இடைசெவல்

This entry is part 4 of 46 in the series 5 ஜூன் 2011

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே வந்தவுடன் தெரிந்தது. பின்னர் கணினியில் பார்த்துக் கொள்ளலாம் என மறந்து போனது. வீட்டின் மூலைமுடுக்குகளின் புத்தக ரகசியங்களுக்குள் குறுந்தகடு எங்கேயோ ஒளிந்து கொண்டது. சமீபத்தில் வீட்டுக்கு வண்ணமடிக்கும் வேளை வந்தது. என் வீட்டிலுள்ள கி.ரா எழுத்துகளைப் பிடித்த இன்னொரு வாசகரால் இக்குறுந்தகடு கண்டெடுக்கப்பட்டு, கருத்தாக படுக்கைக்கு அருகில் உள்ள புத்தக அடுக்கில் பார்வைக்குப் படும்படி இடம்பெயர்ந்தது. அப்படி என் மனைவி உதவியால், கணினியில் கி.ரா. பற்றிய இவ்வாவணப் படத்தைப் பார்த்தேன். புதுவை இளவேனில் ஆக்கம்.
தமிழில் எழுத்தாளர்களின் ஆவணப் படங்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. (பிற மொழிகளிலும் இதே டெம்ப்ளேட்தானா?) எழுத்தாளர் பிறப்பு, ஊர், குடும்பம், வாழ்க்கை, புகழ்மிக்க படைப்புகள் ஆகியவை, எழுத்தாளர் பேசுவது, எழுத்தாளரைப் பற்றிப் பிறர் சொல்பவை, அவர் பெற்ற விருதுகள், அவர் படைப்புகளில் திரைவடிவம் பெற்றவை இன்னபிற என்று ஆவணப்படத்தின் நேரத்துக்கும் நிதிவசதிக்கும் ஏற்ப இப்படங்கள் பெரும்பாலும் இருக்கும். ஜெயகாந்தன் – இரு ஆவணப்படங்கள் (சா. கந்தசாமி, ரவி சுப்ரமணியம் முறையே இயக்கியவை), அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என்று இவ்வரிசையில் நான் பார்த்த படங்களில் கி.ரா.வைப் பற்றிய ஆவணப்படமும். இந்த டெம்ப்ளேட் முறை இல்லாமல் வேறு எப்படிப் படம் எடுப்பது? இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டிய, பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது. நான் பார்வையாளன் மட்டுமே. படைப்பூக்கம் இருப்பின், இந்த டெம்ப்ளேட்டையே வேறு மாதிரியான கதை சொல்லலில் புதுவடிவமாக மாற்றக் கூடிய சாத்தியக்கூறும் இருக்கிறது.

இத்தகைய ஆவணப்படங்கள் – இயக்குநரிடம் எழுத்தாளரும் அவர் படைப்பும் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுபவை. எழுத்தாளரைப் பற்றிய படம் என்றாலும், அது இயக்குநரின் பார்வையிலேயே கிடைக்கிறது. எழுத்தாளர் பார்வையாளரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் வேறானதாக இருந்தால் பார்வையாளர் ஏமாந்து போகிறார். அதனாலேயெ எனக்குத் தெரிந்து பலருக்கும் அவர்களின் ஆதர்ச எழுத்தாளர் பற்றிய ஆவணப்படங்கள் குறித்த திருப்தி ஏற்படவில்லை. நாவல்கள் (அல்லது பிரபல படைப்புகள்) திரைவடிவம் கொள்ளும்போது, அதைப் படைப்பாகக் கொண்டாடிய வாசர்களிடம் எடுபடாமல் போவதற்கான காரணமும் இதுவே. ஒரு படைப்பும் படைப்பாளனும் வாசகனின் உள்மனதில் பல்வேறு காட்சிப் படிமங்களை உருவாக்கி வைத்துள்ளன(ர்). திரைவடிவம் அதற்கு ஈடு செய்ய இயலாமல் போகும்போது ஏமாற்றம் உருவாகிறது.

கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநர் வேலையை அவரே பார்ப்பார் என்று சொல்வார்கள். அப்படி எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய ஆவணப்படம் எப்படி இருக்க வேண்டுமென்பதில் பங்கெடுக்காவிட்டால், இயக்குநருக்கு எழுத்தாளர் குறித்து இருக்கும் சித்திரமே நமக்கும் பார்க்கக் கிடைக்கும். ஆனால், நல்ல கலைஞர்கள் தங்களைப் பற்றி எடுக்கப்படும் படங்களில் பெரிதும் தலையிட மாட்டார்கள்.  ஜெயகாந்தனைப் பற்றி சா. கந்தசாமி எடுத்த படத்தில் ஜெயகாந்தன் தலையிடவே இல்லை எனக் கேள்விப்பட்டேன். ஓர் இயக்குநராக சா. கந்தசாமி ஜெயகாந்தனைப் பற்றித் தான் விரும்பியதை அப்படத்தில் காட்டினார். அப்படம் பலருக்கும் மாபெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. மாறாக, ஜெயகாந்தனைப் பற்றிய ரவி சுப்ரமணியத்தின் படம் (அதன் ஓடும் நேரமும் அதிகம்) பலருக்கும் பிடிக்கக் காரணம், அதில் ஜெயகாந்தனின் பல பரிமாணங்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள் ஓரளவுக்குப் பிறர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வந்திருந்ததுதான். இப்படம் எடுக்கப்பட்ட விதத்திலும் ஜெயகாந்தன் தலையிடவில்லை. ஆனால் ஜெயகாந்தன் குறித்த எச்சித்திரத்தைக் காட்ட வேண்டும் என்ற பிரக்ஞை இயக்குநருக்கு இருந்தது.

எழுத்தாளரைப் பற்றிய படத்தில் எழுத்தாளர் எதற்கு என்று என் நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். எழுத்தாளர் பற்றிய படத்தில் எழுத்தாளர் இல்லாவிட்டால் வாசகனான நான் அதை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். எழுத்தாளரைப் பற்றிப் பிறர் சொல்வதை நான் எழுத்து வழியாகவோ, வேறு வழிகளிலோ அறிந்து கொள்ள இயலும். அதற்கு ஆவணப்படம் தேவையில்லை. அல்லது அப்படி எடுக்கப்படுகிற படங்கள் ஒரு வாழ்க்கை வரலாறாகவோ, விமர்சனப் பார்வையாகவோதான் இருக்கும். தவிர ஓர் எழுத்தாளர் அவரைப் பற்றிய ஆவணப் படத்தில் இடம்பெறும்போது, நானறியாத அவ்வெழுத்தாளரின் சில ஆளுமைகளை, தனிப்பட்ட விஷயங்களை (குடும்பம் இத்யாதி), அறிந்து கொள்ள இயலும் என்ற காரணமே எழுத்தாளர் பற்றிய ஆவணப்படங்கள் மீது என் ஆர்வத்தை உருவாக்குகிறது.

பதின்ம வயதில், என் அறியாமையால், வட்டார வழக்கு எழுத்துகளின் மீது எனக்கு அதிக ஆர்வமும் மதிப்பும் இல்லாமல் இருந்தது. முக்கியக் காரணம், வட்டார வழக்கில் பல சொற்களுக்குப் பொருள் தெரியாமல் படிக்கும்போது பற்களில் கல்லாக இடறும். மேற்கொண்டு படிக்கும் ஆர்வம் போய்விடும். கோயமுத்தூரில் கல்லூரிப் படிப்புக்குச் சென்று, கொங்கு தமிழின் அழகில் மயங்கிய பின்னரே, வட்டார வழக்குகளின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தைத் தொடரக் காரணமாக இருந்தவை கி.ரா.வின் எழுத்துகள். அவர் எழுத்தில் மின்னலிடும் நகைச்சுவையும், எளிமையும், மனிதநேயமும் அவர்பால் மரியாதை உண்டாக்கின. ஆனால், இப்படத்தில் கி.ரா.வின் எழுத்துகளில் மின்னலிடும் நகைச்சுவையை அவர் பேச்சுகளில் காண இயலவில்லை. ஜெயகாந்தன் எழுத்துகள் மிகவும் சீரியஸானவை. ஆனால், அவர் நேர்ப்பேச்சுகளில் ஒரு தன்னியல்பான (spantaneous) நகைச்சுவை இழைந்தோடிக் கொண்டே இருக்கும். அந்த நகைச்சுவை ஜெயகாந்தன் எழுத்தில் ஏன் வராமலேயே போனது என கோபால் ராஜாராமும் நானும் பேசியிருக்கிறோம். அப்படி, கி.ரா. எழுத்துகளில் காண்கிற நகைச்சுவை இப்படத்தில் அவர் பேசுகையில் காணக் கிடைக்கவில்லை. கி.ரா. தனிப்பேச்சுகளில் நகைச்சுவை கலக்கமாட்டாரா? அல்லது இயக்குநர் அதைப் படத்தில் கொண்டு வரவில்லையா?

கி.ரா.வை ஓர் எழுத்தாளர் என்ற அளவிலேயே அவர் எழுத்துகளின் மூலம் அறிவேன். அவர் தனிவாழ்க்கை பற்றிய தகவல்கள் என்னிடம் அதிகம் இல்லை. அக்குறையைப் போக்கியது இப்படம். கி.ரா. என்னும் மனிதரின் வாழ்க்கையை பெரும்பாலும் அவரே சொல்லிக் கேட்கும் அனுபவத்தை இப்படம் தந்தது. சில வருடங்களாக, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் ஓர் இடைவெளி தேவை என்னும் கருத்து என் மனதில் வலுவாகி வருகிறது. அப்படி ஓர் எழுத்தாளரை அவர் எழுத்துக்கும் அப்பால் தொலைவில் நின்றபடியே அறிய விரும்புகிறவர்களுக்கு எழுத்தாளர் இடம்பெறும் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் பெருஉதவி புரியும். அவ்விதத்தில் கி.ரா.வை அருகில் இருந்து சிலமணி நேரங்கள் பார்த்த அனுபவத்தை இப்படம் தந்தது.

 

Series Navigationஎதிரொலிகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
author

பி கே சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *