ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

author
0 minutes, 3 seconds Read
This entry is part 20 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8

1               drpanju49@yahoo.co.in

ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இதற்குப் புலம்பெயர் வாழ்க்கை தந்த கூடுதலான் வாய்ப்புக்கள் ஒரு காரணம்.இத்தகைய வாய்ப்பைப் பெற்ற ஒரு கவிஞர் ஆழியாள்.ஆனால் ஆழியாள் கவிதை பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் போல் இல்லை என்பதை முத்ல் வாசிப்பிலேயே உணர முடிந்த்து.பல்வேறு ஈழப் பெண் கவிஞர்களின்`ஒலிக்காத இள்வேனில்` என்ற தொகுப்பிற்குக் ”காக்கையில்” மதிப்புரை எழுதும் போதே இவரின் கவித்துவத் தனிமையை அடையாளம் கண்டுகொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இவருடைய`உரத்துப் பேச`,துவிதம்`ஆகிய தொகுப்புக்களையும் வாசிக்க வேண்டுமென உறுதி செய்துகொண்டேன்.அதற்குள் இந்தக் கருநாவு` கைக்குக் கிடைத்து விட்ட்து.பட்டினி கிடந்த தெருநாய் போல மோப்ப வெறியோடு வாசிக்கத் தொடங்கினேன்.பிடிக்குள் அடங்காத பெருவெளியாய் இவர் கவிதைகள் எனக்குள் விரிந்துகொண்டேபோகின்றன.அந்த அளவிற்கு உருவகம்,படிம்ம், குறியீடு எனக் கவிதை தன் கருவியான மொழியைத் தாண்டி `வெளியில்`அலைவுறு பொருளாகச் சுழலுகிறது.பொருளாகச் சுழலுகிறது என்று கூடச் சொல்ல முடியாதவாறு ஒரு பொருளாய்க் கூடிவிடாத படித் தன்னைத்தானே கலைத்த வண்ணம் அலைகின்றதாக இயங்குகிறது முதல் கவிதையான அம்மாவை எந்தப் பொருளுக்குள் அடக்க முடியும்?தார் வீதி. கொடும்பனி வீதி என ஓய்வு இல்லாமல் உலகம் முழுவதிலும் உன்னையும் என்னையும் பார்த்தபடிக் கையசைத்த வண்ணம் புன்னகைத்து ஓடிக்கொண்டே இருக்கிறாள்.இந்த அம்மாவை எப்படி உள்வாங்குவது.?அம்மாவைச் சுற்றிப் புனையப் பட்டிருக்கும் அனைத்தும் நம்மைச் சுற்றுகின்றன.அன்பு, கருணை, தியாகம், இன உற்பத்தி.முதலிய பலவும் முன்னே வந்து நிற்கின்றன.சரி,ஓடிக் கொண்டே இருக்கிறாள்.அவளை எப்படி,எதனால்,எதற்குள் பிடிப்பது? இப்படி வாசகனையும் ஓடவிடுகிறது கவிதை.இந்நிலையில் கவிதை வாசிப்பு என்பதும் பிடிமானம் எதுவும்ற்ற அந்தரத்தில் மிதப்பதாக நிகழ்கிறது.இந்தக் கவிதை அனுபவத்தைப் பிரித்தெடுப்பதும் அதை மொழிப்படுத்த முயல்வதும்.சிரம்மான ஒன்றாகிவிடுகிறது.அதைத்தான் இங்கே செய்துகொண்டிருக்கிறேன்..

11

பொதுவாகப் பேரினவாத்த்தாலும் குறுங்குழுவாத்த்தாலும் நடந்த வன்முறைகளை, புலம்பெயர் வாழ்வின் ஏக்கங்களை, ஏமாற்றங்களை எழுதுவதுதான் பெருவழ்க்கு. ஆனால் ஆழியாள் அந்தக் கொடூரங்களுக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு தன் மனமெனும் பேரண்ட்த்திற்குள் பாய்ந்து பரவும் நுண்ணுணர்வுகளை அவதானித்து அவைகள் த்ன் மொழிக்குள் வந்து குந்துவதை நமக்குத் தருகிறார்.ஆழமான அவருடைய ஆங்கிலமொழி, இலக்கியக் கல்வியும் துணைசெய்திருக்குமெனத் தோன்றுகிறது.இப்படி எழுதுகிறார்:

”.எவ்வளவு தவிர்த்தும் சில கவிதைகள் இனம் புரியாதஒரு உந்துதலை,எழுத்தில் பதிவத்ற்கான பிரயத்தனத்தை ஆர்முடுகல் மனோநிலையை மீண்டும் மீண்டும் என்னுள் ஏற்படுத்துகின்றன.”

இந்தப் பண்புதான் இவர் கவிதைகளுக்குள் தனித்தன்மையை ஏற்றுகின்றன.இந்த்க் கவிதையைப் பாருங்கள்:

ஆமாம்!

தொடர்பும்,தொடர்பறுந்த வசன்ங்களும்

விளையும் மனதை,

படிமங்களும்,சித்திரங்களும்

யோசனைகளும்

உரையாடலும் எண்ணங்களும் உதிக்கும்

மனதை,

இசையும் அதிர்வுகளும்

தாளமும்,பாடல்களும் சேர்த்துக் கேட்கும்

மனதை,

வண்ணக் கலப்புகளும், வரிவடிவங்களும்

காட்சிகளும்

குரல்களும் கலக்கும் மனதை,

ரசனையும்.நிறங்களும்

ஒளித்தெறிப்புகளும் மின்னி வெட்டும் மனதை,

அவதானிப்புடன்.பராக்கும் பார்க்கும்

ஆயிரம் சுடர்க் கண்கள் கொண்ட

இம்மனதை

நான் விட்டுச் செல்கிறேன்.

இன்னொரு இட்த்தில் இப்படி எழுதுகிறார்.:

நான் மூன்றாம் உலகக்காரியாய் இருந்தேன்

என் வாழ்வு முதலாம் உலகத்தினதாய் இருந்த்து

****

நான் வெளியே நின்றேன்_எனக்கு

மிகப்பிடித்த கருஞ்சிவப்புச் சுங்குடிச் சேலையில்

வாழ்வைப் பார்த்தபடி.(ப.60)

111

இந்த்த் தொகுப்பில் சொந்தங்கள் நெருப்பில் கருகுவதும்,கோபரத்துக்குக் கீழே கூறுகளாக்கி வீசப்படுவதும்,துரோகியாய்த் தொங்குவதும்,க்ஷெல் அடித்துப் பல தலைகள் சிதறிப் போவதும் இரவில் துப்பாக்கிச் சத்த்த்தோடு தூங்குவதும் என வன்முறையின் அனைத்துக் காட்சிகளும் இதயம் வலிக்கும் படி மொழிப்படுத்தப் பட்டுள்ளன.இவ்வளவும் செய்த பேரினவாத அரசு இறுதியில் கொண்டாடிய வெற்றிவிழாக் கூச்சல்கள் எந்தவொரு கவிதை மனத்தையும் புண்ணாக்க்க் கூடியது.இந்த வன்முறை அரசியலால் எதிர் கால இலங்கை எப்படி ஆகும்?கவிஞ்ர் எழுதுகிறார்:

இன்று களப்பு மேட்டருகே

தன் சின்னண்ணை எறிந்த

மண்டை ஓட்டை

காய்ந்து வழுவழுக்கும் கால் எலும்புத்

துண்டால்- திருப்பியடித்துக்

கிரிக்கெட் விளையாடுகிறாள்

சின்னஞ்சிறு மகள் ஒருத்தி.

வெற்றி……….

நமக்கே         (ப.58)

இதுபோலவே போரில் முதல் பலிகிடாவாகும் பெண்பால் குறித்தும்”தாயும் மூன்றுயாமங்களின் தேவதையும்” என்ற கவிதையில் மகளைத் தேடிச் செல்லும் கலித்தொகை பாணியில் சித்தரிக்கிறார்.

துரோகங்களினதும் அவமான்ங்களினதும்

பொய்மைகளினதும்

அடர்காடுகள் இடையே அவர்கள் பயணித்து

மாதுளை முத்துக்களைப்

புளிப்பு இனிப்பாய்ச் சுவைத்த

மகளைக் கண்டனர்.

இவ்வாறு கவித்துவத்தின் நுட்பத்தைக் கைப்பற்றி நடக்கும் எழுத்துக்களாக ஆழியாளின் எழுத்துமுறை அமைந்துள்ளது.சூரியனை,மறைக்கும் மேகத்திற்குள் வைக்கும் போதுதான் பலப்பல ஒளிக்கோல்ங்களை இயற் கையால் படைக்க முடிகிறது.மொழி, புலப்படுத்துவதற்கு அல்ல.எவ்வளவு முடியுமோ அவ்வளவு மறைப்பதற்கு.என்ற அழ்கியல் கமுக்கத்தை புரிந்தவர்கள் இவர் கவிதைக்குள் எளிதாகப் பயணிக்கலாம்.இவ்ர் கவிதை ஒன்று சொல்வது போல,”கூடாரங்கள் அமைத்து,வனாந்தரங்களில் அலைந்தாலும்,தூரதேசக் குளிரில் திசையறுந்து திரிந்தாலும்,ஒளி பெருக்கெடுத்துப் பொங்கி வழிந்தோடப் பெருகிப் பெருகிப் பேராறாய் விரியும் பால்வெளியைக் கண்டு சிலிர்த்த குமாரத்தியாய்த் த்ன் கவிதையில் ஆழியாள் வெளிப்படுகிறார்.ஏழு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் நமக்கு இத்தொகுப்பில் கிடைக்கின்றன.

 

ஆழியாள், கருநாவு,மாற்று வெளியீடு, சென்னை-600106,(2013),விலை-ரூ.60,பக்-77.

 

 

Series Navigationதமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *