்தது. அதில் தான் அவர் அர்ச்சகராக இருந்தார். அவருக்குப் பிறகு சாம்புவிற்கு அந்த வேலை கிடைக்குமென்றாலும் சாம்புவிற்கு அதில் விருப்பமில்லை. அதனால்தான் இந்த மாட்டுவண்டி பிரயாணம்.

0

பொன்னேரி பக்கத்தில் ஒரு முருகன் கோயில் இருப்பது அவருடைய உறவினர் ஒருவர் மூலமாக தெரிய வந்திருந்தது. அந்தக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்தில்தான் அவரும் சாம்புவும் இப்போது இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். மெயின் ரோட்டிலிருந்து அந்தக் கிராமத்துக்குச்செல்ல ஒரு செம்மண் பாதை அமைத்திருந்தார்கள். அந்த செம்மண் பாதையின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டிருந்தது.

ஆண்டார்குப்பம் முருகன் கோயிலுக்கு செல்லும் வழி என்று யாரோ ஒரு முருக பக்தனான பெரும்புள்ளி அமைத்த வளைவு அது.

ஒரு டீ கடையும், ஒரு மளிகைக் கடையும் அதனருகில் இருந்தன. வழி நெடுக வேறு எந்தக் கடையையும் காணவில்லை.

0

பாதையில் கொஞ்ச தூரம் போன உடனேயே முருகன் கோயில் கோபுரம் பிரம்மாண்டமாகத் தெரிந்தது. மாட்டுவண்டியைப் பார்த்த உடனேயே கோயில் தர்மகர்த்தா வெளியே வந்தார். விவரம் சொன்னவுடன் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

கோயிலில் அப்போது அவ்வளவாக கூட்டம் இல்லை. ஓரிரண்டு பேர்தான் இருந்தார்கள். முருகன் சந்நிதிக்கு உள்ளேயே அழைத்துச்சென்றார் அந்த தர்மகர்த்தா. முருகன் சிலை ஆறடி உயரம். கையில் வேல். சிலை மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தது. சாம்பு வைத்த கண் வாங்காமல் முருகனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் அந்த முருகனிடம் அவருக்கு ஒரு லயிப்பு ஏற்பட்டுவிட்டது. இனி என் காலம் இந்த முருகனோடுதான் என்று அந்த கணமே தீர்மானித்துவிட்டார். கண்ணை மூடிக்கொண்டு கணீர் குரலில் திருப்புகழை அவர் பாட ஆரம்பித்தது அந்தக் கோயிலின் நாற்புற சுவர்களில் மோதி திரும்பவும் முருகனையே சரணடைந்தது. ஊரில் உள்ளவர்களுக்கு இந்தப் பாடல் மந்திர இசையாக மாறியது. அவர்கள் கவனம் முழுவதும் கோயில் பாலும் அந்தக் குரலின் பாலும் திரும்பியது. சாம்பு கண்ணைத் திறந்த போது அவரைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே நின்றிருந்தது.

0

பின்னர் தர்மகர்த்தா வீட்டில் காபியும் சிற்றுண்டியும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் புறப்படும்போது அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. சாம்பு எதிர்பார்த்ததுதான். தர்மகர்த்தாவின் விருப்பமும், ஊர் ஜனங்களின் விருப்பமும், ஒன்றாக இருக்க சாம்பு அடுத்த வாரத்திலேயே அந்தக் கோயிலில் அர்ச்சகராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கப்புறம் பதினைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. நடுவில் சாம்புவுக்கு கல்யாணம் நடந்தது. அது நடந்தே பத்து வருடங்கள் ஓடிவிட்டன. தேவிகா சாம்புவைக் கட்டிக் கொண்டு வந்த நாள் முதலே எதையும் எதிர்பார்க்காதவளாக ஆகிப் போனாள். அவளூக்கென்று அபிலாஷைகள் கிடையாது. சாம்புவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே அவள் கடமையாகக் கொண்டாள். மாட்டுச்சாணத்தில் திருநீறு செய்வதும், சாம்புவின் உடைகளைத் துவைத்து உலர்த்துவதுமாக அவள் பொழுது கழிந்தது. மடிசாரில் அவளும், பஞ்சகச்ச வேட்டியில் சாம்புவும் வெளியே விசேசங்களுக்குப் போகும்போது, ஊர் மக்கள் முருகனை மறந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தேஜஸ் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அவர்களுக்கு வாரிசில்லை என்பதுதான் சதாசிவ சாஸ்திரிகளுக்கு இருந்த ஒரே குறை.

0

அப்பா சதாசிவ சாஸ்திரிகள், வேதா மாட்டைப் பிரிய முடியாமல், போளூரிலேயே தங்கிவிட்டார். அவர் போய் சேர்ந்து, போனவருடம் ஆப்தீகம். அவர் போன அடுத்த நாளே வேதா மாடும், எதையும் உண்ணாமல் உயிர் நீத்தது அதிசயம். வேதாவின் வாரிசுகள் வளர்ந்து, இன்னமும் போளூர் நிலங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். சாம்பு முதன்முதலில் ஏறிக் கொண்டு வந்த மாட்டுவண்டியை இழுத்தது, வேதாவின் மகன் குமரன் தான். குமரன் இன்னமும் சாம்பு வீட்டில்தான் இருக்கிறான்.

0

இந்த பதினைந்து வருடங்களில் கோயிலும் மாறித்தான் போய்விட்டது. இப்போது அந்தக் கோயில் அரசின் அறநிலையத்துறையின் கீழ் வந்துவிட்டது. கோயிலின் சொத்துக்கள் சரிபார்க்கப்பட்டு அதன் வருமானம் கணக்கெடுக்கப்பட்டது. சாம்புவுக்கு ஒரு வீடும் அரசு தந்திருந்தது. கோயில் நிலத்தில் சாகுபடியாகும் நெல் மாதத்திற்கு பதினைந்து படி அவருக்கு கொடுக்கச் சொல்லி அரசு ஆணை இருந்தது. சமீபத்தில் அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் கூட நடந்தது. ஆறு கால பூஜை , விஷேச அர்ச்சனை, சிறப்பு வரிசை என்று கோயில் பிரபலமாகிவிட்டது.

0

இந்தக்கோயிலில் பதினாறு வயது சிறுமியாக வேலைக்கு வந்தவள் தான் கண்ணம்மா. அவள் புருஷன் அந்தக் கோயிலில் வாட்சுமேனாக இருந்தான். அவனைக் கல்யாணம் செய்துகொண்டு, இந்த ஊருக்கு வந்தவள்தான் அவள். பிள்ளை பிறப்பிற்குக்கூட அவள் அம்மா வீட்டிற்கு போகவில்லை. சாம்புவுக்கு காலை பூஜைக்கு பூ பறித்துக் கொடுப்பதிலிருந்து, அபிஷேகத்திற்கு தண்ணீர் கொண்டுவருவது வரை அவள் வேலை. மிச்ச நேரம் கோயிலைக் கூட்டி சுத்தம் பண்ணுவதும், அவள் வேலைதான். அவள் மகள் வள்ளி, அம்மாவுடன் கூட வருவாள். முருகன் மீது அவளுக்கு அலாதி பிரியம். தெப்பக்குளத்தில் மீன்களுக்கு போடுவதற்காக, பக்தர்கள் வாங்கும் பொர் பொட்டலங்களில் உள்ள முருகன் படங்களையெல்லாம், அவள் சேகரித்து வைத்திருப்பாள். சத்துணவைக் காரணம் காட்டி, கண்ணம்மா அவளை அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்த்திருந்தாள். அங்கும் அவளுடைய நோட்டுப்புத்தகங்களெல்லாம் முருகன் படம் போட்டதாகவே இருக்கும். அவளுக்கு இப்போது பதினாறு வயது. “உன்னிய கட்டிக்க எந்த முருகன் வரப்போறானோ” என்று கண்ணம்மா அங்கலாய்ப்பாள்.

“வேறெந்த முருகன் வருவான். இந்த முருகன்தான் வருவான்” என்று வள்ளி பதில் சொல்லுவாள்.

0

சாம்புவின் குரல் கேட்கும்போதெல்லாம், வள்ளி கோயிலுக்கு ஓடோடி வந்துவிடுவாள். சிறுமியாக இருக்கும்போதே, அவள் சாம்புவின் குரலுக்கும், திருப்புகழுக்கும் பழக்கப்பட்டிருந்தாள். இரவு ஒலைக் குடிசை வெளியே, கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி அவள், அந்த பாடல் வரிகளை, நினைவுக்கு கொண்டு வந்து திரும்பப் பாடிப்பார்ப்பாள். செந்தமிழ், நாப்பழக்கத்தால் அவளுக்கு வசமாகியது. பாடப்பாட குரலும் இனிமையாயிற்று. இப்போதெல்லாம் சாம்புவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் வள்ளிதான் பாடுகிறாள். அவளுக்கும் கூட்டம் சேர்கிறது. தினமும் மலர் மாலை ஒன்று அவள் கையாலேயே கோர்க்கப்பட்டு கோயிலுக்கு வந்துவிடும். முருகனுக்கு அணிவிக்கப்படும் முதல் மாலை அதுதான். வீட்டுக்கு விலக்காகி நிற்கும் நாட்களில், கண்ணம்மாவே மாலையைக் கொண்டு வந்து தந்துவிடுவாள். அப்போதும் வள்ளி திருப்புகழ் பாடுவதை நிறுத்த மாட்டாள். ஆனால் அவள் எதிரில் முருகன் இருக்க மாட்டான். வேதா மகன் குமரன் இருப்பான்.

0

கண்ணம்மா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். வள்ளி மறுத்துப் பேசி தோற்றுப் போனாள். ஆடிக் கிருத்திகை அன்று, கோயிலில் கூட்டம் அலை மோதியது. வள்ளியின் முதல் மாலைக்காக சாம்பு காத்திருந்தார். அதோ வள்ளி வந்துவிட்டாள்.

0

அவள் கையில் பெரிய மாலை. மூருகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுவந்த வள்ளி, ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல் காணப்பட்டாள். சாம்பு மாலையை வாங்க கை நீட்டினார். வள்ளி அவரையும் தாண்டி சந்நதிக்குள் நுழைந்தாள்.

அவள் கையாலேயே முருகன் கழுத்தில் மாலை போடப் போனாள். சாம்புவுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. அவளைத் தடுக்கும் நோக்கத்துடன், இடையில் புகுந்தார். கண்களைத் திறந்த வள்ளி திகைத்துப் போனாள். அவள் கொண்டுவந்த மாலை இப்போது சாம்புவின் கழுத்தில் இருந்தது. முருகன் கை வேல் லேசாக அசைந்தது போலிருந்தது அவளுக்கு. அடுத்த கணம் அவள் சாம்புவின் காலடியில் இருந்தாள். சாம்பு அவள் தோள்களைத் தொட்டுத் தூக்கினார். அவளைத் தாங்கிக்கொண்டே வெளியே நடந்தார்.

0

கோயில் வாசலில் ஒரு வேனில் வந்திறங்கிய பக்தர்கள் கூட்டம் ஒன்று ‘ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்றது.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு சாம்பு நடந்து கொண்டிருந்தார். அவரது அணைப்பில் வள்ளி. முருகன் திருக்கல்யாணத்தைப் பார்த்த பரவசம் பக்தர்களுக்கு.

வீட்டில் பிரளயம் வெடிக்கப்போகிறது என்று ஊர் முழுக்கப் பேசிக்கொண்டார்கள்.

வீடு வந்ததை உணர்ந்து சாம்பு நிமிர்ந்து பார்த்தார். கண்ணம்மா கண்களில் நீர் பொங்க, புடவையால் வாய் பொத்தி அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.

வாசலில் நெற்றி நிறைய குங்குமத்துடன், வாய் நிறைந்த புன்னகையுடன் தேவிகா நின்றிருந்தாள். அவள் கையில் ஆரத்தி தட்டு இருந்தது.

0

Series Navigationகையோடு களிமண்..!எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    லக்ஷ்மி பாலகிருஷ்ணன் says:

    சிந்து பைரவி படக்கதையில் கர்நாடக சங்கீதத்துக்கு பதில் திருப்புகழ்னு மாத்தி ஒரு புது கதை உருவாக்கின டெக்னிக் சூப்பர். அடுத்தடுத்த பாகங்கள் எப்ப வரும்னு ஆவலோட காத்திருக்கோம்.

  2. Avatar
    தி.தா.நாராயணன் says:

    தெளிந்த நீரோடை போல சிறப்பான நடை.பொறுமைத் திலகமாய் தேவிகா பாத்திரம்.முடிவு..?ஏற்கவில்லை.எப்படி பூ சுத்தினாலும், விஷயம் இதுதான். அய்யர் சின்னப் பெண்ணை அமுக்கிட்டார். இப்படித்தான் தோணுது.சாரி.

  3. Avatar
    jayashree shankar says:

    அன்பின் சிறகு இரவிச்சந்திரன்,

    முருகன்…தெய்வானை….வள்ளி….
    இவர்களின் திருமணத்தை மறுபடி
    பார்த்த மாதிரி இருந்தது….நல்ல
    தெய்வீகமான கதை….கந்தன் கருணை..
    வேதாவுக்கும் உயிர் கொடுத்து….
    வளைய வர விட்டது…அழகு..!
    சதாசிவ சாஸ்திரி பிரிந்த பிறகு..
    வேதா உயிர் விட்டது…அழுத்தம்..
    ஒரு கிராமத்துக்குள் சென்று..
    முருகன் கோவிலுக்குள் பிரவேசித்து..
    முருகன் அருள் பெற்ற திருப்தி.
    நன்று
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *